தமிழகத்தில் தற்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆட்சி என்பது அதன் தலைவர் கருணாநிதியின் குடும்ப ஆட்சியாக இருந்து வருகிறது. இக்குடும்பமே தற்போது தமிழக அரசியல், பொரு ளியல், பண்பாட்டியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந் நிலையில் இவ்வாதிக்கம் பற்றியும், இவ்வாதிக்கத் தைத் தவிர்த்த மாற்று அரசியல் பற்றியும் சிந்திக்க வேண்டுவது சனநாயக, சமத்து சிந்தனையாளர்களது கடமையாகிறது.

குடும்ப அரசியல் : பிரத்தானிய ஆட்சிக்கால இந்தியாவில் 1920இல் முதல் சென்னை மாகாண அவை உருவாக்கப் பட்டு அதன் முதன் முதலமைச்சராக நீதிக் கட்சியைச் சேர்ந்த சுப்புராயலு ரெட்டியார் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து சுதந்திர இந்தியாவில் தற்போது தமிழகத்தில் முதல்வராயிருந்து வரும் கருணாநிதி வரை, இந்த இடைப் பட்ட 90 ஆண்டுகளில் ராஜாஜி, ஓமந் தூரார், காமராசர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் உள்ளிட்டு இருபதுக்கும் மேற்பட்ட வர்கள் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றி ருக்கிறார்கள்.

எனில், இவர்கள் எவருமே குடும்ப அரசியல் நடத்தியவர்கள் அல்ல. குடும்ப உறுப்பினர்களை ஆட்சியதிகாரத்தில் அமர்த்தியதும் கிடையாதது மட்டுமல்ல, இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது இவர்களின் வாரிசுகளோ இப்போது யார் யார் எங்கிருக் கிறார்கள் என்கிற விவரமும் அவர் களது உறவு வட்டம், நட்பு வட்டம் தாண்டி பெரும் பான்மை மக்கள் திரள் பிரிவினர் எவருக்கும் தெரியாது. ஆனால் கருணா நிதியின் ஆட்சியில் மட்டும்தான் மொத்தக் குடும்பமே தமிழகத்தை ஆண்டு கொண்டிருக் கிறது.

வாரிசு அரசியல் என்பது உலகம் முழுக்கவுமே இருக்கிறது என்றாலும், வாரிசு அரசியலுக்கும் குடும்ப அரசி யலுக்கும் வேறுபாடு உண்டு. தகுதி யுடையவர்கள் வாரிசு அரசியலுக்கு - அரசியல் வாரிசாக வருவதில் தவறில்லை. தகுதியுள்ள ஒருவருக்கு அவர் வாரிசு என்பதினாலேயே அவ்வுரிமை மறுக்கப் படுவதும் தேவையில்லை. ஆனால் குடும்ப அரசியல் என்பது அப்படியில்லை.

குடும்ப அரசியல் என்பது, தகுதி இருக்கிறதோ இல்லையோ மொத்த குடும்ப உறுப்பினர்களுமே அதிகாரம் செலுத்துவது. பதவியில் இருக்கிறார் களோ இல்லையோ, குடும்ப உறுப்பினர் என்கிற உரிமையில் ஆதிக்கம் செய்வது. அதாவது குடும்பச் சொத்தில் குடும்ப உறுப்பினர்கள் பங்கு பெறுவது போல ஆட்சியதி காரத்திலும் குடும்ப உறுப்பினர்கள் அவர வர்களுக்கு சாத்தியப்பட்ட பங்கைப் பெறுவது. குடும்ப உறுப் பினர்களை விடவும் மூத்த அனுபவம் மிக்க தலை வர்கள் பலர் கட்சியிலேயே இருந்தாலும் அவர்களுக் கெல்லாம் எப்படி சொத்தில் பங்கில்லை, குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும்தான் உண்டோ, அதேபோல ஆட்சியதி காரத்திலும் குடும்ப உறுப்பினர் களுக்கு மட்டுமே பங்களிப்பது. ஆட்சியதிகாரத்தை சொத்துரிமை போலப் பயன்படுத்துவது.

அதாவது மன்னராட்சிக் காலங் களில் மன்னரும், மன்னரது வாரிசு களும், குடும்ப உறுப்பினர்களுமே அதிகாரத்தின் அனைத்து நிலைகளி லும் ஆதிக்கம் செலுத்தி வருவதுபோல இன்று கருணா நிதியின் குடும்பமே தமிழகத்தைப் பங்கு போட்டு ஆண்டு வருகிறது.

ஏன், இக்குடும்ப உறுப்பினர் களைத் தாண்டி வேறு பலர் அதி காரத்தில் அங்கம் வகிக்கவில்லையா, பதவிகளில் இல்லையா என சிலர் கேட்கலாம். நியாயம். எனில் அப்படி இருப்பவர்களும் இக்குடும்ப உறுப் பினர்களைச் சார்ந்தோ, அவர்கள் தயவை எதிர்பார்த்தோ, அல்லது குறிப் பிட்ட இடைவெளியில் தவறாது உரிய தொகைகளை மேலிடத்தில் கப்பம் கட்டியோதான் தங்கள் பதவியைக் காத்து வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, இவர்கள் நேரடியாக குடும்ப உறுப்பினர்களாக அல்லாவிடினும் குடும்ப அரசியல் இவர்கள் மூலமாக செயல் படுகிறது.

பொருளியல் ஆதிக்கம் : மேற் குறித்தவாறு அரசியல் ஆதிக்கம் ஒரு குடும்பத்தின் கையில் இருப்பதால், அக் குடும்பமே அரசின் பொருளியல் நட வடிக்கைகளைத் தீர்மானிக்கிறது.

காட்டாக, புதிய தொழில், வணிக நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிப்பது, அதற்கான உள்நாட்டு வெளி நாட்டு ஏகபோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடு வது, கல்வி, மருத்துவ நிலையங்கள், தரை, கடல், வான் வழிப் போக்கு வரத்து வசதிகளை விரிவாக்குதல், புதிய வசதிகளை ஏற்படுத்தித் தருதல், புதிய திட்டங்கள் தீட்டுதல், செயற் படுத்துதல் ஆகிய அனைத்திலுமே கோடிக் கணக்கான ரூபாய் புரள்கிறது. இதில் அந்தந்த துறைக்கான விகிதப்படி குடும்ப உறுப்பினர்களுக்கு பங்கு போகிறது. இதனால் குடும்ப உறுப் பினர்கள் அதிகாரத்தில் இருந்தாலும், இல்லா விட்டாலும் வருவாய்க்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இப்படி வரும் வருவாயில் அவர்களே தொழல் வணிக நிறுவனங்கள் தொடங்கவோ, அதன் அதிபர்களாகவோ மாறி ஒவ்வொரு வரும் தங்கள் வருவாய்க் கான பாதையைச் செவ்வனே பரா மரித்து வருகின்றனர். இதனால் ஆசியாவின் பெரிய தொழல் வணிகக் குடும்பங்களுள் ஒன்றாய் கருணா நிதியின் குடும்பமும் இருந்து வருகிறது.

இப்படி இருப்பதனால் தேர்தல் காலங்களில் பணத்தைத் தண்ணீராய்ச் செலவழிக்க முடிகிறது. டாஸ்மாக் சரக்கும் பிரியாணியுமாய்ச் சப்ளை செய்ய முடிகிறது. ஒரு வாக்குக்கு இவ் வளவு என்று எவ்வளவு கேட்டாலும் தர முடிகிறது.

ஒரு காலத்தில் போராடி அடி உதை பட்டு, சிறையேகி, படாத துன்ப மெல்லாம் பட்டாலும் கொள்கை பேசி கொள்கை உறுதியோடு வாழ்ந்த தொண்டர்கள், கொள்கைப் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்ட தலைவர்கள், என்றிருந்த சூழல் முற்றாக மாறி - சம்பாதிக்கிறானே கொடுக்கட்டுமே என்று காசு கொடுத்தால் தான் வேலை என்று தொண்டனும், எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தலைவர் களுமாய் காலம் மாறியிருக்கிறது. இவ்வாறு கருணாநிதி யின் குடும்பம் பொருளியல் ரீதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஊடகங்கள் : மக்களின் கருத்துரு வாக்கத்தில் ஊடகங்களின் பங்கு விழிப் புணர்வு மிக்க எவரும் அறியாததல்ல. ஒரு மனிதன் தன்னைச் சுற்றி நிலவும் அரசியல், சமூக, பொருளியல், பண்பாட்டியல் நிகழ்வு கள் எது பற்றியும் இவ்ஊடகங்கள் வாயிலாகவே கருத்துருவாக்கம் பெறு கிறான். அல்லது இவ்வூடகங்களே இக்கருத்துருவாக்கத்தைக் கட்டியமைக் கின்றன.

அந்த வகையில் தமிழகத்தின் கேள்வி, காட்சி சார்ந்த வலுமிக்க ஊட கங்களை கருணாநிதியின் குடும்பம் தன் கையில் வைத்துள்ளது. நாளேடு கள், வார ஏடுகள், மாத ஏடுகள், சின்னத்திரை, வெள்ளித் திரை ஊடகங்கள் அனைத்திலும் இக்குடும் பம் நேரடியாகவோ மறைமுகமா கவோ ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதன்வழி அரசின் நிலையை, சாதனைகளை, செயல்பாடுகளை, கேள்விக் கிடமின்றி இவை மக்களை ஏற்றுக் கொள்ள வைக்கின்றன. அவற்றை நியாயப்படுத்து கின்றன. நாட்டில், உலகில் நடைபெறும் நிகழ்வுகளில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை எவை, தெரிந்து கொள்ளக் கூடாதவை, தேவையற்றவை எவை என்பதை இவை தங்கள் ஆதிக்க நோக்கில் முடிவு செய்து அதை மட்டுமே மக்களுக்குச் சொல்லி மற்றவற்றை இருட்டடிப்பு செய் கின்றன. அல்லது தங்களது நலனுக்கு ஏற்ப அவற்றைத் திரிக்கின்றன. இல்லா விட்டால், இவை எது பற்றியுமே மனிதன் கவனம் செலுத்தவோ, சிந்திக்கவோ விடாமல் கேளிக்கை நிகழ்ச்சிகளில் மனிதனை மூழ்கடித்து, அவன் பிற எது பற்றியுமே அறிய விடாமல் தடுக்கின்றன.

தமிழகத்தின் நலன் சார்ந்த, உரிமை சார்ந்த பிரச்சினைகளில் அண்டை மாநிலங்களோடும், தில்லி ஆட்சி யதிகாரத்தோடும், தமிழகத் துக்கு உள்ள இடர்ப்பாடுகள், அண் மையில் நடைபெற்ற ஈழப் போராட் டங்கள் மற்றும் அங்குள்ள நிலை மைகளை, இலங்கை, இந்திய அரசின் நிலைபாடுகளை, இவை எவ்வாறு சித்தரித்தன, எவ்வாறு பலவற்றை இருட்டடிப்பு செய்தன என்பதை வைத்து இதை அறியலாம்.

இவ்வாறு மக்களின் கருத்துரு வாக்கத்தைத் தீர்மானிக்கும், கட் டமைக்கும் கேள்வி காட்சி ஊடகங் களையும் கருணாநிதியின் குடும்பம் தங்கள் கைகளில் வைத்துள்ளது. கூடவே இரண்டாம் மூன்றாம் தலை முறை வாரிசுகள் மசாலா திரைப்படத் தயாரிப்பிலும், நடிப்பிலும் இறங்கி திரை ஊடகத்திலும் தங்கள் ஆதிக் கத்தைச் செலுத்தி வருகின்றனர்.

ஆக தமிழ்நாட்டு அரசியல், பொருளியல், ஊடகங்கள் என ஒரு சமூகத்தின் மிக முக்கியமான மூன்று துறைகளிலும் கருணாநிதியின் குடும் பமே மாபெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது உடனடி நோக்கிலும் சரி, தொலை நோக்கிலும் சரி, மிகமிக ஆபத்தானது. தமிழக மக்களை சொரணையற்ற பிண்டங்களாக மாற்றுவது எனவே இந்தக் கோணத் திலேயே இதற்கான மாற்று அரசியல் குறித்தும் யோசிக்க வேண்டி யிருக்கிறது.

மாற்று அரசியல் : தமிழகத் தில் ஆளும் தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க. கூட்டணிக்கு அப்பால் தி.மு.க.வுக்கு இணையான வலுமிக்க கட்சியாக அ.தி.மு.க. வும், கணிசமான மக்கள் செல்வாக்குள்ள கட்சியாக ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இடதுசாரிகள் மற்றும் பல சிறு கட்சிகளும் இருந்து வருகின்றன.

எனினும், இவற்றுள் எதுவுமே தனித்து நின்றோ, அல்லது ஒன்றுபட்டு கூட்டணியாக நின்றோ தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு மாற்றாக ஒரு சனநாயக அரசியலை முன்னிறுத்த இயலாதவையாக இருக்கின்றன.

இதற்கு முக்கிய காரணம் ஒவ்வொரு கட்சியினதும் தன்னலம், தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற நெருக்கடி, யாருட னாவது கூட்டு வைத்து தங்கள் தங்கள் செல்வாக்கிற்கு, பலத்துக்கு ஏற்ப ஒரு சில சட்டமன்ற, நாடாளுமன்ற, அமைச்சர் பதவிகளைப் பெற வேண்டும் என்கிற முனைப்பு, ஆகியன தேர்தல் காலங்களில் இவை சந்தர்ப்ப வாதக் கூட்டணிக்கும் அணிச் சேர்க் கைக்கும் பலியாக வைக்கின்றன.

எதிர்க் கட்சிகளின் இந்த நெருக் கடி ஆளும் தி.மு.க.வுக்கு நன்கு தெரிந்தே இருப்பதால் எந்தெந்த நேரத்தில் எந்தெந்தக் கட்சியை எப்படி உடைக்கலாம், எப்படி பிளவுபடுத் தலாம், எந்தக் கூட்டணியில் விரிசலை ஏற்படுத் தலாம், யாரை உறவுக்கு இழுக்கலாம், யார் யாருக்கு எந்தெந்த வசிய மருந்து வைக்கலாம் எனத் திட்டமிட்டு காய் நகர்த்தியும், காசு கொடுத்தும் தம் காரியத்தைச் சாதித்து வருகின்றன.

இப்படி நெருக்கடியில் இருக்கும் இக் கட்சிகளுக்கு ஒரு நம்பகமான தலைமையாக அ.தி.மு.க, இல்லை. தி.மு.க.வுக்கு சவாலாய் ஒரு மாற்றாய் அமைய வலுவுள்ள ஒரு கட்சி, இருக்கிற பிற எதிர்க் கட்சிகளை அரவணைத்து, கூட்டணி அமைத்து, தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு ஒரு மாற்று அரசியலை நிறுவ வாய்ப்பும் பலமும் உள்ள ஒரு கட்சி, அதற்காக எந்த வகையிலும் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ளவில்லை.

அரசியல் களப்பணிகள், போராட்டங்கள் என்கிற முன் அனுபவம் எதுவுமின்றி எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக அ.தி.மு.க. தலைமைக்கு வந்து 1991இல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெய லலிதா மட்டும், ஒரு நல்லாட்சி தந்திருந்தால் தி.மு.க. மீண்டும் எந்த நாளிலும் தலையெடுக்க முடியாத படி தடுத்திருக்கலாம். ஆனால் கெடு வாய்ப்பு 1977இல் எம்.ஜி.ஆர். முதல்வர் பொறுப்பேற்றது முதல் 1987இல் எம்.ஜி.ஆர். மறைவு வரை பத்து ஆண்டுகளும் அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளும் ஆக பன்னி ரெண்டு ஆண்டுகள் ஆட்சி பதவி களுக்காக வெளியே வசப்பட்டிருந்த கருணாநிதி, 1989லேயே மீண்டும் முதல்வர் பொறுப்புக்கு வருகிறார் கருணாநிதி. ஆக 12 ஆண்டுகாலம் ஆட்சியதிகாரத்துக்கு வெளியே இருந்த கருணாநிதியை, மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வரும் கைங் கர்யத்தைச் செய்தார் ஜெயலலிதா.

தனக்கு என்று சொந்தமாய் குடும்பம், வாரிசுகள் இல்லா விட்டாலும் மன்னார் குடிக் குடும் பத்தைக் கூட வைத்துக் கொண்டு அது தமிழ்நாட்டையே கொள்ளையடிக் கவும், சூறையாடவும் அனுமதித்தும், ஆடம்பர படாடோப வாழக்கை மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார் ஜெயலலிதா. இது தவிர, அவருக்கே இயல்பாக உள்ள ஆணவம், அகங்காரம், யாரையும் மதிக்காத, அரவணைத்துச் செல்லாத தனிநபர் பலவீனங்கள் ஆகியவையும் அவ ருக்கும் கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தின. இவ்வளவுக்குப் பிறகும் தன்னை மாற்றிக் கொள்ளவோ, திருத்திக் கொள்ளவோ எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாது கொஞ் சம் கொஞ்சமாகக் கட்சியைக் கரைய விட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.

இந்நிலையில் தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு எதிராக ஒரு மாற்று அரசியலை அவரால் தர முடியுமா? அவர் தலைமையில் இது சாத்தியப்படுமா என்றால் அதற்கான எந்த நம்பிக்கையும் அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை. தவிர, தில்லியில் ஆளும் கட்சியின் கூட்டுக்கு தமிழக தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டுமே ஏங்குவதால் இவை தங்களுக்குள் உள்ள ஆதிக்க அதிகாரப் போட்டிக்கு எப்போதுமே தில்லி யோடு கூட்டு சேரத் தயாராகவே இருக்கின்றன. இந்நிலையில் வரும் காலத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி முறிந்தால் அந்த இடத்தை அ.தி.மு.க. போய் நிரப்பி காங் கிரசுக்குக் கை கொடுக்கும் நிலையே நீடிக்கிறது. அதாவது, இவ்வளவையும் கவனத்தில் கொண்டே நாம் மாற்று அரசியல் குறித்து சிந்திக்க வேண்டி யிருக்கிறது. அதாவது ஆளும் தி.மு.க.-வுக்கு மாற்று தரவோ, மாற்று அணிக்கு தலைமை ஏற்கவோ திராணியற்ற தகுதியற்ற நிலையிலி ருக்கும் அ.தி.மு.க.வை விடுத்தே மாற்று அணியை உருவாக்க வேண் டியிருக்கிறது.

எனவே, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளின் ஒன்றுபட்ட, உறுதிமிக்க கூட்டணியே தமிழகத்தில் தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு எதிரான ஒரு மாற்று அணியை உருவாக்க முடியும். மாற்று அரசியலையும் தரமுடியும்.

இப்படிப்பட்ட மாற்று அணிக்கு வாய்ப்புள்ள கட்சிகளாக ம.தி.மு.க., பா.ம.க,. இடதுசாரிகள், பிற உதிரி கட்சிகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றுள் வி.சி.க. மாற்று அணிக்குத் தகுதி படைத்த கட்சியானாலும் அது தற்போது தி.மு.க.வின் கைப்பாவையாக இயங்குவதால் மாற்று அணிக்கு அதன் வருகை சாத்தியமற்றதாகவே தென்படுகிறது. அதேபோல தே.மு.தி.க. வெளியே வாய் கிழிய பேசினாலும் உள்ளூர காங்கிரசுடன் கூட்டு சேர பேரம் நடந்து வருவதாக பேசப் படுகிறது. ஆகவே இவற்றை விடுத்தே மாற்று அணியை உருவாக்க இயலும் என்று தோன்றுகிறது.

ஆனால், இப்படிப்பட்ட தொரு கூட்டணியை மாற்று அணியை உரு வாக்குவது என்பது நாம் நினைப்பது போல் சாமானியப் பட்ட ஒரு நிகழ்வு அல்ல. அதில் பல சிக்கல்கள் இடர்பாடுகள் இருக்கின்றன. இந்தச் சிக்கல்களை யெல்லாம் தவிர்த்து தமிழகத்தில் இப்படிப்பட்ட ஒரு மாற்று அணி உருவாக வேண்டு மானால் அவை கட்டாயம் சில குறிப்பிட்ட நெறிமுறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும், இப்படிப்பட்ட நெறி முறைகளை இக் கட்சிகள் கடைப்பிடித்தால் தான் அவை மாற்று அணிக்கான தகுதியையும் பெற முடியும். இதற்கு,

1. இக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு குறைந்தபட்ச கொள்கைத் திட்டம் - வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி செயல்பட முன்வரவேண்டும்.

2. இப்படி உருவாகும் கூட் டமைப்பில் உள்ள கட்சிகள் எக் காரணத்தை முன்னிட்டும், குறிப்பாக தேர்தல் காலங்களில் அணி மாறக் கூடாது. தி.மு.க. - அ.தி.மு.க., காங் கிரஸ் - பா.ஜ.க. அணிகளில் சேரக்கூடாது.

3. எக்காரணம் கொண்டும் தில்லி ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து, அந்த வாய்ப்பில் அமைச்சர் பதவி களைப் பெற்றோ, பெறாமலோ அதில் அங்கம் வகிக்கக் கூடாது.

4. இக்கூட்டமைப்பு, தமிழக உரிமைகள், நலன்கள் காக்கவும், தமிழீழ மக்கள் உரிமைப் போருக்கு ஆதரவாக நிற்கவும், உறுதியோடு செயல்பட வேண்டும்.

5. இதற்கான பணிகள், வேலைத் திட்டங்கள், செயல் பாடுகளில் இக் கூட்டமைப்பு, ஒரு கூட்டுத் தலைமை யுடனும், கூட்டமைப்பில் உள்ள அனைத்து கட்சிகளின் கருத்தை மதிக்கும் சனநாயகத்துடனும் இயங்கப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவற்றை ஏதோ தமிழ்த் தேசியப் புரட்சிக்கான செயல் திட்டங்கள், ஆலோசனைகள் போல் பார்க்க வேண்டிய தில்லை. மாறாக இவை யனைத்தும் தேர்தல் அரசியலுக்குள் நின்றே செய்யத்தக்க காரியங்கள்.

தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு ஒரு மாற்று அணியை உருவாக்கும் முன் நிறுத்தும் நோக்கில் சொல்லப்படுபவை.

இப்படி ஏதாவது ஒரு அணி உருவானால்தான், கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு ஒரு மாற்றை உருவாக்க முடியுமே அல்லாது, இந்த நிலை இப்படியே நீடித்தால் தமிழகத் தில் ஒரு குடும்பமே அரசியல், பொருளி யல், ஊடகவியல் ஆதிக்கத்தில் மேலோங்கி அதுவே தமிழகத்தை முற்றாக கபளீகரம் செய்து விடும். இதுவே தமிழகத்தின் எதிர் காலத் துக்கும் தமிழ்த் தேசிய இனத்துக்கும் பேராபத்தாகவும் முடியும். தமிழ்த் தலைவர்கள் இது குறித்து சிந்திப்பார்களா...? 

ஆதிக்கப் போட்டியும் அப்பாவி மக்களும்

பிரித்தானிய ஆட்சியின்போது 13 பேர் அடங்கிய ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் அந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அரசு பதவிகளில் இருந்திருக்கிறார்கள். இதுபோல் எத்துறையானாலும் எப்பதவி ஆனாலும் அதில் பார்ப்பனர்கள் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது.

இந்த ஆதிக்கத்தைத் தகர்க்கவேண்டும் என்றுதான் திராவிட இயக்கக் கட்சிகள் மக்களைத் திரட்டிப் போராடி அதிகாரத்துக்கு வந்தன. வந்து விளைவு என்ன? பார்ப்பனர்கள் இருந்த இடத்தில் தாங்கள் இருந்து ஆதிக்கம் செய்யவேண்டும். தன் ஒரே குடும்பத்தில் மூன்று அமைச்சர்கள் இருக்கவேண்டும் என்பதுதான் இவர்கள் நோக்கமாக இருந்ததே - இருக்கிறதேயழிய, அந்த ஆதிக்கத்தை எதிர்த்த சமத்துவத்தை, சனநாயகத்தை நிறுவுவதாக இல்லை.

அதேபோல இவர்களையடுத்து வந்த தலித் இயக்கங்களும். உ.பி.யில் உயர்சாதி ஆதிக்கத்தை எதிர்த்து மாயாவதி ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சிக்கு வந்து செய்தது என்ன? உயர் சாதிகள் இருந்த இடத்தில் தான் இருக்கவேண்டும் என்கிறார். அதை விட்டு தலித் மக்களுக்கு ஏதும் செய்தாரா? 

அவ்வாறே இடதுசாரி இயக்கங்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு என்றார்கள். இவர்களும் அதிகாரத்துக்குப் போனார்கள். இவர்கள் ஏகாதி பத்திய வாதிகளாக, முதலாளிகளாக ஆகவில்லையே தவிர, அக்கருத்தாக்கத்திற்கு பலியானார்கள். அதற்கு சேவை செய்தார்கள், செய்து வருகிறார்கள்.

ஆக, இவர்கள் போட்டியெல்லாம் ஆதிக்கத்திற்கான போட்டியே, அதாவது பிறர் ஆதிக்கம் செய்யும் இடத்தில் தாங்கள் அமர்ந்து ஆதிக்கம் செய்யவேண்டும் என்பதே அல்லாது சமத்துவத்திற்கும், சனநாயகத்திற்குமான போட்டி கிடையாது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாற்றுப் பாதை, மாற்று அணி குறித்து சிந்திக்க வேண்டும்.

- சாங்கியன்