இ.க.க (மா)வின் மத்தியக் குழு உறுப்பினராகவும் வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினராகவும் பணியாற்றி இந்த ஆண்டு பிப்ரவரியில் மறைந்த உ.ரா. வரதராசன் மறைவு ஏறக்குறைய மறக்கப்பட்ட ஒரு நிகழ்வாகவே ஆகிவிட்டது. இது பற்றி சில கருத்தோட்டங்களை பதிவு செய்ய வேண்டும் என்று சம்பவம்  நடந்த கையோடு நினைத்திருக்கிறது. ஆனால் சம்பம் நடந்து முடிந்த பிறகு இப்போதுதான் இதழ் வருகிறது என்பதால் இந்த நீண்ட இடை வெளி ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பது போல ஆக்கிவிட்டது. என்றாலும் தார்மீக ரீதியில் அவரது மரணம் குறித்த விடை காணமுடியாத  பல கேள்விகள். பல மர்மங்கள் உணர்வுள்ள தோழர்கள்,  மாந்த நேய ஆர்வலர்கள் மத்தியில் இன்னும் உயிர்ப்போடே நிலவி வருகின்றன எனவே அது பற்றி மட்டும் சில பதிவுகள்.

1.ஒரு போராட்ட அமைப்பின் தலைமைக் குழுத் தோழர்களில் ஒருவராயிருந்தவரும் மக்கள் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவருமான உ.ர.வ இப்படி கேவலமாக தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வருவரா?

2. அப்படியே வாழ்க்கையே வெறுத்து அந்த முடிவுக்கு வருவதனாலும், எளிமையாக உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனயோ வழிகள் இருக்க, இப்படிப் பொது இடத்தில் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு காட்சிப் பொருளாக முயல்வாரா?

3. கடலில் நீந்துமளவுக்கு சிறந்த நீச்சல் பயிற்சி மிக்க ஒருவர், நீரில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முடியுமா. முடியும் என்றால் எப்படி?

4.தற்கொலை செய்து கொண்டதாகக் கருதப்படும் அவர் கழுத்தில் ரத்த காயங்களும் கழுத்து எலும்புகளில் முறிவும் வந்தது எப்படி?

5. எப்போதுமே சட்டை இல்லாமல் வெளியே கிளம்பாதவர் எனப்படும் அவர் போரூர் ஏரியில் பனியனுடன் இருந்தது எப்படி, சட்டை எங்கே போனது. கழட்டி வைத்திருந்தால் அந்த சட்டை என்ன ஆனது,சட்டைப் பையில் என்ன இருந்தது.அந்த சட்டையை யாரும் தேடவோ அதைப்பற்றி அக்கறைப் பட்டுக் கொள்ளவோ முயலாதது ஏன்?

6. தன்னுடைய உடலை மருத்துவ ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும்படி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர்,  அந்த ஆய்வுக்குப் பயனதராத அளவுக்கு உடல் கெட்டுப் போக நீரில் முழ்கி இறக்கும் முடிவை எடுப்பாரா?

7. நன்கு நீச்சல் தெரிந்த உ.ரா.வுக்கு நீச்சல் தெரியாது என சிலர், அந்த சிலர் யாரோ  அல்ல, அவரோடு நெருங்கிய உறவில்  இருந்தவர்களே சொல்லக் காரணம் என்ன?  எதை மறைக்க அவர்கள் இப்படி பொய் சொன்னார்கள்?இதைக் காவல் துறையும் கண்டு கொள்ளாது விட்டது ஏன்?

8. அவர் எழுதியதாகச் சொல்லும் கடிதத்தை அவரது இல்லத்தார் 12 ஆம் தேதியே கட்சி அலுவலகத்தில் தந்தும் அது காவல் துறையின் கைக்குப் போக இரண்டு நாள் தாமதமானது ஏன்? இந்தத் தாமதத்தை காவல் துறையும் கேள்விக் குள்ளாக்காதது ஏன்?

9. 12 ஆம் தேதி இறந்தவரை 21 ஆம் தேதியன்றுதான் அதாவது எட்டு நாள் கழித்து 9ஆம் நாள்தான் காவல் துறை கண்டு பிடித்தது என்றால் இத்தனை நாள்களாக அவரது சடலம் போரூர் ஏரியில் தான் அழுகிக் கொண்டிருந்தா?அல்லது உடலைக் கண்டு பிடித்தும் அது யார் என்று தெரியாதிருந்ததா?

கட்சியின் தமிழ் மாநிலக் குழுச் செயலாளர் பதவிக்கு அவர் பெயர் பலமாக அடிப்பட்ட தருணத்தில் அவர் மறைந்திருப்பதாக தோழர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறதே அது மெய்தானா?

இவையும் இது போன்று இன்னும் பலதுமான, பல பலத்த விடைகாண முடியாத கேள்விகளை எழுப்புகிறது தோழர் உ.ரா.வின் மரணம். ஆனாலும் அவருடைய மரணம் குறித்த மர்மங்களை அறிய இல்லத்தாரும் அக்கறைப்படவில்லை. கட்சியும் கவலைப்பட வில்லை, காவல் துறையும் எதையும் கண்டு கொள்ளவில்லை எப்படியோ பிரச்சனை இல்லாமல் கோப்பை முடித்தால் போதும் என நடந்து கொண்டது என்பது தான் இதில் மிகப் பெரும் சோகம். பல சந்தேகங்களுக்குமான அடித்தளமும் இதுவே.

வாழ்வின் வசதிகளையும் சுகங்களையும்,  துறந்து, கொண்ட கொள்கைக்காவும் இலட்சியத்திற் காகவும் உழைத்து மறைந்த மகத்தான ஒரு தோழரின் உயிர், அற்பத்திலும் மிக அற்பமாக, இப்படி எவராலும் கேள்விக்குட்படுத்தப்படாத அனாதையாக மலிவாக ஆனது ஆக்கப்பட்டது  ஏன்? இதன் காரணம் யார் ? இதன் பின்னணி என்ன?

அமைப்பு என்னும் கொடிய யந்திரம் தன் கூரிய பற்சக்கரங்களால் இப்படி எத்தனையோ தனி மனிதர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப் புகளையும் அரைத்து மென்று விழுங்கித்தான் தன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தன்னல வாத சக்திகளும்  அது தனி மனிதர்களோ அல்லது குடும்பமோ இது போன்ற நடவடிக்கைகளுக்குத்  துணை போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட ஒரு போக்கின் எடுத்து காட்டுதான் தோழர் உ.ர.வ வின் மரணம்.

இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இதே இ.க.க மா வில் ராதாகிருஷ்ணன் என்று ஒரு தோழர். செங்கல்பட்டு மருத்துவ மனை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்தத் தோழரின் மரணம் பற்றியோ அதன் பின்னணியிலான மர்மம் பற்றியோ யாருமே கவலைப்பட்டுக் கொள்ளவில்லை. கட்சியும் கண்டுகொள்ளவில்லை.விடை யறியாமலேயே புதையுண்டு போன அந்த மர்மம்  காலத்தால் மறக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டு  விட்டது.

சாதாரண மனிதர்களுக்கு நேரும் அவலங்களுக்கு சமூகமாவது குரல் கொடுக்கும். ஆனால் கட்சி சார்ந்தவர்களுக்கு நேரும் அவலங்களுக்கு கட்சியே குரல் கொடுக்காதபோது அந்தக் கட்சியை மீறி யார் குரல் கொடுத்து விடப் போகிறார்கள். அப்படிப்பட்டதொரு அவல மரணத்திற்கு ஆளானவர்தான் செங்கல்பட்டு ராதாகிருஷ்ணன். அந்த வரிசையில் தற்போது மரணமாகியிருப்பவர்தான் தோழர் உ.ர.வ வும்.
Pin It