வாசலில்லா வீட்டிற்குள்
எதன் பொருட்டோ
கன்னம் வைத்து களவாணியென உட்செல்கிறேன்.

நீள் நெடிய காலமாக
வெளிவரும் பாதை தவிர்த்து
நீண்டு கொண்டேயிருக்கும் பாதையில்
சென்று கொண்டேயிருக்கிறேன்.

வெல்வதற்கரியதான விதைகளை
வலி(யு)வுடன் உள்வாங்கி
எதிர்படும் கீழ்மைகளை சற்றே புறந்தள்ளி
பைசாசங்கள் விழுங்கிய பருவங்கள் கடந்து
பயணம் போகிறது.

இழந்ததையெண்ணி ஏங்கி
அழ முடியாத தூரத்தில்
திசையறியா பயணத்தில்
துணையென்று எவருமில்லை.

விழி மின்னல் மறைந்த ஒரு இருட்பகலில்
விரலிடுக்குகள் வழியே
பாய்ந்து செல்லும் நம்பிக்கைகளை
நடை தளர தொடர்ந்து
களைப்புற்று
மூர்ச்சையுறுகிறேன்.

- ஆயி

Pin It