இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க் குற்ற வாளியாக அறிவிக்கவும், இலங்கை மீது பொருளாதாரத்தை தடை விதிக்கவும் கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது தமிழர் நெஞ்சங்களை யெல்லாம் குளிர்விப்பதாக, தமிழினத்துக்காக, ‘திராவிட’ கருணாநிதி மேற்கொள்ளாத ஒரு நடவடிக்கையை ‘ஆரிய’ ஜெயலலிதா மேற்கொண்டு, தான் ஒரு “தமிழச்சி” என்பதை மெய்ப்பித்துள்ளதாக பெரும்பாலான தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகிறது.

இந்த உணர்வின் நியாயத்தை மதிக்கும்,சட்டமன்றத் தீர்மானத்தைப் பாராட்டி வரவேற்று மகிழும் அதேவேளை இத்தீர்மானமே எதையும் சாதித்து விடும் என்று மிகை மதிப்பீடு கொண்டு இதிலேயே அதிகம் மன நிறைவு அடைந்து விடக்கூடாது என்பதையும் இது சார்ந்து சொல்ல வேண்டியிருக்கிறது. இதற்கான காரணங்களாவன:  

1. இத்தீர்மானம் இந்தியா என்கிற, இந்திய அரசமைப் புச் சட்டத்திற்குட்பட்ட ஒரு மாநில, தமிழக சட்ட மன்றத்தின் தீர்மானமே அன்றி இந்திய அரசின் இந்திய நாடாளு மன்றத்தின் தீர்மானம் அல்ல. ஆகவே இது யாரை யும், எதையும், கட்டுப்படுத்தவோ, வலியுறுத்தவோ அதி காரம் கொண்டதல்ல.காரணம் இதில் இந்திய அரசின் நிலைப்பாடே முக்கியமானது. அதுவே விளைவை ஏற்படுத்த வல்லது..

2.     இலங்கை சார்ந்த இந்திய அரசின் அணுகுமுறை, அதன் வெளியுறவுக் கொள்கை, இலங்கை ,சீனா, பாகிஸ்தான பக்கம் அதிகம் சாய்ந்து விடாமல் இருக்க, அதை தன்னோடு நெருக்கமாக வைத்துக் கொள்ள ‘செல்லப்பிள்ளை மனோ பாவத்தோடு அணுகுவது அதற்காக இலங்கைக்கு எல்லாவித உதவிகளையும் செய்வது என்பதாகவே இருந்து வருகிறது, எனவே, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக கொண்டு வராமல் இதில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது

3.     இலங்கையில் ஓர் ஈழம் உருவாவதை இந்தியா விரும்பவில்லை.அப்படி உருவானால் அது தமிழகத்தில் பல விளைவுகளை உருவாக்கும் என்பதால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக நின்று, போராளிகளை முற்றாக அழிக்தொழிக்க இலங்கைக்கு எல்லாவகையிலும் உதவியது தற்போதும் உதவி வருவது தில்லி அரசு.

4.     ஏற்கெனவே 2009 மே மாத இறுதியில் இலங்கை யில் போர் முடிந்த கையோடு, அங்கு நடைபெற்ற மனிதப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை யைக் கண்டிக்க சுவிட்சர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து ஐ£.நா. மனித உரிமைக் குழுவில் ஒரு தீர்மானத் தைக் கொண்டுவர முயற்சிக்க, அந்த முயற்சியை முறியடித்து, இலங்கையை மாற்றுத் தீர்மானம் கொண்டுவர வைத்து, அதை வெற்றிபெறச் செய்தது இந்தியா.

5.     இலங்கை, விடுதலைப் புலிகளை முற்றாக முறிய டித்து, பயங்கர வாதத்துக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற தற்காக பாராட்டுத் தெரிவிக்கும் அத்தீர்மானம் மனிதாபி மான அடிப்படையில் உலக நாடுகள் இலங்கைக்கு உதவவேண்டும் என்றும் கோரியது. தொடக்கத்தில் இலங் கைக்கு எதிராக இருந்த பல நாடுகளும் இந்தியா இலங் கைக்கு ஆதரவாக நிற்பதைப் பார்த்து, தாங்களும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இலங்கைத் தீர்மானத் துக்கு ஆதரவாக நின்றன.

6. இதே தெம்பில்தான் ராஜபக்சே தற்போதும் உலகளாவிய மனித உரிமை அமைப்புகளின் குற்றச்சாட்டு களிலிருந்தும் கண்டனங்களிலிருந்தும் இந்தியா தன்னைக் காப்பாற்றும் என நம்பிக்கையோடு சொல்லி வருகிறார். இந்தியாவும் இம்மனித உரிமை மீறல்கள் பற்றியோ, ராஜபக்சேவின் கூற்று பற்றியோ எது பற்றியும் இதுவரை வாய் திறவாமல் கமுக்கமாக இருந்து மௌனம் சாதித்து வருகிறது.

ஆக, இலங்கைப் பிரச்சினையில் இந்தியா என்ன அணுகுமுறை மேற்கொள்கிறதோ, அதைப் பொறுத்தே அதைச் சார்ந்தே உலக நாடுகளின் அணுகுமுறை இருக்கும் என்பது வெளிப்படை.. எனவே இந்தியாவின் நிலைப் பாட் டில், அதன் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், இலங்கை சார்ந்த சிக்கல்களில் மாற்றம் ஏற்படாது என்பது தெளிவு.

இப்படிப் புறநிலைக் காரணங்கள் பலவும் இலங்கைக்கு சாதகமாக இருக்க, நுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல் சார்ந்த சிலவும் இலங்கைக்கே சாதகமாக இருந்து வருகின்றன.

1. இலங்கைப் போர்க் குற்றங்கள் சார்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ள மூவர் குழு, உலக மனித உரிமை அமைப்பு களின் நெருக்கடி தாங்காமல், ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் தானே தன்னிச்சையாக அறிவித்த குழுதானே அன்றி இது ஐ.நா. தீர்மானத்தின்படி நியமிக்கப்பட்ட குழு அல்ல. ஆகவே அதன் அறிக்கை செல்லத் தக்கதல்ல என நாளை ஐ.நா. மன்றமே அதை நிராகரிக்கலாம்.

2.     மனித உரிமை அமைப்புகளின் நெருக்கடி காரண மாகவே பான்கிமூன் இந்தக் குழுவை நியமித்தாரே தவிர, அவருக்கு இந்தப் பிரச்சினையில் உள்ளார்ந்த அக்கறை இருப்பதாகச்சொல்ல முடியாது. காரணம் இலங்கை இறுதிக் கட்டப் போரில் 20,000-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவருக்குத் தெரிவிக் கப் பட்டபோதும், போர் முடிந்த கையோடு 23-05-2009 அன்று போர்க்களத்தைப் பார்வையிட வந்த பான்கிமூன் இப்படுகொலைகள் பற்றி எதுவுமே வாய்திறக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

3.     2007இல் பதவியேற்ற பான்கிமூன் தன் ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்து அடுத்த ஐந்தாண்டும் பதவியைத் தொடர, 2012இல் வரவிருக்கும் தேர்தலில் தனக்கு ஆதரவு கோரும் முயற்சியில் ஈடுபட்டு வர, பொதுச் செயலாளர் நியமனத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பரிந்துரையே மிகவும் முக்கியம் என்பதால், அவ்வல்லரசு நாடுகளின் விருப் பத்தை மீறி பான்கிமூன் எதுவும் செயல்பட மாட்டார் என் பது பொதுவான கணிப்பு.இக்கணிப்பின்படியே தற்போது அடுத்த ஐந்து ஆண்டிற்கும் இவரே பொதுச் செயலா ளராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் எனபதும் கவனத்திற் குரியது

4.     பொதுவில் உலக நாடுகளின் செயல்பாடுகளே ‘உள்ளூர் கட்டைப் பஞ்சாயத்து’ போல் ‘உலகக் கட்டைப் பஞ்சாயத்தாக’ இருந்து, எந்தச் சிக்கலுமே அச்சிக்கலின் தகுதிப்பாடு மற்றும் நியாய அடிப்படையில் நோக்கப் படாது அரசுகள், ஆளும் வர்க்கங்கள் நல நோக்கிலேயே அணுகப்படுவதால் இந்தியாவின் விருப்பத்துக்கு மாறாக உலக நாடுகள் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் என்று நம்புவதற்கில்லை.

5.     தவிர தங்கள் சுதந்திரத்திற்காக கடுமையாகப் போராடி, அளப்பரிய தியாகங்கள் புரிந்து விடுதலை பெற்ற நாடுகளான ருஷ்யா, சீனா, கியூபா, தென்னாப்பிரிக்கா, நிகராகுவா, அங்கோலா போன்ற நாடுகளே 2009 தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்க, இவற்றைத் தாண்டி, வேறு எந்த நாடுகளின் பலத்தில், ராஜ பக்சேவை போர்க் குற்றவாளியாக்க முடியும் என்று யோசிக்க நம்பிக்கையூட்டும் எந்த ஒரு ஒளியும் தென்படவில்லை.

6.     இத்துடன் கூடுதலாக நாம் கவனம் கொள்ள வேண்டியது ஐ.நா. அமைப்பின் தலைமை அதிகாரியாக உள்ள விஜய் நம்பியாரின் சகோதரர் சதீஷ் நம்பியார்தான் இலங்கை அரசின் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரு கிறார். இந்நிலையில் இலங்கை ராணுவம், அரசு, ஐ.நா. அமைப்பு இவற்றுக்கிடையேயான உறவுகளின் தன்மை எப்படியிருக்கும் என்று விளக்கத் தேவையில்லை. ஆகவே இம்மனித உரிமை மீறல் பிரச்சினை ஒரு சில ராணுவ அதி காரிகளை பலிகடா ஆக்குவதாக வேண்டுமானால் அமைய லாமே தவிர அது ராஜபக்சேவின் மீது நிச்சயம் பாயாது என்று நம்பலாம். ஐ.நா. அறிக்கையும் ராணுவ நடவடிக் கைகளைத்தான் குற்றம் சாட்டுகிறதே தவிர இலங்கை அரசை நேரடியாக அல்ல என்பதும் கவனத்திற்குரியது.

7.     போர்க் குற்றங்களுக்கு எதிராக தன்னைத் தற்காத் துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ராஜபக்சே ஆரம்ப முதலே மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருந்து வருகிறார். தொடக்கத்திலேயே ஐ.நா. மூவர் குழுவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தது, அவர்களை செயல்பட முடியாமல் தடுத்தது, ஒத்துழைப்பு தர மறுத்தது, அறிக்கை வெளிவந்தபின் அதை மக்களிடம் பரப்பி அதன் மீது இலங்கை மக்களின் கோபாவேசத்தைத் திருப்பியது, அறிக்கைக்கு எதிராக பத்து இலட்சம் மக்களின் கையப் பத்தை திரட்டியது, எதிர்க் கட்சிகளையும், தொழிற் சங்கங் களையும் இசைய வைத்து மே மாதப் பேரணிகளை ஐ.நா. வுக்கு எதிரான கண்டனப் பேரணியாய் நடத்தியது, முள்ளி வாய்க்கால் வெற்றியை ஆண்டு தோறும் விழாவாகக் கொண்டாடி, சிங்கள இன வெறியைத் தூபம் போட்டு வளர்த்து, அதன் கதகதப்பில் தன்னைப் பாதுகாத்துக் கொள் வது எனப் பல்வேறு உத்திகளை ராஜபக்சே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். எனவே, அவர் மீது எந்த நட வடிக்கையும் பாய வாய்ப்பில்லை என்பதே தற்போதையே நிலை.

8 அப்படியே ஒரு வாதத்துக்குப் பாய்வதாக வைத்துக் கொண்டாலும் ஆதிக்கங்கள் எப்போதும் எவரையும் பலி கொடுத்து தன் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வ திலேயே குறியாய் இருக்குமே அல்லாது ஒரு போதும் தன் ஆதிக்கத்தை விட்டுத் தராது. இந்த அடிப்படையில் ஒரு வேளை உலக அரங்கில் ராஜபக்சே அம்பலப்பட்டு அவர் மீது நடவடிக்கை என்பது தவிர்க்க இயலாததாக ஆனாலும் -இதிலும் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியம் அது எடுக்கும் முடிவைப் பொறுத்தே இந்த நடவடிக்கையும் அமையும் -இந்நிலையில் இலங்கை அரசு அவரைக் கழற்றிவிட்டு வேறு நபர்களை வைத்து தன் இனவெறியை இன ஆதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்ள முயலுமே அல்லாது ஒரு போதும் அந்த வெறியைக் கைவிடாது. அது தொடரவே செய்யும்.

எனவே, இந்தப் பின்னணியின் அடிப்படையிலேயே நாம் தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை நோக்கவேண்டும், புரிந்து கொள்ளவேண்டும். அதாவது தமிழக சட்டமன்றத் தீர்மானம் எந்த வகையிலும் தில்லியையோ, ஐ.நா.வையோ கட்டுப் படுத்தாது. அதன்மீது எந்த விளைவையும் ஏற்படுத் தாது. இப்படிச் சொல்வதால் இதைச் சிறுமைப்படுத்துவதாக பொருள் கொள்ளக்கூடாது. மாறாக இதன் வரம்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.

பொதுவில் இத்தீர்மானம் ஒட்டுமொத்தத் தமிழக மக்களது உணர்வின் வெளிப்பாடு என்பதற்கான ஒரு குறியீடு, அடையாளம். உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களுக்கான ஓர் ஆறுதல். அவ்வளவு தானே தவிர. மற்றபடி இதைத் தாண்டி இது எந்த விளை வையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. ஏற்படுத்தவும் முடியாது. இதன் வழி தமிழீழச் சிக்கலுக்கும் எந்தத் தீர்வும் ஏற்பட்டு விடவும் போவதில்லை. ஏற்கெனவே தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானங்களின் கதி என்ன வாயிற்று என்பது நமக்குத் தெரியும். அதே போன்றதொரு கதிதான் இதற்கும் நேரும்,

தற்போதைக்கு தமிழீழம் என்கிற கோரிக்கை முன் நிற்க இயலாத நிலையில் அது பின்னுக்குத் தள்ளப்பட்டு ராஜ பக்«க்ஷ மீது நடவடிக்கை, இலங்கை மீது பொருளாதாரத் தடை என்கிற கோரிக்கைகள் முன்னுக்கு வந்துள்ளன. அவ்வளவு தான். இவை இன்றியமையாதவை, தவிர்க்க இயலாதவை. ஆனாலும் இவையே எல்லாவற்றிற்கும் தீர்வு என்பதான நோக்கில் நாம் மிகை மதிப்பு கொண்டு இதி லேயே நிறைவடைந்து விடக்கூடாது. மனம் மகிழ்ந்து வாளாயிருந்துவிடக் கூடாது, என்பதை உணர்ந்து எப்போதும் விழிப்புடன் இருந்து செயலாற்றவேண்டும். தமிழீழ, தமிழக மக்கள் உரிமை சார்ந்த கோரிக்கைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே வேண்டுகோள்.

Pin It