வாழ்க்கை வரலாறுகள் பெரும்பாலும் புகழ்பாடும் ரகத்திலேயே அமைகின்றன. சில சமயங்களில் ஒருவரது புகழைக் குலைக்கவேண்டும் என்ற காரணத்துக்காகவே எழுதப்பட்டவையாக இருக்கின்றன. காரணம் எதுவாக இருந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் எழுத்தாளர் தகவல்கள் அனைத்தையும் அழகாக திரட்டிக் கொடுத்தால், வாசகர்கள் தாங்களே சில முடிவுகளுக்கு வரமுடியும்.

தொழில் முனைவோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர்களுக்கு உள்ள பெரிய சிக்கல், சரியான தகவல் முழுமையாகத் தெரியாமல் இருப்பதே. நாடுகள், பேரரசுகளாக எப்படி ஆயின என்பதற்கு தெளிவான வரலாறுகள் உள்ளன. ஆனால் எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறு நாட்டில் இருந்த ஒருவர் இன்று உலக ஊடக சாம்ராஜியத்தை எப்படிக் கட்டி எழுப்பினார் என்பதைத் தெரிந்துகொள்வது அவ்வளவு எளிது கிடையாது.

ரூப்பர்ட் மர்டாக் என்ற ஆஸ்திரேலியரது தந்தை கீத் மர்டாக் மாரடைப்பால் இறந்தபோது, ரூப்பர்ட் பிரிட்டனில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு அவசரமாகத் திரும்பிய ரூப்பர்ட், அதன்பின் தன் கல்லூரிப் படிப்பை முடிக்கவே இல்லை. அவரது தந்தை அவருக்கு விட்டுச் சென்ற சொத்து ஒரு சாதாரண, குறைவான எண்ணிக்கையில் விற்கும் செய்தித்தாள்தான். அதிலிருந்து ரூப்பர்ட் மர்டாக் எப்படி கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிலையங்கள், செயற்கைக்கோள் வழி ஒளிபரப்பு, சினிமா என்று உலகின் பெரும் வர்த்தக சாம்ராஜியத்தை உருவாக்கினார் என்பதை புத்தக ஆசிரியர் நீல் செனோவித் பிரமாதமாக எடுத்துக்காட்டுகிறார்.

அவசரப்படாதீர்கள்... இது ஒன்றும் ரூப்பர்ட் மர்டாக் புகழ்பாடும் புத்தகம் அல்ல. இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்ற வகையில் செனோவித், மர்டாக்கின் சாம்ராஜியம் எப்படி செங்கல் செங்கல்லாக உருவானது என்று கையில் லென்ஸை எடுத்துக்கொண்டு தேடி அலைகிறார். அப்படி செனோவித் காட்டும் உருவம் மிகவும் பயங்கரமானது. ரூப்பர்ட் மர்டாக்கின் வளர்ச்சியில் பல பயங்கரங்கள் கண்ணுக்குப் புலப்படுகின்றன.

செய்தித்தாள்கள் தரும் பலத்தை மர்டாக் எப்படி கையில் எடுத்துக்கொண்டு, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளைத் தன் கைக்குள் வளைத்துப்போடுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியரான மர்டாக், பிரிட்டனில் இரண்டு டேப்லாய்ட் செய்தித்தாள்களான சன், நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் ஆகியவற்றுடன் பிரிட்டனில் மதிப்பு மிக்க தி டைம்ஸ் ஆகியவற்றையும் தன்வசப்படுத்துகிறார். அவற்றின் துணைகொண்டு, அதுநாள் வரை பொதுவாக கன்சர்வேடிவ் கட்சியை ஆதரித்துக்கொண்டிருந்தவர், திடீரென லேபர் கட்சியின் டோனி பிளெயரை ஆதரிக்கிறார். பிளெயர் ஜெயித்ததற்கு அதுவும் ஒரு காரணம். அதைத் தொடர்ந்து, பிளெயரின் உதவியைப் பெற்று தனக்கு எதிராக வரக்கூடிய சட்டங்கள் நிறைவேறாமல் பார்த்துக்கொள்கிறார். தனக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றுமாறு பார்த்துக்கொள்கிறார்.

பிரிட்டனில் ஊடகங்களைக் கையகப்படுத்தும் மர்டாக், தனக்கு எதிராக இருக்கும் தொழிற்சங்கங்களை உடைக்கிறார். பின்னர், அரசியல் துணையுடன், செய்தித்தாள்களோடு கூட, செயற்கைக்கோள் வழி ஒளிபரப்புச் சேவை (இன்று நம் நாட்டில் டி.டி.எச் என்கிறோமே) ஒன்றைத் தருகிறார். இவை பணம் கொழிக்கும் தொழிலாக மாற, அவர் கால்பந்து ஆட்டங்களை தன் தொலைக்காட்சியில் காண்பிக்கும் உரிமத்தைப் பெறுகிறார். இங்கெல்லாம் அவருக்குச் சாதகமாக பல இடங்களில் சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. இத்தாலியில் மர்டாக் ஒரு நிறுவனத்தை வாங்குவதற்கு, பிளெயரின் அலுவலகத்திலிருந்து போன் மூலம் உதவி கிடைக்கிறது.

அடுத்து அமெரிக்காவில் தன் பார்வையைப் பதிக்கும் மர்டாக், அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, தன் ஆஸ்திரேலியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்து, அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுகிறார். அப்படி இருந்தால்தான், அவரால் அந்த நாட்டில் தொலைக்காட்சி நெட்வொர்க் ஒன்றை நடத்தமுடியும்.

இன்று மர்டாக்கின் ஊடக சாம்ராஜ்ஜியம் இல்லாத கண்டங்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் அனைத்தும் எப்படி உருவானது என்பதில் நிறைய அசிங்கங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. மோசமான, மூன்றாந்தர நாளேடுகள் அம்மண அழகிகளின் படங்களையும் சமூகத்தின் கேவலங்களையும் வெளியே காண்பித்தே பணம் சம்பாதித்தவை. சட்டத்துக்குப் புறம்பாக தொலைபேசியில் ஒட்டுக்கேட்டு அந்தத் தகவல்களைச் செய்திகளாக ஊடகங்களில் வெளியிடுவது. அறியப்பட்ட கிரிமினல்களோடு சேர்ந்து ஜாயிண்ட் வென்ச்சர் கம்பெனிகளை உருவாக்குவது. பல நிறுவனங்களை உருவாக்கி, எது எந்த நிறுவனத்தை கண்ட்ரோல் செய்கிறது என்பதே வெளியே தெரியாமல், எல்லா நாட்டிலும் ஒட்டுமொத்தமாக வரிகளை ஏய்ப்பது. வங்கிகளிடம் எக்கச்சக்கமாக, பொய்க்கு மேல் பொய் பேசி கடன்கள் வாங்குவது. பிற பங்குதாரர்களை ஏதோ விதத்தில் ஏமாற்றி, நிறுவனத்தில் தன் பங்குகளை அதிக சதவிகிதத்தில் வைத்திருப்பது. இப்படிப் பலப்பல தில்லுமுல்லுகள்.

நீல் செனோவித், ஆஸ்திரேலியாவின் “ஆஸ்திரேலியன் ஃபைனான்ஷியல் ரிவ்யூ’ என்ற பத்திரிகையில் இதழாளராகப் பணிபுரியும்போது இந்தப் புத்தகத்தை எழுதினார். அவரது தினசரி வேலையில், மர்டாக்கின் நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்று கண்காணிப்பதும் ஒன்று. செனோவித் தோண்டித் துருவி பல கட்டுரைகள் எழுதியதன் காரணமாக, ஆஸ்திரேலிய அரசு மர்டாக்கின் நிறுவனங்கள்மேல் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது. ஆனால் அதனால் மர்டாக்மீது எந்த வழக்கும் நிரூபணமாகவில்லை என்பது வேறு விஷயம்.

ஆனால், மர்டாக் செய்த அனைத்து தில்லுமுல்லும், அவருக்குக் கிடைத்த பணமும் வளர்ச்சியும் முற்றிலும் அதிர்ஷ்டம் என்றும் சொல்லிவிட முடியாது. அவரிடம் ஜெயிக்கவேண்டும் என்ற வெறி இருந்தது. அந்த வெறியுடன் கூட, சட்டத்தைத் தன் இஷ்டத்துக்கு வளைத்தால் அதனால் தவறில்லை என்று எண்ணும் மனமும் இருந்தது. அத்துடன் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை உடனுக்குடன் பாய்ந்து கவ்விக்கொள்ளும் வேகமும் இருந்தது. ஒரு காலத்தில் அரசுகளும் விளையாட்டு அமைப்புகளும் மர்டாக்கைக் கண்டு நடுங்கினார்கள். 1990களின் மத்தியில், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒரு தலைமை நிர்வாகி என்னிடம் நேரடியாகவே, மர்டாக்குக்கு கிரிக்கெட் உரிமம் எதையும் கொடுக்கமாட்டோம்; அவர் கிரிக்கெட்டை அழித்துவிடுவார் என்றார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து அதே அமைப்பே உலகக் கோப்பை ஒளிபரப்பு உரிமத்தை மர்டாக்கின் நிறுவனத்துக்கு விற்றது.

மர்டாக் தொட்ட அனைத்திலும் ஜெயிக்கவில்லை. மாபெரும் தோல்விகளை அவர் சந்தித்துள்ளார். ஆனால் அவற்றை மீறி பல வெற்றிகளையும் அவர் குவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் (2008_09) அவரது குழுமம் மாபெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதை அவர் எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்பது ஒரு பக்கம். மற்றொரு பக்கம், அவரது சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளும், அவருக்கு அடுத்து யார் அவர் உருவாக்கியுள்ள மிகப்பெரிய நிறுவனத்தை மேற்கொண்டு நடத்தப்போகிறார் என்ற கேள்வியும்.

அவருடன் பல காலம் வாழ்ந்த அவரது இரண்டாவது மனைவி அன்னா, (முதல் மனைவியுடனான திருமணம், ஆகி சில வருடங்களிலேயே உடைந்துவிட்டது), மர்டாக் 65 வயதைத் தாண்டியதும் அவருடன் விவாகரத்து செய்தார். இது ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால் அதற்குக் காரணம் இருந்தது. அந்த வயதில் தன் கணவர் ஓய்வு பெறவேண்டும் என்று மனைவி விரும்பினார். ஆனால் மர்டாக் ஓய்வு பற்றி கவலைப்படவில்லை. அத்துடன், ரூப்பர்ட்அன்னா தம்பதிகளின் மூன்று குழந்தைகளுக்கும் இடையில் வீட்டிலேயே போட்டியை ஊக்குவித்தார். இன்று அம்பானி குடும்பத்தைப் பார்ப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்வார்கள். அனில் அம்பானி முகேஷ் அம்பானி இடையேயான மோசமான உறவால், எரிவாயுவின் விலை போல பல விஷயங்களில் மிகப்பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அன்னா, தன் பிள்ளைகள் இடையே தேவையில்லாத உரசல்கள் ஏற்படுவதை விரும்பவில்லை. ஆனால் ரூப்பர்ட் இதைப்பற்றிக் கவலைப்படாமல் நடந்து கொண்டார். அதனைப் பொறுத்துக்கொள்ளாத அன்னா, விவாகரத்து கோரி, விலகிக்கொண்டார்.

அதனால் மர்டாக் என்ன செய்தார்? சிறிதும் கவலைப்படவில்லை. அப்போது சீன அரசாங்கத்திடம் தொலைக்காட்சி உரிமம் பெற அவர் போராடிக் கொண்டிருந்தார். எனவே மூன்றாவதாக சீனப் பெண் ஒருத்தியை மர்டாக் மணந்து கொண்டார். விரைவில் சீன அரசிடமிருந்து தொலைக்காட்சி உரிமத்தையும் பெற்றார்.

இந்த ஒரு நிகழ்ச்சி போதும், மர்டாக்கின் குணத்தைப் புரிந்துகொள்ள. ஒரு மனிதன், தன் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்படுவதில்லை; சட்டங்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட மனிதன், எத்தனைதான் புத்திசாலியாக இருந்தாலும், மிகவும் ஆபத்தானவன். அப்படிப்பட்ட மனிதனுடன் உறவாடும் பிறரும் நாட்டின் அரசுகளும் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு மனிதரான மர்டாக்கின் தொழில் வாழ்க்கையைப் பற்றி மிக ஆழமாக அலசி விவிரிக்கிறது இந்த நூல். இந்தியாவில் பல தொலைக்காட்சி சேனல்களை நடத்தும் மர்டாக்கைப் பற்றி இந்திய மக்களும் இந்திய அரசும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த நூலை அவசியம் படிக்கவேண்டும்.