ஒடுக்கப்பெற்ற, தாழ்த்தப்பட்ட சமூகங்கள் புதிய விழிப்புப் பெற்று உரிமைகளைப் பெறக் கொள்கைகளையும் இயக்கங்களையும் உருவாக்கும் முயற்சிகள் இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாராஷ்டிரப் பிரதேசத்தில் தோன்றின. இதற்காக அரும்பாடுபட்ட போராளிகளில் மகாத்மா சோதிராவ் கோவிந்தராவ் பூலே (1827-1890) ஈடுயிணையற்ற முன்னோடி யாவர். இவரைப் பற்றிச் சுருக்கமாக இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் என்னுடைய நூலில் (1973) எழுதியுள்ளேன். மேலும் சற்று விரிவாக்கம் செய்து மூன்றாம் பதிப்பில் (2002) எழுதியுள்ளேன்.

பிராமணரல்லாதவர் இயக்க வரலாற்றில் பூலேவிற்கு உரிய முதலிடத்தை அறிந்து கொள்ள வேண்டும். மராட்டியப் பிரதேசத்தில் சமூகச் சீர்திருத்தத் தலைவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்பாலும் பிராமணர்களாக இருந்த காலத்தில் மகாத்மா பூலேதான் முதல் பிராமணரல்லாத சமூக சீர்திருத்தத் தலைவராக விளங்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய பிரம்ம சமாஜம்(1818)ஆர்யசமாஜம் (1875), இராதாகிருஷ்ணா மிஷன் (1886), சமரச சுத்த சன்மார்க்க சங்கம் 1865) தியோசாபிகல் சொஸைட்டி எனப்படும் பிரம்ம ஞான சபை (1875 ல் நியூயார்க்கில் நிறுவப் பெற்று 1879ல் தலைமையிடம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது) முதலானவையெல்லாம் சில, பல சமூக சீர்திருத்தங்களுக்குப் பாடுபட்டாலும் ஓடுக்கப்பெற்ற, தாழ்த்தப் பட்ட மக்களை மையப்படுத்தி முதன்மைப்படுத்தி போராடவில்லை என்பது வரலாற்றுண்மை

இந்தச் சூழலில் மகாத்மா பூலே பிற்படுத்தப்பட்ட ‘மாலி’ சாதியில் (தோட்ட வேலை செய்பவர்கள்)தோன்றி பிராமணரல்லாத மக்களுக்காகவும் கொள்கைகளையும் போராட்ட முறைகளையும் வகுத்துப் பாடுபட்டார்.

பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு புரோகித வர்க்க எதிர்ப்பு, வேத எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு, முதலானவற்றையெல்லாம் பிராமணரல்லாதவர் இயக்க அடையாளச் சின்னங்களாக அமைத்தார் மகாத்மா பூலே. 1873ல் அவர் நிறுவிய சத்யஹோதக் சமாஜ் புரட்சிப் பாசறையாகச் செயலாற்றியது.

தமிழக பிராமணலரல்லாத இயக்கம் திராவிட இயக்கங்களுக்கு 1870லேயே வாழிகாட்டியவர், பதினாறு கொள்கை விளக்க நூல்களை மராத்திய மொழியில் எழுதியவர் மகாத்மாபூலே.

1873ல் வெளிவந்த அவருடைய ‘குலாம்கிரி’ (அடிமைத்தனம்), சூத்திரர்களும் ஆதிசூத்திரர்களும் எவ்வாறு பிராமணியத்தால் அடிமைப்படுத்தப்பட்டனர் என்பதை ஆய்துள்ளது. 1869ல் வெளிவந்த ‘பிராம்மன் சே கஸப்’ (புரோகித வர்க்கம் அம்பலப் படுத்தப்படு கின்றது)எனும் நூல் மராட்டிய உழவர்கள், மாலி சாதியினர், தாழ்த்தப்பட்ட மாஸ், மகர் மக்களுக்கு காணிக்கையாக் கப்பட்டது. 1883ல் வெளிவந்த சேட்கார்யா அஸீத்’ (உழவர்களின் சாட்டை) ‘சூத்திர’ சமூகத்தினருக்கு அர்ப் பணிக்கப்பட்டது. இந்நூலில் உழவர்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றனர், உழவுத் தொழிலில் விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவது முதலானவை எழுதப் பெற்றுள்ளன.

பூலே 1889ல் பம்பாயில் ஐந்தாவது காங்கிரஸ் மகா சபை நடை பெற்ற பொழுது உழவர் பிரச்சினைகளை முன்வைத்து உழவர் பேரணி நடத்தினார், உழவனாகவே உடை உடுத்திச் சென்றார். பேரணியில் பின்வருமாறு உழவர் எழுச்சிப் பாடல் இசைக்கப் பெற்றது.

“உழவர் அரசனே விழித்தெழு

ஒவ்வொருவரும் ஏமாற்றுகின்றனர்

அடக்குமுறையை, அநீதியை

ஒன்றுபட்டு எதிர்த்திடும்

உழவர் அரசனே விழித்தெழு”!

முற்கூறிய வரலாற்றுப் பின்னணியில் தலித் விடுதலை இயக்கத்தின் ஆதிமூலர்களுள் ஒருவரான பண்டிதர் க.அயோத்திதாசரின் வரலாற்றுப் பாத்திரம் குறிப்பிடத் தக்கது என்னுடைய ‘நீதிக் கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு’ எனும் நூலில் ஆதிமூலம் எனும் தலைப்பில் அயோத்தியதாசர், இரட்டைமலை சீனிவாசன் ,எம்.சி.ராஜா ஆகியோர் குறித்து எழுதியிருக்கிறேன்.

1986ல் வெளிவந்த என்னுடைய ‘கார்ல் மார்க்சின் இலக்கிய இதயம்’ எனும் நூலில் ‘பகுத்தறிவு இயக்கச் செம்மல் பண்டிதர் க.அயோத்திதாஸ் எனும் தலைப்பில் எழுதியுள்ளேன். இந்நூலிற்கு புகழ்பூத்த படைப்பிலக்கியக் கர்த்தாவும் மார்க்சிய விமர்சன அறிஞருமான தொ.மு.சி. ரகுநாதன் பின்வரும் கருத்தைச் சுட்டிக் காட்டினார்.

‘பெரியார் ஈ.வெ.ரா. வுக்கும் முன்பே பகுத்தறிவு இயக்க, நாத்திக இயக்கச் சிந்தனைகளைப் பரப்பிய, உண்மையில் பெரியாருக்கும் முன்னோடியாக விளங்கிய எனினும் அறிவுலகம் அவ்வளவாகச் கண்டுணராது போய் விட்ட பண்டிதர் அயோத்திதாசர் பற்றியும் இந்நூலில் ஒரு கட்டுரை இடம் பெற்றுள்ளது?”

மறந்துபோன மறைக்கப்பட்ட பண்டிதர் க. அயோத்தி தாசரை ‘அம்பேத்கர் ’ இதழ் மூலம் 1962முதல் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் மறைந்த சிந்தனை யாளர், வரலாற்றாய்வாளர் அன்பு பொன்னோவியம். அவர் சுட்டிக் காட்டிய பின்வரும் வரலாற்றுண்மை அயோத்தி தாசரின் வரலாற்றுப் பாத்திரத்தை உணர்த்தவல்லது.

‘ அவர் காலத்திலும் பல பண்டிதர், புலவர்,கவிஞர், நாவலர், அவதானிகள், பாகவதர் பேச்சாளர், எழுத்தாளர் ஆதி திராவிடர்களிடையே இருந்தார்கள். இருப்பினும் சமுதாய, சமயம், இலக்கியம், அரசியல், வரலாறு, தொழில், பகுத்தறிவு, சீர்திருத்தம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு தொண்டாற்றி யதுதான் பண்டிதர் தனித்தன்மை கொண்ட மனிதராக எண்ணத் தூண்டியது எனலாம். அயோத்திதாசர் 1875 லிருந்து 1911வரை விதைத்த முன்னேற்ற சிந்தனைகளின் மறுமலர்ச்சியும் வளர்ச்சியும் இரட்டைமலை சீனிவாசனார், எம்.சி.ராஜா போன்ற தலைவர்களைப் படைத்து மக்களுக் ககாகப் பாடுபடவைத்தது என்று தயக்கமில்லாமல் குறிப்பிடலாம்.

பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு, வேத எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு முதலானவற்றில் மகாத்மா பூலேவின் கருத்துகளுடன் ஒத்திசைவாகக் கொள்கைப் பிரச்சாரம் செய்தவர் பூலே. மத எதிர்ப்பாளராக இருந்தபோதிலும் கடவுள் மறுப்பாளாராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. பூலே பற்றி அயோதிதாசர் எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. அயோத்திதாசரின் முற்கூறிய எதிர்ப்புகள் எல்லாம் அவருடைய புத்தமதச் சார்பான அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்டனவாகும். அக்கால ஆதிதிராவிடச் சிந்தனையாளர்களில் அயோத்தி தாசரே ஆதிதிராவிடர்களின் பூர்வீக மதம் பௌத்த மதமே என்று முழங்கியவர்.

1882’ல் மக்கட்தொகை கணக்கெடுப்பு நிகழ்ந்த பொழுது தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களை ‘பூர்வத்தமிழர்’ எனும் பெயரிலேயே குறிக்க வேண்டும் எனும் கோரிக்கையை விடுத்தவர் அயோத்திதாசர்

பௌத்த மதப் பிரச்சாரத்தை முதன்மையாகக் கொண்டு 19-6-1907ல் சென்னையில் ‘ஒரு பைசாத் தமிழன் ’ எனும் பெயரில் வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். பௌத்த சமயத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய விரிவான ஆய்வுகளையும் அவரே எழுதி வந்தார். முதல் இதழிலேயே புத்த பகவானின் போதனைகளை ‘பூர்வத் தமிழொளி ’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரைகளாக எழுதத் தொடங்கினார். தமது காலத்திலேயே 1912ல் ‘பூர்வத் தமிழொளியாம் புத்தரது ஆதிவேதம் எனும் நூலை வெளியிட்டார். கோலார் மாரிக்குப்பம் சாக்கிய பௌத்த சங்கம் சார்பில் வெளியிடப் பெற்ற இந்நூல் 303 பக்கங்களைக் கொண்டது எட்டு பக்கங்களில் அவரால் எழுதப் பெற்ற விரிவான பாயிரம் பரந்துபட்ட அவருடையபௌத்தம் தமிழ் இலக்கியப் புலமையை எடுத்துக்காட்டியுள்ளது.

26-08-1908லிருந்து ‘ஒருபைசாத் தமிழன்’ எனும் பெயர் ‘தமிழன்’ என மாற்றம் பெற்றது. அவர் பொறுப்பில் 15-4-1914 வரையில் வெளிவந்து பிறகு அவருடைய புதல்வர் பட்டாபிராமன், கோலார் தங்கவயல் பண்டிதமலை ஜி,அப்பா துரையார் ஆகியோர் பொறுப்பில் வெளிவந்து.

தோழர் அன்பு பொன்னோவியம் தம்மிடமிருந்த ‘தமிழன்’ இதழ்களையெல்லாம் ஆய்வாளர் ஞான அலாய் சியஸிடம் வழங்கினார். ஞான அலாய்சியஸ் அரும்பாடு பட்டு அவற்றை‘அயோத்தியதாசர் சிந்தனைகள்’ எனும் தலைப்பில் இருபெரும் தொகுதிகளாக 1999இல் வெளியிட்டார். வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற நானும் அழைக்கப் பெற்றேன். மிகச் சிறநத ஆவணக் களஞ்சியமான இவ்விரு தொகுப்புகளில் அயோத்திதாசரின் பன்முகப்பட்ட ஆளுமை பதிவு செய்யப் பட்டுள்ளது. முன்னுரையில் ஞான அலாசியஸ், அயோத்தி யதாசரின் வரலாற்றுப் பாத்திரத்தைப் பின்வருமாறு சாற்றியுள்ளார்.

‘நவீன இந்தியாவின் மாபெரும் அறிஞர்களுள் ஒருவர் பண்டிதர் அயோத்திதாசர். காலனியாதிக்கத்தின் இக்கட்டான காலகட்டமாகிய பிந்திய பத்தொன்பதாம் முந்திய இருபதாம் நூற்றாண்டுகளில் வாழந்த இவர் பண்டைய இலக்கிய, சமூக, ,சமய,வரலாற்று, ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமுதாயம் நிர்மாணிக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருந்தார் நவீன இந்தியாவில் பரவலாக நவீனத்துவம் முதலிய கொள்கைப் போக்குகளில் தமிழக அளவில் தந்தை பெரியாருக்கும். இந்திய அளவில் அண்ணல் அம்பேத்கருக்கும் முன்னோடியாக விளங்கினார்.சமயம் சமுகம், வரலாறு, இலக்கியம், அரசியல், பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள் ஒரு தனி மனிதனின் கருத்துகளாக மட்டும் அமையாமல் அகன்ற சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தும் சித்தாந்தங்களாகச் சிறந்தன ’

1986லேயே தலித் இயக்கச் சிந்தனையாளர்கள், அமைப்பாளர்கள் சிலரிடையே அயோத்திதாசர் குறித்த கருத்தரங்குகளை நடத்த பரிந்துரை செய்தேன். அப்பொழுது காலம் கனியவில்லை. பிறகு சமீப இருபது ஆண்டுகளாக அயோத்திதாசர் ஆய்வு மையங்கள் கொள்கைப் பரப்புரைகள் பெருகி வருகின்றன. ஆயினும் தலித் அல்லாத சமூகத்தினர் ஒத்துழைப்பும் புரிதலும் இயக்க அளவில் செயற்படவில்லை, அயோத்திதாசரை தாழ்த் தப்பட்ட சமூகத்தின் தலைவராக மட்டும் மதிப்பிடாமல் ஒடுக்கப் பெற்றவர்களின் போராளியாகவும் உலக மனித நேயப் பண்பாளராகவும் போற்றி தலித் அல்லாத சமூகச் சிந்தளையார்களும் ஒன்றுபட வேண்டும். அவர் பங்களிப்பு தமிழகத்தையும் தாண்டி இந்தியாவெங்கும் பரவவேண்டும் அண்ணல் அம்பேத்கர் இயக்கம் இந்தியா முழுவதிலும் இயங்குகின்றது. இதன் ஒரு பணியாக அய«த்திதாசரின் புகழ்பரப்பும் பணியும் இணைய வேண்டும். பல்கலைக் கழகங்களில் அயோத்திதாசர் பெயரில் இருக்கைகள் எற்படுத்த வேண்டும். கல்லூரி மற்றும் பிறகல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் அயோத்திதாசர் பற்றிய வரலாறு சேர்க்கப்பட வேண்டும்.

அவர் தமது மரணப் படுக்கையில் பௌத்தம் மேன்மேலும் பரவவேண்டும் எனவும் திருக்குறள் சிந்தனைகளை முழுமையாக எழுத முடியாமல் போயிற்றே எனவும் வருந்தினார்.

தியோசாபிகல் சொசைட்டியின் நிறுவனர்களில் ஒருவரான ஹென்றி ஸ்டீவ் ஆல்காட்டின் துணை கொண்டு இலங்கை சென்று பௌத்த மத தீட்சை பெற்ற அயோத்திதாசர், 1898ல் சென்னை, ராயப்பேட்டையில் நிறுவிய தென்னிந்திய பௌத்த சாக்கிய சங்கம் அவருடைய இயக்க ஆற்றலுக்கு ஒரு சான்று. தோழர் சிங்காரவேலர் , பேராசிரியர் லட்சுமிநாதனுடன் இணைந்து தமிழகத்தில் பௌத்த சமயப் பிரச்சாரம் செய்ததையெல்லாம் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. தமது வாழக்கைக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். அயோத்தியதாசர் மீது. திரு.வி.க. இயற்றிய இரங்கற்பா ஒரு வரலாற்று ஆவணமாகும் இதை முதன் முதலில் கண்டெடுத்து வெளியிட்டுள்ளேன்.

 [நன்றி: ஜனசக்தி நாளேடு 02.06.2011]

இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள் -  அரசு விழாவாக ஜெ அறிவிப்பு

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற் காகவும், விடுதலைக்காகவும் குரல் எழுப்பிய, பாடுபட்ட முன் னோடிச் சிந்தனையாளர், அயோத்தி தாசருக்கு சமகாலத்த வராகவும், அவருக்குப் பிறகாகவும் பாடுபட்டவர், உழைததவர் இரட்டை மலை சீனிவாசன் (1859 - 1945) .

இவருடைய பணியைப் பாராட்டும் முகமாக இவருக்கு மணி மண்டபமும், முழு உருவச் சிலையும் அமைக்கப்படும் என தன் கடந்த ஆட்சிக் காலத்தில் 2005 ஆம் ஆண்டு மார்ச்சு 9 இல் அறிவித்திருந்தார் ஜெ தற்போது அவரது பிறந்த நாளான ஜூலை 7ஐயும் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளார். அறிவித்த ஜெ அரசுக்கு நன்றி.

தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கும் விடுதலைக்கும் பாடுபட்டவர்களைப் பாராட்டுவது மதிப்பது என்பது சரி. எனில் இதோடு மட்டும் நின்று விடாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளைக் களையவும், இம் மக்களின் கல்வி, சமூக நிலைகளில் முன்னேற்றம் ஏற்படவும் அரசு உரிய திட்டங்கள் தீட்டி தொடர்ந்து செயல்பட வேண்டும்.

சாதி வாரிக் கணக்கெடுப்பு - தில்லி அமைச்சரவை ஒப்புதல்

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை, இந்த ஆண்டு சாதி வாரியாகவும் எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து, அது சர்ச்சைக்குள்ளானதை யட்டி இதுபற்றி ஆராய குழுவும் நியமிக்கப்பட்டு அது பரிந்துரை வழங்க தற்போது ஒருவாறு அச்சிக்கலுக்குத் தீர்வு காணப் பட்டுள்ளது.

இதன்படி இந்த ஆண்டு ஜூன் மற்றும் திசம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பில் ஏழைகள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்கிற பிரிவோடு சாதிவாரியாகவும் கணக்கெடுக்க வேண்டுமென கடந்த 16-05-2011 அன்று நடைபெற்ற தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் புதுவையிலும் ஜூலை 18முதல் 40 நாட்களுக்குள் இக்கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது 1931இல் எடுக்கப்பட்டது. அதற்கு பிறகான இந்த எண்பது ஆண்டுகளில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி 7 முறை நடைபெற்றபோதும் ஒரு முறைகூட சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 தற்போது எடுக்கப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தமிழ்ச் சமூகத்தின் சாதிய இருப்புகளின் தன்மைகளையும் அவற்றின் நிலைகளையும் அறியவும், அதனடிப்படையில் பின்தங்கிய கடைநிலை மக்களுக்கான திட்டங்களைத் தீட்டவும் பயன்படுவதாய் அமையும். அமையவேண்டும் என்பதே இதன நோக்கம்.

Pin It