தமிழகத்து தென் மாவட்டங்களின் பாசன வசதிக்கு உயிர்நாடியாய் விளங்குகிற முல்லைப் பெரியாற்று நீரை முற்றாக முடக்கிப் போட கேரள அரசு திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, பெரியாற்று அணையில் 146 அடி நீரைத் தேக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மறுத்து, அணையின் பாதுகாப்பைக் காரணமாகக் காட்டி 132 அடி நீரை மட்டுமே தேக்கி வந்த கேரள அரசு தற்போது அதையும் குறைத்து 124 அடி தான் தேக்குவேன் எனச் சண்டித்தனம் செய்வதோடு அணை 999 என்கிற பெயரில் ஒரு திரைப்படம் எடுத்து முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடுவது போன்ற ஒரு பீதியை கேரள மக்களிடம் தூண்டிவிட்டு, தற் போதைய அணைக்கு எதிரான கருத் தைக் கட்டமைத்து புதியதாக வேறு ஒரு அணை கட்ட முடிவு செய்து அதற் கான ஆயத்தப் பணி களையும் மேற் கொண்டுள்ளது.

இந்திய மாநிலங்களிடையே ஏற்படும் பிரச்சினைகள் நதி நீர்ப் பிரச்சினை, எல்லைப்பிரச்சினைகளை உள்ளிட்டு அனைத்துப் பிரச்சினை களிலும் தலையிட்டு அந்தந்த மாநில உரிமைகளைப் பாதுகாத்து, மாநிலங் களிடையே நல்லிணக்கத்தையும் அமைதியையும் நிலைநாட்டவேண் டிய தில்லி அரசு, எது பற்றியும் கவலைப்படாமல், தில்லி அரசு என்று ஒன்று இருக்கிறதா என்றே வினா எழுப் புகிற அளவுக்கு, இரு மாநிலங்களை யும் மோதவிட்டு அமைதியாய், செய லற்றதாய் கேடு கெட்டு மௌனம் சாதித்து வருகிறது.

இந்த முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மட்டுமல்ல, ஏற்கெனவே காவிரிச் சிக்கலில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படை யாலும் சிங்கள மீனவர்களாலும் தாக்கப்படுகிற சிக்கலில், எதிலுமே உடனடியாகத் தலையிட்டு பிரச்சினை யின் தீர்வுக்கு நடவடிக்கை எடுக்காத தில்லி அரசு, அனைத்தையும் சவம் போல வேடிக்கை பார்த்து மௌனம் சாதித்து வருகிறது.

மையத்தில் தில்லி அரசின் நட வடிக்கைகள் தொடர்ந்து தமிழ கத்துக்கு, தமிழகத்து மக்களுக்கு எதி ராகவோ அல்லது இந்தியாவின் ஒரு மாநிலமாகவே தமிழகம் இருக்கிறது என்பதாகக் கூட காட்டிக் கொள் ளாமல் தமிழகப் பிரச்சினைகளை ஏதோ அண்டை நாட்டுப் பிரச்சினை போலவோ பாவித்து எது பற்றி யும் கண்டும் காணா மலும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகமும் இது வரை இந்தியாவில் ஒரு மாநிலமாகத் தான், இந்தப் பிரச்சினைகளைத் தில்லி அரசு தலையிட்டு தீர்க்கும் என்கிற நம்பிக்கையில்தான் இருந்து வருகிறது. இந்த நம்பிக்கை தகருமானால், தமிழகம் இந்தியாவில் ஒரு அங்கமாக இருப்பதா, இல்லை, அண்டை நாடாக மாறி ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கு பிரச்சினையைக் கொண்டுபோய் இதற்குத் தீர்வு காண்பதா என்று தில் லியைக் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத் திற்கு ஆளாக இருக்கிறது.

இந்த நிலையில் மக்களின் உணர் வுகளை ஒருங்கிணைத்து, அவர்களை ஒன்று திரட்டி போராட வேண்டிய தமிழக அரசியல் கட்சிகள், அவரவர் பங்குக்கு சில பரபரப்புப் போராட் டம், அடையாளப் போராட்டம் நடத்தி தங்கள் இருப்பைத் தெரிவித்து தங்கள் கடமையை முடித்துக் கொண் டன. இத்துடன் சில வழக்கமான ‘சடங்குப் போராட்டங்களையும்’ அறிவித்துள்ளன.

எல்லாவற்றுக்கும் உச்சமாக தில்லி ஆளும் அரசில் அங்கம் வகிக் கும் திமுக அறிவாலயத்தில் பட்டினிப் போராட்டமும், தென் மாவட்டங் களில் மனித சங்கிலியும் நடத்தியுள்ளனர். அநேகமாய் அடுத்த போராட் டம் கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி என கருணாநிதியின் குடும்பத்தினர் தங்கள் இல்லத்தில் இருந்து கொண்டே போராட்டம் நடத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அதோடு திமுகவில் வேறு யாரும் மூத்த தலைவர்களே இல்லாதது போல் தலைநகரில் நடந்த பட்டினிப் போராட்டத்தை தந்தையும் தாம் பரத்தில் நடந்த பட்டினிப் போராட்டத்தை தனையனும் முடித்து வைத்து உரையாற்றியுள்ளனர்.

தமிழ்நாட்டின் சாபக்கேடு இது. ஏற்கெனவே ஈழத்துக்கும் இதே பட்டினிப் போராட்டம், மனித சங்கிலிகள் நடத்திதான் ஈழம் மாபெரும் இழப்பைச் சந்திக்க வைத்தோம். அப்போதும் மக்களது உணர்வுகளை ஒருங்கிணைத்துப் போராட தமிழகத்தில் கட்சிகள், தலைவர்கள், அமைப் புகள் இல்லை. இப்போதும் இக்கட்சிகள் மக்களது உணர்வுகளைப் புரிந்து அவர்களை ஒன்று திரட்டிப் போராடத் தயாரில்லை. போராட்டங்கள் மூலம் தங்களை முதன்மைப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். போராட்ட நடவடிக்கைகளில் இந்த வரம்பைத் தாண்டி வேறு எதுவுமே செய்வதாக இல்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான் தேனி கம்பம் பகுதி மக்கள் யாரையும் எதிர்பாராமல் தன்னெழுச்சியாகத் தாங்களே திரண்டு போர்க் கோலம் பூண்டு, கேரள எல்லை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே கூடங்குளம் பிரச்சி னையில், கட்சி நிலை அரசியல் நிலை கள் தாண்டி பகுதி மக்கள் ஒன்று திரண்டு விடாப்பிடியாய் போராடி வருவது போல் இந்தப் பிரச்சினை யிலும் மக்கள் தாங்களாகவே ஒன்று திரண்டிருக்கிறார்கள்.

இந்தத் திரட்சி, ஆவேசம், உரிமைப் போர் சரியான திசை நோக் கிப் பயணப்பட வேண்டும். இல்லா விட்டால் அத்தனையும் திசைமாறி கோரிக்கைகளின் இலக்கை பாழ்ப் படுத்தி விடும்.

இந்த நோக்கில் நாம் உடனடி யாக செய்ய வேண்டியது கேரளத் துடன் ஆன நேரடி மோதல் அல்ல. தில்லி அரசுடனான மோதல்தான்.

தில்லி அரசே, இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும் தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு சிக்கலில் நீ என்ன நியாயம் வழங்கப்போகிறாய், எங்களுக்கு உரிய நியாயத்தைப் பெற்றுத் தந்து இந்தியாவின் ஒரு அங்கமாக நீடிக்கவேண்டும் என்று நீ விரும்புகிறாயா, அல்லது எங்களுக்கு உரிய நியாயத்தை மறுத்து, எங்களை இந்தியாவிலிருந்து பிரிக்க நினைக் கிறாயா, பதில் சொல் என்று எழுச்சி மிக்க ஆவேசமிக்க, போராட்டங்களை தில்லியை நோக்கி, தமிழகத்திலுள்ள தில்லி அரசு அலுவலகங்கள், நிறுவனங் களை நோக்கி நடத்தவேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் தமிழகத்தில் உள்ள எந்த அரசின் எந்த அலுவலகமும், எந்த் துறையும் இயங்காது என்கிற நிலையை ஏற்படுத்தவேண்டும்.

இதற்கு நாம், நமது அரசியல் கட்சிகள் எப்போது அணியமாகி நிற் கிறோமோ, அப்போதுதான் இப்பிரச் சினைக்குத் தீர்வு. இந்த நோக்கிலான போராட்டம்தான், தமிழகத்திலுள்ள தில்லி எடுபிடிகளான போலிப் போராட்டக் கட்சிகளையும் அம்பலப் படுத்தும். உண்மையான போராளி கள், போராட்டக் கட்சிகளை அடை யாளம் காட்டி, போர்க்குணமுள்ள சக்திகளையும் ஒருங்கிணைக்கும்.

முல்லைப் பெரியாறு - சுருக்க வரலாறு

இந்தியாவில் வெள்ளை ஆட்சியின்போது 1886 அக்டோபர் 29ஆம் நாள் திருவிதாங்கூர் மன்னருக்கும், இந்திய அமைச்சருக்குமாக முல்லைப் பெரியாறு அணைக் கட்டுவது குறித்து 999 ஆண்டு ஒப்பந்தம் கையப்பமிடப்பட்டது.

1887 - 1895 இடைப்பட்ட 8 ஆண்டுகளில், பல்வேறு இடையூறுகளைக் கடந்து பென்னிகுக் என்கிற ஆங்கிலேயரின் முன் முயற்சியால் அணை கட்டப்பட்டது.

1979இல் கேரள அரசு திட்டமிட்ட உள் நோக்கத்தோடு அணையின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினையை எழுப்பியது. இதையட்டி 1979 நவம்பர் 25இல் தில்லி, கேரள, தமிழக அரசு மட்டத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்படி அணை 152 அடி நீரைத் தேக்கும் பலத்துடன் இருந்தாலும், தாற்காலிகமாக 136 அடிவரை தேக்குவது என முடிவு செய்யப்பட்டது.

நீரைத் தேக்கும் மட்டத்தை உயர்த்த தமிழகம் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்க, கேரள அரசு எதிர் வழக்காட, வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது.

2000ஆம் ஆண்டு ஏப்ரல் 28இல் உச்சநீதிமன்றம் இது குறித்து வல்லுநர் குழு அமைக்க ஆணையிட அவ் வல்லுனர் குழு 2001ஆம் ஆண்டு அளித்த பரிந்துரையில் அணை 142 அடி நீரைக் தேக்குமளவு பாதுகாப்பாக உள்ளது எனத் தெரிவிக்கிறது.

இதையட்டி, கேரளம் எதிர் வழக்காட உச்ச நீதிமன்றம் 2006 பிப்ரவரி 27இல் அளித்த தீர்ப்பில் அணையின் நீர்த் தேக்க மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த ஆணையிடுகிறது.

அதே ஆண்டு இதை எதிர்த்து கேரளம் சட்டமன்றத்தில் “கேரள நீர்ப்பாசனப் பாதுகாப்பு சட்டத்தை” இயற்றுகிறது. இதைத் தடை செய்யக்கோரி தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறது. உச்ச நீதிமன்றம் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தைநடத்தி சிக்கலுக்கு சுமுக தீர்வு காண அறிவுறுத்துகிறது.

2007 திசம்பர் 19இல் இரு மாநில முதல்வர்களும் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். தமிழகத்தை வஞ்சிக்கும் கேரள முயற்சி வெற்றி பெற இயலாத நிலையில் பிரச்சினை தொடர, இதற்கிடையேதான் கேரளம் ‘அணை 999’ படத்தை எடுத்து திரையிட்டு, கேரள மக்களுக்கு அச்சமூட்டி அவர்களைத் தமிழர்களுக்கு எதிராக உசுப்பி, வேறு புதிய அணை கட்டும் முயற்சிகளிலும் ஈடுபட, இதையட்டியே தற்போது பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.

முல்லைப் பெரியாறு - திசைமாறும் போராட்டம்

முல்லைப் பெரியாறு சிக்கல் சார்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்கள் குறித்து நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. இதுபற்றி விரிவாக எழுத நிறைய கருத்துகள் உண்டு என்றாலும், இதழ் முடிக்க இருக்கும் தருவாயில் இச்சிக்கல் திடீரெனத் தீவிரம் அடைந்த நிலையில் போதிய இடமின்மை காரணமாக சுருக்கமாக மட்டும் சில செய்திகள்.

இப்போது சிக்கல் தமிழக - கேரள மக்களுக்கான சிக்கலாக, அவர்களுக்குள்ளே மோதலை ஏற்படுத்தி ஒருவரையருவர் தாக்கிக் கொள்ளும் சிக்கலாக இது ஆக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளும் விறுவிறுப்பு கருதி இதைப் பரபரப்புச் செய்திகளாக வெளியிட்டு மக்களது உணர்ச்சிகளுக்குத் தீனி போட்டு வருகின்றன. மக்களும் இதை ஆர்வமாய் வாங்கிப் படித்து ஆவேசமுற்று வருகிறார்கள்.

கேரள தமிழக மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது ஒரு போதும் இச்சிக்கலுக்குத் தீர்வாகாது. தீர்வு காண வேண்டியது தில்லி. எனவே நாம் தில்லியை நோக்கி நம் போராட்டக் கூர்முனையைத் திருப்பவேண்டும். தில்லி அரசே, எங்களை இந்தியாவுடன் பிணைத்து வைத்திருப்பது நீ. எனவே, இதற்கான தீர்வை நீதான் காணவேண்டும். நீதான் எங்களது உரிமையை மீட்டுத்தரவேண்டும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், அண்டை மாநில நதி நீர் உரிமை பற்றி எந்தப் பொருட்பாடும் இல்லாமல் ஒரு மாநிலம் இதற்கு எதிராகச் செயல்படுகிறது என்று சொன்னால் அந்த மாநிலத்தின் சண்டித்தனத்துக்கு நாங்கள் ஏன் பலியாக வேண்டும். ஆகவே எங்கள் உரிமையை மீட்டுத் தருகிறாயா, இல்லாவிட்டால் எங்களைத் தனியே கழற்றி விட்டு விடுகிறாயா என்கிற கேள்வியோடு தில்லியை நோக்கிய நமது போராட்டம் தீவிரமடையவேண்டும்.

இதுதான் பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய நகர்வே தவிர, மற்றபடி இரு மாநில மக்களும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து ஒருவரை யருவர் தாக்கிக் கொள்வதல்ல.

அறிவார்ந்த அரசியலைப் புறந்தள்ளி உணர்வெழுச்சி அரசியலை மட்டுமே முன்வைத்து அதிலேயே அவரவருக்கும் அரசியல் ஆதாயம் தேட முனையும் தமிழக அரசியல் சூழல் இந்தப் பிரச்சினையிலும் போராட்டத்தின் கூர்முனையை திசை திருப்பியுள்ளது. அதை தில்லியை நோக்கித் திருப்ப உணர்வாளர்கள் விழிப்படையவேண்டும். மக்களையும் விழிப்பூட்ட வேண்டும்.

Pin It