பாய்ந்தோடி வரும் காவேரி கல்லணையில் முகாமிட்டு பல கிளைநதிகளாக பிரிந்து செல் லும். அதில் ஒன்றுதான் 1928ல் ஆங்கிலேயர் களால் வெட்டப்பட்ட புது ஆறு”. வருடங்கள் பலவாகியும் இன்னும் இது புது ஆறுதான்.

இது பல சிற்றாறுகளாக பிரிந்து சென்று கடைசியில் ஒரு சிறிய வாய்க்காலாகத்தான் சமுத்திரத்தில் கலக்கும். இதன் முதல் சிற்றாறு கல்யாண ஓடை. இந்த ஓடையின் வளம் பொருந்திய ஒரு சிறிய கிராமம். பச்சைபசேல் என்று நாற்புறமும் வயற்காடு மத்தியில்தான் இந்த கிராமம். இங்கு வாழும் மனிதர்களில் நிலமற்றவர்கள், தம்மை ஆதி திராவிடர் என்று பெருமை பேசும் தலித்துகள்தான். உடல் உழைப்பை மட்டுமே நம்பியுள்ள கூலிமக்கள்.

பருவகாலங்களில் கழனிகள் நீரால் சூழப்பட்டி ருக்கும். இரவுநேரங்களில் தவளைகளின் ஒலிகளும் மற்ற உயிரினங்களின் ஓசைகளும் இவர்களை தாலாட்டைப் போன்றே உறங்க வைக்கும். இவர்கள் வாழும் பகுதியின் கீழ் புறமோ மேல்புறமோ கத்தாழங்கூடுகளும், நண்டு ஓடுகளும் நிறைந்து காணப்படும்.

இங்குள்ள கள்ளர் சமூகத்தின் வயற்காடுக ளில் வேலை பார்க்கும் இவர்களுக்கு கூலி காலை, மதியம், கஞ்சியும், இரவில் அவர்கள் தரும் குருணையோ அரிசியோதான், இதற் காக மட்டுமே இவர்கள் நாள்முழுதும் உழைக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி.

"ஏய்யா இந்த மாசக்கடேசிலே எங்கண்ணன் மவனுக்கு கண்ணாலம். நமக்கு பணமும் பாக் கும் வெச்சி சொல்லிட்டுப் போயிட்டாங்க. நீ பாட்டுக்கு பேசாம இருக்கீயே, இன்னும் பத்து நா தான் கிடக்கு. என்னய்யா பண்றது?' கண வரிடம் கேட்டாள் சிகப்பாயி. "யாம் புள்ள என்னமோ உனக்குத்தான் கவலே, எனக்கு இல்லேங்கிறத போலே பேசுறே. பொழுது விடிஞ்சி பொழுதுபோனா அய்யா வூட்டு வேல தான் சரியா இருக்கு. நாம பாக்கிற வேல வயித்தக் கழுவத்தான் சரியாயிருக்கு, ஏதாவது ஒரு நாளஞ்சுநா வுட்டுப் புடிச்சா நாலு பா’, “தடுக்குசெஞ்சி வித்தா ஏதோ நாலு காசு கிடைக்கும். (பா, தடுக்கு, பாய் நெய்தல்) அதே வெச்சி பொண்ணுக்கும் மாப்பிள்ளேக்கும் ஆளுக்கு அஞ்சுரூவா வெச்சி மாலையாவுது எடுத்துப் போடலாமுன்னா, அதுக்கும் வழி இல்லாம இருக்கு. பாப்போம் மரம் வெச்சவன் தண்ணி ஊத்தாமயா போய்டுவான்' என்று மனைவியிடம் ஆறுதல் கூறினார் குப்பன். 

மறுநாள் காலை வழக்கம்போல் தெருவில் உள்ள ஆண் பெண் அனைவரும் வேலை பார்க்குமிடம் சென்றார்கள்."யோவ், வெத்திலே சருவு ஒன்னுமில்லே' என்று சிகப்பாயி வெத் திலை முடிச்சியை அவிழ்த்துக்காட்டினார். சரி புள்ளே, நீ போ, நாங் போயி வாங்கியாரேன் என்று கூறி அங்கிருந்த பெட்டிக்கடை நோக்கி நடந்தார் குப்பன். அங்கு இவரோட தெரு ஆட் கள் ஏழெட்டுப்பேர் சாமான்கள் வாங்கியும் போகாமல் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த குப்பன் தனக்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டு என்ன பேசிக்கிட்டிருக்கிறார்கள் என நோட்டமிட்டவாறே அருகில் சென்றார். "ஏலே, வாடா குப்பா, இவரு நம்மோட உறவுக்காரரு தான். புது ஆத்துக்கு மேலாண்டேதான் இவரு ஊர்' என்று சொல்ல, குப்பன் "இவரத்தான் நல்லாத் தெரியுமே, என்னவாம்?' என்று கேட்டார். வந்தவர் " ஒண்ணுமில்லே மாமா, நம்மூர் தோப்புல மரங்கள வெட்டணும்னு எங்கய்யா சொல்லிவுட்டாரு. மூணுவேளை சோறும் ஒன்னார ரூவா கூலியும் தரேன்னாரு, அதாங் இங்கே ஆளு கிடைக்குமான்னு கேட்டுப்போவலாமுன்னு வந்தேன் என்றார்.

ஒன்னரை ரூவா கூலி என்றதும் அதிர்ந்து போய் ஒன்னரை ரூவா சம்பாதிக்க எத்தனை நாள் உழைக்க வேண்டும் என்று கணக்குப் போட ஆரம்பித்தனர். ஒருநாள் வேலைக்குப் போனா அரிசி, உப்பு, முளவா அரைரூவா போனாலும் ஒருரூவா மிச்சம். பத்துநாள் பாத்தா பத்து ரூவா மிச்சம் என்ற எண்ணம் மின்னலாய் பாய்ந்தது. பத்துரூவாயை இவர் கள் வாழ்க்கையில் ஒருசேரப் பார்த்ததே யில்லை. ஒரு முடிவுக்கு வந்தாற்போல் வேலைக்கு எப்போ வரனும் என்றார்கள். நாளைக்கு வெள்ளனா (சீக்கரமா) வந்தா வெயிலுக்கு முன்னே வேலைய ஆரம்பிச்சிட லாம் என்றார் வந்தவர். எல்லோரும் ஒத்துக் கொண்டதும் அரைரூவாய் கொடுத்து "எல்லாரும் வெத்தில செருவு வாங்குங்கோ' என்று சொல்லி புறப்பட்டார். அவர் போன பிறகு இவர்கள் "யாருக்கும் தெரியாம வெள்ளி முளச்ச உடனே போய்டுவோம், அப்போ தான் நம்மூர் கள்ளனுவோளுக்கு நாமோ எங்னே போறோமுன்னு தெரியாது என்று முடிவுசெய்து அவரவர் குடிகள்ளர்களின் வேலையை செய்து முடித்தார்கள்.

மறுநாள் காலை வெள்ளி முளைப்பதை எதிர் பார்த்திருந்த இவர்களில் யார் முதலில் கண் விழித்தாலும் அனைவரையும் எழுப்பி விடு வது என்ற முடிவோடு உறங்கச் சென்றார்கள். பெண்டு பிள்ளைகளிடம் மட்டும் போகுமி டத்தை சொல்லிவிட்டு "குடி கள்ளர் யார் கேட்டா லும் போன இடம் சொல்லாமல் ஏதாகிலும் சாக்குப்போக்கு சொல்லிவிடுங்கள்' என்று கூறி ஒருசேர எழுந்து சந்தடியில்லாமல் தெருவை விட்டுச் சென்றார்கள்.

இவர்களை எதிர்பார்த்திருந்த உறவுக்காரர் ஆற்றின் மரப்பாலத்தை கடந்து வந்து காட்டி னுள் அழைத்து சென்றார். அனைவருக்கும் கோடாலி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் கொடுத்துவிட்டு, "நாங் போயி காலே கஞ்சி வாங்கியாரேன்' என்று கூறி வேலியின் எல்லையையும் காண்பித்து சென்றார். 

மேல்சாதியினர் இவர்கள் ஏன் வரவில்லை என்று வேலைக்குச் சென்ற பெண்களிடம் விசாரித்தனர். அவர்களும் தம் வீட்டுக்காரர் கூறியதுபோல பொய்களைச் சொல்லியே மறைத்துவிட்டார்கள்.மற்றவேலைகளை வலையர் என்ற முத்தரையரை வைத்தே செய்தனர். முத்தரையர் குடும்பங்கள் சொற்ப மானவைதான். இவர்களும் துண்டு துக்காணி நிலம் வைத்திருப்பதால் மேல்சாதியாரை அண்டிப்பிழைக்கும் நிலையில்லை. ஆனா லும் மேல்சாதியார்க்கு பணிந்தே நடக்கும் இவர்களுக்கும் தலித்துகள் கட்டுப்பட்டே வாழ வேண்டும். இவர்களின் வீட்டில் நடக்கும் எல்லா வைபவங்களுக்கும் வீட்டுவேலை களுக்கும் தலித்துகளைத்தான் பயன்படுத்து வார்கள். மறுத்தால் இவர்களும் கட்டிவைத்து அடிப்பார்கள். எனவே தலித்துகள் இவர்கள் கண்ணிலும் படாமல்தான் செல்ல வேண்டும்.

அன்று மாலை வேலை முடிந்து ஒன்னரை ரூவா கூலியை பெற்றதும் இவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. காசை பத்திரமா வேட்டி முனையில் முடிச்சிப் போட்டு வைத்துக்கொண்டார்கள். அலுப்பின் காரணத் தால் உடலை சற்று தரையில் கிடத்தினால் போதும் என்ற நிலை இருந்ததால், இங்கேயே தங்கிவிட்டு நாளைய வேலையையும் செஞ்சி கூலியை வாங்கிக் கொண்டு மறுநாள் ஊருக்குப் போகலாம் என முடிவு செய்தனர். இரவுச்சாப்பாடு முடித்தவுடன் அயர்ந்து தூங்கி னார்கள். மறுநாள் காலை எழுந்து வெத்திலை செருவை வாங்கிக் கொண்டு மரம் வெட்டும் வேலையில் ஈடுபட்டார்கள்.

ஊரின் தலித் பெண்கள் ஏர் ஓட்டுவதைத் தவிர நாத்து பறிப்பது, நாத்துக்கட்டு சுமப்பது வரை ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளை யும் செய்தனர். குடிகள்ளர் "யாண்டி ஓம் புருசன ஊர்ப்பயணம் போவச் சொல்லிட்டு நீ மாத்திரம் வார்ரீயே ஏர்மாட்டை யாரு ஓட்டியா ரது? யாரு ஏர் ஓட்டறது? நாளைக்கி அவென் இல்லாமே நீ வரக்கூடாது' என்றார். "என் னாங்க சாமி பண்றது, ஊருக்கு போனவோ சேதி சாமிக்குத்தான் தெரியும் என்பாங்க, போன இடத்திலே என்னாச்சோ? ஏதாச்சோ? ஒரு சேதியும் தெரியல. எப்படியும் நாளைக்கு வந்துருமுங்கோ' என்று கூறினார் சிகப்பாயி.

அன்று வேலைகளையெல்லாம் முடித்து விட்டு கூலியை வாங்கியவர்கள், சரி பொடி நடையா ஊருக்குப் போயிட்டு நாளைக்கு வெள்ளனே வந்துடுவோம் என்று தோப்புக் காரரிடம் கூறினார்கள். தோப்புக்காரர் "யப்பா ஒங்களே நம்பிதான் தோப்பே வெட்டுறேன். வராம இருந்திடாதீங்கடா. இல்லன்னா நேத்து மாரி இங்கேயே இருங்களேடா. ஒங்களுக்கு என்ன குறேச்சல் ஒரேதா எல்லா வேலையும் செஞ்சிட்டுப் போங்கடா என்றார். குப்பன், "அய்யா எங்களுக்கு எந்தக் குறயும் இல்லிங்க, நாங்க புள்ள குட்டியள வூட்டுட்டு வந்து ரெண்டுநா ஆச்சி. போயி பாத்துட்டு பள பளன்னு விடிய வந்துடுவோம்' என்றார். "சரி அப்புறம் ஒங்கப் பிரியம் போயிட்டு வாங்கடா' என்று தோப்புக்காரர் கூறினார்.

மாலைப்பொழுதை இரவு சூழ்ந்துகொண்டது. மரப்பாலத்தை ஒருவர்பின் ஒருவராக கடந்து மறுகரையை அடைந்தார்கள். ஒற்றையடிப் பாதைதான். முன் சென்றவர் மெல்லியக்குர லில் அவர்கள் நடத்திய நாடகப்பாடலை பாடிக் கொண்டே சென்றார். இப்படிப் பாடுவது பாதையில் கிடக்கும் விஷ ஜந்துக்கள் ஓடிவிடும் என்ற நம்பிக்கைதான். ஊர் நெருங்கியதும் குப்பன் "நாமோ இப்படியே கூட்டமா போனோ முன்னா யாராவது பார்த்தா எங்கடா போயிட்டு வாறீங்கன்னு கேப்பாக. ஒவ்வொரு ஆளா வயக்காட்டு வரப்புலே போய்டுவோம் என்றார். இதுவும் நல்ல ஓசனைதான் என்று ஒவ்வொ ருவராக வீட்டை அடைந்தார்கள். இவர்களைக் கண்டதும் அவரவர் வீட்டிலுள்ளவர்கள் மேல் சாதியர் பேசிய பேச்சுகளையும் தங்களையும் வேலைக்கு வராதே என்றதையும் கூறினர். சிகப்பாயி "நம்ம குடிகள்ளங்கூட ஒன்னும் சொல்லல, இந்த அம்பலாரூட்டு ஆளு ரொம்பதான் தாண்டி தப்புன்னு உலுவுறான். நாளேக்கி வரேலேன்னா அவன எங்குனே கண்டாலும் தோலே உரிச்சிப்புடுறேன் பாருங் குறான்.' (அம்பலாரு- வலையர்) என்று கூறி னார். குப்பன் சொன்னார், "உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்க மும் அடிம்பாங்க. அதுபோல கள்ளனும் அடிக் கிறான், அம்பலாரனும் அடிக்கிறான் என்னடி பண்றது. இப்படி ஒரு வரத்தே வாங்கிட்டு பொறந்திருக்கோம். எப்படியும் இன்னும் ஒரு நாலஞ்சுநாளு வேலையிருக்கு. அதே பாத்துப்புட்டு வந்துடுறோம். நீ இப்படியே ஏதாச்சம் சொல்லி, ஆவாட்டிடு புள்ளே' (ஆவாட்டிடு-சமாதனம் செஞ்சிடு) என்று கூறி வேட்டி முடிச்சிலிருந்த மூனுரூவாயை மனைவி கையில் கொடுத்தார். சிகப்பாயி "அடேயப்பா கண்ணாலம் கட்டிய நா முதலா இன்னிக்கித்தான்யா யாங் கைநிறைய காசே பாத்திருக்கேன் என்றார். இதேநிலைதான் ஏைேனயோர் வீட்டிலும். மறுநாள் காலையே எழுந்து காடு நோக்கி சென்றார்கள்.

விசயம் எப்படியோ பரவி மேல்சாதியாருக்கு எட்டியது. சும்மா இருப்பார்களா? மரம் வெட்டும் இடம் நோக்கி ஏழெட்டுப்பேர் சென்றார்கள். மரம் வெட்டிக்கொண்டிருந்தவர்கள் இவர் களை பார்த்ததும் நடுங்கிப்போனார்கள். காடே நிசப்தமானது. அவர்களின் முகம் பயத்தால் கருகிப்போனது. வியர்வை ஜலசமுத்திரமாக ஓடியது. போனவர்கள் அவர்கள் வெட்டிப் போட்டிருந்த பச்சைத்தடிகளை எடுத்து "யாண்டா யாம்வூட்டு வேலயப் போட்டுட்டு ஊரானுக்கா வேலே பாக்க வந்தீங்க'ன்னு கண்மண் தெரியாத அளவிற்கு அடித்தார்கள். அமைதியுற்றக் காடு அடிபட்டவர்களின் அலற லால் அதிர்ந்து போனது.

தோப்புக்காரர் ஓடிவந்தார். "யோவ் நீயும் நானும் யாருய்யா, நீயும் ஒரு விவசாயி தானே? யாம் பறையனே எப்படியா இங்க கூட்டியாந்து வேல பாக்கிறே? யாம்முட்டு வேலய யாரு பாக்கிறது? வந்தவர்கள் அவர்களைப் பிடித்து பின்பக்கம் கையை மடக்கிக் கட்டி அடித்தே இழுத்து வந்தார்கள். ஒவ்வொருவர் முதுகிலும் காலிலும் காயத்திலி ருந்தும் பீறிட்ட ரத்தம் வழிந்து பாதையை செம்மண்ணாக்கியது. அடி பொறுக்க இயலா மல் மயக்கமடைந்தவர்களை கையைக்கூட அவிழ்க்காமல் பக்கத்தில் ஓடிய வாய்க்கால் நீரை முகத்தில் தெளித்து நிதானம் பெற்றவு டன் இழுத்து வந்தார்கள்.

ஊர் கூடியது. கட்டுண்டவர்களின் குடும்பங் களின் கதறல் சத்தம் ஊரையே கிடுகிடுக்க வைத்தது. அனைவரையும் விசாரித்தார்கள். குப்பன் "நாங்க எங்க பொண்டாட்டி புள்ளேங்க எல்லாரும் உங்களுக்குதான் வேல பாக்கி றோம். எங்களுக்கு கிடைத்ததெல்லாம் இந்த கூழோ கஞ்சியோதான். எங்க சொந்தபந்தம் ஏதாச்சும் தேவை திருநாளுன்னா ஒரு தம்புடி காசு எங்க கையிலே கிடையாது. எப்படிங்க எங்க சொந்தபந்தம் முவத்திலே முழிக்கிறது?. காசு தாரோமுன்னாங்க. அதுனாலேதாங்க அங்க கூலி வேலைக்குப் போனோம்' என்றார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டி ருந்த ஊர்ப்பெரியவர் ஒருவர் "சரிசரி இனிமே இவங்க புருசம் பொண்டாட்டி வேலைக்கு வந்தா தலா காரூவா கூலி கொடுத்துடுவோம் என்று சொன்னபடி முடிவு செய்தார்கள். இப்படி கால்ரூவா கூலிவாங்க அன்று ரத்தம் சிந்திய அவர்கள்தான் இந்த மண்ணின் பூர்வகுடிகள்- ஆதிதிராவிடர்கள்.