சாமானியர்களுக்குத் தமிழ்த் தேசியம் ஓவியர் வீர.சந்தனம் விடையளிக்கிறார்

1. மூவர் தூக்கு தண்டனை நிறுத்தும் நிலைப்பாட்டில் ஜெயலலிதா மாறி மாறி நிலை எடுக்கிறாரே?

 -க.செல்வமணி, ஈரோடை

முந்தைய ஆட்சியில் இருந்த முத்தமிழ் அறிஞர் தன் குடும்ப சுய நலத்துக்காக இலங்கையில் வாழும் 2 லட்சம் தமிழர்களைக் காவு கொடுக்கக் காரணமாக இருந்தார். ஆட்சி அதிகாரம் கையில் இருந்தும் இந்திய அரசு செய்த துரோகத்தைத் தடுக்கத் தவறினார். சின்ன சின்ன நாடகம் ஆடினார். அதைப்போலவே அமைச்ச ரவையைக் கூட்டி நளினிக்கு மட்டும் தண்டனைக் குறைப்பு செய்து, ஆயுள் தண்டனையாக்கி மற்றவர் களுக்கு தூக்கு தண்டனையை மாற்றாமலும் விட்டார். இதனால்தான் இன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் உயிர் ஊசலாடும் நிலை ஏற்பட்டது.

தமிழர்களின் மனநிலையை, கொந்தளிப்பை உணர்ந்த ஜெயலலிதா தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். இதனால் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றியும் பெற்றார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது, மூவர் கொடுத்த மனுவை, அந்த மனுக்கள் தகுதியற்றது என்பதால் அவற்றை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறி தமிழர்கள் தலையில் பாராங்கல்லைத் தூக்கிப் போட்டார்.

அப்புறம் என்ன தோன்றியதோ, யார் சொன்னார் களோ தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில் மூவருக்கும தண்டனைக் குறைப்பு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அந்த வகையில் எல்லோருக்கும் பெரிய நிம்மதி.என்றாலும் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தானே தண்டனைக் குறைப்பு செய்தாரானால் போதும். காலாகாலத்துக்கும் தமிழுலகம் அவர் பேர் சொல்லும்.

ஆனால், முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் தான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் இதைச் செய்யா மல் அப்போது அதை தில்லிக்கு அனுப்பி வைத்துவிட்டு தற்போது இதில் அரசியல் ஆதாயம் தேடி அமைச் சரவையைக் கூட்டித் தீர்மானம் போட வேண்டும் என்றும், மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் குரல் கொடுப்பதோடு, பிரதமரைப் பார்த்தும் பேசியதாக சொல்கிறார். அத்துடன் தான் அன்று அவ்வாறு செய்ததால்தான் மூவரும் இத்தனையாண்டு காலம் உயிரோடு இருக்கிறார்கள் என்றும் தனக்கு சாதகமாக அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்.

இந்நிலையில் இப்போது நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை வழக்குமன்றம்தான். வழக்கின் தன்மையில் விடுதலை வாய்ப்பு இருக்கிறது என்று நாம் நீதிபதி களைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. அரசியல் வாதிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த விளை யாட்டை நன்றாகவே விளையாடுகிறார்கள். தமிழன் தலையில் இடி விழாமல் இருக்க, தலைமை வகிப்பது யார் என்ற எண்ணம் தோன்றாமல் தமிழகத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுத் தலைமையில் தமிழர்களை ஒருங்கிணைத்து பெரும் போராட்டத்தை நடத்தினால் தில்லி செவி சாய்க்க வாய்ப்புள்ளது. செய்வார்களா தமிழகத் தலைவர்கள்? வேறு என்னத்த சொல்ல...

2. கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறதே?

 -சு.பாக்கிய நாதன், திருவள்ளுர்

அண்டை மாநிலங்களால் ஏற்க மறுத்து, நிராக ரித்து ஒதுக்கப்பட்ட இத்திட்டம் தமிழர்கள் இளித்த வாயர்கள், ஏமாளிகள் என்பதால் கூடங்குளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கல்பாக்கம் செயல் பட்டு வருகிறது. அதை எதிர்த்து குரல் கொடுத்து வரும் போது கூடங்குளம் நமக்கு இன்னொரு கொடுமையைச் செய்யக் காத்திருக்கிறது. இதை முதன் முதலில் நாடாளு மன்றத்தில் எதிர்த்து குரல் கொடுத்தவர் வைகோ. இத்து டன் பலதரப்பட்ட மக்களும் இந்தத் திட்டத்தை எதிர்க்க இன்றளவும் இடதுசாரிகள் மட்டும் அணு உலைக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார்கள்.

ஜெயலலிதாவும் மக்களின் விருப்பத்தை அறிந்து செயல்படவேண்டும் என்றும் விருப்பத்திற்கு மாறாக செயல்படக் கூடாது என்றும் கூறுகிறார்.

இவற்றை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா, என்றால் முந்தைய நடவடிக்கையைப் பார்த்தால் ஏற்காது என்றே தோன்றுகிறது. எப்படி சத்திஷ்கர். ஜார்கண்ட் பழங்குடி மக்களுக்கு எதிராக பன்னாட்டு நிறுவனங் களுக்கு சார்பாக நடவடிக்கை எடுத்ததோ, அதுபோல் கூடங்குளம் பிரச்சனையிலும் வன்முறை அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எனவே இதை எதிர்க்க தமிழகமே ஓரணயில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்

தில்லி அரசு இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருப்பதாகவே எண்ணவில்லை.தொடர்ந்து நம்மை நசுக் குவதற்கும் நம் இனத்தை அழிப்பதற்கும் அஞ்சப் போவதில்லை.இதைத்தான் ஈழத்திலும் செய்தது. நாளை தமிழகத்திலும் செய்யப் போகிறது.ஆனால் இதற்கான நடவடிக்கை தொடங்கும்போது நம் தலைவர்கள் மௌனித்து விடுவார்கள். ஆனால் மக்கள் கிளர்ந்தெழு வது இயல்பானதொன்று. தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் குஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் இதைத்தான் உணர்த்துகிறது. தொடர் போராட்டங் கள் நம்பிக்கை தந்தாலும் தமிழகமே திரளவேண்டும், இல்லை என்றால் தமிழகம் அணுஉலை ஆபத்தால் நிம்மதியற்று போகும்.

Pin It