வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து வீரச் சமர் புரிந்து வெற்றி கண்ட தமிழகத்தின் முதல் பெண் சுதந்திரப் போராளி வீரநங்கை வேலு நாச்சியாரின் வரலாறு குறித்த நாட்டிய நாடகம் 10.10.2011 அன்று வெள்ளி மாலை 7.00 மணியளவில் சென்னை நாரதகான சபாவில் சிறப்போடு நடந்தேறியது.

இந்தியத் துணைக் கண்டத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் புகழ்பெற்ற பெண் போராளியாய்க் குறிக்கப் பெறுபவர் ஜான்சிராணி ஆனால், அவருக்கு நூறு ஆண்டு களுக்கு முன்பேயே தமிழகத்தில் வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து தீரத்தோடு போராடியதோடு அப் போராட்டத்தில் வெற்றியும் கண்டு, 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்து மறைந் தவர் வீரநங்கை வேலு நாச்சியார். வேலு நாச்சியாரின் இந்தப்போராட் டத்தில்தான் உலகின் முதல் கொரில் லாப்படை, உலகின் மனித வெடி குண்டு தற்கொலைப் படைத் தாக்குதல் ஆகிய அனைத்தும் நிகழ்ந்தேறியதாகக் கூறப்படுகிறது.

எனில், கெடு வாய்ப்பாக தமிழ கத்தில் அரும்பெரும் வரலாற்று நிகழ்வுகள் எல்லாம் ஆதிக்கச் சக்தி களால் மறைக்கப்பட்டும் இருட் டடிப்பு செய்யப்பட்டும். இந்தியத் துணைக் கண்ட வரலாறு என்றாலே அது வடஇந்திய வரலாறு என்பதாகவே ஆக்கப்பட்டும் உள்ள நிலையில், தென்னிந்திய தமிழக வரலாற்று நிகழ்வுகள் உரியவாறு தமிழர்கள் அறிய வாய்ப்பற்று தமிழர்களின் வீரம் செறிந்த போராட்ட மரபு தக்கவாறு உணரப்படாமலேயே உள்ளது.

இதைத் தகர்த்து தமிழச் சமூகத் தின் பெருமையை நிலை நாட்டும் வகையிலும் அதை சமகாலத் தலை முறையினர் உய்த்துணரும் நோக்கிலும் வகையிலும் உருவாக்கப்பட்ட நாட்டிய நாடகம்தான் வீரத்தாய் வேலு நாச்சியார்.

நாட்டியக் கலையை நன்கு பயின்ற 60க்கும் மேற்பட்ட கலை ஞர்கள் இதில் பங்கேற்றிருக் கிறார்கள். நாடக நிகழ்வில் செவ்வியல் கூறுக ளையும், நாட்டுபுறக் கூறுகளையும் ஒருங்கே ஒன்றிணைத்து மண்ணின் மரபோடும், மெய்ப்பாடுகளோடும் நிகழ்த்தப்பெற்ற இந்நாடகம் சுமார் 75 நிமிடங்கள் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு வேலு நாச்சியாரின் வரலாற்றுக் காலத்தில் பயணிக்க வைத்தது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்,” என வெள்ளந்தியாக வாழ்ந்த தமிழி னத்தை வெள்ளையன் அடிமைப் படுத்த, அந்த அடிமைத்தனத்திலிருந்து மீண்டெழ 280 ஆண்டு களுக்கு முன் நடைபெற்ற இப் போராட்டம் அந்தக் காலத்தோடு மடிந்து விடுவதல்ல. தமிழன் அடிமைப்படுத்தப்படும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் துளிர்ந்துதெழுந்து சமகாலச் சமுதா யத்துக்கு வீரத்தையூட்டி தங்கள் அடிமைத் தனத்திலிருந்து விடுபட போராட்ட உணர்வையும் உத்வே கத்தையும் ஊட்டும் ஒரு மாபெரும் உன்னத நிகழ்வாகும் அது.

தமிழீழத்தில் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டம் மாபெரும் பின்டைவுகளையும் பேரிழப்பு களையும் சந்தித்து எண்ணற்ற மனித உயிர்களைப் பலி கொடுத்து தமிழர் உள்ளங்களை துயரத்தில் ஆழ்த்தி யுள்ள நிலையில் வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை நினைவுகூர வைக்கும் இந்நாடகம் மிகுந்த எழுச்சியை ஊட்டுவதாக அமையும், அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.இந்நோக்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்த்திக் காட்டப்பட வேண்டிய தொரு உன்னத நாடகம் இது.

நாடக அரங்கில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த சில நிகழ்வுகள்

நாடகம் அனுமதி இலவசம் என்பதோடு நாளேடுகளிலும் அது பற்றி விளம்பரம் தந்திருந்ததால் எப்படியும் கூட்டம் திரளும் என்கிற நிலை. அன்று சொந்த ஊரில் இருந்து சில நண்பர்களும் உடன் வர விரும்பி யதால், தாமதமாகப் போய் இடம் கிடைக்காமல் அவதிக்குள்ளாக வேண்டாம் என்று முன்கூட்டியே சற்று வேளையோடே புறப்பட்டு 5 மணிக்கெல்லாம் அரங்கம் வந்தடைந்தாகி விட்டது.

அப்போதுதான் மக்கள் ஒவ் வொருவராக வரத் தொடங்கி யிருந்தனர் என்பதால் அதிகக் கூட்ட மில்லை. அரங்க முகப்பில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தென் சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் மற்றும் இதர பொறுப்பாளர்களோடு நின்றிருந்தார். ‘வாங்க அண்ணே” என்று அன்போடு வரவேற்றவர் அருகிலிருந்த தொண் டரிடம் சொல்லி உள்ளே அழைத்துப் போய் அமர வையுங்கள் என்று உடன் அனுப்பி வைத்தார்,

அரங்கில் திட்டு திட்டாக ஆங்காங்கே சிலர் மட்டும் அமர்ந் திருக்க பெரும்பகுதி வெறிச்சோடி இருந்தது. அழைத்துச் சென்ற தொண் டர் குறிப்பிட்ட ஒரு வரிசையைக் காட்டி இதற்கு முன்புறம் உள்ள இருக்கைகள் எல்லாம் முன் கூட்டி ஒதுக்கீடு செய்யப் பட்டவை. இதற்கு இந்தப் புறம் உள்ளவை பொது. நீங்கள் எந்த வரிசையில் வேண்டுமானாலும அமர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். மேடையை நோக்க வாகாக இடம் பார்த்து அமர இருந்த வேளை மதிமுக. வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் அருகில் வந்து, “வாங்க அண்ணே” என்று இதமாக வரவேற்று உங்களுக்கு மண்மொழி சார்பில் முன்புறம் இடம் ஒதுக்கப்பட் டிருக்கிறது என்றவர், நண்பர்களோடு வந்திருப்பதைப் பாரத்து ‘எத்தனை பேர் அண்ணே’ என்றார். 5 பேர் என்றதும் எங்கள் வரிசைக்கு அடுத்த முன்புற இருக்கைகள் பக்கம் அழைத்துச் சென்று ‘தாயகம்’ என்று ஒதுக்கியிருந்த இருக்கைகளில் 5-ஐ ஒதுக்கி நீங்கள் இங்கே அமர்ந்து கொள்ளுங்கள் என்றார். ‘மற்றவர் எவருக்கும் ஒதுக் கிய இடத்தை நாங்கள் ஆக்கிரமிப் பதாக ஆகிவிடக் கூடாது ’ என்கிற தயக்கத்தில் இடம்தான் இருக்கிறதே இங்கேயே அமர்ந்துகொள்கிறோம் என்றதற்கு, ‘அதெல்லாம் ஒன்றும் பிரச் சினை இல்லை. நீங்க இங்க வந்து உட்காருங்க’ என்று சொல்லி, எங்களை இருக்கைகளில்அமரவைத்து கையிலிருந்த இருக்கை ஒதுக்கீட்டுப் பட்டியலில் எண்களைக் குறித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த தொண் டர்களிடம் ஏதோ சொல்லிவிட்டு நகர்ந்தார்.

*

சற்றைக்கெல்லாம் மங்கை பதிப்பகம் தோழர் அய்யாசாமி அரங்க வாயிலுக்கு வந்து விட்டதாகவும், எங்கே இருக்கிறீர்கள், எப்படி வர வேண்டும் என்று கேட்டும¢ செல் பேசியிருந்தார். விவரம் சொல்ல உள்ளே வந்து எங்களைத் தேடி அமர்ந்த அவர் ‘வைகோ வந்து விட்டார். வெளியில் இருக்கிறார் ’ என்றார்.

நிகழ்வுக்குப் புறப்படும் போதே எனக்குள் ஏதோ ஓர் உள்ளுணர்வு. வைகோவின் பண்பு மிக்க சுவாபத் துக்கு பெரும்பாலும் அவரே அரங்க முகப்பில் நின்று தன் சொந்த இல்ல நிகழ்வு போல அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருப்பார் என்று உணர்த்தியிருந்தது. என்றாலும், ஒரு மணி நேரம் முன்னதாக வந்து விட்டதால் அதுபற்றி சிந்தனை ஏதும் இல்லாமல் உள்ளே வந்து அமர்ந்தாகி விட்டது.இப்போது அவர் வந்து விட்டார், வெளியே இருக்கிறார் என்றுகேள்விப்பட்ட பிறகு, மரியாதை நிமித்தமேனும் அவரைப் போய்ப் பார்த்து நாம் வந்திருக்கிறோம் என்பதைத் தெரியப் படுத்திவிட்டு, வந்துவிட வேண்டும் என்று தோன் றியது. நண்பர்களிடம் சொல்விட்டு வெளியேவர வைகோ தொண்டர்கள் உணர்வாளர்கள் புடைசூழ எடுப்பும் மிடுக்கும் மிக்க தனக்கேயுரிய தோற்றத்தோடு அரங்க முகப்பில் நின்று உள்ளே வந்தவர்களை வரவேற்றுக் கொண்டி ருந்தார்.அவரை அருகே நெருங்க எதேச்சையாக என் பக்கம் திரும்பி யவரைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி வணக்கம் என்றேன். ‘வாங்க வாங்க ’ என்று முகம் மலர வரவேற்று ‘அழைப்பு கெடச்சுதா, தொலை பேசியில் முயற்சி பண்ணம். தொடர்பு கிடைக்கல.’ என்றவர் உணர்ச்சி பொங்க ‘ நீங்கள்ல்லாம் இந்த நாடகத்த பாக்கணம்.கருத்து சொல் லணம். வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த, சமகால நிகழ்வுக ளோட தொடர்புடைய நாடகம் ’ என்றார்.

அழைப்புக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து, ‘நீங்க இருங்க, நான் உள்ளே உக்கார்றேன்’ என்று அவரிடமிருந்து விடை பெற்று வந்து இருக்கையில் அமர சற்றைக் கெல்லாம் அரங்கின் உள்ளே நுழைந்த வை.கோ. எங்களைப் போல் முன்ன தாக வந்து அமர்ந்து விட்ட வர்களை, வரவேற்கும் முகமாக ஒவ்வொரு வரையும் நெருங்கி வணக் கம் சொல்லி வரவேற்க அவரவர் முகத்திலும் பெருமிதம் கலந்த பரவசம்.

இப்படி வைகோ அரங்கின் குறுக்கும் நெடுக்குமாக ஆங்காங்கே நடக்க, அவர் நடக்கும் வழியில் அமர்ந்திருப்பவர்கள் அவர் குறுக்கிடும் போதெல்லாம் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்பதும், புதியதாக வந்த வர்கள் வணக்கம் வைப்பது மாகவும் இருக்க வைகோ சற்றே முகம் மாறிய வராக ‘நான் அப்பப்ப இப்படி வரு வேன், போவேன். நீங்க இப்படி யெல் லாம் எழுந்திருக்க வேணாம்’ என்று அன்போடு கடிந்து கொண்டு, எழுந்து நின்றவர்களையும் தோளைப் பிடித்து அமர்த்திவிட்டுச் சென்றதுடன், அதற் குப் பிறகு வரும்போது இது மாதிரி சங்கடங் களைத் தவிர்க்க, இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள்எவரையும் நிமிர்ந்து நோக்காது அவர் பாட்டுக்கு தலையைக் குனிந்தபடியே விடுவிடு வென்று சென்று கொண்டி ருந்தார்.

*

அழைப்பிதழில் 6.00 மணி என்று போட்டிருந்த நாடகம், அரங்கு நிறைந்த நிகழ்வாக 7.00 மணிவாக்கில் தான் தொடங்கியது. திறமை சான்ற கலைஞர்களின் கடுமையான உழைப் பில் தயாரிக்கப்பட்டு எழுச்சியோடு நிகழ்த்தப்பட்ட நாடகம், தணலும் சீற்றமும் மிகுந்த உரையாடல்களுடன், அவ்வப்போது பார்வையாளர்களின் மனமுவந்த பாராட்டுல்களுடனும் பலத்த கைத்தட்டல்களுடனும் நிகழ்ந்து முடிய, நிறைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகியது.

பொதுவாக இதுபோன்ற நிறைவு நிகழ்ச்சிகளை - நாடகம் முடிந்தால் மக்களெல்லாம் கலைந்து போய் விடுவார்கள். நிறைவு நிகழ்ச்சிகளைப் பார்க்க எவரும் இருக்கமாட்டார்கள் என - நாடக நிகழ்வு முடிவதற்கு ஒன்றி ரண்டு காட்சிகள் முன்னதாகவே வைத்து விடுவது வழக்கம். ஆனால் இங்கு வந்திருந்த கூட்டம் அப்படிப் பட்ட கூட்டம் அல்ல, நிறைவு நிகழ் வும் சாதாரண நிகழ்வு அல்ல. நாடகம் எந்த அளவு முக்கியமோ அதே அளவு நிறைவு நிகழ்வும் முக்கியம் என்பதால், நாடகத்தை எந்தவித குறுக்கீடும் இல்லாமல் நடத்தி முடித்து இறுதி யாகவே நிறைவு நிகழ்வை வைத்திருந் தார்கள்.கூட்டமும் அப்படியே கட்டுக் கோப்போடு இருந்தது.

நிகழ்வுக்குத் தலைமை ஏற்றிருந்த பத்மா சுப்பிரமணியம் தன் உரையில் தான் பங்கேற்ற தமிழிசை விழா ஒன்றில் கலந்து கொண்ட வைகோ தேவாரப் பாடல்களை எல்லாம் பாடிக் காட்டியதை வைத்து ஒரு பகுத்தறிவு அரசியல் வாதியான இவர் இப்படிப் பக்திப் பாடல்களை யெல்லாம் பாடுவதைக் கண்டு வியந்து பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணி யோடு அதைப் பகிர்ந்து கொண்ட தையும், பிறகுதான் தான் பகிர்ந்து கொண்ட அப்பெண்மணி வைகோ வின் துணைவியார் என்று அறிந்ததை யும் பரவசத்தோடு நினைவு கூர அரங் கமே அதிர கைத்தட்டல் எழுந்தது.

அதற்கு மட்டுமல்ல, மேடையில் உரையாற்றியவர்கள் “வைகோ” பெயரை அவரது சிறப்பியல்கள் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் வைகோ என்பது ஒரு மந்திரச் சொல் போல அரங்கையே மயங்கச் செய்வதாய் அவ்வப்போது ஆரவாரமாய்க் கையலி எழுப்ப வைத்தது.

தலைமைப் பொறுப்பேற்ற வருக்கு நினைவுப் பரிசு, நாடக ஆக்கக் கலைஞர்களுக்கு சால்வை அணிவிப்பு, நாடக, இசைக் கலைஞர்களுக்கு பாராட்டு என நிகழ்வுகள் தொடர கலைஞர்கள் இயல்பான பழக்கம் காரணமாக கலைத் துறையில் மூத்தவர்களுக்கு, குருவாய் அமைந்த வர்களுக்கு மரி யாதை செலுத்துவதான மரபில், சிலர், மேடைக்குள் நுழையும் போதே குனித்து மேடையைத் தொட்டு வணங்குவார்கள் அல்லவா அதுபோல, குனிந்து பத்மா சுப்பிர மணியத்தின் காலைத் தொட்டு, வணங்கி நகர, கர்னல் பாஞ்சோவாக நடித்த கலைஞர் மட்டும் வைகோவின் காலையும் தொட்டு வணங்கப்போக, ஒரு மின்னல் வேகத்தில் அதைத் தடுத்து குனிய இருந்தவரை நிமிர்த்திய வைகோ நிறுததிய வாக்கிலேயே அவரைப் பாராட்டி வாழ்த்தி அனுப்ப மீண்டும் அரங்கமே அதிர்ந்தது.

நிகழ்வின் நிறைவாக சிறப்புரை ஆற்றிய வைகோ இந்நாடகத்தின் தயாரிப்புக்கான பின்னணிகளையும் நோக்கங்களையும் விளக்கி, நாடகத்தை சிறப்பான முறையில் மேடையேற்றிய கலைஞர்கள் அனைவரையும் பாராட்டியதோடு தமிழ் நாடக மரபையும் நினைவு கூர்ந்தவர் சிலப்பதிகார அரங்கேற்று காதை வரிகளை மேற்கோள் காட்டி அதில் சொல்லப் பட்ட பதினோர் ஆடல்களையும் சரளமாக வரிசைப் படுத்தி பட்டியலிட்டு வெளிப்படுத்த அவரது நினைவாற்றலில் மயங்கித் திளைத்த கூட்டம் மீண்டும் கரவொலி எழுப்ப, இப்படிப்பட்ட பாராட்டுதல்கள் கைதட்டல்களுடனே நிகழ்ச்சி எழுச்சியோடு நிறைவடைந்தது.

*

நாரதகான சபாவில் எத்த னையோ நாட்டிய நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடந்தேறியிருக்கலாம். எனில் தமிழனின், தமிழச்சியின் உண்மை வரலாற்றைப் பெருமை யோடு நினைவு கூறும் வகையில் நடை பெற்ற முதல் நிகழ்ச்சி இதுவாகவே இருக்கும். என்று தோன்றுகிறது. தவிர இது ஒரு கட்டுக்கோப்பான அரசியல் கட்சியின் ஏற்பாட்டோடும் திட்ட மிடலோடும் நடைபெற்ற நிகழ்ச்சியாக அமைந்ததில், எல்லாப் பணிகளும் எந்தவிதக் குறைபாடும் இல்லாமல் மிகச் சீரோடும் செம்மையோடும் ஒழுங்க மைக்கப்பட்டிருந்தன.

வரவேற்பில் இலச்சினை அணிந்த தொண்டர்கள், வருவோரை உள்ளே அழைத்து சென்று அமர வைக்கவும், பொறுப்பாளர்கள் அவர வருக்கும் பெயர் எழுதி இருக்கைகள் ஒதுக்கியும்,, அவசரத் தேவைக்கு தாயகம் பெயரில் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இருக்கைகளும். இப்படி எல்லாமும் கன கச்சிதமாக வும் வேறுவ¬கான எந்த ஒரு பிரச்சனை யும் எழாமல் ஒரு சிறு சலசலப்பும் இன்றியும் நிகழ்ச்சி நிறைவேறி முடிந் ததற்கு மதிமுக தோழர்கள் தொண் டர்கள் பொறுப்பாளர்களுக்கும் அவர் களை வழிநடத்திய வைகோ அவர் களுக்கும் அனைவருக்கும் பாராட்டு களையும் நன்றிகளையும் சொல்லியாக வேண்டும்.

வைகோவின் அரசியல் நிலைப் பாடுகள் எப்படியான போதிலும், இந்த அரசியலைக் கடந்து அவரது அப்பழுக்கற்ற கறை படியாத மனித நேயமிக்க ஆளுமைக்குத் தமிழகத்தில் எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு. இதுவன்றி ஏற்றுக் கெண்ட பணிகளைச் செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றல்மிக்க களப்பணியாளரும் தலைவருமாகத் திகழ்பவரும் அவர்.

தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையேகிய தருணங்களில் புழல் சிறையில் ஒரு 5 நாள்களும். கடலூர் சிறையில் ஒரு மூன்று நாள்களும் அவரோடும் மதிமுகவின் பிற மாவட்டப் பொறுப்பாளர்கள் தொண்டர் களோடும் நெருங்கிப் பழகும் வாய்ப்பில் இருந்தது.

வழக்கமாக காலையில் கைது செய்தால் மாலையில் விட்டு விடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பில் வந்தவர்கள், எதிர்பாராத சிறைப்படுதலில் இன்னல்களுக்காளாகமல் இருக்க ஆறுதல் வார்த்தைகள், அவரவர் தேவைக்கான கவனிப்புகள் என எல்லாவற்றிலும் அக்கறை செலுத்துபவர் அவர்.

புழல் சிறையில் சிறைக்குள் நுழையும்போது ஒவ்வொருவருக்கும் பற் பசை, துலக்கி, சோப்பு வழங்கப்பட்டது. கடலூர் சிறைக்குச் செல்லும் போது சிறை என்று முடிவான உடனேயே சிறை வைக்கப்பட்ட மண்ட பத்திலேயே ஒவ்வொருவருக்கும் ஒரு லுங்கி, துண்டு, மதிய, இரவு உணவு, பற்பசை, துலக்கி, வழலைக் கட்டி, எனஎல்லாம் மின்னல் வேகத்தில் ஏற்பாடு. இப்படி தேவை அறிந்து சூழல் அறிந்து செயலாற்றும் சிறந்த ஒரு நிர்வாகியாகவும் செயல்படுபவர். அவர். அவ்வாறே இந்நாடக நிகழ்வுக்கான ஏற்பாடுளையும் கனக்கச்சிதமாகவே செய்து வைத்திருந்தார்.

இந்நிகழ்வில் இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். பார்ப்பனிய எதிர்ப்பு என்பதை பார்ப்பனர் எதிர்ப்பாகச் சுருக்கி, வறட்டுப் பார்ப்பன எதிர்ப்பு பேசுபவர்களாக இருப்பவர்கள், பெரும்பாலான பகுத்தறிவுவாதிகள் திராவிட இயக்கத்தினர். இது எந்த அளவு அர்த்தமற்றது, சமூக அறிவியல் நோக்கிற்கு முரணானது, எதிரானது என்பதை விளக்கத் தேவையில்லை.

இதை மேலும் மெய்ப்பிக்கும் விதமாகவே நடந்தேறியது இந்நாடக நிகழ்வு. பங்கேற்று நடித்தவர்கள் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள். வேலு நாச்சியாராய் நடித்தவரும், நாடகத்தை இயக்கியவரும் இசைக் கலைஞர்களும் பெரும்பாலானோர் பார்ப்பனர்களே.

பொதுவாக தமிழுக்கும், தமிழ் ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் பார்ப்ப னர்களின் பங்கு மகத்தானது. வறட்டுப் பார்ப்பன எதிர்ப்பில் இவர் களது பணிகளைப் புறந்தள்ளினால் இழப்பு தமிழுக்கு, தமிழர்களுக்குத் தானே தவிர அப்பார்ப்பனர் களுக்கு இல்லை, என்பதை நாம் உணர வேண்டும்.

எனவே, இனியாவது வறட்டுப் பார்ப்பன எதிர்ப்பு பேசுபவர்கள் அதைக் கைவிட்டு, பார்ப்பனர்கள் தமிழுக்கு அளித்துள்ள, அளித்து வருகிற பங்களிப்பை உணர்ந்து அதை உரியவாறு போற்ற பாதுகாக்க முன் வரவேண்டும். அதேபோல பார்ப்பன ரல்லாதார் என்கிற போர்வையில் பலர் தமிழுக்கு செய்து வருகிற தீங்கையும் துரோகத்தையும் ஈவு இரக்கமின்றிக் கண்டித்து அவர்களை அம்பலப் படுத்தித் தனிமைப்படுத்தி தமிழைக் காக்கவும் முன்வர வேண்டும்.

Pin It