இது மண்மொழி 34வது இதழ். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அடுத்தது கொண்டு வரப்பட்ட 32, 33ஆவது இதழ்களை அடுத்து நீண்ட இடைவெளிக்குப்பின் வெளி வரும் இதழ்.

இந்த இதழ் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த கையோடு கொண்டு வரத் திட்டமிட்டு அப்போதே அதற்கான பணிகளைத் தொடங்கியது.

ஆனால் தொடங்கிய சூட்டோடு முடிக்க இயலாமல் பல்வேறு சூழ்நிலைகளில், ராஜபக்ஷே போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோருதல், மூன்று தமிழர் உயிர்காப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, எனப் பல்வேறு பிரச்சினைகளையட்டிய வெளியூர்ப் பயணங்கள், வழக்கமாக உள்ள பொருளியல் நெருக்கடிகள் இதழை இதோ முடிப்போம், அதோ முடிப்போம் என்று காலதாமதமாகி உள்ளாட்சித் தேர்தல்களும் நடந்து முடிந்தபிறகு வெளிவருகிறது.

முந்தைய இதழுக்கு இந்த இதழ் மிகுந்த காலதாமதமானதில் இடைக்காலத்தில் நிகழ்ந்த செய்திகள் பெருகி, இதழில் இடம் பெற்றிருந்த கட்டுரைகளும் சில காலாவதியானது போல் தோன்ற அவற்றை நீக்கிவிட்டு, புதியதாக நடப்புச் செய்திகளை முன்வைத்து வேறு கட்டுரைகளை எழுத நேர்ந்தது.

இருந்தாலும் சமச்சீர் கல்வி, ஐ.நா. அறிக்கை, சட்டமன்றத் தீர்மானம், ஆகியன பதிவே இல்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காக அவற்றை மட்டும் சற்று சுருக்கி அப்படியே வைத்து, புதியதாக எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து சிலவற்றை, இவற்றைப் பற்றி விரிவாக இல்லாவிடினும், சுருக்கமாக இச்சிக்கலில் மண்மொழியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேனும் அதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது

 இதனால், இடப்பற்றாக்குறை காரணமாக வழக்கமாக இடம் பெறும் போராட்ட செய்திகள், நூல் அறிமுகங்கள் முதலான பலவற்றை இந்த இதழில் இடம்பெற வைக்க இயலாமல் அடுத்த இதழில் போட்டுக் கொள்ளலாம் என்று அப்படியே நிறுத்தி வைத்தாயிற்று. இவையனைத்தும் அடுத்த இதழில் இடம்பெறும்.

மண்மொழியை எங்கெங்கோ வாங்கிப் படிக்கும் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுகிறார்கள். சந்தா அனுப்ப விருப்பம் தெரிவிக்கிறார்கள். எனில் இவர்களது விருப்பத்தை ஈடேற்ற முடியுமா, மாதந்தோறும் இதழ் கொண்டு வரமுடியுமா என்பதுதான் தொடர் கவலையாக இருக்கிறது.

இந்நிலையில் மண்மொழியின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த தில திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை நிறைவேறினால் எதிர்வரும் தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்களிலிருந்து மாதாமாதம் இல்லையானாலும் இரு மாதத்திற்கொரு முறையாவது இழைக் கொண்டு வரலாம் என்று திட்டம்.

பார்ப்போம். இது எந்த அளவு கைகூடுகிறது. புறநிலை எந்த அளவு இதை அனுமதிக்கிறது என்று. என்னவானாலும் முயற்சியைத் தொடர்வோம்என்று மட்டும் நம்பலாம்.

தோழமையுடன்

ஆசிரியர்