ஆற்றங்கரையிலுன்

கால்கள் பட்டுச் சலசலத்த

நீரின் கானத்தினை

பேராசைக் காற்று

மூங்கில்களுக்குள் அனுப்புகிறது

அம் மூங்கில் பறித்து

செய்த புல்லாங்குழல்

ஊதத் தருமிசை

நீரினுடையதா

காற்றுடையதா

மூங்கிலுடையதா

உன்னுடையதாவென

ஆய்வுகள் நடக்கின்றன

***

அவர்கள்

நீ பேசக் கேட்டிருந்தால்

பூலோகத்தின் மனமாற்றும்

தேனினிய ராகத்தை

உன் குரலொன்று மட்டுமே

எப்பொழுதும் கொண்டிருக்கிறதென்று

ஏக முடிவாக ஆய்வுக் குறிப்புக்களை

வரி பிசகாது எழுதிமுடித்து

மீண்டும் யாரும் முடிவினை

மாற்றியெழுதிடக் கூடாதென

எழுதுகோல்களைத் தொலைத்திடுவர்

- எம்.ரிஷான் ஷெரீப்

Pin It