ராஜிவ் மறைவு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரது கருணை மனுவையும் பதினோரு ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவர் நிராகரித்து, சிறைத்துறையும் அவர்களுக்கு நாள் குறிக்க, இது தமிழகத் தமிழர்களை மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இயற்கை நீதி, சட்ட நீதி, சமூக நீதி என எந்த நீதிக்கும் உட்படாது, அரசியல் உள் நோக்கோடு இழைக்கப்படும் இந்த அநீதியை எதிர்த்து தமிழகமே கொந்தளித்து எழுந்தது. இந்த அநீதியைத் தடுத்து நிறுத்தக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க தண்டனை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டு வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது பற்றி நம் புரிதலுக்காக சில.

ராஜிவ் மறைவு வழக்கில் நால்வருக்குமான மரண தண்டனை 1999இல் உச்சநீதி மன்றம் உறுதி செய்கிறது. இதை எதிர்த்த கருணை மனு அதே ஆண்டில் குடியரசுத் தலைவருக்கும் தமிழக ஆளுநருக்கும் அனுப்பப்படுகிறது. இதில் அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, இக்கருணை மனுவை தன் முடிவாக நிராகரித்துவிட, அவர் தமிழக அமைச்சரவையைக் கருத்து கேட்காது இப்படிச் செய்தது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்று அதனடிப்படையில் தண்டனையைக் குறைக்கக் கோரி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மனுவும் தந்தது. எனில் கருணாநிதி நளினிக்கு மட்டும் தண்டனையைக் குறைப்பு செய்து மூவர் பிரச்சினையையும் அப்படியே கிடப்பில் போட்டு, தில்லிக்கு அனுப்பிவிட்டார்.

இது இப்படியிருக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்ட மனுவும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்படியே கிடக்க, கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் திடீரென்று அதற்கு இறக்கை கட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மூவர் கருணை மனுமீது இந்திய உள்துறை அமைச்சகம் ஜுன் 2005 இல் தன் கருத்தைக் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிக்கிறது. அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆட்சியில் அது அப்படியே கிடப்பில் இருக்க, அடுத்து பிப்ரவரி 23, 2011 இல் அமைச்சகம் அதைத் திரும்பப் பெற்று, 2011 மார்ச் 8 இல் அதன் மீது மறு பரிந்துரை செய்து அனுப்புகிறது. இதன் பேரில்தான் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் ஆகஸ்ட் 12 இல் இக்கருணை மனுவை நிராகரித்து தண்டனையை உறுதி செய்துள்ளார்.

இதில் தமிழக மக்களும் ஜெ. அரசும் புரிந்து கொள்ள வேண்டியது, இச்சிக்கலைப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் வைத்திருந்த தில்லி ஆட்சியாளர்கள், தற்போது காட்டும் இந்த திடீர் சுறுசுறுப்புக்கும் அவசர முடிவிற்கும் காரணம் என்ன என்பதைத்தான்.

1. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 13 இல் நடக்க இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக இதன் மீது இசகு பிசகாக ஏதும் நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விளைவாக தமிழக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து தோல்வியைத் தழுவவோ, தனக்கும் தன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவோ தில்லி காங்கிரஸ் விரும்பவில்லை.

2. ஆனால், காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி படுதோல்வியுற்று, ஜெயலலிதா தமிழக மக்களின் பேராதரவோடும், தனிப் பெரும் பான்மையோடும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் காங்கிரஸ் வழக்கமான தன் பாணியில் தி.மு.க வைக் கழற்றி விட்டு, அ.தி.மு.க வைத் தன் பக்கமாக இழுக்க முயற்சித்து. சோனியா காந்தி ஜெ.வுக்கு தேநீர் விருந்துக்கும் அழைப்பு விடுத்தார்.

3. இந்த முயற்சி கனிந்து வராது, தி.மு.கவும் காங்கிரசோடு அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்க, ஜெ.வும் பிடி கொடுக்காமல் தனித்துவம் காக்க, ஜெ.வைப் பழி வாங்கும் நோக்குடனும், தமிழக மக்கள் மத்தியில் அவருக்கிருக்கும் மகத்தான செல்வாக்கைச் சிதைக்கும் எண்ணத்துடனுமே தற்போது தில்லி அரசு அவசர அவசரமாக இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

அதாவது போலித் தமிழினத் தலைவர்கள் தங்கள் அரிதாரம் கலையாமல் பார்த்துக் கொள்ளவும், தங்கள் ஆட்சியில் இந்த அநீதி அரங்கேறவில்லை, பார்ப்பன ஜெ, ஆட்சியில்தான் இது நடந்தது என இவர் மேல் பழியைப் போடவும். இதன் வழி ஜெவுக்கு வரலாற்றில் என்றென்றைக்கும் நீங்காத கறையைக், களங்கத்தைச் சுமத்தி, காலாகாலத்திற்கும் தமிழர்கள் அவரைத் தூற்றி, அவர் மீண்டும் தலையெடுக்க விடாமல் தடுக்கவுமான பன்முக நோக்கிலேயே தில்லி ஆட்சியாளர்கள் இந்த சூழ்ச்சியில் இறங்கியுள்ளனர்.

எனவே, ஜெ அரசு இந்த சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும். தனது ஆட்சியில், தனது நிர்வாகத்தில் இப்படி ஒரு கொடுமை நடந்தது, நிறைவேற்றுப்பட்டது என்கிற பழிச்சொல் தன்மீது பாயாது காத்து இம்மரண தண்டனையை தடுத்து நிறுத்தி தனக்கு ஆதரவான தமிழக மக்களின் பேராதரவை, செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும்.

ஏற்கெனவே தமிழக மக்களின், உலகத் தமிழர்களின் உணர்வுகளை மதித்து இம்மூவர் மரண தண்டனையையும் தடுத்து நிறுத்தக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உணர்வாளர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற ஜெ. திடீரென்று இம்மூவர் கருணை மனுவையும் நிராகரிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது, மனித உரிமை ஆர்வலர் அனைவர் நெஞ்சிலும் பேரிடியாய் இறங்கியது. தற்போது அதற்கான பரிகாரம் போல் மூவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்கக் கோரி தமிழக அரசு சார்பில் பதில் அளித்திருப்பது உலகத் தமிழர் அனைவர் நெஞ்சிலும் பால் வார்த்து பெரும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கு தற்போது 2012 சனவரி 31க்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் உரிய நியாயம் கிடைக்கும் என்றாலும் அதற்காக வாளாயிராமலும், தமிழகத்தில் அவ்வப்போது தீவிரமடையும் பல்வேறு பிரச்சினைகளில் இம்மூவர் பிரச்சினையைப் பற்றியும் மறந்து போகாமலும் துடிப்போடும் விழிப்போடும் இருந்து இம்மூவர் உயிரையும் காக்க தொடர்ந்து போராடவேண்டும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெ. இப்போதைய முடிவில் உறுதியோடு இருந்து இந்திய அரசமைப்புச் சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இம்மூவர் உயிரையும் காத்து, அவர் உலகம் முழுவதுமுள்ள தமிழர் நெஞ்சங்களில், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளங்களில் என்றென்றும் நீங்காத இடம் பிடித்தவராக விளங்க, அவரைத் தொடர்ந்து வலியுறுத்தவும் வேண்டும்.

Pin It