திரு - கொச்சி தமிழர் நடத்தும் அறப்போர் எதிர்பாராத ஒரு பல னைத் தமிழ் இனத்தாருக்குத் தந்திருக் கின்றது. ஆம்; தமிழரின் தாயகமாகிய தமிழகத் தில் மலையாளிகள் ஆதிக்கம் செலுத்து கிறார்கள் என்ற உண்மையை, அந்த ஆதிக்கத்தை அகற்ற வேண்டுமென்றே உணர்ச்சியை ஒவ்வொரு தமிழருடைய உள்ளத் திலும் ஊன்ற வைத்துவிட்டது.

மலையாளிகளையும் சேர்த்துத் திராவிட இனஒற்றுமை பேசியவர்கள் கூட மலையாள ஆதிக்கத்தை ‘எதிர்க்க’ வேண்டுமென்று எழுதவும் பேசவும் ஆரம்பித்து விட்டார்கள்! அது மட் டுமா? தமிழகத்தில் மலையாளிகள் என்ன, என்ன பதவிகள் வகிக்கிறார்கள் என்று பட்டியல் கொடுக்கவும் முன்வந்து விட்டார்கள்!! தமிழரி டையே இந்த மாறுதல் ஏற்படுவதற்குப் பட்டம் தாணுப் பிள்ளையும் ஓரளவு காரணமாவார். ‘தீமையிலிருந்தும் நன்மை பிறப்பதுண்டு’ என்பது பழ மொழி. அதுபோல பட்டம் தாணுப் பிள்ளையின் ஆட்சி தமிழரைச் சுட்டுக் கொன்றதன் விளைவாகத் தமிழரு டைய இனப்பற்று மலையாள இனத்த வரின் ஆதிக்கத்தை எதிர்க்கும் உணர்ச் சியாக மாறிவிட்டது.

திரு - கொச்சி ராஜ்ய நிலப் பரப் பில் தமிழ் வழங்கும் பிரதேசம் மூன்றில் ஒரு பங்காகும். மக்கள் தொகையில், தமிழர் நான்கில் ஒரு பங்காக இருந்தும், அந்த ராஜ்யக் கல்லூரிகளிலும், அரசாங்க உத்தியோகங்களிலும் தமி ழருடைய சதவிகிதத்திற்கேற்பப் பங்கு கிடைப்பதில்லை.

திருவனந்தபுரம் சர்வ கலா சாலை யிலும், அதன் நிர்வாகத்தி லுள்ள கல்லூரிகளிலும் தமிழுக்குச் சிறப்பிடம் அளிக்கப்படவில்லை. ஆங்கிலமும மலையாளமுமே ஆதிக்கம் செலுத்து கின்றன. தமிழ் இன மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையாத படி தடுப் பதற்காகவே. அங்கு தமிழ்மொழி புறக் கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளை வாகக் கொச்சியிலுள்ள தமிழ் மாண வர்கள், மேல் படிப்புக்காகச் சென்னை ராஜ்ய சர்வ கலாசாலைகளிலும் அடைக்கலம் புகுகின்றனர். ஆனால் இதே நேரத்தில். சென்னை ராஜ்யத்தில் மலையாளி களின் நிலை என்ன?

சென்னை ராஜ்யத்திலுள்ள பதி னான்கு ஜில்லாக்களில் ஒன்று மலை யாள ஜில்லா. மக்கள் தொகையிலும், மலையாளிகள் பன்னிரண்டில் ஒரு பங்கினரே. இருந்தும், கல்லூரிகளிலும், அரசாங்க உத்தியோகங்களிலும் பெரு மளவுக்கு அவர்கள் ஆதிக்கம் செலுத் துகின்றனர். போதாக்குறைக்கு திரு - கொச்சி ராஜ் யத்தைச் சேர்ந்த மலை யாளிகளும், கல்வி கற்கவும் வேலை பிடிக்கவும் தமிழகத்தை நோக்கிப் படையெடுத்து விடுகின்றனர்.

சென்னை அரசாங்கத்தின் நேர் நிர்வாகத்திலுள்ள கல்லூரிகளில், பிரின்ஸ்பால்களாக இருப்பவர்கள் மலையாளிகளே. ஆசிரியர்களின் எண் ணிக்கையிலும் அவர்கள்தான¢ அதிகம். மாணவர்கள் கணக்கிலும் மலை யாளிகளின் சதவிகிதம் கூடுதலானதே. ஏன் இந்த நிலை? திரு - கொச்சி தமிழர்கள் மலையாளிகளால் அடக்கி ஆளப்படுவதைக் கண்ட பிறகும் தமி ழகத்தில் மலையாளிகள் ஆதிக்கம் செலுத்த அரசினர் அனுமதிப்பா னேன்?

மலையாளிகளிடம் நமக்கு விரோதமில்லை. அவர்களைத் தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டு மென்றும் நான் கூறவில்லை. தமி ழன் தன் உரிமைகளையும், உத்தியோகங் களையும் பறித்து வாழும் கொடு மையைத்தான் எதிர்க்கின்றோம். அதிலும் திரு - கொச்சியில் வாழும் தமிழர்களுக்கு நீதி வழங்க மறுக்கின்ற இனத்தவர், தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த உரிமை ஏது? கேரள ஆட்சி யில் தமிழர் சுட்டுக் கொல்லப்படு கின்றனர். தமிழ் ராஜ்யத்தில் கேரளர் சுரண்டிப் பிழைக்கின்றனர். மலபார் ஜில்லா மக்கள் சென்னை ராஜ்யமென்ற தமிழகத்தில் குடியிருக்கும் வரை அவர்களுக்குரிய பங்கை வழங்குவது தமிழர் கடமை. அதை நாம் ஆட்சே பிக்கவில்லை. ஆனால், குடியிருப்ப வர்கள் தங்கள் பங்குக்கு அதிகமாகவே கொள்ளையடிக்க ஆரம்பித்தால் அதைப் பார்த்துகொண்டிருப்பது கோழைத் தனமல்லவா? கலாச்சாரப் படி, மலையாள இனத்தார் தமிழினத் தாரின் சுற்றத்தார் என்று கூறலாம். ஆனால், சுற்றத்தார் என்ற உரிமை பாராட்டித் தமிழகத்தைச் சுரண்ட ஆரம்பித்தால் தமிழர் சோம்பிக் கிடக்கலாமா?

மொழி வரலாற்றுப்படி, மலையாளம் சேய்மொழி; தமிழ் தாய் மொழி. ஆகவே, சேய் மொழி பேசு வோரிடம் தாய்மொழி பேசும் மக்கள் அன்பு பாராட்ட வேண்டும். அதை நாம் மறுக்கவில்லை. ஆனால், சேயும் தாயும் ஆனாலும், வாயும் வயிறும் வேறுதான். ஆகவே, சேய் இனத்தார் தாய் இனத்தாரை ஆதிக்கம் செலுத்த அனுமதித்தால் தமிழினம் அழிந்து விடாதா?

ஆகவே, தமிழகத்தில், அங்கு இங்கு எனாதபடி எங்கெங்கும் எல்லாத் துறைகளிலும் மலையாளிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதைத் தமி ழினத்தார் தவிர்த்தாக வேண்டும், இந்தப் போக்குக்கு ‘இனவெறி’ என்று பெயர் வைத்து பரந்த புத்தி படைத்த அரசியல் வாதிகள் ஆத்திரப்படலாம். ஆனால், அவர்கள் கொஞ்சம் அமைதியோடு சிந்திக்க வேண்டும். இன உணர்ச்சியால் அல்லா விட்டாலும் நீதி உணர்ச்சி யாலேனும் சிறிது நேரம் சிந்தித்துப் பார்க்கட்டும். தமிழருடைய இன உணர்ச்சியை எதிர்க்கும் பரந்த புத்திக் காரர்கள் மலையளிகளின் இனவெ றியை எதிர்க்கிறார்களா? இல்லையா!

தமிழகத்தில் தங்கள் சதவிகிதத்துக்கு அதிகமாகவே, மலையாளிகள் ஆதிக்கம் செலுத்துவதை இந்தப் பரந்த புத்திக்காரர்கள் ஆதரிக்கிறார்களா? ‘ஆம்’ என்றால், அதை வெளிப் படை யாகச் சொல்லட்டுமே! மலையாளி களின் ஆதிக்கத்தை ஆதரிக்கவில்லை என்றால், அதைத் தவிர்க்க அவர்க ளேனும் வழிவகைகள் கூறட்டுமே!

தமிழகத்தில் ஆதிக்கம் செலுத் தும் மலையாளிகள் இன உணர்ச்சி யற்று, தேசீய ‘இந்தியர்’ என்ற பொது உணர்ச்சி ஒன்று மட்டுமே கொண்ட வர்களாயின், தமிழகத்தில் அவர்கள் அடைந்துள்ள வாழ்வை ‘ஆதிக்கம்’ என்று சொல்ல மாட்டோம். ஆனால், சந்தைக் கடையில் தேனீர் விற்கும் சங்குண்ணி நாயரிலிருந்து சர்க்காரில் பெரிய பதவி வசிக்கும் ராமுண்ணி மேனன் வரை அவ்வளவு பேரும் தாங்கள் மலையாளிகள் என்பதை மறந்துவிடவில்லையே! அரசாங்க இலாகாவில் ஒரு மலையாளி உயர் பதவிக்கு வந்தால் அவருடைய மோட் டார் ஓட்டியிலிருந்து அலுவலகப் பியூன் வரை அத்தனை பேரும் மலை யாளிகளாக மாறி விடுகின்றார்கள்.

சென்னை அரசாங்கப் போக்கு வரத்து இலாகாவில் தலைமை அதி காரப் பதவிக்கு மாறி மாறி மலையாளி களே நியமிக்கப்பட்டு வருவதால் அந்த இலாகாவில் வேலை பார்க்கும் மோட்டார் ஓட்டிகள், டிக்கட் விற் பவர்கள், பரிசோதிப்பவர்கள் ஆகிய வர்களில் பெரும் பாலோர் மலையாளி களாகவிட்ட அநீதியை அறியாதார் யார்?

திரு - கொச்சி ராஜ்சியத்தில் தமிழர் வாழும் பகுதிகளில் கூடத் தமிழருக்கு உத்தியோகம் தரப்படு வதில்லை. நீதி இலாகா உத்தியோ கங்களில் கூடத் தமிழனத்தவருக்கு நீதி வழங்கப்படுவதில்லை. இதெல்லாம், மலையாளிகளின் இனவெறிக்கு எடுத் துக்காட்டுகளல்லவா? பரந்த புத்திக் காரர்கள் இதையெல்லாம் ஏன் எதிர்ப் பதில்லை? தமிழன்தான் ஏமாந்தவன் என்ற எண்ணமோ?

தமிழகத்தில் மலையாளிகள் மட்டுமல்லாமல், ஆந்திரர் - கன்னடர் போன்ற பிற மொழிவழி இனத்தவரும் கல்லூரிகளிலும் அரசாங்கக் காரி யாலங்களிலும் தங்கள் சத விகிதத்துக்கு அதிகமாகவே ஆதிக்கம் செலுத்து கின்றனர். இதற்குக் காரணம், தமிழ் இனத்தவரிடையே பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற பிளவு எடு பட்டு, அது நெடுங்காலம் நீடித்திருப் பதேயாகும். ஆம்; ‘பிராமண ரல்லாதார்’ இயக்கத்துக்குக் காரண மானவர்கள் யாரோ அவர்கள்தான் தமிழகத்தில் தமிழர் அல்லாதார் ஆதிக்கம் செலுத்த நேர்ந்ததற்கும் காரணமாவார்கள்.

திராவிட மாயையிலிருந்து விடு பட்டதாகக் கூறிக்கொண்டு மலை யாளிகளின் ஆதிக்கத்தை எதிர்க்கப் புறப்பட்டிருக்கும் பெரியார் ஈ.வே.ரா. முதலில் தமிழரைப் பிளவுபடுத்தும் பிராமணர் - பிராமணர் அல்லாதார் கூச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும். அப்போதுதான் தமிழகத்தில் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை ஒழித்துத் தமிழனத்தவருக்கு வாழ்வு தேட முடியும்.

தமிழர் அல்லாதார் என்று நாம் கூறும்போது, தமிழகத்தின் நிரந்தரக் குடிகளாகிவிட்ட சௌராஷ்டிரர், நாயுடுக்கள், உருது பேசும் முஸ்லீம் கள் போன்ற இருமொழியாளரைக் குறிப் பிடவில்லை. எல்லா வகையிலும் தமிழைப் புறக்கணித்து, தமி ழகத்தின் வாழ்வு தாழ்வுகளுக்குப் பொறுப்பேற்க மறுப்போரையே குறிப்பிடுகின்றோம்.

(அக்டோபர் 1954)