இந்தியாவில் காணப்படும் வழிபாட்டு மரபுகளை ஆராய்ச்சி செய்த மேனாட்டு மானிடவியலாளரான மிக்கின் மாரெட்டு இருவேறு வழிபாட்டு மரபுகள் நாட்டுப்புற மக்களிடையே வழக்கத்தில் இருப்பதைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். எழுத்து வடிவில் நடத்தைவிதிகளைப்  பின்பற்றும் பெரு (நெறி) மரபு மற்றும் எவ்விதமான எழுத்துவடிவ நடத்தை விதி களையும் பின்பற்றாமல் மரபுசார்ந்த, எழுதப்படாத நடத்தை விதிகளைப் பின்பற்றும் சிறு(நெறி)மரபு என பாகுபடுத்திக் காட்டுகிறார்.1

நாட்டுப்புற மக்களின் மண்ணிற்கு இயல்பான மரபைச் சிறு (நெறி) மரபு எனவும் அவர்களின் மண்ணிற்கு அயலான மரபைப் பெரு (நெறி )மரபு எனவும் பதிவு செய்யும் ஆராய்ச்சி அணுகுமுறை பொருத்தமானது அல்ல.2 மாறாக, இவற்றை முறையே இயல்மரபு, அயல் மரபு என மாற்றுச் சொல்லாட்சி களால் குறிப்பிடுவதே முறையானது.3 எழுத்துவடிவ நடத்தைவிதிகளைப் பின்பற்றாமையை மட்டுமே இயல் மரபுக்கான அடையாளம் என்று கொள்ள வேண்டுமா அல்லது இயல் மரபை அறுதியிடுவதில் வேறு ஏதாவது பண் பாட்டுக் காரணிகள் உள்ளனவா என்று காண முயற்சி மேற் கொள்ளப்பட்டது. இதற்காக இந்தியாவில் காணப்படும் பழங் குடி மற்றும் நாட்டுப்புறப் பண்பாடு சார்ந்த தரவுகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன.

இயல் மரபையும் அயல் மரபையும் பிரித்து அறிவதில் நிலவிடும் சிக்கல்கள்

இயல்மரபை அறுதியிடுவதற்கான ஆராய்ச்சி முயற்சியில் ஈடு படும் முன்பாக இன்றைய பண்பாட்டுத் தளங்களில் காணப் படும் இயல் மரபையும் அயல் மரபையும் எளிதில் பிரித்தறிய முடியுமா என்ற கேள்வி தோன்றுகிறது. ஏனென்றால், பெரும் பாலும் இந்திய வழிபாட்டு மரபுகளில் இயல் மரபும் அயல் மரபும் பல்வேறு நிலைகளில் காலம்காலமாகப் பின்னிப் பிணைந்து ஊடாடி வருகின்றன. ஆகவே இந்திய வழிபாட்டு மரபுகளில் பின்னிப் பிணைந்து காணப்படும் அயல்மரபையும் இயல் மரபையும் வேறுபடுத்தி பிரித்து அறிந்து இனம் காண்பது அவ்வளவு எளிதான செயலாக அமைவதில்லை.இதற்குச் சான்றாக, மேற்கு தமிழகத்தில் பெரும்பகுதியாக விளங்கும் கோயம்புத்தூரில் பெரிய அளவில் கடைபிடிக்கப் படும் இயல்மரபான கூத்தாண்டெ நோம்பி என்னும் நாட்டுப் புறத் திருவிழாவில் அரவான் பண்டிகை என்னும் அயல் மரபும் எளிதாகப் பிரித்தறிய முடியாதவாறு கலந்து காணப்படு வதை எடுத்துக்காட்டலாம். இவ்வழிபாட்டு மரபின்போது பாடப்படும் ..... நாடு செழிக்கோணும் நல்ல மழை பெய்யோணும்
ஊரு செழிக்கோணும் உத்த மழை பெய்யோணும்
களத்துக்கொரு மல்லாண்டை செய்யோணும்
ஊருக்கொரு கூத்தாண்டை செய்யோணும்
ஆணுபோன பக்கம் அரச பட்டோம் ஆளோணும்
பொண்ணுபோன பக்கம் பெத்துப் பெருகோணும்...  நாட்டுப்புறப் பாடல்வரிகள் மல்லாண்ட4 என்பது களம் செழிக் கவும் கூத்தாண்டெ என்பது ஊர் செழிக்கவும் வழிபடப்படு வதை எடுத்துக்காட்டிக் கூத்தாண்டெ நோம்பி இயல் மரபின் வகைப்பட்டது என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும். இதனால், மேற்குத்தமிழக வளமை வழிபாட்டில் பண்பாட்டுத் தலைவனான கூத்தாண்டெ இயல்மரபுக்கூறு, மகாபாரதக் கதை மாந்தனான அரவான் என்னும் அயல்மரபுக்கூறுடன் இணைந்து இங்கு ஒன்றாகக் காட்டப்படுவது புலனாகும்.

கோயம்புத்தூர் வட்டாரப் பகுதியில் கடைபிடிக்கப்படும் இந்தக் கூத்தாண்டெ நோம்பியின் போது, கூத்தாண்டெ களப்பலி கொடுக்கப்படுவதாகக் காட்டப்பட்டாலும் நடுத் தமிழ்நாட்டின் (கூவாகம், பிள்ளையார் குப்பம், அண்ணாமலை நகர் திரு வேட்களம்) பகுதிகளில் காணப்படுவதுபோல கூத்தாண்டெ உருவத்தில் தலை நீக்கம் மேற்கொள்ளப்படாமல் பூசாரியின் இரு கைப்பெருவிரல்களால் முகம் அழிக்கப்படும் முகம் அழித்தல் என்ற சடங்கே மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, முகம் அழிக்கும்போது கிடைக்கும் களிமண் வளமைக்காக ஊர்மக்களால் அவரவர் வீடுகளில் கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்நடைமுறையின் வாயிலாக கூத்தாண்டெ நோம்பியானது வளமை வழிபாட்டின் வகைப்பட்ட இயல் மரபு என்பதும் இது மகாபாரதக் கதையின் தாக்கத்தால் அரவான் களப்பலி என்னும் அயல் மரபுக்கூறுடன் இணைக்கப்பட்டுள் ளது என்பதும் மேலும் உறுதிப்படுகிறது.5 இதுபோன்ற (இயல்மரபுக்கூறுடன் அயல்மரபுக்கூறு இணைந்து விட்ட) கலப்புச் சூழல்களில் அயல் மரபிலிருந்து இயல்மரபை வேறுபடுத்திப் பிரித்தறிந்து அறுதியிட உதவும் பண்பாட்டுக் காரணிகளை இனம் கண்டு அவற்றைப் பதிவு செய்வது வழி பாட்டு மரபுகளை ஆராயும் தமிழக மாந்தவியல்சார் ஆய்வுல கில் முக்கியத் தேவையாகும். இருப்பினும், எப்போது இது போன்ற பண்பாட்டுக் கலப்புகள் ஏற்பட்டன எனத் துல்லியமாக எடுத்துக்காட்ட முடியா நிலை நிலவுகிறது.

நாட்டுப்புறச் சமயம்சார் மந்திர மரபுகளும் இயல்மரபை அறுதியிடுவதில் அவற்றின் பங்களிப்பும்

நாட்டுப்புறச் சமயம்சார் நடைமுறைகளில் தொல்சமயக்கூறுக ளில் ஒன்றான மந்திரம் மக்களால் பின்பற்றப்படும் இரு வேறு அடிப்படை விதிகளின்படி6 தொத்து மந்திரம் தொடு மந்திரம் என்றும் ஒத்த மந்திரம் அல்லது பாவனை மந்திரம் என்றும் இருவகைகளாகப் பிரித்து அறியப்படுகிறது. நாட்டுப்புற வழி பாட்டு மரபில் இந்த இருநிலை மந்திரங்களும் தமக்கெனத் தனித்த இடங்களைப் பெற்று மண் ணிற்கே உரிய இயல் மரபை அறுதியி டுவதிலும் பெரிய அளவிற்குத் துணை நிற்கின்றன என்பதைக் கீழ்க் குறித்த பண்பாட்டுக் காரணிகள் வழியே சற்று விரிவாகக் காண்போம்.

பண்பாட்டுக்காரணி:1-வழிபடு உருவங்களுக்கு ஆற்றல் ஏற்றுதல்

உருவாக்கப்பட்ட வழிபாட்டு உருவங் களுக்கு ஆற்றல் ஏற்றுதல் என்பது இயல் மரபிலும் அயல் மரபிலும் காணப்படும் பொதுப்படையான வழக் கம். இருப்பினும், ஆற்றல் ஏற்றப் பட்ட உருவம் சற்றுச் சிதைந்து போய் விட்டாலும் அந்த உருவத்திலிருந்து ஆற்றல் வெளியேறிவிடும் என்றும் அதனால் அது ஆற்றல் இல்லாததாகி வழிபடுவதற்குத் தகுதி யற்றது ஆகிவிடுகிறது என்றும் கருதி அதை வழிபாட்டிலி ருந்து அகற்றிவிடுகிறது அயல்மரபு. இதற்கு நேர்மாறாக, ஆற்றல் ஏற்றப்பட்ட வழிபடு உருவம் உருக்குலைந்து துண்டு துண்டாகப் போய்விட்டாலும் அதன் ஆற்றல் உருக்குலைந்து போன அந்த வழிபடு உருவத்திலும் உடைந்த துண்டுகளிலும் நிலைத்து நிற்கிறது என்றும் அதனால் அது முன்னைப் போலவே ஆற்றல் கொண்டது என்றும் கருதி சிதைந்த வழி படு உருவத்தையும் அதன் துண்டுகளையும் தொடர்ந்து வழி பாட்டில் வைத்துக் கொள்கிறது இயல் மரபு. கோவை வட்டார அருந்ததியர் குடியிருப்புப் பகுதிகளில் காணப்படும் மதுரை வீரன் (உடனமர் பொம்மி, வெள்ளை யம்மா) வழிபாட்டு மரபை இதற்குத் தக்க சான்றாகக் குறிப்பிட லாம். இந்த வழிபாட்டு மரபிற்கென குதிரைமீது அமர்ந்துள்ள மதுரை வீரனுக்கு இருபுறமும் பொம்மி, வெள்ளையம்மா இருப் பது போன்ற சுடுமண் உருவத்தைக் கோயம்புத்தூர் வட்டார அருந்ததியர் சமூகத்தினர் ஆண்டுதோறும் தம் வாழிடங்களின் அருகில் அமைத்து வழிபடுகின்றனர். அந்த ஆண்டு முடிவதற் குள் இந்தச் சுடுமண் உருவம் மெல்லமெல்லச் சிதைந்து உருக் குலைந்து போகிறது. இருந்தாலும் அது தொடர்ந்து வழிபடப் படுகிறது. தொடர்ந்து அடுத்த ஆண்டு புதிதாக மதுரை வீரன் (உடனமர் பொம்மி, வெள்ளையம்மா) சுடுமண் உருவத்தைச் செய்து வழிபாட்டில் சேர்க்கும்போதும் முந்தைய ஆண்டுகளைச் சேர்ந்த உருக்குலைந்த பழைய சுடுமண் உருவங்களும் ஆற்றல் உள்ளவையாகக் கருதப்பட்டுத் தொடர்ந்து புதுச் சுடு மண் உருவத்துடன் சேர்த்து வழிபடப்படுகின்றன.

தங்களின் தற்போதைய வாழிடத்திலிருந்து நெடுந்தொலைவு சென்று தம் குலதெய்வத்தை வழிபட முடியாதவர்கள் அந்த தெய்வ உருவம் நிலை கொண்டுள்ள இடத்திலிருந்து பிடி மண் கொண்டுவந்து அதை வைத்துப் புதியதாக அந்த தெய்வ உரு வத்தை அமைத்தோ அப்பிடிமண்ணையே ஆற்றல்மிக்கதாகக் கருதியோ வழிபடும் வழக்கத்தை இங்கு ஒப்பிட்டுப் பார்க்க லாம். அதாவது, ஒருமுறை தொடர்புடையது எப்போதும் தொடர்புடையதாகவே இருக்கும் என்ற தொத்து மந்திர அடிப்படையை இயல் மரபினர் நம்புகின்றனர். அயல் மர பிலோ இதுபோன்ற தொடர் உறவுகள் நம்பப்படுவதில்லை என்பது இங்குக் கருத்தில் கொள்ளத்தக்கது. மேலும், வழிபடு உருவங்களுக்கு ஆற்றல் ஏற்று தல் என்பது மிக எளிய சடங்காக இயல் மரபில் முடிந்துவிட, அயல் மரபிலோ இது மந்திர உச்சாடனம்,  வேள்வி என மிகப்பெரிய சடங்குத் தொகுதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதும் கவனம் கொள்ளத்தக்கது.

பண்பாட்டுக்காரணி-2: ஆற்றல் ஏற்றப்பட்ட வழிபடு உருவங் களுக்கு மறு உயிர்ப்பு அளித்தல்.

வழிபடு உருவங்களுக்கு ஆற்றல் ஏற்றுதல் என்பது இயல்மரபி லும் அயல்மரபிலும் பொதுவாகக் கடைபிடிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட காலஇடைவெளியில் வழிபடு உருவங்களில் ஏற்றப் பட்ட ஆற்றலைத் தூண்டி அதற்கு மறுவுயிர்ப்பு அளிக்கச் சடங்கு மேற்கொள்வது என்பது இயல்மரபில் மட்டுமே மேற் கொள்ளப்படுகிறது. இதற்குச் சான்றாக, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், வெள்ளரிக்கொம்பைக் கிராமத்தைத் தங்கள் வாழிடமாகக் கொண்டுள்ள குறும்பர் பழங்குடியினர் ஆண்டுதோறும் நடத் தும் மறுஉயிர்ப்பு அளிக்கும் சடங்கைக் குறிப்பிடலாம். வெள் ளரிக்கொம்பை குறும்பர்கள பூசாரி ஆண்டுதோறும் குறிப் பிட்ட நாளன்று தன் வீட்டின் சுவர்மீது வரைந்து பின் வெள்ளை பூசி மறைக்கப்பட்ட இனக்குழுத் தெய்வ உருவத்தை அதன் வரைகோட்டின்மீது மீண்டும் வரைந்து, அதன் வாயிலாக அந்த வரையோவியத்தில் வாழ்ந்து வரும் இனக்குழுத் தெய்வத்தின் ஆவியை மறுஉயிர்ப்பு பெறச் செய்வதாக நம்புகின்றனர். இந்த மறு உயிர்ப்பிக்கும் சடங்கு முடிந்த மறுநாள் குறும்பர் பூசாரி முன்போலவே அந்த வரையோவியத்தின் மேல் மீண்டும் வெள்ளைபூசித் தெய்வ உருவை மறைத்துவிடுகிறார். இதனால்  அந்தத் தெய்வ உருவின் மீயியற்கை ஆற்றல் தேவையின்றி  வீணாகப் போவதிலிருந்து காக்கப்படுவதுடன் தேவைப்படும் போது மீண்டும் மீண்டும் முழுப் பயன்பாட்டிற்கும் தடை யின்றிக் காலங்காலமாக அதாவது, தலைமுறை தலைமுறை யாக தம் சமுதாயத்திற்கு கிடைப்பது உறுதி செய்யப்படுவதாக வும்  இந்தப் பழங்குடி மக்கள் நம்புகின்றனர். இவ்வாறு, வழிபடு உருவங்களில் வாழ்வதாக நம்பப்படும் ஆற்றலை மறு உயிர்ப்படையச்செய்வதற்குக் குறும்பர் பழங் குடியினரின் பூசாரி தங்கள் இனக்குழுத் தெய்வ உருவத்தை மீள வரையும் செயலைத் தொத்து மந்திர வகையின் கீழே அடக்கலாம். மேற்படித் தெய்வ உருவம் மறுவரைதலுக்கு உள்படுத்தப்படும்போது அதன் ஆற்றலும் மறைக்கப்பட்டுக் காக்கப்படுகிறது என்பதையும் ஒத்த மந்திர வகையினதாக இனம் காணலாம். இது போன்ற சடங்கு முறைகள் அயல் மரபுக்கு அயலானவை.

பண்பாட்டுக்காரணி-3: மறுஉயிர்ப்புக்குக் குருதியைப் பயன்படுத்துதல்

உயிரற்ற பொருள்களில் ஆவிகள் குடியேறுவதால் அவை ஆற்றலுடையவை ஆகின்றன என்றும் இடைவிடாத தொடர்ந்த பயன்பாட்டால் அந்த ஆற்றல் ஏறிய பொருள்கள் தமது ஆற்றலை இழக்கின்றன என்றும் அவ்வாறு ஆற்றலை இழக்கும்போது அந்த பொருள்களின் மறு உயிர்ப்புக்குக் குருதி தேவைப்படுகிறது என்றும் இயல்மரபில் கருதப்படுகிறது.  ஆந்திர மாநில சவரர் பழங்குடியினர் தாங்கள் பயன்படுத்தும்  வேட்டைக்கான அம்புமுனைகளில் ஆவிகள் குடியேறுவதால் அவை ஆற்றலுடையவை ஆகின்றன எனவும் இடைவிடாத தொடர்ந்த பயன்பாட்டால் அவை ஆற்றல் இழப்புக்கு ஆளா கின்றன எனவும் பெண்கள் வழக்கமாக வந்து செல்லும் நீர் நிலையின் வழிப்பாதையில் அவைகளைப்  போட்டு வைப்ப தால் நீர் கொண்டு வர அங்கு வந்துபோகும் பெண்களில் வீட்டு விலக்காகியுள்ள பெண்களின் குருதி பட்டு அதனால் மேற்படி அம்புகள் மறுவுயிர்ப்புப் பெற்று மீண்டும் ஆற்றலுடன் வேட்டையில் பயனளிக்கின்றன எனவும் கருதப்படுவதை இதற்குச் சான்றாகக் காட்டலாம். இதபோலவே வழிபடு உரு வங்களுக்கு மறுவுயிர்ப்பு அளிப்ப தற்காகவே குறிப்பிட்ட கால இடைவெளியில் அல்லது விழாவின்போது குருதிப்படையலா னது இயல்மரபில் மேற்கொள்ளப்படுகிறது என்பதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

இவற்றுக்கு நேர்மாறாக அயல்மரபானது மறுவுயிர்ப்புச் சடங் கில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாகக் குருதி இடம் பெறு வதைப் புறந்தள்ளி விலக்குவதையும்-அதிலும் குறிப்பாக குருதி வெளிப்படும் வீட்டு விலக்கையும் அவ்வாறு வீட்டு விலக்கா கும் பெண்களைத் தூய்மைக் குறைவானவர்களாகக் கருதுவ தையும் தன் இயல்பாகக் கொண்டுள்ளது என்பது இங்கு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது. பண்பாட்டுக்காரணி-மிக்ஷி: இறந்தவர்களின் எலும்பு மிச்சங்கள் மீது காட்டப்படும் விழுமியம் இறந்தவர்களின் எலும்பு மிச்சங்கள் புனிதத்தன்மை வாய்ந் தவை என இயல்மரபும் அயல்மரபும் பொதுவாகக் கருதினா லும் அவற்றின் மீது கட்டப்படும் விழுமியத்தில் இரண்டும் பெரியளவிற்கு வேறுபடுகின்றன. இறந்தவர்களின் ஆவிகள் மறுபிறப்பு எடுக்க அவர்களின் எலும்பு மிச்சங்கள் பயன்படும் என அவற்றைப் போற்றிப் பாதுகாக்குமளவிற்கு இயல் மரபா னது அவற்றின் மீது விழுமியம் காட்டுகிறது. மாறாக, இறந்த வர்களின் எலும்பு மிச்சங்களை நீர்நிலைகளில் போடுவதுடன் தன் கடமை முடிந்துவிடுகிறது என அயல்மரபு கருதுகிறது.

எடுத்துக்காட்டாக, நீலகிரித் தொதவர் மற்றும் கோத்தர் பழங் குடியினர் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சடங்கைப்  பிச்சைச் சாவு என்றும் ஓராண்டு முடிவிற்குப் பின் அடக்கம் செய்த இடத்திலிருந்து இறந்தவர்களின் எலும்பு மிச்சங்களைத் திரட்டி மறு அடக்கம் செய்யும் சடங்கை உலர் சடங்கு என்றும் விரிவாகக் கடைப்பிடிக்கின்றனர். அயல் மரபிலோ, பத்தாம் நாள் சடங்கு அல்லது 16ம் நாள் சடங்கு மேற்கொள்ளப்பட்ட உடனே இறந்தவர்களின் எலும்பு மிச்சங் களுக்கும் தனக்குமான தொடர்பு முற்றாக அற்றுப் போவதாகக் கருதப்படுகிறது. நீலகிரி, கோயம்புத்தூர் இருளர் பழங்குடி யினர் மற்றும் மத்தியப் பிரதேசக் கோண்டுப் பழங்குடியினர் இறந்தவர்களின் எலும்பு மிச்சங்களைச் சுடுமண் தாழிகளில் போட்டுத் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் ஒரு மூலையில் தரைக்குக் கீழே புதைத்துப் பாதுகாக்கின்றனர். நாகர் பழங்குடி யினர் இன்னும் சற்று மேலாக, இறந்தவர்களின் மண்டை யோடுகள் உள்ளிட்ட எலும்பு மிச்சங்களைத் தங்கள் வாழிடங் களில் வெளிப்படையாக வைத்துப் பாதுகாக்கின்றனர். இவ்வா றான பண்பாட்டு நடத்தைகளால் இறந்தவர்களின் ஆற்றல் தங்களுடனேயே நிலைத்து இருக்கும் என இந்தப் பழங் குடியின மக்கள் நம்புகின்றனர்.

முடிவுரை

வழிபடு உருவங்களுக்கு ஆற்றல் ஏற்றுதல், ஆற்றல் ஏற்றப் பட்ட வழிபடு உருவங்களுக்கு மறு உயிர்ப்பு அளித்தல், மறு உயிர்ப்புக்குக் குருதியைப் பயன்படுத்துதல், இறந்தவர்களின் எலும்பு மிச்சங்கள் மீது அளவு கடந்த விழுமியம் காட்டுதல் உள்ளிட்ட பண்பாட்டு நடத்தைகள் வாயிலாக இயல்மரபு தனித்த நிலைபாட்டையும் அயல்மரபு அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைபாட்டையும் எடுப்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். எனவே, இந்திய வழிபாட்டு மரபுகளில் கலந்து காணப்படும் இயல் மரபையும் அயல் மரபையும் வேறு படுத்திக் காண முடியும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது.

அடிக்குறிப்புகள்

1.1955 காலகட்டத்தின்போது மிக்கிம் மாரெட்டு வட இந்தியாவில் உள்ள கிஷன்கார் என்னும் கிராமத்தில் கடைபிடிக்கப்படும் சமய முறைமைகள் குறித்து தான் மேற்கொண்ட தனது ஆராய்ச்சியின் வாயிலாக இந்த இருவேறு நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளை ஆராய்ச்சி உலகத்திற்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.
2.மாரெட்டு அறிமுகப்படுத்திய ‘Great Tradition’, Little Tradition’ என்ற ஆங்கிலச் சொல்லாட்சிகளுக்கு ஈடாகக் க.த.திருநாவுக் கரசு (1984) பெருமரபு, சிறு மரபு எனவும் பெ.சுப்பிரமணியன் (2000) சிறுநெறி மரபு, பெருநெறி மரபு எனவும் மாறுபட்ட கலைச் சொற்களைத் தமிழில் புழக்கத்திற்கு அறிமுகப்படுத்துகின்றனர்.
3.விரிவான செய்திகளுக்குக் காண்க- சி.மகேசுவரன் (2002), இயல் மரபினை அறுதியிடுவதில் நாட்டுப்புறவியல் ஆய்வுகளின் பங்களிப்பு
4.மல்லாண்டெ தொடர்பான விரிவான தகவல்களுக்கு:  சி.மகேசு வரன் (1996)கொங்குநாட்டில் மல்லாண்டை- ஓர் அறிமுகம்
5.விரிவான தகவல்களுக்கு: சி.விணீலீமீஷ்ணீக்ஷீணீஸீ(1997). C.Maheswaran(1997). “Kooththandai Thiruvizhla A Study in Cultural pluralism in Tamil Folklore”.
6. ஒரு முறை தொடர்புடையது எப்போதும் தொடர்புடையதாகவே இருக்கும் ((Once is contact is always in contact) ஒத்தது ஒத்ததை உருவாக்கும் (Like produces like) என்னும் இரு அடிப்படைகளின் வழிமுறையே தொத்து விதி (Low of contagion) ஒத்த விதி ((Law of similarity) உணரப்பட்டன. இந்த இருவிதிகளின் அடிப்படையில், மந்திரமும் முறையே தொத்து மந்திரம் அல்லது தொடு மந்திரம் (contagious Magic), ஒத்த மந்திரம் (Homeapathic Magic) அல்லது பாவனை மந்திரம் (Imitative Magic) எனப் பகுத்து அறியப்படுகிறது. மேலும் விரிவானத் தகவல்களுக்கு காண்க- இ.முத்தய்யா(1980), ஆ.சிவசுப்பிரமணியன் (1988) மற்றும் தே.ஞானசேகரன் (1992).
நோக்கிட்டு ஏடுகள்
*சிவசுப்பிரமணியன்,ஆ-1988. மந்திரம் சடங்குகள், சென்னை. நியூ செஞ்சுரி புக் அவுசு
*சுப்பிரமணியன், பெ. - 2000. தேவேந்திர குல வழிபாட்டு மரபுகள் (பழனி வட்டாரம்), கோயம்புத்தூர் தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றம்.
*செல்வராசு, சிலம்பு நா. மற்றும் சண்முக விஷ்ணுதாசன் (பதிப்பர்). -1992. நாடுதோறும் நாட்டுப்புற மரபுகள். இருளக்குப்பம் (புதுச் சேரி), சவீதா வெளியீட்டகம்.
*ஞானசேகரன்,தே.- 1992 நாட்டார் சமயம், தோற்றமும் வளர்ச்சியும், மதுரை. கியூரி பதிப்பகத்தார்.
*மகேசுவரன்,சி.- 1996. கொங்குநாட்டில் மல்லாண்டை - ஓர் அறிமுகம் தமிழர் பண்பாட்டு வரலாறு-1 (பதிப்பர்) குருசாமி சித்தன் மற்றும் தே.ஞானசேகரன், கோயம்புத்தூர், தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றம்.
*முத்தய்யா, இ. - 1980. நாட்டுப்புற மருத்துவ மந்திரச் சடங்குகள். மதுரை சர்வோதய இலக்கியப்பண்ணை.
*Maheswaran.C.- 1998. ‘Kooththaandai Thiruvizhaa : A Study in cultural pluralism” Museum’s Journal. Chennai : Government Museum.
*Maheswaran,C. - 2001. “Contribution of Tribal Nilgiris in the preservation of Our Art & Cultural Heritage” Proceedings cultural heritage” Chennai. Government Museum.
*1987, The Encyclopaedia of Religion (vol 9) macmillan publishing house.

- முனைவர் சி.மகேசுவரன்