வழக்கமாக ஜூன் 12-ந் தேதி தஞ்சை காவிரிப் பாசனப் பகுதி விவசாயத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படவேண்டும். ஆனால் இவ் வாண்டு அணையில் தண்ணீர் இல்லை. எனவே, திறக்க முடியாது என தமிழக அரசு அறிவித்துவிட்டது. இதனால் இப் பகுதியில் 50 முதல் 60 ஆயிரம் எக்டேர் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் கர்நாடக, கேரள நீர் பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழைத் தீவிரமடையும். மழை யால் காவிரி மற்றும் துணையாறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும். இந்த நீரை கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேராங்கி என நான்கு பெரிய அணைகளைக் கட்டித் தடுத்து வைத் துள்ளது கர்நாடக அரசு. இதனால் இந்த அணை கள் நிரம்பி வழியும் போது அதன் உபரி நீரை மட்டுமே கர்நாடகம் திறந்து விடும். அதன் பின்பே மேட்டூர் அணைக்கு நீர் வரும். அதாவது காவிரியில் நமக்கு உள்ள உரிமைப் படி கர்நாடகம் நீரைத் திறந்து விடாமல் அணை கள் நிரம்பி வழிந்தால் மட்டுமே தண்ணீர் என்ற நிலையை ஏற்படுத்தி வைத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பியிருக்கும் பல மாவட்டங்களில் விவசாயம் கடந்த பல ஆண்டு காலமாக பாதிக்கப்பட்டு வந்துள்ளது.

கர்நாடகம் 1968இல் இருந்தே தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட மறுத்து வருகிறது. இது தொடர்பாக, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை களிலும் பலன் கிட்டாது கர்நாடகம் தொடர்ந்து சண்டித்தனம் செய்யவே, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க, அதன் ஆணைப்படி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அது 1991 ஜூன் 25இல் தன் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. இந்த இடைக்காலத் தீர்ப்பின் படி தமிழகத்துக்கு மாதவாரியாகக் கணக்கிட்டு ஆண்டுதோறும் 205 ஆ.மி.க. அடி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும். ஆனால் கர்நாடகம் அதைத் திறந்து விடாததோடு, தில்லி அரசும் அதைப் பெற்றுத்தர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதும் இதன் பின் 15 ஆண்டுகள் கழித்து 05-02-07 அன்றுவெளிவந்த இறுதித் தீர்ப்பும் தமிழகத்திற்கு நயவஞ்சகம் செய்து விட்டது என்பதும் பலரும் அறிந்த ஒன்று.

எனில் இந்த இறுதி தீர்ப்பையும் செயல்படுத்தாமல், தீர்ப்பைக் காலில் போட்டு மிதித்து, இனி தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரும் தரமுடியாது என ஆணவத்தோடு கொக்கரிக்கிறது கர்நாடகம். விளைவாக, காவிரி வறண்டு முப்போக சாகுபடி என்பது ஒருபோக சாகுபடியாக மாறி, அதுவும் நிச்சயமற்ற நிலையில், வானம் பார்த்த பூமியாக மாற, உழவர்கள் மாற்றுப் பயிர் குறித்து சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். தவிர, நாகை, திருவாரூர் மாவட் டங்களில் 25 விழுக்காட்டிற்கு மேற் பட்ட நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இத்துடன் உழவர்கள் வேறு பிழைப்பைத் தேடி இடம் பெயரும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

சற்று வசதி வாய்ப்புள்ள விவ சாயிகள் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் பாசன வசதி செய்து கொண்டு பயிரிட முயன்றாலும் அவர்களுக்கும் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்குகிறது தமிழக அரசு.இதனால் முறையாக நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் பல இடங்களில் காய்ந்துக் கிடக்கிறது.இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையால் காவிரி பாசனப் பகுதி விவசாயமே பாழ்ப்பட்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அரிசி விலை ஏறிக்கொண்டே போகிறது. இரு ஆண்டுகளுக்கு முன்பு கிலோ 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி இன்றைக்கு கிலோ 48 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தின் காரணமாக உணவுப் பண்டங்களின் விலைகளும் ஏறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இப்படிதமிழகத்தின் காவிரி யுரிமை மறுக்கப் படுவதால் தமிழக விவ சாயம் மிகவும் பாதிக்கப் படுவதோடு சென்னைக் குடிநீரும் தட்டுப்பாட் டுக்குள்ளாகியுள்ளது.கடலூர் மாவட் டம், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் அருகில் உள்ள வீராணம் ஏரியை நம்பி ஒரு இலட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. மொத்த கொள் ளளவு 1475 மில்லியன் கன அடி, கொண்ட இந்த ஏரியின் நீரில் சென் னைக்கு சராசரியாக 77 கன அடி அனுப்பப்பட்டது. தற்போது ஏரியில் நீர்மட்டம் குறைய 64, 48, 38 கன அடி என படிப்படியாக குறைத்து அனுப்பப் பட்டு வந்தது. தண்ணீர் முற்றிலும் குறைந்து வறண்டுப் போனதால் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப் பட்டது. தற்போது வீராணம் ஏரி இளைஞர்கள் விளையாட்டுத் திடலாக மாறி யுள்ளது. வறண்ட ஏரியில் மக்கள் கிளிஞ்சல், நத்தைகளைத் தேடி சேகரித்து குவித்து வருகிறார்கள்.

அடுத்து தமிழகத்திலே உள்ள வறண்ட மாவட்டமான இராமநாதபுரத்திற்கு குடிநீர் வழங்கும் 616 கோடி ரூபாய் மதிப்பிலான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கடந்த ஜூன் 11-ந் தேதி முதல் செயல்படுத்தத் தொடங்கினர். சுமார் 16 இலட்சம் மக்கள் பயன் பெறும் இத்திட்டத்திற்கு திருச்சி அருகே காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப் பட்டு 193 கி.மீ. தூரத்திற்கு குழாய் மூலம் இராமேஸ்வரம் வரை கொண்டு செல்லப்படுகிறது.எனவே, இத் திட்டத்தின் வழியோரப் பகுதிகளான புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த குடி யிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த இருக் கிறார்கள்.

இத்திட்டம் முழுமையாகப் பயன் தர வேண்டுமெனில், காவிரியில் நமக்கு உள்ள உரிமைப்படி நீரைப் பெற முயல வேண்டும். இல்லையேல் இதுவும் காவிரியைப் போல் வறண்ட சோக மாகவே மாறிப்போகும். இப்படி விவசாயம், குடிநீர் என தமிழகத்தின் உயிர் நாடியான காவிரி பிரச்சினையைப் பற்றி உரிய அக்கறை மேற்கொள்ளாமல் ஆளும் தி.மு.க. அரசு மழை இல்லை, அணையில் தண்ணீர் இல்லை என எடியூரப்பாவின் குரலாக ஒலித்துக் கொண்டுள்ளது.

ஆளும் கட்சிதான் இப்படி இருக்கிறது என்றால், எதிர் கட்சிகளும் மௌனமாக இருக்கின்றன. இது ஆளும் கட்சியின் மெத்தனப் போக் கிற்கு அங்கீகாரம் வழங்குவது போல் உள்ளது. எனவே, தமிழகக் கட்சிகள் இப்படி அசட்டையாக இல்லாமல் இவை அனைத்தும் ஒன்று திரண்டு இந்த ஆண்டிற்குள் எப்படியாவது காவிரியை மீட்டு விட வேண்டும் என்ற முனைப்புடன் தமிழ் தேசிய சக்திகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி தொடர் போராட் டங்களை நடத்த வேண்டும். இதில் ஏற்கெனவே நடத்தி அலுத்துப் போன போராட்ட வடிவங் களைக் கைவிட்டு புதிய வடிவங்களை, தில்லி, கர்நாடக அரசுகளுக்கு நிர்ப் பந்தம் கொடுக்கும் வடிவங்களைக் கைக்கொள்ள வேண்டும்.

இப்படி விடாப்பிடியாக நம் கோரிக்கையை வலுப்படுத்தும் போது, அது அதற்குரிய பலனை நிச்சயம் கொடுக்கும். ஆனால், இங்கே உள்ள உண்மையான நிலைமை என்ன? தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக ஒன்று திரள மாட்டார்கள், தமிழகத் தலைவர்களும் மக்களைத் திரட்ட மாட்டார்கள் என்ற எண்ணம் அண்டை மாநிலங்களும் தில்லியும் தமிழர்களை இளப்பமாக நோக்க வைக்கிறது. ஆந்திரா பாலாற்றின் குறுக்கே அணை யைக் கட்டத் தொடங்கி இருக்கிறது. கேரளா முல்லை பெரியாறு அருகில் ஒரு அணையைக் கட்ட நிலங்களை சர்வே செய்யத் தொடங்கி இருக்கிறது. ஏற்கெனவே காவிரியை இழந் துள்ள தமிழகம் அடுத்து முல்லைப் பெரியாறு பாலாற்று உரிமையையும் இழக்கப் போகிறதா என்பதுதான் தற்போது பெரும் கவலையாக இருக் கிறது. தமிழகத் தலைவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். இதற்கு உரிய முக்கியத்துவம் தந்து போராட முன் வர வேண்டும். 

உற்பத்தி பாதிப்பு

காவிரி நீரை நம்பி சாகுபடி செய்யப்படும் நிலம் ஹெக்டேரில் சராசரியாக சேலம் மாவட்டம் - 1350 , நாமக்கல் - 200, ஈரோடு - 2000 , கரூர் - 750, திருச்சி - 7000 , பெரம்பலூர் - 800, தஞ்சை - 43,000 , திருவாரூர் - 36,000 , நாகை - 35,000 , புதுக்கோட்டை - 500, கடலூர் - 7500 , காரைக்கால் - 1000, என உள்ள 1.35 லட்சம் ஹெக்டேர் நிலத்தில், கிணற்றுப் பாசனத்தை நம்பி வெறும் 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மட்டும் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளதாக வேளாண் துறையினர் கூறுகின்றனர். காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு நீர் இல்லாததால் தரிசாகக் கிடக்கும் 2.80 லட்சம் ஏக்கர் நிலங்களில் 8.40 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கும் எனவும் இதன்மூலம் 840 கோடி ரூபாய் மதிப்பிலான நெல் உற்பத்தியை இழக்கும் நிலை ஏற்படும் எனவும்கூறப்படுகிறது. 

Pin It