இது மண்மொழி 32வது இதழ். இந்த இதழ் அநியாயத்துக்குக் கால தாமதமாக வருகிறது. தாமதம் என்றால் சாதாரணத் தாமதம் இல்லை. “சில பேர் என்ன மண்மொழி ரெண்டு மூணு மாதமாக வரவில்லை” எனவும் சிலர், “நாலைந்து மாதமாக வரவில்லை” எனவும் அவரவர் உத்தேசக் கணக்கின்படி கேட்டார்கள்.

ஆனால் தாமதம் 3 மாதம் 4 மாதம் அல்ல, 6 மாதம். என்று சொன்னதும் பல பேருக்கு மலைப்பு. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்று. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் “மண்மொழி தேவைப்படும்போது வெளிவரும் இதழ் என்றுதானே குறிப்பிட்டிருக்கிறீர்கள். வரும்போது வரட்டும், கவலைப்படாதீர்கள்” என ஆறுதலாகவும் சொன்னார்கள்.

ஆக மண்மொழி எவ்வளவு காலதாமதம் ஆனாலும் சரி, முற்றாக நின்று போகாது, முறையாகவும் வராது. தேவை ஏற்படும்போது வரும் என்பதில் மட்டும் பலருக்கும் நம்பிக்கையிருக்கிறது. நல்லது.

அநியாயங்களும் அக்கிரமங்களும் பெருகும் போது கிருஷ்ணபகவான் வருவார் என்று மகாபாரதத்தில் சொல்வதுபோல, பாவங்கள் மலியும்போது இயேசுபிரான் மீண்டும் பூமியில் அவதரிப்பார் என்பது போல, காலத்தின் தேவையைப் பொறுத்து மண்மொழி அவ்வப்போது வரும். இவ்புவிக்கோளில் நடைபெறும் சம்பவங்கள் பற்றிய சேதிகளை, இதுபற்றிய தன் நிலைப்பாடுகளைத் தமிழ்ச் சமூகத்திற்குச் சொல்லும்.

இந்த வகையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலையட்டி, தமிழ்ச் சமூகத்தின், தமிழ் உணர்வாளர்களின் சிந்தனைக்கு தன் நிலைப்பாட்டை, சில சேதிகளைச் சொல்ல இந்த இதழ் மண்மொழி வருகிறது.

தேவையைப் பொறுத்து தேர்தலுக்கு முன் மண்மொழி இதழ் கூடுதலாக ஒன்றோ இரண்டோ வரும். மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ப மண்மொழி தன் கருத்துகளைச் சொல்லும்.

மண்மொழி வெளிவந்து 6 மாதம் கடந்துவிட்டதால் இடையில் நடைபெற்ற எவ்வளவோ சம்பவங்கள், நிகழ்வுகள் பற்றி மண்மொழி கருத்து தெரிவிக்க முடியாமல், தன் நிலைப்பாட்டைச் சொல்ல இயலாமல் ஆகிவிட்டது. என்றாலும் அவற்றுள் சில பெட்டிச் செய்திகளாக இடம் பெற்றுள்ளன. பல தேவையில்லை என்று தொடாமல் விடப்பட்டுள்ளன.

அத்தோடு, கால தாமதமாக வரும் இதழ், இடநெருக்கடி என்பதால் கட்டுரைகளுக்குப் படங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.

இடையில் பல்வேறு திருமணங்கள், பிற நிகழ்வுகள், இரங்கல் சம்பவங்கள் என நிகழ்ந்தேறியுள்ளன. வாய்ப்பைப் பொறுத்து சில இடம் பெற்றுளளன. சில இடம் பெற இயலாமல் போயுள்ளன. முக்கியமானவை விடுபட்டுப் போயிருந்தால் அடுத்தடுத்த இதழ்களில் வரும்.

நூல் அறிமுகம் செய்யும் நூற்பேழை, வாசகர் கடிதம் இடம்பெறும் களத்துமேடு பகுதிகளும் அவ்வாறே. எல்லாம் மொத்தமாக அடுத்த இதழில் வரும்.

சரி, அப்புறமென்ன, இவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் மண்மொழி மேல் நம்பிக்கை வைத்து சந்தா அனுப்பியவர்களுக்கு நன்றி.

இன்னும் இதுவரை அனுப்பாதவர்கள் அனுப்பி வையுங்கள். அனுப்பியவர்கள், அடுத்தவர்களுக்கு நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

நன்றி, அடுத்த இதழில் பார்ப்போம். தோழமையுடன்

 ஆசிரியர்

சென்னை 24.02.2011