ஓரக்கழுத்தர்கள் தேசத்தின் [ஓரை+ கழுத்து= ஓரைக்கழுத்து மருவி ஓரக்கழுத்தானதென்றறிக. இதை சாய்ந்த கழுத்தர்கள் தேசம் என்றழைப்பதே சாலச்சரியானது என்று வாதிப்பவர்களும் உண்டு. இதற்காக இருதரப்பாரும் ஏராளமான நிகண்டுகள், அகராதிகள், பழமொழிகள், தொல்லிலக்கியங்கள், நாட்டார் வழக்காறுகளிலிருந்து தத்தமது வாதத்திற்கு அனுகூலமான ஆதாரங்களை முன்வைக்கின்றனர். இருதரப்பிலும் உருவான அறிவுஜீவிகள் இருதரப்பாரையும் வெவ்வேறு இனங்களாக நிறுவுமளவுக்கு சென்றுவிட்டனர். இச்சர்ச்சைகளில் உணர்ச்சிவயமாக வெளிப்படும் வசவுகளுக்கும் பகடிகளுக்கும் இரையாகிவிடாமல் உண்மையையறிவதே வரலாற்று ஞானமாகும்.

இந்த அத்தியாயத்தில் செல்போன் என்ற சொல் எத்தனைமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கவனமாக படிக்கவும். முடிவில் எண்ணிக்கைக்கேற்ற ராசிபலன் இருக்கிறது.

காலத்தையும் தூரத்தையும் கடுகச் சுருக்கி வியாபாரத்தையும் தொழிலையும் விரித்தும் விரைந்தும் முடிக்க விரும்பிய தனவான்களுக்கு தொண்டூழியஞ் செய்யுமாறு நூறாண்டுகளுக்கு முன்பு அலெக்சாண்டர் கிரஹாம்பெல் என்பவரால் மந்தரித்து ஏவப்பட்ட தொலைபேசி ஒருநாட்டில் நிகழ்த்திய கதைகளின் கதையாம் இது.

தொலைபேசியின் லீலாவினோதங்கள்தான் இந்த நாட்டிற்கு ஓரக்கழுத்து / சாய்ந்தகழுத்து என்னும் பெயர் சர்ச்சை உருவாகக் காரணம் என்ற வரலாற்றுண்மையை ஏற்கனவே தெரிந்தவர்கள் உடம்பின் ஒன்பது துவாரங்களையும் சற்றே மூடிக்கொண்டிருக்குமாறு நாகரீகமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் மேற்கொண்டு படிக்கவும்.

ஓரக்கழுத்தர் என்றோர் இனமுண்டு_ அதற்கு

உலகில் தனியே குணமுண்டு ...

என்ற அகப்புற ஆதியந்தத்தின் 0.7.வது பாடலை தமது தேசிய கீதமாக கொண்டுள்ளது இந்நாடு. எம்ப்ளாய்மெண்டில் பதிந்து எட்டு வருசமாகியும் ஒரு நேர்முகத் தேர்வுக்குகூட அழைப்பு வரவில்லை என்றாலும், அகழ்வாராய்ச்சிக்கு தோண்டியதைப்போல ஆறடிப் பள்ளங்களோடு சாலை இருந்தாலும், கக்கத்தில் மயிர் முளைத்தால் கட்டடா வரியை என்று வசூலித்தாலும் துளியும் பதறாத இவர்கள் தொலைபேசி பழுதடைந்துவிட்டால் மட்டும் உயிர்போன வாதையோடு ஓலமிடுவதுதான் அந்த தனிகுணம். கேட்டால் கம்யூனிகேஷன் முக்கியமில்லையோ என்பார்கள் சமர்த்தாக. உடனுறையும் மனைவியிடம் ஒரு வார்த்தைப் பகிராத இந்த மங்கன்கள் உலகத்தார்க்கு எதை கம்யூனிகேட் செய்யத் துடிக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ஒரு கம்மர்கட் சன்மானம்.

அநாதிக் காலந்தொட்டு இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் நேர்க்கழுத்தர்களாகவே இருந்தார்கள் என்பதற்கு அனந்தகோடி ஆதாரங்கள் உள்ளன. அப்போது அவர்கள் நிமிர்ந்த நன்னடையும் சற்றேறக்குறைய நேர்கொண்டப் பார்வையும் உடையோராயிருந்தார்கள் என்பதும்கூட மறுக்கமுடியாதவையே. பாழுமிந்த தொலைபேசி வந்துதான் இவர்களுக்குள் பாகுபாட்டையும் படிநிலைகளையும் உருவாக்கியது. தொலைபேசி உரையாடலின் மூலம் கழுத்து சாயத் தொடங்கியவர்கள் நேர்க்கழுத்தர்களை தாழ்வானவர்களாக நடத்துவதை தமது பிறப்புரிமையாகக் கண்டனர். நேர்க்கழுத்தர்கள் தங்கள் தெருவில் நுழையக்கூடாது என்று தடுத்தனர். பீக்காட்டு வழியாக வந்தாலும் வரலாமேயொழிய நேர்க்கழுத்தர்களின் குடியிருப்பு வழியாக டெலிபோன் கேபிள் தங்கள் தெருவுக்குள் நுழைவதை தீட்டு எனக் கருதினர். அந்தத் தெருவினூடே வரும் கேபிள் வழியாக தொலைபேசியில் தாம் பேசும் வார்த்தைகள் நீஷபாஷையாக மொழிமாறியே அடுத்த முனையில் இருப்பவருக்கு கேட்கக்கூடும் என்ற அச்சமே இதற்கு காரணமெனக் கூறப்பட்டாலும் காதல், கர்ப்பம், இனக்கலப்பு ஆகிய ரகசிய அச்சங்களே இந்தத் தடைக்குள் மறைந்திருந்தன.

தந்திக்கம்பத்தில் காதுவைத்து ரீங்காரம் கேட்ட நேர்க்கழுத்தின சிறுமிகள் இருவரை கட்டிவைத்து அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஊர்வலம்விட்ட கொடுமைக்காரர்கள் ஓரக் கழுத்தினத்தில் பெருகிவந்தனர். போனில் பேசுவதை கேட்டதற்காக காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது, கள்ளத்தனமாய் பேச முயன்றவர் வாயில் மலத்தைத் திணிப்பது எனப் பெருகி வந்த கொடுமைகளின் மூர்க்கம் தாளாமல் நேர்க்கழுத்தினம் மருகிக் கிடந்தது. போன் வைத்திருப்பவர்கள், அதிலேயே எஸ்.டி.டி வைத்திருப்பவர்கள் அதற்கும் மேல் ஐ.எஸ்.டி.டி வைத்திருப்பவர்கள் என்று ஏராளமான பிரிவுகளும் படிநிலைகளும் உருவாகி ஒருவர் மேல் ஒருவர் ஒசத்தியானவர் என்ற கருத்து படியத் தொடங்கியது. தம்மை தாழ்ந்தவர்களாக காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள் கஞ்சிக்கு சிங்கியடித்தாலும் பரவாயில்லையென்று வீட்டுக்கு ஒரு போன் வாங்கி மேல்நிலையாக்கம் பெறத் துடித்தனர். இன்னும் சிலர் போன் இல்லையென்றாலும் பொதுஇடத்தில் ஒரு அந்தஸ்துக்காக கழுத்தை சாய்த்து நடந்தனர். குறைந்தபட்சம் வீட்டு வாசலில் துணி உலர்த்தும் கொடியாகவாவது டெலிபோன் கம்பியைக் கட்டி தமக்குள்ள உயர்வு நிலையை அறிவிக்கத் துடித்தனர். இவர்களெல்லாம் முதன் முதலில் உருவான சாய்ந்த கழுத்தர்களுக்கு அடுத்தடுத்தத் தெருக்களில் வாழ்ந்தனர்.

போனே இல்லாத நேர்க்கழுத்தர்கள் ஊருக்கு வெளியே கோயில், குளம் அல்லது ஒரு சாக்கடையின் மறுபக்கத்தில் ஒதுக்கப்பட்டிருந்தனர். அதாவது தொடர்பு எல்லைக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். உண்மையில் இவர்கள்தான் தொலைபேசி கேபிளுக்கு குழியெடுத்தார்கள். கம்பம் நடுவது, கம்பி கட்டுவது, இணைப்பு கொடுப்பது, பழுது நீக்குவது, பராமரிப்பதுவரை இவர்களேதான் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் அதற்கப்புறம் தீட்டு என்பதைத் தான் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இத்தனையும் செய்கிற எங்களையா இழிவுபடுத்துகிறாய் என்று கோபக்கார இளைஞர்கள் சிலர் பூனை வெட்டையிட்டு மறைப்பதைப்போல கேபிள் குழிகளை தமது மலஜலத்தால் நிறைத்தனர் பேசுகிறவனும் கேட்கிறவனும் நாற்றத்தில் சாகட்டுமென்று. ஆனால் பிறப்பிலேயே ஒவ்வொருவனும் நடமாடும் கழிப்பறைத் தொட்டியாய் வயிற்றைச் சுமந்து திரிவதால் இந்த நாற்றத்தை உணர்ந்தார் ஒருவருமில்லை.

கிரஹாம்பெல்லின் மாந்திரீகச் சீடர்கள் தொலைபேசியின் வல்லமையும் மூர்க்கமும் குறையா வண்ணம் இச்சாதனத்தில் தொடர்ந்து வேகமாய் பல மாற்றங்களை புகுத்தினர். சினிமாக்களில் வில்லனிடம் அவனது கையாட்கள் தொடர்பு கொள்ளவும், அவன் அவர்களிடம் கதாநாயகனை தீர்த்துக்கட்டு என்பதன் சங்கேதமாக ‘அவனை விஷ்க்...’ என்று உத்தரவிடவும் பயன்படும் கருவியாக அறியப்பட்ட வயர்லெஸ் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டேயிருந்தது. இந்த வயர்வெஸ் கருவி போலிஸ் கையிலும் தரப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் எப்போதும் ஓவர் ஓவர் என்றே பேசிக்கொண்டிருந்தார்கள். அல்லது எதையாவது ஓவராக பேசி விசாரணையாகி மாற்றல் தண்டனை பெற்றார்கள். ஆனாலும் தொழில்நுட்ப விற்பன்னர்கள் அன்னந்தண்ணி ஆகாரமில்லாமல் ஆராய்ந்து கொண்டேயிருந்தார்கள். அதாவது எல்லாருமே வில்லன்களாகி உத்தரவு போடவும் எல்லாருமே அடியாட்களாகி விஷ்க் பண்ணவும் கூடிய வகையில் இந்த வயர்லெஸ்சையும் அப்புறம் வந்த கார்டுலெஸ்சையும் மாற்றி மாற்றி கடைசியில் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் செல்போன்.

அரை செங்கல் சைசில் இருந்த முதலாம் இரண்டாம் தலைமுறை செல்போன் உபயோகிப்பாளர்கள் ஓய்வு ஒழிச்சலின்றி அதை காதோரம் வைத்து பேசிக்கொண்டே இருந்துள்ளனர். எந்தளவிற்கென்றால் சாப்பிட்டுக் கொண்டிருப்பவருடனோ சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பவருடனோ பேசிக்கொண்டே கக்கூசுக்கு போகுமளவுக்கு நிலைமை முற்றியிருந்ததாம். ஒரே வீட்டில் புருசனுக்கு பொண்டாட்டிக்கு புள்ளைக்கு என்று ஆளாளுக்கு ஒரு செல் அவசியம் என்று நம்புமளவுக்கு நிலைமை மாறிய கட்டத்தில் குடும்பத்தில் யார் யாரோடு பேசுவதாயிருந்தாலும் செல் வழியாகவே பேசியுள்ளனர். இதனால் நேருக்குநேர் பார்க்க நேர்ந்தாலும் ஆளுக்கொரு திசையில் பேசிக்கொண்டே கடந்திருக்கின்றனர். செல்லில் பேசியபடியே நடந்தும் வாகனம் ஓட்டியும் வருபவர்கள் தெருக்களில் அலைந்து கொண்டிருந்த பைத்தியங்களின் மீது மோதி அவர்களை வில்லங்கப்படுத்தினர். தம்மைப்போல் தன்னந் தனியாக பேசி அலைபவர்களின் எண்ணிக்கை திடுமென அதிகரித்து விட்டதைக் கண்ட எதிர்பாராத அதிர்ச்சியில் பல பைத்தியங்களுக்கு மனப்பிறழ்வு சரியாகி வீடு திரும்பிவிட்டனர் என்று அரசாங்க உளவியல்துறை புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.

ஒருநாள் காலையில் எழுந்ததும் எவனோ ஒருத்தன் மிஸ்டு கால் கொடுக்க, நான் மட்டும் இளிச்சவாயனா காசழிச்சு பேச என்று மற்றவனும் மிஸ்டு கால் கொடுக்க, இது எப்படியோ எஸ்.எம்.எஸ் வழியாக எல்லோருக்கும் பரவி யாரும் யாரோடும் பேசாத நாளாகிவிட்டது. ஒருநாள் முழுக்க பேசாதவங்களோடு நாமாக ஏன் பேசவேண்டும் என்று ஒவ்வொருவருக்குள்ளும் இடைவெளி அகண்டு வளர்ந்தது. ஆனாலும் இரும்பு பிடித்தக் கையும் சிரங்கு பிடித்தக் கையும் சும்மா இருக்காதே... பழக்கதோஷத்தில் எங்கு யாரைப் பார்த்தாலும் மிஸ்டுகால் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். நாட்டுக்கே நாக்கறுந்து விட்டதுபோல கிடந்த அந்த நாட்களின் மௌனத்தை ஜடத்தாலும் கூட தாங்கிக் கொள்ள முடியாதபோது செல்போன் கம்பனிகளால் தாங்கிக்கொள்ள முடியுமா? அதிகநேரம் பேசுபவர்களுக்கு ஆரஞ்சுமிட்டாய் பரிசு என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தனர். அதற்கான விளம்பரத்தில் பே என்ற எழுத்து ஏ என பிழையாக அச்சாகி, ஏசுங்கள் ஏசுங்கள் ஏசிக்கொண்டேயிருங்கள் என்று வெளியாகிவிட்டது. அவ்வளவு தான், லைனில் கிடைத்தவர்களை எல்லாம் கண்டமானிக்கு ஏசி நாடே களேபரமாகி விட்டது. பாராளுமன்ற சபாநாயகர் தொலைக்காட்சியில் தோன்றி தனக்குத் தெரிந்த ஒருசில வார்த்தைகளான ‘ப்ளீஸ், சைலண்ட் ப்ளீஸ்’ என்று நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளை எம்.பிக்களை போலவே மக்களும் நிராகரித்தனர். போண்டாவில் உப்பு ஜாஸ்தி, புண்ணாக்கில் கொழுப்பு கம்மி என்பது மாதிரியான அதிமுக்கிய வழக்கில் மூக்கை நீட்டிக்கொண்டு தீர்ப்புகள் சொல்லும் நீதிமன்றங்கள் இவ்விசயத்தில் வெறும் கட்டடங்களாக அமைதி காத்தன. ஒவ்வொருவரும் மற்ற எல்லாருக்கும் மறுபடியும் எதிரிகளாகிவிட்டனர்.

ஏற்கனவே போன் வைத்திருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற இணக்கம் காணமுடியாத இரு பெரும்பிரிவாகவும், அவைகளுக்குள் எண்ணிலடங்கா உட்பிரிவுகளாகவும் சமூகம் பிளவுண்டிருந்தது. செல்லுடைமையாளர்கள் என்ற புதிய பகுதியினர் மற்ற இவர்களனைவரையுமே தாழ்ந்தவர்களாகக் கருதி அவர்களைத் தொடுவதும் தீட்டு என அறிவித்தனர். பிறகு பின்னாளில் மல்டிகலர் டிஸ்பிளே, கேமராபோன், வீடியாபோன் என்று விதவிதமான செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு யார் யார் எதை வைத்திருக்கிறார்களோ அதற்கேற்றாற்போல இவர்களது சமூக அந்தஸ்து வரையறுக்கப்பட்டது. பெரிய செட்களுக்கு கர்லா கட்டை என்றும் அவற்றை வைத்திருப்பவர்களுக்கு பயில்வான் என்றும் பெயர் சூட்டி இழிவுபடுத்துவது கையடக்க செட்காரர்களின் குணமாக மாறிப்போனது. இப்படி தாங்கள் இழிவுபடுத்தப்படுவது குறித்து கோபம் வருவதற்கு பதிலாக, போன் இல்லாதவர்கள் அதை வாங்கவும், போன் வைத்திருப்பவர்கள் செல் வாங்கவும், செல் வைத்திருப்பவர்கள் கையடக்கத்தை நோக்கிப் போவதுமாகிய மேல்நிலையாக்க மனோபாவமே வளர்ந்தது. எவ்வளவு சிறியதாக செல்போன் வைத்திருக்கிறாரோ அந்தளவிற்கு அவருடைய அந்தஸ்து உயரும் என்ற விளம்பரங்களை ஒவ்வொருவர் முதுகிலும் முன்மண்டையிலும் எழுதிய கம்பனிகள் மிகமிகச் சிறிய அளவுகளில் செட்களை தயாரித்து விலையை கடுமையாக உயர்த்தி கிராக்கி செய்தன. ஆனால் இந்த புதிய செல்போன் காதுக்குள் விழுந்துவிட்டதாகவோ, பேசும்போது விழுங்கி விட்டதாகவோ புதுவகை நோயாளிகள் பெருகி மருத்துவர்களின் நலனை கவனித்துக் கொண்டனர்.

இப்படியாக ஆயிரத்தெட்டு பிரிவினைகள் இருந்தாலும் அடிப்படையில் நாமனைவரும் ஓரக்கழுத்து தேசத்தவர்கள் என்று ஒன்றுபட வேண்டும் என்று ஒரு இயக்கம் தோன்றி ஊர்ஊராய் மாநாடு கூட்டி மக்களைத் திரட்டியது. அரச ஆவணத்தில் அதிகாரப்பூர்வமாக ஓரக்கழுத்து தேசம் என்ற பெயர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வியக்கத்தின் செல்வாக்கு கூடியது. அதில் ஏற்பட்ட பதவிப் பங்கீடும் பணப்பங்கீடும் கொள்கை வேறுபாடு என்ற அறிவிப்போடு இயக்கம் பிளவுறுவதில் போய் முடிந்தது. புதிய இயக்கம் சாய்ந்த கழுத்து தேசம் என்று பெயரை மாற்றுவதற்காக போராடுவதே தனது முதன்மை லட்சியம் என்று பிரகடனம் செய்தது. அப்புறம் கொஞ்சம் பேர் பிரிந்துபோய் கோணக்கழுத்தர் தேசத்திற்காக போராடப் போவதாய் அறிவித்தனர். (ஆனால் எல்லா இயக்கங்களுமே நேர்க் கழுத்தர்களைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளவில்லை என்பதை இந்த இடத்தில் இணைத்துப் பார்ப்பது தேர்ந்த வாசகனுக்கு சாத்தியப்படும்.)

செல்தோன்றா வில்தோன்றா காலத்தே போனோடு ஓரம் சாய்ந்த கோணக்குடி என்ற மகாவாக்கியமே இவர்களது நம்பிக்கைகளுக்கும் வாதங்களுக்கும் மூலாதாரம். ஓரம் என்றோ சாய்ந்தோ என்றோ கோணை என்றோ தனித்து குறிப்பிடாமல் மூன்றையும் சேர்த்துக் குறிப்பிட்டதால் வந்த வினை இது. இதெல்லாம் ஒரு புறமிருக்க, செல்போனை வைத்துக்கொள்ளும் அளவுக்கு விளக்கு மாடம் போல் மேற்புறம் சற்றே குழிந்த தோள்பட்டையுடனும் ஓரையடித்து சாய்ந்த கழுத்துடனும் குழந்தைகள் பிறக்கத் தொடங்கிய பின்தான் இவர்கள் தனி இனமாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பார்கள் என்பதைத் தெரிவிக்கும் பழங்கால DVD ஒன்று கிடைத்துள்ளது. குளோனிங் மூலம் செல்போன் கம்பெனிகள்தான் இப்படி குழந்தைகளை வடிவமைத்திருக்கக்கூடும் என்ற நம்பிக்கை நாளதுதேதி வரை உண்டு. மூக்கை மறைத்துக் கொண்டபடி ஓடும் ஒரு உருவம் இந்த தகடின் முகப்பில் உள்ளது. ஸ்விட்ச் போர்டு என்று நினைத்துக்கொண்டு எதிரில் இருப்பவன் மூக்குத்துவாரத்திற்குள் சார்ஜர் ஒயரை சொருகி விடும் அபாயம் அப்போது இருந்தததைத்தான் இப்படம் பூடகமாய் உணர்த்துவதாக லிபரல்பாளையம் போனுடவியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கும் கருத்து மனங்கொள்ளத்தக்கது.

அப்போதிருந்த அரசியல்வாதிகள் அனேகரின் புகைப்படங்கள் செல்போனுடனேயே காணப்பட்டன. பெரும்பாலும் செல்போனில் பேசிக்கொண்டோ தங்கப்பல் தெரிய சிரித்தபடியோ நடப்பது மாதிரியானவை அவை. வெள்ளைவேட்டி, ஜேப்பிலிருக்கும் ரூபாய்த்தாள் வெளியே தெரியுமளவுக்கு சன்னமான தொட்டால் உடைந்துவிடுமளவுக்கு மொடமொடப்பான வெள்ளைச்சட்டை, கோடையிலும் தோள் மீதிருக்கும் உல்லன் சால்வை, வெள்ளைச் செருப்பு என ஏற்கனவே அவர்களுக்கிருந்த சீருடையுடன் செல்போனும் சேர்ந்து விட்டது. இரண்டாம் கட்டத் தலைவர்கள் வெள்ளை கைக்குட்டையில் சுருட்டி கையடக்கமாய் வைத்திருப்பதும் வாடிக்கையாயிருந்தது. இந்த தலைவர்களின் பிறந்தநாள் அல்லது நினைவுநாள் கொண்டாட்டங்களுக்கு டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் வைத்த தொண்டர்களும் அதில் தமது தலைவர்களைப் போலவே போஸ் கொடுத்தனர். சிலேட்டு, பல்பம், 50கிலோ நோட்டுப் புத்தகங்களுடன் எல்.கே.ஜி சேர்க்கும்போதே பிள்ளைகளுக்கு செல்போனையும் வாங்கிக் கொடுக்கவேண்டும் என்பது மத்திய மனிதவள (ஒழிப்பு)த் துறையின் உத்தரவுகளில் ஒன்றாக கடைபிடிக்கப்பட்டிருக்கிறது.

பிள்ளைகள் அம்மா மூச்சா வருது என்று (அப்போதும் மூச்சா விசயத்தையெல்லாம் அம்மாவிடம்தான் பிள்ளைகள் சொல்லும்) செல்லில் கூப்பிட்டு சிணுங்க வேண்டும். அம்மா அங்கிருந்தபடியே உபாயங்களை சொல்லவேண்டும் என்பதே இந்த ஏற்பாட்டின் ரகசியம். செல்போன் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு சகாயம் செய்யவே அந்தத் துறை மந்திரி இப்படியரு உத்தரவை வெளியிட்டதாக மிளகாப்பழம் என்கிற பத்திரிகை குற்றம்சாட்டியதாம். ஆனால் அது ஒரு பிரதிகூட வெளியே விற்பனையாகவில்லை. எல்லா பிரதிகளையும் அந்த செல்போன் நிறுவனமே வாங்கிவிட்டதாம். கல்யாணம், விவாகரத்து, அஞ்சலி, வாழ்த்து என மனிதர்கள் கூடி நிகழ்த்தும் எல்லாமே செல்போனிலேயே நடந்ததாம். செல்லிலேயே செக்ஸ் வைத்துக் கொள்ளமுடியாது என்கிற தொழில்நுட்ப போதாமையினால் மட்டுமே குடும்பம் வீடு போன்ற அமைப்புகள் நீடிக்க வேண்டியிருந்தது என்கிறார் மேற்சொன்ன போனுடவியலாளர். இப்படியாக அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லால் மந்தரித்து அனுப்பப்பட்ட அந்த மாயப்பிண்டம் இந்த தேசத்தை தன் அலைக்கரங்களால் நெருக்கி வளைத்துக் கொண்டிருந்தது.

இதுபற்றிய நாட்டுப்புற கதையொன்று. சுப்பையா நாயுடுப் பிள்ளையின் வம்சாவளி வந்த பரதேசி முதலிச் செட்டி அருந்ததிய வேளாளன் ஏதோ வேலையாக பட்டணம் சென்றிருக்கிறார். செல்லிருந்தாலே போதும் அதிலிருந்து எல்லாம் வரும் என்று ஒரு நிறுவனம் செய்திருந்த விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு ‘இது தெரியாமல் இத்தனை நாளும் எதையெல்லாமோ வாங்கி அலைந்திருக்கிறோமே’ என்று தன்னையே நொந்தபடி யோசித்திருக்கிறார். உடன் வந்திருந்த சாம்பத்தேவ சாஸ்திரி நாடார் மகன் சொன்ன ஆலோசனைப்படி தனது கிட்னியை விற்று செல்போன் வாங்கிக்கொண்டு கிராமம் திரும்பியிருக்கிறார். இத்துனூண்டு இருக்கிற இதிலிருந்து எல்லாமே வருமாமே... எந்த மாயமந்திரக் கதையிலும் கேட்டிராத அதிசயமாயிருக்கேன்னு பரவசமடைந்த அவர் மனைவி, ‘நல்ல சோறு தின்னு நாலுநாளாச்சு, இன்னைக்காவது நீ கொடு தெய்வமே’ன்னு வேண்டிக்கிட்டே செல்போனைத் தூக்கி கொதிக்கிற உலையில் போட்டிருக்கிறாள். உள்ளிருந்த ஏதோ ஒன்று வெடித்து பானையும் படீரென்று உடைந்ததுதான் மிச்சம். ஏற்கனவே கிட்னியை பறி கொடுத்தவர் இந்த அதிர்ச்சியில் உயிரையும் பறிகொடுக்க, என்ன நிந்தனையோ தெரியலியே, வந்த நாள்லயே காவு வாங்கிடுச்சேன்னு பயந்து குடும்பமே கிளம்பிப்போய் கோவில்போல உயர்ந்திருந்த செல்போன் டவரை வணங்கி அங்கிருந்து பிடிமண் எடுத்துவந்து தங்களூரில் ஒரு கோவிலைக் கட்டினர். செல்லியம்மன், செல்லாண்டியம்மன், செல்லபெருமாள் போன்ற சிறுதெய்வங்கள் இதிலிருந்தே உருவாகியிருக்க வேண்டும் என்கிறார் ஒரு நாட்டுப்புற ஆய்வாளர் 2005:234.9 (தகவலாளியின் பெயர் குறிப்பிடப்படவில்லை).

இப்படியான கீர்த்திகள் மிக்க ஓரக்கழுத்து தேசத்தில் நடந்த வழக்கொன்றைப் பற்றியதே பின்வரும் கதை] நம்முடைய கதையின் நாயகன் வி.ஓ.தி என்ற தலைமறைவு இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். அரசாங்க அலுவலகங்களில் ஊழியர்களாக மாட்டிக்கொண்டு மக்களுக்கு எதிராக இயங்குவதற்கு மனசாட்சி ஒப்பாதவர்கள், சிக்கனம் சீரமைப்பெனச் சொல்லி பெண்டு நிமிர்த்தும் அளவுக்கு தம்மீது சுமத்தப்படும் வேலைப் பளுவை தாங்கமாட்டாதவர்கள் ஆகியோரை அணிதிரட்டி ‘விலகி ஓடும் திட்டம்’ (VRS) பற்றி ரகசிய பிரச்சாரம் செய்ததில் ஆரம்பிக்கிறது அவருடைய குற்றங்கள். விரும்பி ஓடும் திட்டம் என்றும் இதை அழைப்பவர்களுண்டு. வேலையிலிருந்து சுதந்திரமாக வெளியேறி சொந்த கிராமங்களுக்குப் போய் தம் முன்னோர்களைப்போல விவசாயம் பார்க்கலாம் என்பதே அவரது ஆரம்பகால கருத்து. ஆனால் அன்னியச் செலாவணி ஈட்டும் ஆசையில் கிராம நிலங்களில் பெரும்பகுதியானவை ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டதால் அங்கே ஆழங்காண முடியாத பெரும் பள்ளங்கள் மட்டுமே இருந்தன. எஞ்சிய இடங்களும் பண்ணை வீடுகளாகவும் தேக்குக் காடுகளாகவும் வீட்டுமனைகளாகவும் இறால் பண்ணைகளாகவும் மாறி புல்பூண்டுகள் பிளாஸ்டிக்கில் முளைக்கும் இடங்களாயிருந்தன. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலத்தை வாங்குமளவுக்கு வி.ஓ.தியின் பயன்தொகை தேறாது. எனவே ஊர்களையும் நகரங்களையும் விட்டுவிட்டு ஆதிமனிதர்களைப் போல காட்டுக்குள் ஓடி மறைந்து வாழ்வது என்கிற நோக்கத்தோடு இவர் நடத்திய இயக்கம் பெரும்பாலான ஊழியர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. காட்டுக்குள் போனால் செல்போன் சிக்னல் கிடைக்காது என்பதே அவர்கள் சொன்ன முக்கிய காரணம். ‘அட பீடைகளே, இந்த தொல்லையெல்லாம் வேண்டாம்னு தானே அங்கே போகலாம்னேன்..’ என்று நொந்தபடி அவர் காட்டுக்குள் கிளம்பியதுதான் அவரது அடுத்தடுத்த குற்றங்களுக்கு வழிவகுத்தது என்று நம்மால் யூகிக்க முடிகிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையும்கூட இம்முடிவுக்கே வருகிறது.

மழுமழுப்பாக சவரம் செய்யப்பட்ட கன்னத்துடனிருந்தால் கன்னிப் - இந்த வார்த்தை வேண்டாம் - வாளிப்பான பெண்கள் மொய்ப்பார்கள் என்று விளம்பரப்படுத்தப்படும் ஒரு பிளேடால் தினமும் மழித்துக்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தவர் அவர். ஆனால் நீதிமன்றத்திற்கு இழுத்து வரப்பட்டபோது அவரது முகத்தில் தேன்கூட்டின் வடிவில் தாடி மண்டிக்கிடந்தது. காவலர்களால் பிடிக்கப்பட்ட ஒருவர் என்கவுன்டர் என்று சுட்டுக் கொல்லப்பட்டுவிடும் வழக்கத்திற்கு மாறாக உயிருடனேயே நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் அதிசயத்தைப் பார்க்க நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்திருந்தார்கள். அவர்களுக்காக விசேஷரயில்கள் நாலாதிசையிலிருந்தும் இயக்கப்பட்டதானது ரயில்வே மற்றும் நீதித்துறை வரலாற்றிலேயே அதுவரை நிகழாத ஒன்று. இப்படி வந்து விசாரணையைப் பார்த்தாலாவது குடிமக்கள் அடங்கி ஒடுங்கி வாழ்வதற்கான மனப்பாங்கும் அச்சமும் உருவாகும் என்றுகூட அரசு இந்த ஏற்பாட்டை செய்திருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். பளபளக்கும் தாள்களில் வெளியாகும் பத்திரிகைகள் இந்த விசாரண எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விலாவாரியாக விவாதித்தன. இந்த நாட்டில் தமது பதிப்புகளைத் தொடங்கவிருந்த காலத்தில் அதை எதிர்த்து விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் முதல் கையெழுத்திட்டிருந்த இவரை பழிதீர்க்க இதுவே சரியான தருணம் என்பது அவற்றின் கணிப்பாயிருந்தது. விரைவாதமா, புட்டை வீக்கமா, மூலமா பவுத்திரமா என்று கேள்விகளால் குடையும் பிரபல வைத்தியர் ஒருவரின் நோட்டீஸைப்போல நைந்த பழுப்புக் காகிதத்தில் வெளியான சுதேசி பத்திரிகைகள் இவ்விசயத்தை கண்டு கொள்ளவேயில்லை. கடும் தணிக்கை அவர்களது கனவுக்குமிருந்தது.

அவர் இடுப்பில் இலையாடை தரித்திருந்தார். கட்டுக்கொடி முறுக்கிப் பிணைத்த மூங்கில்புனலை தோளில் மாட்டியிருந்தார். சுனைநீர் அதில் தளும்பிக் கொண்டிருந்தது. நாட்டின் சட்டத்தை மீறுவதில் நாட்டமுள்ளவர் என்று நிரூபிப்பதற்கு போதுமான முக்கிய ஆதாரமாக அந்த சுனைநீரையே காவல்துறை நம்பியது. வேண்டாதவர்கள் கையில் கஞ்சாப் பொட்டலத்தைக் கொடுத்து சிறையிலிடும் உயரிய பாரம்பரியம்மிக்க காவல்துறை முன்னோடிகளின் வழிவந்த காவல்துறையினர் தம்மைத்தாமே மெச்சியபடி நீதிமானுக்காக காத்திருந்தனர். அந்த மான் துள்ளித்துள்ளி வருவதற்கு பதிலாக மூப்பின் காரணமாய் நொண்டி நொண்டி வந்து சமாதிக் கோபுரம் போல் இருந்த பீடத்தில் அமர்ந்தார். நாயகன் காட்டுக்குள் ஓடுவதற்கு முன்பான காலத்தில் இழவுவீட்டுக்கு வருவதைப்போல் துக்கத்தின் நிறத்தில் நீதிமான்கள் அங்கி அணிவதைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த நீதிமானோ நீலமும் சிவப்பும் பட்டைபட்டையாக வரியோடும் அங்கியை அணிந்திருந்தார். ஊடாக வெள்ளை நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த காலத்து பாஷிங் ஷோ சிகரெட் அட்டைப் படத்தில் வரும் ஆளைப்போல தொப்பியும் அணிந்திருந்தார். வ.உ.சி.யையும் பகத்சிங்கையும் ஜூலியஸ் பூசிக்கையும் பிடல் காஸ்ட்ரோவையும் டிமிட்ரோவையும் விசாரித்து தண்டித்த பரம்பரையில் வந்தவன் தான் என்பதை நினைத்துக் கொண்டதும் அவரது ரத்தம் சூடேறியது. தனது விசாரணையையும் தீர்ப்பையும் கண்டு அண்ட சராசரமே அஞ்சி நடுங்கவேண்டும் என்ற மூர்க்கம் ஒரு ஆவியைப்போல் தன்னை பீடிப்பதையும் தான் மெதுவே அதன்வசம் வீழ்வதையும் உணர்ந்தார். தீர்ப்பை முடிவு செய்து கொண்டபின் விசாரணையைத் தொடங்கினார்:

‘நாங்கள் மிகுந்த ஜனநாயகவாதிகள். ஒரு நாயை....’

(பொறுமையற்ற குரலில் இடைமறித்து) ‘அய்யய்ய, இப்படி ஒரே பொய்யை காலங்காலமா சொல்லறதுக்கு சலிப்பா இல்லையா உங்களுக்கு...நேரா விசாரணையைத் தொடங்குங்கள்...’

குற்றவாளியின் பொறுமையின்மை குறித்து நீதிமானுக்கு உள்ளூர வெகு சந்தோஷம். குற்றத்தின் பட்டியலை நீட்டிக்க முடியுமல்லவா...

உங்கள் பெயர் என்ன?

என் பெயர் எதுவாயிருந்தாலும் உங்களது பதிவேட்டில் அடிமை என்றுதானே குறித்துக்கொள்ளப் போகிறீர்கள்?

நீதிமன்றத்தை அவமதித்தால் எவ்வளவு காலம் சிறையிலிருக்க நேரிடும் என்பது தெரியுமா உங்களுக்கு..?

இந்த தேசமே ஒரு திறந்தவெளி சிறைச்சாலைதான். குடும்பம் கல்வி வேலை ஊதியம் சொத்து என்று தரித்திருக்கும் இத்தனை விலங்குகளிலிருந்து யாரும் விடுபடத் துணியப்போவதில்லை. எனவே இங்கு தனியே சிறைச்சாலைகள் வேண்டியதில்லை என்பது என் கருத்து.

போகட்டும், உங்களுக்காக வாதாட வழக்கறிஞர் யாரையாவது அமர்த்தியிருக்கிறீர்களா?

இந்த மன்றத்தில் இருக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரும் தன் தேசத்தவர்கள் அல்ல என்பதை அப்போதுதான் கவனித்தார் நாயகன். ஒருவேளை இந்தநாட்டு வழக்கறிஞர்கள் எல்லோரும் என் வி.ஓ.தி. இயக்கத்தில் சேர்ந்துவிட்டார்களா... என்ன நேர்ந்தது அவர்களுக்கு... என்று குழம்பிப்போனார். பார்வையாளர் மாடத்திலிருந்து நான் வாதாடுகிறேன் என்று பலபேர் ஆவேசமாக முழக்கமிட்டதைப் பார்த்தார்.

நீங்கள் எப்படி வாதாடமுடியும்? கோர்ட்டுக்கும் சுதேசி வக்கீல்களுக்கும் முன்பு ஒரு பந்தம் இருந்த காரணத்தால் போனால் போகட்டுமென்று கேலரியில் உட்கார அனுமதி கொடுத்தால் வாதாடப் போவதாய் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறீர்களே... இது கிட்டோ ஒப்பந்தத்தை மீறுகிற குற்றம் என்பது சட்டம் படித்த உங்களுக்கு தெரியாதா என்ன? என்று அவர்களை நீதிமான் மிரட்டியபோதுதான் நீதிமன்றமும் இப்போது அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்ட விசயமறிந்தார் நாயகன். சுதேசி வக்கீல்கள் தமது சாயம் போன அங்கியை பந்தாக சுருட்டி வாயில் திணித்துக் கொண்டனர். அவர்களது விசும்பல் மட்டும் இடையறாது கேட்டுக் கொண்டேயிருந்தது.

எங்கள் வழக்கறிஞர்களின் கார்ப்பரேட் அலுவலகத்திலிருந்து பலர் இங்கே வந்துள்ளனர். உங்களால் அவர்களுக்கு எவ்வளவு டாலர் தரமுடியும் என்று நீதிமான் ஒரு தரகரைப்போல பேரத்தைத் தொடங்கினார். எங்கள் நாட்டில் டாலரா... என்று சித்தம் கலங்கியது நமது நாயகனுக்கு. தெரியாதா உமக்கு... இப்போது இங்கு எல்லா பரிவர்த்தனையும் டாலரில்தான்.... என்றார் நீதிமான். நாயகன் தான் கட்டியிருக்கும் இலையாடையைத் தவிர்த்து தன்னிடம் ஒரு தம்பிடியும் இல்லை என்று உதட்டைப் பிதுக்கியபோது மன்றத்தில் எழும்பிய இளக்காரச் சிரிப்பு வளாகச் சுவர்களில் எதிரொலித்தது.

ஆல்ரைட். விசாரணை தொடங்குகிறது. அரசாங்கத்தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டுக்களை வாசிக்க கோர்ட் அனுமதிக்கிறது...

‘மை ரியல் லார்ட், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இவர் அடுக்கடுக்காக பல குற்றங்களை புரிந்தவர் என்பதை இந்த உலகத்திற்கு அம்பலப்படுத்தும் வாய்ப்பை எனக்கு தந்தமைக்காக தங்கள் சமூகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ...’ என்று ஆரம்பித்து அவர் வாசித்த குற்றப் பத்திரிகையின் சாரம் பின்வருமாறு:

  1. செலவை குறைக்கும் சிக்கன நடவடிக்கை தொடங்கப்பட்டதன் விளைவாக அலுவலகங்களிலும் ஆலைகளிலும் ஆட்குறைப்பு செய்வதற்காக அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட வி.ஓ.தி.திட்டத்தை விலகி ஓடும் திட்டம், விரும்பி ஓடும் திட்டம் என்று மக்களிடையே திரித்துக் கூறியது.
  2. முன் அனுமதி இல்லாமல் காட்டுக்குள் சென்றது.
  3. காட்டில் வனத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது சந்தனக் கட்டை திருடுவது, யானைகளைக் கொன்று தந்தம் திருடுவது, கஞ்சாத்தழை கிள்ளி கள்ளச்சந்தைக்கு அனுப்புவது ஆகிய நியாயமான காரணங்கள் எதையும் மேற்படி நபர் தெரிவிக்கவில்லை. நாட்டில் வாழப் பிடிக்கவில்லை என்று மட்டுமே தெரிவித்திருக்கிறார். அதாவது நமது ஆதிக்கத்தின் கீழ் இருப்பதை அவமானமாக கருதுகிறார். நாமென்ன காலகாலத்திற்கும் இங்கேயாவா இருக்கப் போகிறோம்...? இந்த மண்ணில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டிவிட்ட மறுகணமே கிளம்பிவிடலாம் என்றுதான் வந்தோம். ஆனால் முடியவில்லை. எங்கள் தேசத்தை விட்டு ஓடடா நாயே என்று தீவிரவாதிகள் தொடர்ந்து கலகம் செய்வதால் அவர்களை ஒடுக்குவதற்காகத்தான் இத்தனை ஆண்டுகாலமாக நாம் இங்கே இருக்க நேரிட்டுள்ளது. இதை எதிர்க்கும் இவரது நடவடிக்கைகள் ராஜநிந்தனையின் கீழ் வரும்.
  4. காட்டுக்கு இவர் ஓடும்போது இவரைப் பின்தொடர்ந்து யாரும் செல்லவில்லை என்றாலும் நமது நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க பலரும் தப்பித்து காடுகளுக்கு சென்றுவிட்டனர். 59 இன்ச் கலர் டி.வி.கள், 1000CC இருசக்கர வாகனங்கள், 18340 வண்ணங்களிலான லிப்ஸ்டிக்குகள், எழுநூறடி பிரிட்ஜ்கள், மைக்ரோ செல்போன்கள், கிரெடிட் கார்டுகள் என நம்மாட்கள் இங்கே வந்து உற்பத்தி/அசம்பிள் செய்த பொருட்கள் எல்லாமே விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் ஏற்பட்ட 5410 டிரில்லியன் டாலர் நஷ்டத்தை ஈடாக செலுத்தவேண்டியது இக்குற்றவாளியின் பொறுப்பாகிறது.
  5. கிணறுகள், ஆழ்துளைக்குழாய்கள், ஏரிகள், குளங்கள், சுனைகள், பாழிகள், சாக்கடை, ஆறு, கடல் எனப்படும் நீர் நிலைகள் எதிலிருந்து ஒருவர் நீரருந்தினாலும் அதற்குரியத் தொகையை நீராதிபதிகளுக்கு செலுத்தவேண்டும் என்பதே சட்டம். உலகின் எல்லா நாடுகளிலும் இப்படியொரு ஒப்பந்தத்தையே நமது நீராலைகள் ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இவரோ காட்டில் இருந்த காலம் முழுவதும் அங்கிருந்த சுனைகளிலும் பாழிகளிலும் காட்டாறுகளிலும் நீர் அருந்தியிருக்கிறார். இப்படியொரு சட்ட விரோதக் காரியத்தில் ஈடுபடுவது குறித்து அவர் துளியும் அச்சமற்றவராயிருக்கிறார். இக்குற்றத்தில் அவருக்குள்ள நேரடித்தொடர்பை உறுதிப்படுத்திக்கொள்ள அவரது தோளில் மாட்டியிருக்கும் மூங்கில் புனலை கைப்பற்றி அதனுள்ளே இருக்கும் தண்ணீரை சோதிக்குமாறு அரசாங்கத் தரப்பு இம்மன்றத்தில் மன்றாடுகிறது. இதற்காக அவர் நமக்கு செலுத்தவேண்டியத் தொகையை கறாராக வசூலிக்காமல் விடும்பட்சம், தண்ணீருக்கு விலை கொடுக்கமாட்டோம் என்று பொலிவியாவின் கொச்சபம்பா நகரில் நடந்ததைப்போல சமூக அமைதி கெடும் வாய்ப்புள்ளது. மக்கள் கிளர்ச்சி வலுக்குமானால் மேன்மைதங்கிய நீதிமானாகிய நீங்கள் உட்பட நாமெல்லோரும் நமது ஊரைப் பார்த்து ஓடவேண்டியதாகிவிடும். எனவே இவ்விசயத்தில் துளியும் கருணையற்று (தங்களிடம் இருக்க வாய்ப்பில்லை) தண்டத் தீர்வையை வசூலித்து நீராலைகள் வயிற்றில் பால் வார்க்க வேண்டியது அவசியமாகிறது.
  6. BOT (Build Operate Theft) அடிப்படையில் நாம் பித்தளை நாற்கர சாலைகளை அமைத்து சுங்கம் வசூலிப்பது உலகறிந்த உண்மை. இதன்படி சினைக்கழுதையும்கூட சாலையைக் கடப்பதற்கு வயிற்றிலிருக்கும் குட்டிக்கும் சேர்த்தே வரி செலுத்த கடமைப்பட்டுள்ளது. இப்படி வரி வசூலிப்பதோ செலுத்துவதோ இவர்களுக்கொன்றும் புதிய விசயமல்ல. ஏற்கனவே தலைவரியும் முலைவரியும் பனைவரியும் வசூலிப்பது இங்கே இருந்த ஏற்பாடுதான். ஆனால் மேற்சொன்ன நபர் இரவுநேரங்களில் இருளில் மறைந்து காட்டையொட்டிய சாலைகளைக் கடந்துள்ளதை நமது ஹைவே பெட்ரோலிங் ஸ்குவாடு தனது துப்பறியும் திறமையால் கண்டறிந்துள்ளது. தவிரவும் வனத்தின் கொடித்தடங்களிலும் இவர் நடமாடியுள்ளார். அந்தக் குற்றத்தை நிரூபிக்க இவரது காலடித் தடங்கள் பிரதியெடுக்கப்பட்டு தடவியல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டு கோர்ட்டாரின் பார்வைக்கு பணிந்து வைக்கப்படுகிறது. சுமார் 52 டாலர் மன்னிக்கவும் 52 கிலோ எடையுள்ள இவர் வாழ்நாள் சாலைவரியாக செலுத்தவேண்டியத் தொகையை 104% வட்டியுடன் வசூலித்துத் தரும் பொறுப்பை கோர்ட்டார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சுங்கச்சாவடியாரின் சார்பில் வேண்டப்படுகிறது.
  7. ஊரைவிட்டு இவர் ஓடிய பிறகு இவரது வீடு சோதனையிடப்பட்டது. அப்போது கிடைத்த தடயங்கள் இவர் நம்மை அவமதிப்பதையும் ஏமாற்றுவதையும் பிறவிக்குணமாகவே கொண்டிருந்தார் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. வீட்டிற்கிருந்த மின்இணைப்பை துண்டித்துவிட்டு இருட்டிலேயே புழங்கியிருக்கிறார். அவசியம் ஏற்பட்டால் சிக்கிமுக்கி கல் உரசி செடிசெத்தைகளை கொளுத்தி வெளிச்சம் உண்டாக்கியிருக்கிறார். (இந்த கற்கள் சாட்சியமாக இணைக்கப்பட்டுள்ளன). ஏற்கனவே தவணையில் வாங்கி வைத்திருந்த பிரிட்ஜை புத்தக அலமாரியாகவும், டி.வி. பெட்டியை குழந்தைகள் ஒளிந்து விளையாடவும் பயன்படுத்தியிருக்கிறார். காஸ் சிலிண்டர் கட்டுபடியாகாதென்று பச்சைக் காய்கறிகளையும் ஊறவைத்த தானியங்களையும் மட்டுமே தின்பதை வழக்கமாய் கொண்டிருந்திருக்கிறார். இவரைப்பார்த்த அக்கம்பக்கத்தார் பலரும் இப்படியெல்லாம் இருந்தால்தான் விலைவாசிக்கு தாக்குபிடித்து வாழமுடியுமென்று இவரது வழியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இதனால் கரண்ட் கம்பனியும் காஸ் கம்பனியும் இவர்மீது தனித்தனியே நஷ்டஈடு கோரி தொடுத்துள்ள வழக்குகளையும் சேர்த்தே விசாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  8. இவை எல்லாவற்றையும் விட இவரது மகாகுற்றம், காவானோபா என்று தன் நெஞ்சில் பச்சை குத்தியிருப்பது. அந்த பெயருக்கும் நமக்கும் எழுநூறாண்டுகால பகை இருப்பதை அறிந்தே நம்மை ஆத்திரமூட்டுவதற்காக அந்தப் பெயரை பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். அன்று ஹிஸ்பானியோலா தீவு பூர்வகுடிகளின் பிரம்பு ஈட்டி ஏந்தி நமது மூதாதை கொலம்பஸ்சின் கூட்டாளிகள் முப்பத்தொன்பது பேரையும் கொன்று குவித்தவன் காவானோபா. வெள்ளைத்தோலர்களாகிய நமது ஆக்கிரமிப்பை உலகத்தில் எதிர்த்த அந்த முதல் கலகக்காரனான செவ்விந்தியனின் பெயரை நினைவில் வைத்திருக்கும் ஒரே குற்றத்திற்காகக்கூட இவரை ஏழுமுறை தூக்கில்போட நமக்கு நியாயமிருக்கிறது.

தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்ட நீதிமன்றம் கூடுவதற்கு முதல்நாளிரவு நீதிமானும் அரசாங்க வழக்கறிஞரும் லிபரல் பாளையம் செல்போன் டவர் ஒன்றின் உச்சியில் பிணமாக தொங்க விடப்பட்டிருந்தனர். அவர்களது மரணஓலம் உலகெங்குமுள்ள செல்போன்களில் ரிங்டோனாக ஒலித்து பீதியூட்டியதால் எல்லோருமே ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டனர்.

அதன்பின் கதாநாயகன் குறித்தோ வழக்கு குறித்தோ யாதொரு தகவலுமில்லை. ஆனால் மலையை வெட்டக்கூடாது என்று கிரானைட் குவாரிகளில் நடந்த பாறையைத் தழுவும் போராட்டத்திலும், மூலிகைகளை பறிக்க காட்டுக்குள் வந்திறங்கிய வெளிநாட்டு விமானங்களை கையெறி குண்டுவீசி தகர்த்ததிலும், சியாட்டிலில் நடக்கவிருந்த சுதந்திரக் கொள்ளையர்களின் மாநாட்டு அரங்கை சூறையாடியதிலும் வெளிப்பட்ட உத்திகள் அவரால் வகுக்கப்பட்டவை என்ற நம்பிக்கை உலகெங்கும் பரவியது. லிபரல் பாளையத்தில் அவர் உருவாக்கிய காவானோபா சேனை என்னும் தலைமறைவு இயக்கம்தான் பின்னாளில் ஒவ்வொருவனுக்கும் அவனது சொந்த மண்ணையும் தன்மானத்தையும் மீட்டுக் கொடுத்தது என்பதாக முடிகிறது கதை.

இப்படி அதீதம் பேசும் கதைகள் கடைசியில் வெறும் கனவு என்பதாகவே முடியும் என்று மரபு வழிப்பட்ட முடிவை சிலர் அனுமானித்திருக்கக் கூடும். அவர்களுக்கு எனது அனுதாபம். கதைக்கும் நடப்புக்குமான உறவை கண்டறியாத அந்த பாலகர்கள் படித்து குஷிபெறுவதற்கான கதைகளை எழுத குளோபல் டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த அப்பாவி வாசகர்கள் அப்படியான கதைகளுக்காக பின்வரும் வெற்றுப்பக்கங்களில் காத்திருக்கத்தான் வேண்டும்.


வாசகர் கருத்துக்கள்
purachi
2009-06-29 06:44:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

//ஆனால் மலையை வெட்டக்கூடாது என்று கிரானைட் குவாரிகளில் நடந்த பாறையைத் தழுவும் போராட்டத்திலும், மூலிகைகளை பறிக்க காட்டுக்குள் வந்திறங்கிய வெளிநாட்டு விமானங்களை கையெறி குண்டுவீசி தகர்த்ததிலும், சியாட்டிலில் நடக்கவிருந்த சுதந்திரக் கொள்ளையர்களின் மாநாட்டு அரங்கை சூறையாடியதிலும் வெளிப்பட்ட உத்திகள் அவரால் வகுக்கப்பட்டவை என்ற நம்பிக்கை உலகெங்கும் பரவியது. லிபரல் பாளையத்தில் அவர் உருவாக்கிய காவானோபா சேனை என்னும் தலைமறைவு இயக்கம்தான் பின்னாளில் ஒவ்வொருவனுக்கும் அவனது சொந்த மண்ணையும் தன்மானத்தையும் மீட்டுக் கொடுத்தது என்பதாக முடிகிறது கதை//

இது நந்திகிராம், லால்கரை குறிப்பதாக கருதினால், ஆதவன் தீட்சன்யாதான் அரசாங்க வக்கீல் போல தெரிகிறார். அவரை என்றைக்கு தொங்க விடுவது என்று தெரியவில்லை. 

புரச்சி

Pin It