நெரிசலான சாலையில் சிவப்பு விளக்கை மதிக்காமல் சீறிப் பாய்ந்தது அந்த வாகனம், கொடிகட்டிய திமிருடன். மக்கள் மிரண்டு போனார்கள். மோட்டார் சைக்கிளை நிறுத்திய இருவர் தடுப்புச்சுவர் மீது சாய்ந்தார்கள். அவர்கள் கால்களில் இடறியவர் ஊனமுற்றவர். சக்கரப் பலகையில் ஊர்ந்து வருபவர். கைக்குழந்தையுடன் பிச்சையெடுக்க வந்த பெண்மணி சாலையில் விழுந்துவிட்டாள். கொஞ்சம் நிதானித்துக் கொண்ட இளைஞர்கள் ஊனமுற்றவரை அவரது பலகையில் ஏற்றி வைத்து, கையில் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்டார்கள்.

“நீ என்னங்கய்யா செய்வீங்க? அவங்க காட்டுத்தனமாப் போனாங்க. அவங்க எப்பவுமே அப்படித்தான்.’’

பச்சை விழுந்ததும் பறந்தார்கள் அந்த இளைஞர்கள், முடிந்தால் அந்தப் பெரிய வாகனத்தில் சென்றவர்களை நிறுத்தி நறுக்கென்று நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டுமென்று நினைத்தார்கள். முடியவில்லை. வேக வாகனக்காரர்கள் நேராகச் சென்றது ஒரு நகைக் கடைக்கு. முதலாளி இவர்களைக் கண்டு மிகவும் பவ்யமாக எழுந்து நின்றார். உள்ளறைக்கு அழைத்துச் சென்றார். வந்தவர்களில் ஒருவர் அரசியல்வாதி என்பது அவரது கரை வேட்டியினாலும் துண்டினாலும் தெரிந்தது. ஒருவர் பட்டிமன்றப் பேச்சாளர் போல் இருந்தார். அவர் அரசவைக் கவிஞராகவும் இருக்கலாம். முதலாளி காபி கொடுத்து உபசரித்தார். எதற்காக வந்தார்கள் என்பதை நேரடியாகக் கேட்பது நாகரிகமில்லை என்பதனால் சுற்றி வளைத்துப் பேச்சுக் கொடுத்தார்.

புலவர் சொன்னார்: “ஐயாவுக்குத் தெரியாததில்லே. நம்ம அரசாங்கம் நல்ல நல்ல திட்டங்கள்ளாம் தீட்டுது. காலை எழுந்தவுடன் எல்லோருக்கும் இலவசப் பல்பொடி கொடுப்பதிலிருந்து “நாளும் வாழை’’ திட்டத்தின் கீழ் இரவு ஆளுக்கொரு வாழைப்பழமும் தருகிறது. அப்படியும் வறுமை அகலவில்லை. அதனால்....... இன்று என்ன புதன் கிழமையா? அடுத்த புதன் கிழமை ‘வறுமை ஒழிப்பு தினம்’ கொண்டாடப் போறோம். ஐ.நா. சபை அப்படிச் செய்யச் சொல்லியிருக்கு. ஐயாவுக்கு எங்க தலைவரைப் பிடிக்கும், அது தவிர ஐ. நா. சபை பற்றியும் தெரியும்.’’

“ஐயாவுக்கு இதெல்லாம் தெரியாதா, புலவரே, கொஞ்சம் நிறுத்துங்க,’’ என்று இடைமறித்த அரசியல்வாதி சொன்னார்: “ஐயா, பேட்டை பேட்டையா நாங்க வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடறோம். மாநிலம் நெடுக ஒவ்வொரு பேட்டையா. போன வருஷம் இதே மாதிரி வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடினோம். ஐயாவும் உதவி செஞ்சீங்க. அப்படியும் வறுமை ஒழியல, பாருங்க. அதனால் அந்த நல்ல தினத்தை வருஷா வருஷம் கொண்டாடணும்னு தலைவர் நெனைக்கிறாரு...’’

“வறுமையைக் கொண்டாடு வதாவது’’ என்று எரிச்சல்பட்ட நகைக்கடை முதலாளி அதைக் காட்டிக் கொள்ளவில்லை. “நீங்க என்ன எதிர்பார்க் கிறீங்கன்னு தெரிஞ்சா...’’

கொஞ்சம் யோசிக்கிற மாதிரி பாவலா செய்த அரசியல்வாதி சொன்னார், “ஐயா போன வருஷம் அஞ்சு லட்சம் கொடுத்தீங்க. நீங்க பெரிய தர்மவான்.’’

அதற்குள் புலவர் புகுந்தார், “அதிலே பாருங்க ஒங்கள மாதிரி வள்ளல்கள் கொடுத்ததையெல்லாம் அரசு நல நிதியிலே சேர்த்துட்ட பிறகும் வறுமை ஒழியலே, இப்போ ரெண்டு மடங்காயிட்டதாப் புள்ளி விபரஞ் சொல்லுது...’’

“நிறுத்துய்யா. ஐயா மாதிரி ஆட்கள்ளாம் தர்மம் செய்யலைனா வறுமை நாலு மடங்கா ஒசந்திருக்கும்.’’

தயாள குணத்துடன் தாட்சண்யமும் அதிகம் கொண்ட நகைக்கடை முதலாளி, “நீங்க எதிர்பார்க்கிறது...’’ என்று இழுக்க, புலவர் சமாதான உடன்படிக்கைக்கு வந்தார். “வறுமை இப்போ ரெண்டு மடங்காயிட்டதாலே நீங்க ரெண்டு மடங்கா, அதாவது பத்து லட்ச ரூபாய் தந்தாப் போதுங்க.’’ “ஆமாம், அதுக்குமேல வேண்டாங்க,’’ என்று திருப்திப்பட்டார் அரசியல்வாதி.

தான் சென்ற முறை இரண்டு லட்சம் கொடுத்ததை ஐந்து லட்சம் என்று அவர்கள் வேண்டுமென்றே கூட்டிச் சொன்னதைப் பொருட்படுத்தாத முதலாளி கண்ணைக் காட்ட, கல்லாவிலிருந்தவர் ஜாடையைப் புரிந்துகொண்டு புது ஆயிரம் நோட்டுகளாகப் பத்து லட்சம் ரூபாயை எடுத்துக் காகிதப் பையில் போட்டு, அதைத் தன் நகைக் கடையின் வெல்வெட் அன்பளிப்புப் பையில் போட்டுப் பணிவுடன் எழுந்து நின்று கொடுத்தார்.

அரசியல்வாதி உடனே நகரவில்லை. பக்கத்தில் மோதிரங்கள் இருந்த வரிசையைப் பார்த்தார் புலவர். குறிப்புணர்ந்து கொண்ட முதலாளி, ‘ஏதாவது வேணுங்களாய்யா?’ என்று கேட்டார். “இல்லே, இப்போ, சும்மா ஒரு யோசனை... யோசனைதான்... அது வேணுமா, வேணாமான்னு முடிவு பண்ணத் தெரியலே...’’

“சும்மாச் சொல்லுங்கய்யா...’’

“வறுமை ஒழிப்பு தினத்திற்கு மறுநாள் தலைவருக்கு விழா எடுத்து ஒரு மோதிரம் போடலாம்னு பார்க்கிறேன்.’’

“அதனாலென்ன, எடுத்துக்கங்கய்யா?’’

புலவரும் அரசியல்வாதியும் அளவு பொருந்துமா, இது நன்றாக இருக்குமா, என்றெல்லாம் விவாதித்து, ஒரு மோதிரத்தைத் தேர்வு செய்ய, முதலாளி அதை ஒரு அழகான டப்பாவில் போட்டுத் தந்தார். டப்பாவைப் பிரித்து, மோதிரத்தை மாற்றி மாற்றி ஆசை தீரப் பார்த்தார் அரசியல்வாதி.

“வேறே ஏதாவது டிசைன் வேணுமா?’’ என்று முதலாளி கேட்க, “இல்லை, இதை என் பெண்டாட்டி கண்ணில் படாம எடுத்து வச்சுத் தலைவரிட்ட சேர்க்கணுமேன்னு கவலைப்படறேன். அவ பார்த்துட்டா எல்லாம் போச்சு.’’

“அதனாலென்னங்க, அவங்களுக்குத் தனியா ஒண்ணு முதலாளி தரமாட்டாரா என்ன?’’ என்று புலவர் எடுத்துக் கொடுக்க, “அப்படியே செஞ்சுட்டாப் போவுது’’ என்ற முதலாளி அதேபோல் இன்னொரு மோதிரத்தையும் கொடுத்தார், முகமலர்ச்சி குறையாமல்.

அப்படியும் புலவரின் கால்கள் நகரவில்லை. அரசியல்வாதியும் வெளியே செல்லத் தயங்கினார். அதைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட முதலாளி, “என்னங்க, ஏதோ யோசிக்கிறாப்ல இருக்கே...’’

“இல்லே எதிரே உங்க பங்காளியின் சூப்பர் மார்க்கெட் இருக்கு. அங்க போகலாம்னு இருக்கேன். நீங்க ஃபோன்ல பேசிட்டா நம்ம வறுமை ஒழிப்புத் திட்டத்தில் அவரும் பங்கு பெறலாமே. அது அவருக்கும் நல்லதுதானேன்னு பார்க்கிறேன்.’’

“நீங்க போயிட்டே இருங்க; இந்த ட்ராஃபிக்கைத் தாண்டி நீங்க போறதுக்குள்ள நான் சொல்லிடறேன்.’’

“இல்லே, போனதரம் நீங்க, ஒங்க மேனேஜரையே எங்களோட அனுப்பிச்சீங்க, இப்பவும் அப்படியே செஞ்சா நல்லா இருக்கும்.’’ “செஞ்சிட்டாப் போவுது. சிவஞானம், ஐயாகூடப் போயி, நான் சொன்னேன்னு... அதுக்குள்ள நானும் நாகசாமிக்கு ஃபோன் பண்ணிடறேன்.’’

வறுமை ஒழிப்பாளர்கள் சூப்பர் மார்க்கெட்டின் ஐந்தாம் மாடிக்குப் போனார்கள். முதலாளி நாகசாமி அதிகம் பேசுபவரில்லை. முந்தியவர் பெரிய தொகையாக இருந்தாலும் முகம் மலர அன்பளிப்பாகக் கொடுத்தார். இவரோ அபராதம் கட்டும் பாவனையில் ஐந்து லட்சத்தை ஏனோதானோவென்று கொடுத்தார். அதுவும் பங்காளி சிபாரிசு பண்ணிவிட்டாரே, அவரைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்ற நினைப்பில். வாங்கிக் கொண்டவர்கள் எதையும் லட்சியம் செய்யவில்லை.

வெளியே வந்த இருவரும் வாசலில் காரை முற்றுகையிட்ட பிச்சைக்காரர்களை உச்சஸ்தாயில் “போங்கய்யா, போங்கய்யா’’ என்று விரட்டினார்கள். “சேச்சே காரை வீதியில நிறுத்த முடியலே, கார்கள் பெருத்துப் போச்சு,’’ என்று வளமையை வைதுவிட்டு அரசியல்வாதி தன் பெரிய வாகனத்தில் ஏறினார். வறுமை ஒழிந்தது, அப்போதைக்கு, அந்த நிதி திரட்டலுடன். வீட்டுக்குப் போனதும், புலவர் கேட்டார், “இந்த ரெண்டாவதாக் கெடச்சத எனக்குத் தர்ரீங்களா!’’

“ஆசையைப் பாரு. அவ்வளவு எதுக்கய்யா ஒனக்கு? அது சரி காசைக் கேக்கறயா, இல்லே மோதிரத்தைக் கேக்கறயா?’’

“இல்லே வறுமை ஒழிப்புதின விழா நடத்தறது என் பொறுப்புன்னு’’ தலைவர் சொல்லிட்டாரு. செலவெல்லாம் இருக்கே...’’

“என்னய்யா பெரிய செலவு, மைக் செட்டு, லைட்டு, மாலையெல்லாம் ஐயாயிரம் ரூபாய்க்கு மேலே ஆகாது. கம்பத்திலேருந்து கரண்ட் எடுத்துக்கலாம். பேச்சாளருக்குப் பொன்னாடை. அதையும் சும்மாவே வாங்கித் தர்ரேன். நாலு பேச்சாளர் போட்டாலும் ஆளுக்கு ஆயிர ரூபாய் கொடுத்தா போதும்.’’

“அதெல்லாம் மத்தவங்களுக்கு நான் செய்ய வேண்டிய செலவுங்க... எனக்குன்னு...’’

“இதோ பாரு, பெரியவங்களோட பேசும்போது ஒண்ணு ரெண்டு பாயின்ட் எடுத்துக் கொடுக்கறதுக்காகத்தானே ஒன்னக் கூப்பிட்டேன். ரெண்டு பேரு பணம் கொடுத்தது, உன் மூஞ்சிக்கா, என் மூஞ்சிக்கா...’’

“இருந்தாலும்...’’

“என்ன இருந்தாலும், இல்லாங்காட்டியும்...’’

“நீங்களாப் பாத்து இந்தப் புலவரோட வறுமையையும்...’’

“சரி போ, இந்தா ஒரு லட்ச ரூபாய். இதுவே அதிகம். இடத்தைக் காலி பண்ணு. இதுலே விழாச் செலவு போக மீதியெல்லாம் உனக்குத்தானே...’’

“ஒரு பத்தாயிரம் கொடுங்கய்யா... போஸ்ட்டர் அடிச்சது தப்பாப் போச்சு. திருப்பி அடிக்கணும்.’’

“என்ன தப்பு?’’

“இல்லே வறுமைங்கிறது வருமைன்னு வந்துருச்சு -வல்லினத்துக்கு பதிலா, இடையினம்.’’

“என்னய்யா சொல்ற? எருமைன்னு இல்லாதவரையும் எல்லாம் சரிதானே.’’

“இல்லீங்க, நம்ம தலைவருக்கு இலக்கணத் தப்பெல்லாம் பிடிக்காது. கோவிச்சுக்குவாரு. போஸ்டர்லே பெரிய ‘றா’னாவுக்கு பதிலா சின்ன ‘ரா’னா வந்துடுச்சு.’’

“எந்த ‘ரா’னா போட்டத்தான் என்னய்யா? சின்ன ‘ரா’னா போடறது சிக்கனம்னு சொல்லிட்டாப் போகுது.’’

புலவர் இடத்தை விட்டு நகர்வதாக இல்லை. “இன்னும் என்னய்யா, இங்கே நிக்கற. அதான் ஒரு லட்சம் கொடுத்துட்டேனுல்ல. சரி, சரி புரியுது. ஒங்கண்ணு மோதிரத்திலேயே இருக்கு. இந்தா, ஒன்னு வச்சுக்க. அது சரி, மோதிரத்துக்கு என்ன ‘ர’ போடுவே, சின்ன ‘ரா’னாவா, பெரிய ‘றா’னாவா?’’

“நீங்க பெரிய மனசு பண்ணிக் கொடுக்கறதுனாலே பெரிய ‘றா’னாவே போட்டுக்கறேன். போய்ட்டு வரட்டுங்களா?’’