தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

கடந்த 13.4.20011இல் நடந்து முடிந்த தமிழக சட்ட மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கு முந்தைய, வாக் கெடுப்புக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளையெல்லாம் தகர்த்து நொறுக்கி இரு தரப்பினரையுமே அதிர்ச் சிக்குள்ளாக்கும் முடிவுகளைத் தந்துள்ளது. வெற்றி பெற்ற கூட்ட ணியும் சரி, வீழ்ச்சி பெற்ற கூட்ட ணியும் சரி, எதுவுமே எதிர்பாராத முடிவு இது. அதாவது வெற்றி பெற்ற வர்களும் இது போன்ற மாபெரும் வெற்றியை எதிர்பார்க்க வில்லை. தோல்விடைந்தவர்களும் இதுபோன்ற படுதோல்வியை எதிர் பாக்கவில்லை. அந்த அளவிற்கு எதிர்பாராத முடி வைத் தந்திருக்கிறார்கள் தமிழக வாக்காளர்கள்.

கடந்த எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்தத் தேர்தலில் வாக்களிப்பின் விழுக்காடு கூடி யிருந்ததானது வாக்களிப்பு நாளில் பல்வேறு மதிப்பீடுகளை ஏற்படுத்தி யிருந்தது. கைநீட்டி காசு வாங்கி யவர்கள் பொறுப்பாக வந்து வாக்களித் தார்கள் என்று எடுத்துக் கொள்வதா, அல்லது முதன்முறையாக வாக் களிக்கும் புதிய தலைமுறையினர் உற் சாகமாக வந்து தங்கள் சனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர் என்று எடுத்துக் கொள்வதா என்று குழப்பமாக இருந்தது.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி யின்பால் பரவலாக மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது, இந்த முறை அது வருவது கடினம் என்று பொது வான கருத்து நிலவிய போதிலும் வாக்களிப்பு முடிந்த நாளில் தி.மு.க. தரப்பு 200 இடங்களுக்கு மேல் வருவோம் என்று நம்பிக்கையோடு சொன்னது ஓ! அந்த அளவிற்கு மக்களைக் கவனித்து வைத்திருக்கிறார் கள் போலிருக்கிறது என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது.

இத்துடன் எந்த அணி வென் றாலும் தனிப்பெரும்பான்மை கிட் டாது, கூட்டணி ஆட்சி நிறுவுகிற அள வுக்கு இழுபறியாகவே இருக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால் எல்லா மதிப் பீடுகளையும் முறியடித்து ‘எப்படா வாய்ப்புக் கிடைக்கும்’ என்று எதிர் பார்த்துக் காத்துக் கிடந்தது போல் மக்கள் இந்த அளவுக்கு வெறுப் போடும், கோபாவேசத்தோடும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி, மண்ணைக் கவ்வச் செய்திருக் கிறார்கள். அப்படி ஒரு அதிரடி முடிவை இந்தத் தேர்தல்தந்திருக் கிறது..

சரி, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி இந்த அளவிற்கு வீழ்ச்சியடையக் காரணமென்ன? இதற்கு ஒற்றைக் காரணத்தில் விடை தேடமுடியாது. இதற்குக் காரணங்கள் பல:

1. கருணாநிதி தமிழீழ மக்க ளுக்கும் தமிழக மக்களுக்கும் துரோ கம் இழைத்து தமிழீழ விரோத தில்லி காங்கிரஸ் ஆட்சிக்கு காவடி தூக்கி தமி ழர் நலனை முற்றிலுமாகப் புறக்க ணித்தது.

2.     ஆட்சி நலனை, தமிழக மக் கள் நலனை முற்றாகக் காவு கொடுத்து குடும்ப நலனே குறியாக இயங்கி கட்சிக் காரர்களிலேயே உணர்வுள்ள பலரின் வெறுப்புக்கு ஆளாகியது.

3. இதுவரை இந்திய அரசியல் வரலாறே சந்தித்திராத அளவுக்கு மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்து நாடெங்கும் நாறி தமிழக மக்களை அதிர்ச்சியடைய தலைக் குனிய வைத்தது.

4.     ஆங்காங்கே காவல் துறை யின் துணையோடு கட்சிக்காரர்கள் நிகழ்த்திய காட்டு தர்பார் , அராஜகம், கட்டப்பஞ்சாயத்து,நிலப்பறிப்பு அடிதடி,வன்முறை, ஒருபுறம் இருக்க, காவல்துறை இவை எவற்றையுமே கண்டு கொள்ளாது ஆட்சியாளர் களுக்கே சேவகம் புரிந்து அநியாயத் துக்கும் அராஜகத்துக்கும் துணை நின்றது.

இப்படி எண்ணற்ற பல காரணங் கள்தான் தி.மு.க.-காங்கிரஸ் கூட்ட ணியை இந்த அளவிற்கு வீழ்த்தியது.

இப்படி சமூக ரீதியான காரணங் கள் அது சார்ந்த மக்களின் மனநிலை ஒருபுறம் இருக்க, கட்சிகளின் கூட்ட ணியும், அதன் அணி சேர்க்கைகள் சார்ந்த கணிதவியலும் இந்த வெற்றியில் மிகப் பெரும் பங்களிப்பை ஆற்றியுள் ளன.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க., அதிமுக கூட்டணியில் இல்லை. அது தனித்துப் போட்டி யிட் டது. இப்படி அது தனித்து போட்டி யிட்டதன் மூலம் அது 12 நாடா ளுமன்றத் தொகுதிகளில் அதிமுக . வின் வெற்றியைப் பாதித்தது. இது பற்றி மண்மொழி இதழ் எண். 28,நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய ஆய்வுக் கட்டுரை பக்கம் 32இல் குறிப்பிட்டிருந்தோம்.

12 நாடாளு மன்றத் தொகுதிகள் என்பது 72 சட்ட மன்றத் தொகுதி களாகும். இந்தத் தேர்தலில் தேமுதிக. அதிமுக. அணியில் நின்றதானது இந்த 72 தொகுதிகளிலும் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளைச் சிதற விடாது அ.தி.மு.க. அணிக்கு வெற்றி வாய்ப்பைத் தேடித் தந்துள்ளது.

ஆக மக்களின் மனநிலை, கூட்ட ணிக் கட்சிகளின் அணி சேர்க்கைக் கணக்கு இவை இரண்டுமே இந்த தேர்தலில் அதிமுக. அணிக்கு சாதக மாக அமைந்ததில் அ.தி.மு.கவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் 200க் கும் மேற்பட்ட இடங்களைக் கைப் பற்ற தனிப்பெரும்பான்மை பலத் தோடு அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந் துள்ளது.

இந்தத் தேர்தலில் மண்மொழி யின் நிலைப்பாடு தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தவேண்டும் என்பதுதான். அது கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் முழுமையாக நிறைவேறா விட்டாலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் பெருமளவு நிறைவேறியுள்ளது. மக்கள் நிறை வேற்றியுள்ளார்கள்.

இத்துடன் இத்தேர்தல் பற்றி நாம் குறிப்பிட்ட ஒரு கருத்து . அ.தி.மு.க. விற்குத் தனிப்பெரும் பான்மை கிடைக் கக்கூடாது, அது கூட்டணிக் கட்சியின் ஆதரவில் ஆட்சியமைப்பதுதான் நல்லது, காரணம், அ.தி.மு.க. தனித்து ஆட்சி யமைத்தால் மீண்டும் ஜெ.வின் அதிகாரம், ஆணவம், அகந்தை தலை தூக்கும். மன்னார்குடி குடும்ப செல்வாக்கும் ஆதிக்கமும் அரசுப் பொறியமைவுகளுக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாகச் செயல்பட வாய்ப்பளிக்கும் என்பதுதான்.

ஆனால் தற்போது அ.தி.மு.க. தனித்தே அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இது எப்படிப்பட்ட அதிகாரக் கெடுசெயல்களை ஏற்படுத் தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதே அதிமுக கரை வேட்டிகளின் அத்து மீறல், அராஜகம் பற்றி செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. இதுவரை ஜெ.வின் நடவடிக்கைகளைப் பார்த் தால் கடந்தகால அனுபவங்களி லிருந்து பாடம் கற்று, ஏதோ கொஞ்சம் பக்குவமடைந் துள்ளது போலத்தான் தோன்றுகிறது. ஆனால் இது எவ்வளவு காலம் நீடிக்கும். இது தற்காலிகமானதா, நிரந்தரமானதா என்பதைப் போகப் போகத்தான் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

இத்துடன் மண்மொழி தன் நிலைப்பாட்டில் தமிழக மக்களுக்கு வைத்த கோரிக்கை, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான். இதில் 65 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 60 இடங்களில் தோற்று வெறும் 5 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற முடிந்தது என்பது மகிழ்ச் சிக்குரிய செய்திதான் என்றாலும் அந்த 5 இடங்களிலும் வராமல் தோற்று அவர்கள் சட்டமன்றம் பக்கமே எட்டிப் பார்க்க முடியாதபடி ஆக்கியிருந்தால் இன்னமும் கூடுதல் மகிழச்சியாயிருந்திருக்கும். இந்த மகிழ்ச்சி கிட்டாமல் போனதற்குக் காரணம் பா.ஜ.க.தான். பா.ஜ.க. மட்டும் தனித்துப் போட்டியிட்டு வாக்குகளைப் பிரிக்காமலிருந்தி ருந்தால் இந்த 5 தொகுதிகளிலும் கூட காங்கிரஸ் படுதோல்வி அடைந் திருக்கும். ஆனால் அது நேராமல் போனது தமிழீழ விடுதலை ஆதரவு மற்றும் தமிழ் உணர் வாளகளுக்கு ஒரு பெரும் குறைதான், இருக்கட்டும்.

அடுத்துமண்மொழியின் நிலைப் பாட்டில் நாம் முக்கியமாகக் குறிப் பிட்டது, தி.மு.க.-காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும். அக்கூட்டணியை வீ ழ்த்த வேண்டும் என்று கோரிய நாம் பா.ம.க. வி.சி.க கட்சிகளைப் பொறுத் தவரை அப்ப டிப்பட்ட கோரிக்கை எதையும் வைக்க வில்லை. அதற்கான காரணங்களையும் சென்ற இதழிலேயே விளக்கி இவ்விரு கட்சிகளும் நிற்கும் இடங்களில் மக்கள் விருப்பம் எப்படியோ அப்படி வாக்களித்துக் கொள்ளட்டும் என்று விட்டிருந்தோம்.

 பா.ம.க. வி.சி.க கூட்டணி சமூக நோக்கில் நல்லதுதான் என்ற போதிலும், அரசியல் நோக்கில் அவை இரண்டும் சேர்ந்திருக்கும் அணி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்திருந்த அணி என்பதால் தி.மு.க., காங்கிரசு டன் இவ்விரு கட்சிகளையும் சேர்த்து இவற்றின் மீதும் மக்கள் தங்கள் வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்கள்.

பா.ம.க., விசிக கூட்டணி வட மாவட்டங்களில் வலுவுள்ள கூட்ட ணியாக தி.மு.க.வின் வெற்றிக்கு வலு சேர்க்கும் கூட்டணியாக அமையும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் முப்பது தொகுதி களில் போட்டி யிட்ட பா.ம.க.வை மூன்றே மூன்று தொகுதிளில் மட்டும் வெல்ல வைத்திருக்கிறார்கள். பத்து தொகுதி களில் போட்டியிட்ட வி.சி.க.வை ஒரு இடத்தில் கூட வெல்ல இயலாமல் தோற்கடித்திருக்கிறார்கள்.

அதாவது காங்கிரஸ்-திமுக கூட்டணியில் சேர்ந்த பாவத்திற்கு பாமகவும் விசிகவும் தேவையின்றி அதற்கு விலைகொடுக்க வேண்டிய தாயிற்று

இவ்விரு கட்சிகளுக்குமே இது அதிர்ச்சித் தோல்விதான் என்றவகை யில் இத் தோல்விகளிலிருந்து இவை பாடம் கற்று, தங்கள் வருங்காலத்தை திட்டமிட்டுக் கொள்வதுதான் இவ் விரு கட்சிகளுக்கும் நல்லது. தமிழ கத்துக்கும் நல்லது. அதாவது இவ் விரு கட்சிகளின் கூட்டணியும் இப்ப டியே தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதே வேளை இவை ஆதிக்கச் சக்தி களுக் குத் துணைபோகாமல் தமிழ், தமிழர், தமிழக நலன் காக்கும் பயனுள்ள வகையில் தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என் பதே தமிழக மக்களின் அவா.

சரி, தேர்தல் முடிந்தது. புதிய ஆட்சியும் பொறுப்பேற்றுவிட்டது. இனி தமிழகத்தின் எதிர்காலம் எப்படி யிருக்கும் என்று யாருக்காவது கேள்வி எழுமானால் அவர்களுக்கான ஒரே பதில், இந்த ஆட்சி மாற்றத்தால் தமிழகத்தில் அடிப்படையில் எந்த மாற்றமும் இருக்காது. இருக்கப் போவதுமில்லை. அது அது அப்படி அப்படியே இருந்த நிலைக்கே நீடிக்கும் என்பதுதான்.

காரணம் இந்தத் தேர்தல் பற்றி நமக்கு எந்த பிரம்மையும் இல்லை. இதனால் எந்த அடிப் படை மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை என் பதை நாம் தொடர்ந்து சொல்லி வந்தி ருக்கிறோம். மீண்டும் இப்போதும் அதையே நினைவுபடுத்தவும் விரும்பு கிறோம். இருந்தாலும் இதுபோன்ற தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும், என்று நாம் வலியுறுத் தியது, சில உடனடி இலக்குகளை நிறை வேற்றிக் கொள்ள முடியும் வேண்டும் என்பதனால்தான். அதோடு தற்போது அதை நிறைவேற்றியும் இருக்கிறோம்.இதுவேதான் இது போன்ற தேர்தல்களின் வரம்பும். இந்த வரம்பு மட்டத்திலேயேதான் இதன் விளைவும்.இதையட்டி நம் புரிதலுக்காக சில :

தில்லியை ஆளும் காங்கிரஸ் தமிழகத்தில் தி.மு.க வோடு சேர்ந்து அதனோடு கூட்டு வைத்து தன் ஆதிக்கத்தைக் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்றால், அடுத்து யாரைப் பிடித்து தன்னை நிலைப் படுத்திக் கொள்ளலாம் என்பதே எப்போதும் அதன் அணுகு முறையாக இருந்து வருகிறது. இதற்கிசையவே தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் நிலைப்பாடு களும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் கூட் டணி படுதோல்வி அடைந்த நிலை யில், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி அத்தோல்விக்கான காரணங்கள் என்ன என்பதைப் பற்றி ஆராய, கூட்டணிக் கட்சிகளை தி.மு.க. வை அழைத்து வைத்து பேச முற்ப டாமல், வெற்றி பெற்ற அ.தி.மு.க.வுக்கு வாழ்த்து கூறி ஜெ வுக்கு தேநீர் விருந்துக்கும் அழைப்பு விடுத்திருந்தார்

வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து கூறுவது மரபு என்பதாக எடுத்துக் கொண்டாலும், தேநீர் விருந்துக்கான அழைப்பை எவ்வாறு எடுத்துக் கொள்வது. இது தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட தி.மு.கவை தன் கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டு அ.தி.மு.வின் கூட்டணியை ஏற்படுத் திக் கொள்ளும் முயற்சியாகவே நோக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள தேர்தல் திராவிடக் கட்சிகளான தி.மு.க. அ.தி.மு.க. இரண்டுமே மாற்றி மாற்றி தில்லிக்கு காவடி தூக்குவதும், தமிழகத்தில் சொந்த செல்வாக்கு என்று ஏதுமற்ற போதிலும் காங்கிரஸ் இவ்விரு கட்சிகளின் தோள் மீது நின்று தமிழகத்தில் தன்னைத் தற்காத்து வருவதும் தெரிந்த செய்தி.

இந்நிலையில் காங்கிரஸ் அதிமுக வுடன் கூட்டு சேரவோ, அதிமுக காங்கிரஸை ஆதரிக்கவோ இவ்விரு கட்சிகளுக்குள் எந்த தயக்கமும் இருக்கப்போதில்லை.

இத்தனைக் காலமும் தனக்கு ஆதரவளித்து வந்ததற்காக தி.மு.க கேட்டு வந்த விலை, அது தந்து வந்த குடைச்சல் இவற்றிலிருந்து மீள காங்கிரசுக்கு இது நல்ல வாய்ப்பு. அதேபோல தி.மு.க.வின் தில்லி செல்வாக்கைத் தகர்த்து அதைத் தனிமைப்படுத்தி தி.மு.க.வைப் பழி வாங்க இது அ.தி.மு.க.வுக்கும் நல்ல வாய்ப்பு. இந்த நல்வாய்ப்புகளை இரு கட்சிகளுமே பயன்படுத்திக் கொள்ள முயலும்போது அரசியல் அரங்கில் கூட்டணிக் காட்சிகள் மாறலாம். மாற நிச்சயம் வாய்ப்புண்டு.

இப்போதைக்கு ஜெ எதற்கும் பிடி கொடுக்காத நிலையும் திமுக காங்கிரசோடு அட்டைபோல் ஒட்டிக் கொண்டுள்ள சூழலும் தற்போதைக்கு உடனடி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை இது இப்படியே சிலகாலம் நீடிக்கலாம் என்றபோதிலும் எப்போது வேண்டு மானாலும் நிலைமை மாறலாம் என்பதே உண்மை.

அப்படி மாறும் நிலையில் அடுத்த தேர்தலின்போது அதிமுக காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம். நாமும் அப்போதைய தேவை சூழலை யட்டி இந்தக் கூட்டணிக்கு எதிராக திமுக அணிக்கு வாக்களியுங்கள் என்றும் கோர வேண்டி நேர்ந்தாலும் நேரலாம்.

இந்த நேரத்தில் இப்படி மாற்றி மாற்றியே வாக்களித்துக் கொண்டிருந் தால் புரட்சி வருவதுதான் எப்போது என்கிற புளித்துப்போன கேள்விகளை இங்கே கேட்கவேண்டாம். இக்கூட் டணிக் கட்சிகள் எதுவும் புரட்சியாளர் களின் கால்களைப் பிடித்துக் கொண்டு ஐயோ புரட்சி ஏதும் செய்து விட வேண்டாம் என்று கெஞ்கிக் கொண்டோ தடுத்துக்கொண்டோ இருக்க வில்லை.புரட்சி வீரர்கள் அவர்கள் பாட்டுக்குத் தங்கள் புரட்சிப் பாதையைத் தொடரலாம். தடை யில்லை.

ஆக இப்போதைக்கு தமிழக அரசியலில் திமுக விட்டால் அதிமுக, அதிமுக விட்டால் திமுக என்ப தாகவே இருந்து வருகிறது. இவ்விரண் டிற்கும் மாற்றாக மூன்றாவது அணி மாற்று அணி என்பது எதுவும் நம் பிக்கையூட்டும் வகையில் கண்ணுக் கெட்டும் தூரத்தில் தென்படவில்லை.

இந்நிலையில் இந்தத் தேர்தல் அரசியலால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை என்பதில் நாம் மிகுந்த தெளிவோடே இருக்கிறோம். இதனால்தான் இந்தத் தேர்தல் அரசியலுக்கு அப்பால் மக்கள் திரள் அமைப்புகளைக் கொண்ட மாற்று அரசியலைப் போராட்ட அரசியலை முன்நிறுத்த வேண்டும் என்று கோருகிறோம். இந்தப் போராட்ட அரசியலுக்கு உடனடியாக சாத்தி யமோ, அல்லது இதன்மூலம் நிலைமைகளைத் தீர்மானிக்கிற வலுவோ இல்லாத சூழலில் குறைந்தபட்சம் ஒரு மூன்றாவது அணியை மாற்று அணியையாவது உருவாக்கி போராட்ட அரசியலுக்குக் களம் அமைக்க வேண்டும் என்று கோருகிறோம்.

இப்படிப்பட்ட போராட்ட அரசியலின் தேவைக்கான புறக் காரணங்கள் தமிழகத்தில் மலிந்து கிடக்கின்றன. இவற்றைப் பட்டிய லிட்டுத்தான் தெளிவு படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் அதற்குரிய அரசியல் நடவடிக்கைகள் தான் தமிழகத்தில் இல்லை. எனவே தமிழகத்தின் இந்த புறநிலையை உணர்ந்து தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகள். தமிழ் தமிழர் நல ஆதரவு சக்திகள் ஒன்றாக இணைந்து ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டும். இம் மாற்று அணிக்கான முன்முயற்சியைத் தற்போது தேர்தல் தான் முடிந்து விட்டதே என்று கிடப் பில் போடாமல் அல்லது அடுத்தத் தேர் தல் நெருக்கத்தில் பார்த்துக் கொள்ள லாம் என்று அப் போது போய் மல்லுக் கட்ட முனை யாமல் இப்போதிருந்தே அதற்கான களத்தை,தளத்தை உருவாக்க உணர்வாளர்கள் ஒருசேரப் பாடுபட வேண்டும்.

குறிப்பு: இக்கட்டுரை 27.07.2011 அன்று சென்னையில் கூடிய பா,ம,க பொதுக்குழு ‘இனி எந்த நாளிலும் திமுக அதிமுக வுடன் கூட்டணி கிடையாது’ என்று முடிவெடுத்து அறிவிப்பதற்கு முன் எழுதப்பட்டது. பாமகவின் முடிவு பற்றிய கருத்து அடுத்த இதழில் இடம் பெறும்.

Pin It