ஒரு சனநாயக அரசு கட்ட மைப்பின் அடிப்படைத் தூண்களாக மூன்று அமைப்புகள் சொல்லப்படு கின்றன. ஒன்று நாடாளுமன்றம், இரண்டு நிர்வாகம், மூன்று நீதித்துறை.

மக்கள் நலத்திட்டங்களை உரு வாக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நடாளுமன்றமும், உருவாக்கப்பட்ட இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நிர்வாகமும், இவ்விரண்டும் அரச மைப்புச் சட்டப்படி அதில் உறுதிப் படுத்தப்பட்டுள்ள நெறிமுறைப் படி இயங்குகிறதா எனக் கண்காணிக்கவும் வழி காட்டுவதற்குமான அதிகாரமும் கொண்டதாக நீதிமன்றமும் இயங்க வழி வகுப்பதே இக்கட்டமைப்பின் நோக்கம்.

இதற்கு அப்பால் இம்மூன்று அமைப்புகளுமே முறைப்படி இயங்குகிறதா, மக்கள் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் செயல் படுகிறதா என நுண்நோக்கவும் கருத்து கூறவும் விமர்சிக்கவும் ஆன பத்திரிகைத் துறை நான்காவது தூணாகவும் சொல்லப்படுவது உண்டு. எனினும் இவை அனைத்திற்கும் மேலாக இவ்வனைத்து உரிமை களையும் நிலைநாட்டும் நோக்கில் மக்கள் திரள் பிரிவின் உரிமைகளைக் காப்பதில் முன்னோடிப் பாத்திரம் வகிக்கும் மனித உரிமைப் போராளிகளையும் முக்கியமாகக் குறிப்பிடவேண்டும்.

ஆனால், ஆதிக்க சக்திகளும் அவற்றுக்குத் துணை போகும் அடிவருடி எடுபிடிக் கும்பல்களும். சனநாயக அமைப்பின் நான்காவது தூணாகச் செயல்படும் பத்திரிகை யாளர்களையும், மனித உரிமைப் போராளிகளையும் திட்டமிட்டுப் பழி வாங்கவும், தீர்த்துக் கட்டவுமான குரூர நடவடிக்கைகளில் இறங்கி யுள்ளன

மும்பையிலிருந்து வெளிவரும் ‘மிட் டே’ இதழின் புலனாய்வுப் பிரிவு ஆசிரியர் ‘ஜோதிந்திரடே’ (வயது 53) நிழல் உலக தாதாக்கள் பற்றியும், அவர்களுக்குத் துணைபோகும் காவல் அதிகாரிகள் பற்றியும் தொடர்ந்து எழுதி அச்சமூக விரோத சக்திகளின் தூக்கத்தைக் கெடுத்தவர். இளம் பத்திரிக்கையாளர்களுக்கெல்லாம் ஆதர்சமாக இருந்தவர். நம்பிக்கைக்கும் துணிச்சலுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். கடந்த 11.06.0211 அன்று சனிக்கிழமை நண்பகல் 2 மணிவாக்கில் மும்பை சூப்பர் மார்க்கெட் வழியாகத் தன் இரு சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் இரண்டு வண்டிகளில் வந்த கூலிப் படையினர் ஜோதிந்தரைச் சுட்டு வீழ்த்திவிட்டுச் சென்று விடுகின்றனர். சுற்றி இருந்தவர்கள் அவரைத் தூக்கி போட்டுக் கொண்டு மருத்துவ மனைக்கு செல்ல, அங்கு உரிய கவனிப்பின்றி இறந்துபோகிறார். .

தமிழ்நாட்டில் மனித உரிமை வழக்குகளைத் தொடர்ந்து நடத்தி வருபவரும் வழக்கறிஞர்களும், மனித உரிமைப் போராளிகளும் நன்கு அறிந்த வருமான சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கரசுப்பு, இவரது மகனும் வழக்கறிஞர். தந்தையோடிருந்து தந்தைக்கு உதவியாக பணியாற்றி வந்தவர். கடந்த 07.06.2011 அன்று காணாமல் போய் விடுகிறார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் காவல் நிலையத்தில் புகார் தந்தும் பலனற்ற நிலையில் தந்தை சங்கரசுப்பு உயர்நீதி மன்றத்தில் ‘ஆள் கொணர்வு’ மனு தாக்குதல் செய்ய, கடந்த 13.06.2011 அன்று சென்னை ஐ.சி.எப். ஏரியில் அவரைப் பிண மாகக் கண்டெடுக்கிறது காவல்துறை. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வழக்கறிஞர் சமூகமும் ஆதரவாளர் களும் ஆவேசமாகக் கிளர்ந்தெழுந்து போராட உரிய பாதுகாப்புடனும் கண்காணிப்புடனும் சடல ஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு , மரணம் கொலைதான் என்பது உறுதி செய் யப்படுகிறது.. சந்தேகம் திருமுல்லை வாயில் காவல் ஆய்வாளர்கள் ரியாசுதின். கண்ணன் ஆகிய இருவர் மேலும் விழ, விசாரணைக்கு உத்திர விடப்பட்டுள்ளது.

அடுத்து கேரளத்தில் மாத்ருபூமி இதழின் கொல்லம் நிருபர் உன்னதன் காவல் துணை கண்கானிப்பாளர் ஒருவர் சாராய வியாபாரிகள் தந்த விருந்தில் கலந்து கொண்டதை, முறைகேடாக நிலங்கள் வாங்கிக் குவித்ததை, விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டியதை அம்பலப்படுத்தி பத்திரிக்கையில் எழுதினார் என்பதற்காக ஆதிக்க சக்திகள் இவர்மீது கூலிப்படையை ஏவ கடந்த 16.04.2011 அன்று இரவு தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார். பலத்த காயமுற்றாலும் நல்ல வேளையாகப் பிழைத்துவிடுகிறார். கேரள பத்திரிக்கை உலகம் கொந்தளிக்க தாக்குதலுக்கு காரணமான காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்தோஷ் நாயர் கைது செய்யப் படுகிறார்.

அதாவது ஒரே மாதத்தில் இரண்டு கொலைகள், அதற்கு இரண்டு மாதம் முந்தி ஒரு கொலை வெறித் தாக்குதல், இவை வெளியே தெரிய வந்து பரபரப் பானவை. இவை யன்றி வெளியே தெரியவராமல் எத்தனை நிகழ்வுகளோ. இப்படிப் பத்திரிக்கையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் ஆதிக்க சக்திகளால் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, ஏதுமறியா அப்பாவி மக்கள், சிறுவர் சிறுமிகள் ஒரு புறம் பாலுறவு வன்முறைக்கோ, வன் கொடுமை களுக்கோ, கௌரவக் கொலை களுக்கோ உள்ளாக்கப் படுவதும் ஒரு புறம் நிகழந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமென்ன? ஆதிக்க சக்திகள் - அது அரசியல் பொருளியல் ஆதிக்கச் சக்திகளோ அல்லது பண்பாட்டு ஆதிக்கச் சக்திகளோ எதுவானலும் சரி தங்கள் ஆதிக்கத்தை அதை விட்டுக்கொடுக்க விரும்பாத மிருகத்தனம். தாங்களும் பிற எல்லா சாமான்ய மனிதனையும் போல வாழ்ந்து விட்டுப் போக விரும்பாத மேலாதிக்க வெறி. இவையே இது போன்ற படுகொலைகள், பழி தீர்த்தல் களுக்குக் காரணமாகின்றன. அதாவது நாங்கள் எங்கள் விருப்பத்துக்கு எங்கள் தன்னலத்துக்கு எங்கள் பேராசைக்கு எதையும் செய்வோம். யாரும் இதைத் தட்டிக் கேட்கக்கூடாது. இது பற்றி வாய் திறக்கக்கூடாது. திறந்தால் உங்கள் கதி அதோ கதிதான் என்கிற அச்சுறுத்தல், பழி தீர்த்தல். இதுவே இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கின்றன.

சரி, இதுபோன்ற வெறிச்செயல் களைத் தடுத்து நிறுத்த முடியாதா? முடியும். ஆட்சியாளர்கள் நினைத்தால், இக்கொடுமைகளைக் களைய அக் கறையோடு இருந்தால் செய்யலாம். ஆனால் ஆட்சியாளர்களே இதன் பங்காளிகளாக, கூட்டுக் கொள்ளை யர்களாக இருப்பதுதான் இப்படிப் பட்ட கொடுமைகள் தொடர வழி வகுக்கிறது.

இது ஒருபுறமிருக்க, இதுபோன்ற தாக்குதல்கள், வன்முறைகள் நிகழும் போது, இதற்கு எதிராக அனைத்துப் பிரிவு மக்களும் சேர்ந்து குரல் கொடுப்பதற்கு மாறாக, பாதிக்கப் பட்டவர்கள் அவர்கள்தான் இந்தப் பிரச்சனையைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதானப் போக்கு நிலவுவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

அதாவது பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டால் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டால் வழக்கறிஞர்கள் என அந்தந்தப் பிரிவு மக்களும் பாதிக்கப்படும்போது அவர்களாகவே போராடிக்கொள்ளவேண்டியதுதான் என்கிற நிலை நீடிக்கிறது. இதைப் போலவே அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பிற அமைப்புகள் சார்ந்த பிரச்சினைகளிலும் அந்தந்தப் பிரிவு பாதிக்கப்படும்போது அந்தந்தப் பிரிவினர் குரல் கொடுத்துக் கொள்வது என்கிற போக்கே தொடர்கிறது.

இந்த நிலை மாறவேண்டும். பாதிக்கப்படுவது, பழி தீர்க்கப்படுவது யாரனாலும், பிரச்சினையின் பொது அக்கறையை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் அதற்காகக் குரல் கொடுக்கவேண்டும். இந்த அடிப் படையில் மேற் குறிப்பிட்ட மூன்று சம்பவங்களிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை நீதி மன்றத்தின் முன் நிறுத்தி அவர்களை உரிய தண்டனைக்கு உட்படுத்த அனைவரும் குரலெழுப்ப வேண்டும். இதற்கான கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு பத்திரிகை சுதந்திரத்தை மனித உரிமைகளைஉறுதியோடு பாதுகாக்கப் பாடுபடவேண்டும்.

குறிப்பு: இக்கட்டுரை எழுதி முடிக்கப் பட்ட தருணத்தில் ஷீலா மசூட் என்னும் பெண் சமூக ஆர்வலர் ஆகஸ்ட் 16ஆம் நாள் நண்பகலில் போபால் நகரில் அவரது காருக்குள்ளேயே வைத்து சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். 2010 ஆம் ஆண்டில் மட்டும் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் 10 கொலைகள் உள்ளிட்டு 28 நடைபெற்றுள்ளன. 2011இல் இதுவரை 5 சம்பவங்கள் நடந்துள்ளன. ஷீலா மசூட்டின் சம்பவம் 6ஆவது ஆகும்

இதுபோன்ற தாக்குதல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொல்லி தில்லி அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு 9இல் கொண்டு வந்த சமூக நீதிப் போராளிகள் பாதுகாப்புச் சட்டம் 2010 நடப்பில் இருந்தும் இம்படிப்பட்ட தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பத்திரிகையாளர்களுக்கும் சமூக நீதிப் போராளிகளுக்கும் பாதுகாப்பற்றதாக உள்ள நாடுகளில் இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது.

சமீபத்தில் மெக்சிகோ நாட்டில் அனா மர்சலா ஏர்ஸ்,ரோக்கியோ கன்ஸ்லோஸ் என்னும் இரு பெண் பத்திரிகையாளர்கள் அந்நாட்டின் தலைநகர் மெக்சிகோவின் இடுகாட்டுப் பகுதியில் கழுத்து நெரிக்கப் பட்டு கொல்லப்பட்டுள்ளனர்

இப்படி உலக முழுவதும் பத்திரிகையாளர்களும் சமூக நீதி ஆர்வலர்களும் வேட்டையாடப்படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது

இப்படிப்பட்ட வேட்டையாடல்களை எதிர்த்துப் போராட சமுகம் விழிப்புணர்வு பெற வேண்டும். அப்படிப்பட்ட விழிப்புணர்வை சமுக ஆர்வலர்கள் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

Pin It