மாற்றுவெளி 

ஆய்விதழ் : 2 

சிறப்பாசிரியர்

வீ. அரசு 

ஆசிரியர் குழு

செந்தில்பாபு 

அ. சதீஷ் 

பா. இளமாறன் 

கா. அய்யப்பன் 

ஜைனாப் பஷீர் 

தே. சிவகணேஷ் 

ஜ. சிவக்குமார் 

மு. நஜ்மா 

க. செந்தில்ராஜா 

வள அறிஞர் குழு

கண்ணன். எம் 

வ. கீதா 

அ. மங்கை 

எஸ். பாலச்சந்திரன் 

சித்தரலேகா மௌனகுரு 

தெ. மதுசூதனன் 

வெளியீட்டாளர் 

சிவ. செந்தில்நாதன் 

விலை ரூ.50 

10 இதழ்கள் ரூ.500 

தொடர்பு

பரிசல் புத்தக நிலையம் 

எண் : 176 Q பிளாக் 

தொல்காப்பியர் தெரு, அரும்பாக்கம் 

சென்னை - 600 106 

பேச: 93828 53646 

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

வரைவோலை (D.D.) அல்லது பணவிடை (M.O.) அனுப்புபவர்கள் பரிசல் புத்தக நிலையம் என்ற பெயருக்கு அனுப்பவும். 

******************

மாற்றுவெளி முதல் இதழை வாசித்த நண்பர்களின் எதிர்வினை நம்பிக்கையளிப்பதாக அமைந்தது. நண்பர் நாகார்ஜுனன், தன்னுடைய பெயரில் உள்ள வலைய தளத்தில் ‘மாற்றுவெளி ஏன்?’ என்று நாங்கள் எழுதிய தலையங்கப் பகுதியை மறுவெளியீடு செய்தார்.

“சமயம் சார்ந்த உரையாடல்களுக்குள் (அது எவ்வகையில் இருந்தாலும்) இருந்து விடுதலை அடைவதே மனிதனின் சுயமரியாதை. மாற்று வெளி அதை நோக்கிய பயணம்’’ என்ற தலையங்கப் பகுதி குறித்த உரையாடல்கள் நாகார்ஜுனன் வலைய தளத்தில் பலரால் முன்வைக்கப்பட்டது. தமிழ்ச்சூழலில் சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காக அவர்களது மத அடிப்படைவாதத்தைக் கேள்விகேட்காத ‘அறிவாளிகள்’ செயல்படுகின்றனர். மதத்தில் இயக்கவியலைத் தேடுவோரும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். இதனைக் குறித்த விமர்சனமாக ‘சமயம் சார்ந்த உரையாடல்களுக்குள் இருந்து விடுதலை’ என்று நாங்கள் பதிவு செய்தோம். இதனைக் குறித்த வலையத்தள எதிர்வினைகள் நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். இந்தப் பின்புலத்தில் கால்டுவெல் சிறப்பிதழாக அமைந்த முதல் இதழைத் தமிழகத்தின் தென்பகுதியைச் சேர்ந்த இந்து மதவெறியர்கள் சிலர் கடுமையாக விமர்சனம் செய்து எங்களுக்குக் கடிதம் எழுதினர். ஆனால் பேராசிரியர் ஒருவர், இந்த இதழின் கட்டுரை ஒன்று ஆர்.எஸ்.எஸ். சார்புடையது என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்த முரண் சுவையானது. மதம் குறித்த கருத்தாடல் கருப்பு-வெள்ளை என்ற தளத்திலேயே செயல்படுவதைக் காண்கிறோம். தமிழ்ச் சூழலின் அரசில் இயங்குதளம் குறித்துப் புரிந்துகொள்ள, சமயம் தொடர்பான எங்களது பதிவுகள் எதிர்கொள்ளப்பட்ட முறைமையைப் பாடமாகக் கொள்ள இயலும். இதனை அப்படியே உலகச் சூழலோடு நாங்கள் இணைக்கவில்லை.

- எழுத்தாளர் ஜெயமோகன், நண்பர் வேதசகாயகுமார் மூலம் எங்களைக் குறித்து அறிந்து, அவர் செய்துள்ள பதிவுக்கு நன்றி.

இந்த இதழ்

நமது அண்டையில் இருக்கும் இலங்கை என்று கூறப்படும் நாட்டில் சிறுபான்மையினமாக வாழும் தமிழ்மக்கள், கணக்குவழக்குத் தெரியாமல் (சுமார் 20 ஆயிரம் என்பது சிலர் ஊகம்) கொலை செய்யப்பட்டார்கள். உயிரோடு இருக்கும் அனைவரும் திறந்தவெளிச் சிறைச்சாலையில் இருக்கிறார்கள். சிங்களப் பேரினவாதக் கொடுமையால் எண்ணிக்கையில் நான்கில் ஒன்றாக இருப்பவர்களை அழித்தொழிக்கும் இனச் சுத்திகரிப்பு வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதனை முன்னின்று நடத்தும் தெற்காசிய வல்லரசனாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியப் பெருமுதலாளிகளோடு இணைந்து தமிழகப் பெருமுதலாளிகளும் தமது மண்ணில் குடிவாழும் உரிமையைக் கேட்கும் மக்களைக் கொன்று குவிக்கிறார்கள். அங்குள்ள விடுதலை இயக்கங்கள் தேர்வு செய்த போராட்ட முறைகள், அவர்களது ராணுவக் கட்டமைப்பு முறைமை இயக்கங்களின் தத்துவார்த்த புரிதல் ஆகியவை குறித்த விமர்சனங்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவர்கள் செயல்பட்ட முறைகளுக்காக, அவர்கள் சார்ந்த இனம் அழிக்கப்படுவது குறித்த உரையாடல்கள் மேற்கொள்ளப்படும் முறை சரியானதா? என்ற கேள்வி நமக்கு இருக்கின்றது. அரசு இயந்திரம், ராணுவம், பேரினவாதப் பார்வை, உலக ஏகாதிபத்தியங்களின் ஒத்துழைப்பு, (மறைமுகம் மற்றும் நேர்முகம்) ஆகிய பல பரிணாமங்களில் மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிப்பது ஒருபுறம்: விடுதலை இயக்கத்திற்கான தத்துவார்த்த பார்வையின்மை; ஜனநாயக முறைகளில் நம்பிக்கை இன்மை; தனிமனித வழிபாடு ஆகிய பிற பண்புகளைக் கொண்ட இயக்கம் இன்னொரு புறம்: இந்த இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் உரையாடலுக்கு உட்படுத்தும் அறிவாளிகள் குறித்து நாங்கள் சந்தேகப்படுகிறோம். இப்போது இயக்கம் இல்லை; பேரினவாதக் கொடுங்கோலன் அரச மற்றும் ராணுவ பலத்தோடு நிற்கிறான். என்ன செய்யப் போகிறீர்கள்? போகிறோம்.

மேற்குறித்த கேள்வி உலகப் பொருளாதாரம் தொடர்பான அரசியலோடு தொடர்புடையது. இந்தியப் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகள்; தென் மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் எவ்வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது? இந்திய வல்லரசின் செயல்பாடுகள்அமெரிக்கா உள்ளிட்ட ஆதிக்க வல்லரசுகள் நிகழ்த்தும் உலகம் சார்ந்த ஏகாதிபத்திய பொருளாதாரச் செயல்பாடுகளின் தன்மையைக் கொண்டது. இந்திய முதலாளிகளின் சந்தையாக இலங்கை தேர்வுசெய்யப் பட்டுவிட்டது. இதற்குள் முதலாளித்துவ பொருளாதார முறையை முன்னெடுக்கும் சீனாவும் தங்களது இடத்தைப் பதிவு செய்யத் தொடங்கிவிட்டன. இளிச்சவாயன் மீது இவர்கள் செய்யும் பொருளாதார ஆதிக்கத்திற்கு அப்பாவித் தமிழினம் அழிக்கப்படுகிறது. தமிழக பெருமுதலாளிக் குடும்பங்களில் ஒன்று தமிழக ஆட்சியையும் கையில் வைத்திருக்கிறது. இந்திய முதலாளிகளின் இணைப்பில், தமிழக முதலாளி மட்டும் விடுபட முடியுமா என்ன? எனவே இந்தியப் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சியாக இவ்விதழைக் கொண்டுவந்துள்ளோம்.

பண்பாட்டுத்தளத்தில் பொருளாதாரக் கட்டமைப்பின் முக்கியத்துவம் குறித்த உரையாடல்கள் அழுத்தமாக நடைபெற வில்லையோ? எனும் அய்யம் எங்களுக்கு இருக்கிறது-... இது தவறாகக்கூட இருக்கலாம். பண்பாட்டுத்தளத்தைப் பொருளா தாரக் கட்டமைப்புகளின் ஊடாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது...

- சிறப்பாசிரியர்

 

Pin It