தமிழகத்தில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்பட உள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்குள் பேரம் படியாமல் இன்னும் எப்படிப்பட்ட கூட்டணி அமையும் என்பது குதிர்ப் படாமல் இருக்கிறது. எனினும் இதற்கு முன்பே சில இடதுசாரித் தமிழ்த் தேசியக் கட்சிகள் “தேர்தலைப் புறக் கணிப்போம். வாக்களிக்க மறுப் போம்’’ என்பதான நிலைப்பாட்டை மேற் கொண்டு அதற்கான வேண்டு கோள்களையும் மக்களிடையே விடுத்து வரு கின்றன.

தற்போதைய தேர்தல் எப்படிப் பட்ட சூழ்நிலையில் நடைபெற இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. எனவே, இப்படிப் பட்ட சூழ்நிலையில் நாம் தேர்தலைப் புறக்கணிப்பது எந்த அளவுக்குச் சரியாயிருக்கும், அது என்ன மாதிரி யான விளைவுகளை ஏற்படுத்தும் இதன் சாதக பாதகங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்து சில உரத்த சிந்தனை களை நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்கிற நோக்கில் சில கருத்துகள்,,

பொதுவாகவே இடதுசாரி அமைப் புகள் அவை தேர்தலைப் புறக்கணிக் கும் நிலைப்பாடுடைய கட்சிகளோ, அல்லது தேர்தலில் பங்கு கொள்ளும் நிலைப்பாடுடைய கட்சிகளோ எதுவா னாலும்சரி எல்லா கட்சிகளுமே தங்கள் நிலைப்பாட்டிற்கு லெனினிட மிருந்தே மேற்கோள்கள் காட்டி தங்கள் நிலைப் பாட்டிற்கு நியாயம் கற்பிக்க முயன்று வருகின்றன.

ருஷ்யப் புரட்சிக்காலத்தில், அங்கு நிலவிய புறநிலை, புரட்சிகர சக்தி களின் கொதிநிலை, அந்நிலையில் ருஷ்யப் பாராளுமன்ற அமைப்பான டூமாவின் பாத்திரம், மக்கள் மத்தியில் சோவியத் அமைப்புகளின் செல்வாக்கு இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்ட லெனின் அவ்வப்போது போல்ஷேவிக் கட்சி மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகளைக் குறித்து தெளிவு படுத்தும்போது சில தருணங்களில் டூமாவில் பங்கெடுப்பது பற்றியும் சில தருணங் களில் டூமாவைப் புறக்கணித்து சோவி யத் அமைப்புகளை வலுப்படுத்தி அவற் றுக்கே அதிகாரம் கோருவது பற்றியும் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய அக்கருத்துகள் ருஷ்யாவில் அவ்வப்போது நிலவிய வரலாற்றுச் சூழல்களுக்குச் சரி. ஆனால் இங்குள்ள கட்சிகள் அவற்றை அப்ப டியே வரட்டுத்தனமாக பின்பற்ற நினைப்பதோ, அல்லது அவரவரும் தங்கள் நிலைப்பாட்டிற்கேற்ப லெனி னது எழுத்துகளைத் திரித்தோ, சிதைத்தோ, தேவைப்படும் இடங்களை மட்டும் உருவி மேற்கோள்களைக் காட்டி தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்த முயல்வதோ எந்த வகையிலும் சரியாய் இருக்க முடியாது. எனவே அந்த அனுபவங்களைக் கருத்தில் கொண்டு இங்கு தமிழகத்தில் நிலவும் புறச்சூழலுக்கு ஏற்ப அதை நாம் பயன்படுத்துவதே அந்த வகையில் நம் நிலைப்பாடுகளை மேற்கொள்வதே பொருத்தமாய் இருக்கமுடியும்.

இந்த நோக்கில் வர இருக்கும் சட்ட மன்றத் தேர்தல் தமிழகத்தில் எப்படிப் பட்ட பின்னணியில் எப்படிப்பட்ட புறச்சூழலில் நடை பெற இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண் டியது முக்கியம்.

1. 1967இல் தமிழகத்திலிருந்து துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ் கட் சியை திராவிடப் பாரம்பரியக் கட் சிகளே மாற்றி மாற்றித் தோள் கொடுத் துத் தூக்கி நிறுத்தி பாதுகாத்து வந்த நிலையில் காங்கிரஸ் தற்போது சற்று கூடுதல் தெம்பு பெற்று தமிழகத்தில் மீண்டும் காமராசர் ஆட்சி, இப்போ தைய தேர்தலில் கூட்டாட்சி, அடுத்த தேர்தலில் தனித்தே ஆட்சி என்கிற நப்பாசையில் பேசிவருகிறது.

2. தமிழகத்தில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் பெரும்பாலும் காங்கிரஸ் எதிர்ப்பு, என்கிற பெயரில், திமுக அல் லது அதிமுக ஆகிய இரு கழகங்களி லும் ஏதாவதொன்றுடன் மாற்றி மாற்றி கூட்டு வைத்தும் சமயத்தில் மதவாத எதிர்ப்பு என்பதன்பேரால் காங் கிரஸ் அணியோடேயே சேர்ந்தும் தமிழக சட்டமன்றத்தில் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் காலத்தைத் தள்ளி வருகின்றன.

3.இப்படித் திராவிடப்பாரம்பரியக் கட்சிகள், தமிழகத்தில் தனித்து நின்றோ, அல்லது தமிழகத்தில் இயங் கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டு வைத்தோ தேர்தலை எதிர் கொள்ளத் துணிவு இன்றி, தில்லியை ஆளும் கட்சிகளுடன் - அது காங்கிரசோ, ஜன தாவோ, பாஜகவோ, எந்தக் கட்சி யானாலும் அதனோடு கூட்டு வைத்துத் தங்களுக்குப் பாதுகாப்பு தேடிக் கொண்டு பதவி சுகம், பகட்டு சுகம், கொள்ளை சுகம் அனுபவிக்கும் நட வடிக்கைகளிலேயே ஈடுபட்டு வரு கின்றன.

4. தலித் அமைப்புகளும் இவ்வாறே ஆதிக்க சக்திகளுடன், அது தில்லியை ஆளும் கட்சியோ அல்லது தமிழகத்தை ஆளும் கட்சியோ ஏதாவதொன்றுடன் கூட்டு வைத்து மேற்கண்டுள்ள கட்சி கள் போலவே அனைத்து வாய்ப்பு களையும் பயன்படுத்தி வருகின்றன

5. இவற்றுக்கு அப்பால் சில தமிழ்த்தேசிய அமைப்புகள், இடது சாரிக் குழுக்கள் எனப் பல சிறு சிறு அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் சில நேரடியாகத் தேர்தலில் பங்கு கொண்டு போட்டியிட்டோ அல்லது அவ்வப்போது எதாவது ஒரு அணியை ஆதரித்தோ வருகின்றன. சில தேர்தலில் நிற்காமலும் எந்த அணியையும் ஆதரிக்காமலும் வாக்க ளிப்பில்கூட பங்கேற்காமலும் முற்றா கத்தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகித் தேர்தலைப் புறக்கணித்தும் வருகின்றன.

இந்தப் புரிதலில், மேற்குறித்த கட்சிகள் கொண்டுள்ள நிலைப்பாடு களை நாம் முக்கியமாக மூன்று வகை யாகப் பிரிக்கலாம். 1. தேர்தலில் நேரடியாகப் பங்குகொண்டு போட்டி யிடுவது. 2. நேரடியாகப் பங்கு கொள்ளாமல் ஏதாவது ஒரு கட்சியை அணியை ஆதரிப்பது. 3. தேர்தலை முற் றாகப் புறக்கணிப்பது.

இதில் இந்த மூன்றாவது நிலைப் பாடு அதாவது புறக்கணிப்பு குறித்து மட்டும் சற்று ஆராய்வோம்.

பொதுவாக புரட்சிகர இடதுசாரிக் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரும் நோக்கம் என்ன.

 1. இந்தத் தேர்தல் முதலாளியக் கட்டமைப்புக்குள் நடைபெறும் தேர்தல்.

2. இந்தத் தேர்தலில் ஆட்சியாளர் கள் மாறலாமே தவிர ஆளும் வர்க்கம் மாறாது

3 எனவே இந்தத் தேர்தலால் எந்தப் பயனும் கிடையாது சமூகத்திலும் அடிப் படையில் எந்த மாற் றமும் விளையாது.

4. தவிரவும் காசு, பணம் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டி யிட முடியும். வெல்ல முடியும் என்கிற நிலை யில் சாதாரண, நேர் மையான நல்ல மனிதர் கள் இதில் பங்கு கொள்ள முடியாது.

4. அப்படியே பங்கு கொண்டு அரி தாக வெல்வதானா லும் அவர்கள் போய் வென்று சாதிக்க எதுவு மில்லை. அவர்கள் ஏதா வது செய்ய முனைந் தாலும், அரசுப் பொறி யமைவுகள், சமுகக் கட்டமைப்பு அவர் களை சுதந்திரமாய் நேர்மையாய் இயங்க விடாது.

5. அவர் கட்சி நபரனால் கட்சிக்கு கட்டுப்பட்டவர், சுயேச்சையானால் எதுவும் செய்ய இயலா தவர். கொஞ்சம் சறுக் கினால் ஆதிக்க சக்திகளுள் எதாவது ஒரு பக்கம் சாயும் வாய்ப்புள்ளவர்.

ஆகவே, இந்த தேர்தலால் ஆகப் போவது எதுமில்லை. எனவே மக்களி டையே இதுபற்றி விழிப்பூட்டி, இந்தத் தேர்தல் பாதையை விடுத்து மாற்றுப் பாதையைப்-போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுக்கவும், மக்கள் விழிப்ப டைந்து போராடும்போதே சமூக மாற்றத்தை அரசு அதிகார மாற்றத்தை செயற்படுத்த முடியும் என்பதை உணர்த்தவுமே, மக்களைத் தேர்தலில் இருந்து விலகி நிற்கக் கோருகின்றனர் எனலாம்.

இந்த விலகி நிற்றல் என்பது இரண்டு நிலைகளில் நடைபெறலாம்.

ஒன்று தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாமல் விலகி நின்றாலும் யாரையாவது ஆதரிப்பது. இரண்டா வது எந்த ஒரு அணியையுமே ஆதரிக் காமல் முற்றாக வாக்கெடுப்பிலிருந்தே விலகி நிற்பது, அதாவது யாருக்குமே வாக்களிக்காமல் இருப்பது.

இதில் முற்றாக விலகி நிற்பது, யாருக்குமே வாக்களிக்க மறுப்பது என்கிற இரண்டாவது நிலை குறித்தே இங்கு நமது பரிசீலனைகள்.

சரி, இப்படி வாக்கெடுப்பிலிருந்து விலகி நிற்பதன் மூலம் இந்தக் கட்சிகள் சாதிக்க இருப்பது என்ன? நாம் தொடக் கத்தில் குறிப்பிட்டபடி இந்தத் தேர்த லால் எதுவும் பயன் இல்லை என்று மக்களுக்கு விழிப்பூட்ட, தேர்தல் என்கிற போலித்தனத்தை அம்பலப் படுத்த. மாற்றுப் பாதை குறித்து சிந்திக்க வைக்க அப்புறம் வேறு ஏதா வது உண்டா? ஏதுமில்லை. நல்லது. ஏதாவது இருந்தால் மற்றவர்கள் சொல் லட்டும்

சரி. ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதிக்குத் தொகுதி உத்தேசமாக 20 முதல் 40 விழுக்காடு மக்கள் தேர்த லில்பங்கு கொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள். விழிப்புணர்வு பெற்றோ பெறாமலோ வாக்களிக்க விருப்ப மின்றியோ அல்லது வரிசையில் நின்று காத்திருக்கப் பிடிக்காமலோ சோம் பேறித் தனத்தோலோ, அக்கறை யற்றோ, எது பற்றியும் பொருட்பாடு இல்லாமலோ ஏதாவது ஒரு காரணம் பற்றி வாக்களிக்காமல் இருந்துதான் வருகிறார்கள்.

இந்த வாக்களிக்காத மக்கள் விழுக்காட்டில் உண்மையான விழிப் போடு தேர்தலைப் புறக்கணிப்பவர்கள் தொகை, இவர்கள் வாக்களித்தால் இன் னார் வென்றிருப்பார். இல்லாத காரணத்தால் அவர் தோற்றார் என்று சொல்லுமள வுக்கு அதாவது வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு வலு வோடு இருப்ப தாகவும் சொல்ல முடியாது. அதோடு இவர்கள் வாக் களித்தாலும் வாக்களிக்காமல் இருந் தாலும் யாரோ ஒருவர் வெல்லத்தான் போகிறார். வென்று கொண்டுதான் இருக்கிறார். ஏதோ ஒரு ஆட்சி அமைந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆக இந்த வகையில் இதன் மூலம் இவர்கள் சாதிக்க இருப்பது உடனடியாக ஏதுமில்லை. தொலை நோக்கிலான விழிப்புணர்வு மட்டும் தான். சரி, இது இப்படியே இருக் கட்டும்.

அடுத்து வாக்களிப்பது என்கிற நிலை. இது தேர்தலில் நிற்கிற தனிப் பெரும் மற்றும் கூட்டணிக் கட்சி களைத் தாண்டி, யாரை ஆதரிப்பது யாரை எதிர்ப்பது என்று அந்த மட்டத் திலேயே சிந்தித்து அதற்கு மட்டுமே ஆற்றல் உள்ள நிலையில் இயங்கும் கட்சிகள் சார்ந்த நிலை. இந்த வாக்களிப்பு யாரை வெற்றி பெறச் செய்வது என்கிற நோக்கி லும் இருக் கலாம், அல்லது யாரை வீழ்த்துவது என்கிற நோக்கிலும் இருக் கலாம்.

என்றாலும் தருக்க அடிப் படையில் இவை, அதாவது ஒருவரை வெற்றி பெறச் செய்வது, அடுத்த வரைத் தோல்வியுறச் செய் வது என்கிற இரண்டும் ஒன்றோடொன்று தொடர் புடையவை, ஒன்று மற் றொன்றின் மேல் எதிர் விளைவுகளை ஏற்படுத்து பவை. எனவே இவை தனித்துப் பார்க்க முடியா தவை என்கிற புரிதலோடே இதை அணுகுவோம்.

 இந்தத் தேர்தலில் காங்கிரசை விழ்த்துவது என்கிற பொதுக்கருத்து பர வலாக தமிழ்த் தேசிய இடது சாரி சனநாயக சக்திகளி டையே முகிழ்த்து வந் துள்ளது.

ஏன் காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்பதற்கு காங் கிரஸ் தமிழகத்துக்கும் தமி ழீழத்துக்கும் எதிராக மேற் கொண்ட நடவடிக்கை களை, மீண்டும் இங்கே ஒரு முறைப் பட்டியலிட்டு இடத்தை மேலகப்படுத்தத் தேவையில்லை. அது எல் லோரும் அறிந்ததுதான் எல் லோர் நெஞ்சிலும் குமுறிக் கொண்டிருப்பதுதான். ஆகவே அதை விடுத்து நேரடியாக செய்திக்கு வருவோம்.

ஆக காங்கிரசை விழ்த்த வேண்டும் என்கிற தணல் வெறி, தமிழ் உணர்வுள் ளோர் ஒவ்வொருவர் நெஞ் சிலும் கனன்று கொண்டிருக் கிறது. ஆகவே இந்தத் தேர்தலில் வாக்கெடுப்பிலிருந்து விலகி நிற்பது என்பது அர்த்தமற்றது கடந்த நாடாளு மன்றத் தேர்தலில், செய்தது போலவே வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்ப்பு நிலை மேற் கொண்டு காங்கிரசை வீழ்த்தி தமிழக சட்ட மன்றத்தில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் கூட இல்லை என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்கிற கருத்து முனைப்பு பெற்று வருகிறது.

சரி, காங்கிரசை வீழ்த்துவது என்றால் எப்படி, காங்கிரசுக்கு எதிராக யாருக்காவது வாக்களித்துதானே வீழ்த்த வேண்டும். அப் படியானால் நாம் வாக்களிக்கும் நபர் அதற்குத் தகுதியானவரா, அப்படித் தகுதி பார்க்காமல் யாருக்கு வேண்டுமானா லும் வாக்களிக்கலாமா, அது ஒரு எதிரியை வீழ்த்த இன்னொரு எதிரிக்குத் துணை போவதாகாதா என்கிற கேள்வி கள் எழலாம்.

நியாயம். இவை எல்லாவற்றையுமே ஆராய்வோம். தற்போதுள்ள கூட்டணி இப்படியே நீடிப்பதானால் காங், திமுக, வி.சி.க ஒரு அணியும், அதிமுக மதிமுக இடது சாரிகள் ஒரு அணி யுமாக அமையும். தற்போது இரண்டு அணி யிலும் சேராது உள்ள பா.ம.க., தே.மு.தி.க. இரண்டும் இவ்விரண்டு அணிகள் ஏதாவது ஒனறில் இடம் பெறலாம்.

இவற்றுள் எது எது எந்த அணியில் சேரும், இந்த அணி சேர்க்கையினால் நேரும் வெற்றி தோல்வி வாய்ப்புகள் எப்படி என் பது பற்றியெல்லாம் தேர் தல் நெருக்கத்தில் தனியே ஆராய்வோம்.

இப்போதைக்கு காங்கிரசை வீழ்த்துவது என்கிற ஒற்றை இலக்கின் செயலாக்கம் விளைவுகள் பற்றி மட்டும் யோசிப் போம். ஆக, காங்கிரசை விழ்த்துவது என்றால் யாரையாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும். யாரை வெற்றி பெறச் செய்வது.

காங்கிரசை எதிர்த்து நிற்கும் கூட்டணியில் அந்த அணியின் சார்பாக யார் நிறுத்தப்படுகிறாரோ, அவரை அல்லது குறிப் பிட்ட அந்தத் தொகுதி யில் காங்கிரசை வீழ்த்தும் வலு வெற்றி வாய்ப்பு இருக் கிறது என்று நாம் யாரை மதிப்பிடுகிறோமோ அவரை, வெற்றி பெறச் செய்வதன் மூலமே காங் கிரசை விழ்த்த முடியும்.

அப்படியானால் காங் கிரசை எதிர்த்து தற்போ தைக்கு யார் யார் யாரெல் லாம் நிற்க வாய்ப்புண்டு. தற்போதுள்ள அணி சேர்க் கையின் படி அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் நிறுத்தப்பட வாய்ப்புண்டு. எனவே இந்தக் கட்சிறை வெற்றிபெறச் செய்ய வேண்டிய தேவை நமக்கு ஏற்படுகிறது. இவற்றுள் குறிப்பாக அதிமுக, சி.பி.எம் கட்சி களுக்கு வாக்களிக்க தமிழ் உணர் வாளர்கள் சற்று தயக்கம் காட்டலாம், இவர்கள் மட்டும் என்ன யோக்கிய மானவர்களா, இவர்களும் தமிழீழத் திற்கு எதிராகப் பேசிய வர்கள்தானே எனலாம். எனினும் காங்கிரசை வீழ்த்து வது என்கிற இலக்கை எட்ட அந்த இலக்கை வெற்றி பெறச் செய்ய இதைச் சகித்துக் கொண்டுதான் ஆக வேண் டும். வேறு வழியில்லை. ஒரு வேளை தேர்தல் நெருக்கத்தில் நிலைமைகள், கூட்டணிகள் மாறி-அரசியலில் தான் எப்போதும் எது வும் நடக்கலாம் என்பார் களே அதுபோல - நாளை வேறுவிதமான கூட்டணி ஏற்பட்டு விடுவதாகவே வைத்துக் கொள்வோம். அப்படி எதாவது நேர்ந் தாலும் அப்போதும் அதாவது காங் கிரஸ் யாரோடு எந்தக் கூட்டணியில் இருந் தாலும் அதை வீழ்த்துவது, அதை வீழ்த்தி வெற்றி பெறச்செய்யும் அணிக்கே நாம் வாக்களிப்பது என் கிற நிலையில் உறுதி யோடு இருந்து அதை வெற்றி பெறச் செய்ய வேண்டி யிருக்கும்.

சரி காங்கிரஸ் நிற்கிற தொகுதிகளில் அதை வீழ்த்த எதிரிக்கு வாக்க ளிப்பது. என்றால் காங் கிரஸ் நிற்காத தொகுதி களில் என்ன செய்வது? அங்கு வாக்களிப்பதோ அளிக்காமல் இருப்பதோ அவரவர் விருப்பம். அங்கு யார் வென்றாலும் யார் தோற்றாலும் நமக்கும் பொருட்பாடு இல்லை. காரணம் யார் வென்று வந்தும் எதுவும் ஆகப் போவதில்லை என்று விட்டு விடலாம்.

இது ஒரு குழப்பமான, குளறுபடி யான நிலைப் பாடாக இல்லையா என்று சிலர் கேட்கலாம்.

இதில் குழப்பமோ, குளறுபடியோ எதுவுமில்லை.

தமிழகத்தில் காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்று உறுதியோடு இருக் கிறோம். அதற்கு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறோம் அவ்வளவு தான்.

மற்றபடி தேர்தல் புறக்கணிப்பாளர் கள் என்ன சொல்கிறார்களோ அதையே தான் நாமும் சொல்கிறோம்.

இந்தத் தேர்தலால் பலன் ஏதும் இல்லை. இதனால் மாற்றம் எதும் வரப் போவதில்லை. யார் வென்றாலும் நிலைமை இதுவேதான். எனவே, அது பற்றி நமக்குப் பொருட்பாடு இல்லை ஆனால் காங்கிரஸ் நிற்கும் இடங்களில் மட்டும் அதை வீழ்த்துகிறோம்.

மற்றபடி தமிழகத்தில் காங்கிரசை விழ்த்துவதால் தமிழகத்திலோ தில்லி யிலோ அதிகார மாற்றம் வந்து விடும் என்றோ, ஆட்சியாளர்களின் நிலைப் பாடுகளில் மாற்றம் வந்து விடும் என்றோ நாம் சொல்லவில்லை கருதவு மில்லை. இந்தப் பொருட்பாட்டில் தேர்தல் புறக்கணிப்பாளர்கள் என்ன நிலைப்பாட்டை மேற்கொள்கிறார் களோ. அதே நிலைப்பாடுதான் நமதும்.

ஆனால் அவர்கள் விழிப்புணர்வு என்கிற தொலைநோக்கு இலக்கை மட்டும்தான் முன் வைக்கிறார்களே தவிர உடனடி இலக்கைப் பற்றி எது வும் சொல்லவில்லை. எதையும் முன் வைக்கவில்லை. அதுபற்றிப் பொருட் படுத்திக் கொள்ளவோ அக்கறைப் படவோவும் இல்லை.

ஆனால் நாம் அப்படியில்லை தொலை நோக்கு இலக்கைப் பிரச்சாரம் செய்யும் அதே வேளை காங் கிரசை விழ்த்த வேண்டும் என்கிற உடனடி இலக்கையும் முன் வைக்கி றோம்.

இந்த இலக்கின் உடனடி நோக்கம், தமிழர்களுக்கு எதிராகச் செயல் பட்டால் தமிழக மக்களின் எதிர்ப்பைச் சம் பாதிக்க வேண்டி வரும். எந்தக் கூட்டணியும் நம்மைக் காப்பாற்றாது என்கிற பாடத்தைப் புகட்டுவதுதான். இந்தப் பாடம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல. தமிழகத்தில் இயங்கும் மிகப்பெரும் திராவிடப் பாரம்பரியக் கட்சிகளான திமுக, அதிமுகவிற்கும் இது ஒரு பாடமாக அமையும். தமிழர் களை எப்படி வேண்டுமானாலும் இழுக்கலாம் ஏய்க்கலாம் வளைக்கலாம் நிமிர்த்தலாம் என்கிற ஆணவம் மமதை அடங்கும். கொஞ்சமாவது தமிழர் களைப் பற்றி அக்கறைப்பட குரல் கொடுக்க சிந்திக்க வைக்கும்.

ஒரு வேளை அப்படி சிந்திக்க வைக்கவில்லை. அவர்கள் எப்போதும் போல்தான் இருப்பார்கள் இருக்கி றார்கள் என்றாலும் பரவாயில்லை. குறைந்தப்பட்சம் காங்கிரசுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேனும் இந்த நிலைப்பாடு பயன்படும். உடனடி இலக் காக அது நிறை வேற்றப்படும் என்றாலும் கூடப் போதும். காங் கிரசை வீழ்த் துவது என்கிற ஒன்றை நிலைப் பாட்டை மேற் கொள்ளலாம்.

ஆகவே, உடனடியாக எதையுமே சாதிக்க இயல வில்லை என்கிற தேர்தல் புறக்கணிப்பை, வாக்களிப்பு மறுப்பைச் செய்து சும்மாயிருப்பதை விட உடனடியாக எதையாவது சாதிப் பது தமிழகத்தில் காங்கிரைசை விழ்த் துவது என்கிற ஒற்றைக் கோரிக்கை யையாவது வெல்வது சாதிப்பது என்கிற நோக்கில் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண் டும், இந்தத் தேர்தலில் தமிழக சட்ட மன்றத்தில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை என்கிற நிலையை ஏற்படுத்தி காங்கிரசைத் தமிழகத் திலிருந்து வேரோடும் வேரடி மண் ணோடும் முற்றாகத் துடைத்தெறிய வேண்டும். இதற்கு ஒவ்வொரு தமி ழனும் காங்கிரசை எதிர்த்து கட்டாயம் வாக்களிக்க வேண்டும்,

புரட்சியின் புனிதம் காக்க முனை யும் சனாதனப் பொதுவுடைமை வாதி கள் இந்தத் தேர்தலில் வாக்களிப் பதால் ஒன்றும் புரட்சிக்குப் பங்கம் வந்து விடாது. புரட்சியும் இதனால் ஒன்றும் தள்ளிப் போய் விடாது என்பதை யுணர்நது தங்கள் நிலைப்பாட்டை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை முற்றாகத் துடைத்தெறியத் தங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

தி.மு.க.வும் காங்கிரசும்

தமிழ்நாட்டில் தமிழின உணர்வாளர்கள், தமிழீழ ஆதரவாளர்கள் சிலர் மத்தியில் காங்கிரஸ் கட்சியை விடவும் திமுக மேல் அதிக கோபம் உண்டு. அதில் நியாயமுமுண்டு. காரணம் எதிரி என்பவன் எப்போதும் நம் எதிரில் இருக்கிறான் தெரிந்தே இருக்கிறான். அவன் எப்போதும் நமக்கு எதிராகவேதான் செயல்படுவான் என்பது தெரிந்த செய்தி.

ஆனால் துரோகி என்பவன் கூடவே இருந்து கழுத்தறுப்பவன். எப்போது என்ன செய்வான் என்று தெரியாது நன்மை செய்வது போலவே காலை வாருவான். குப்புறக் கீழே தள்ளி குழி பறிப்பான். தமிழர்களுக்கு அப்படியான ஒரு கட்சி தி.மு.க. ஆகவே காங் கிரஸ்-திமுக கூட்டணியையே வீழ்த்தவேண்டும்   என்று இவர்கள் ஆவேசப்படுவதும் நியாயமே.

ஆனால் அதேவேளை வேறு சில தமிழ் அறிஞர்களுக்கு என்னதான் ஆனாலும் தி.மு.க, கருணாநிதியை விட்டால் தமிழர் களுக்கு அப்புறம் யார் என்று  கல்லானாலும் கணவன் புல்லா னாலும்  புருஷன் என்பது போல் ஒரு அலாதிப்பாசம் உண்டு. இப் படிப்பட்டவர்களுக்கு காங்கிரசை வீழ்த்துவது எனபதில் ஒன்றும் சிக்கல் இருக்காது. ஆனால் காங்கிரஸ் கூட்டணியையே வீழ்த்த வேண்டும் என்றால்  அதில் பல சிக்கல்களும் தயக்கங்களும் எழும்

ஆகவே, இப்போதைக்கு  நாம் முதலில் நமக்குப் பொது எதிரியான  பெரிய எதிரியான காங்கிரசை  வீழ்த்துவது என்பதில்  அதை வீழ்த்தும் வல்லமை படைத்த கட்சி எதுவானாலும் அதற்கு தயக்கமின்றி வாக்களிப்பது. என்பதில் ஒரு பொது உடன்பாட்டுக்கு வருவோம்  பிறகு தேர்தல் நெருககத்தில் எங்கெங்கு எப்படிப்பட்ட அணுகு முறைகளைக் கடைப்பிடிப்பது என்பது பற்றி யோசிப்போம்.

கோட்பாடும் நடைமுறையும்

தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒரு கோட்பாடு. அதை எப்படி எங்கு செயல்ப்படுத்துவது என்பது புறச்சூழலை அங்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறையைப் பொறுத்தது. ஆகவே இதில், தமிழ் நாடு முழுக்க, இந்தியா முழுக்க ஒரே நிலைப் பாட்டைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது அதே போல எல்லாத் தேர்தலுக்கும் ஒரேமாதிரி நடைமுறையைத்தான் பின்பற்றவேண்டும் என்பதும் அவசியம் அல்ல.பாடும்ம் நடைமுறையும்

காரணம் நாடளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அதிகார நிர்வாக வாய்ப்புகளைக் கொண்டது எனவே இவற்றுள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறைகளும் வெவ்வேறாகவே இருக்கும், இருக்க வேண்டும்.

அதே போல இவற்றுள் தொகுதிக்குத்  தொகுதி வெவ்வேறு அணுகு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியும் நேரலாம் நேரும். சில தொகுதிகளில் வாக்களிக்க நேரலாம் சில தொகுதிகளில் புறக்கணிக்க நேரலாம். இதைப் போய் சந்தர்ப்ப வாதம் என்று சொல்ல முடியாது.

நடைமுறைத் தேவைக்கும்  சந்தர்ப்பவாதத்துக்குமான வேறுபாடு கத்தி முனைக் கூர்மை போன்றது. விளைவுகளை வைத்தே இவ்விரண்டையும் வேறுபடுத்தி அறியமுடியும். அந்த வகையில் காங்கிரசை விழ்த்துதல் என்கிற விளைவை வைத்து நோக்க இதைப் புரிந்து கொள்ளலாம், கொள்ள முடியும்.

அதே போல் ஆய்வில் பேராய்வு நுண்ணாய்வு என்று இரு வகை உண்டு இதில் பேராய்வை விடுத்து நுண் ஆய்வில்  மட்டும் கவனம் செலுத்துவதோ, அல்லது நுண்  ஆய்வை விடுத்து பேராய்வில் மட்டும் கவனம்  செலுத்துவதோ. இரண்டுமே தவறான முடிவுகளுக்கே இட்டுச் செல்லும். எனவே புறகணிப்பு என்றால் எல்லா இடங்களிலும் புறக்கணிப்பு வாக்களிப்பு என்றால் எல்லா இடஙகளிலும் வாக்களிப்பு என்று வரட்டுவாதம் பேசிக் கொண்டிருக்காமல் தொகுதிக்குத் தொகுதி உள்ள நிலைமைகளுக்கு ஏற்ப நாம் நம் நடவடிக்கைகளை  முடிவு செய்து கொள்ள வேண்டும்.

ஒற்றை இலக்கும் மற்ற இலக்கும்

சரி, காங்கிரசை விழ்த்த, வாங்கிரசை எதிர்த்து நிற்கும் ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறோம். சரி அந்த கட்சி ஜெயித்து பின் அதுவே காங்கிரசுக்கு ஆதரவு தராது என்பது என்ன நிச்சயம் என்ற கேள்விகள் சிலருக்கு எழலாம். நாடாளுமன்றத் தேர்தலில் அதற்கான வாய்ப்புகள் உண்டு. இது சட்டமன்றத் தேர்தல். இதில் அதற்கு வாய்ப்பில்லை. அப்படியே கூட்டணிக் கட்சிகள் வழி வாய்ப்பு இருப்பதாகவே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வதானாலும் இது அப்படித் தடம் மாறும் மாற வாய்ப்புண்டு என்றாலும் தெரிந்தே தான் அதை ஆதரிக்கிறோம். காரணம் இந்த தேர்தலில் நமது இலக்கு தமிழகத்தில் காங்கிரசை விழ்த்துவதுதானே தவிர  காங்கிரஸ் ஆதரவு கட்சிகளையே வீழ்த்துவது அல்ல அது ஒரு தேர்தலில் உடனடி சாத்தியமும் அல்ல. எனவே, சாத்திய முள்ள அந்த ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்க இந்த ஒற்றைக் கோரிக்கையை காங்கிரசை விழ்த்துவது என்கிற கோரிக்கையை முன்வைக்கிறோம்.