தமிழ் இலக்கிய வரலாற்றில் படைப்பாளர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளோ, அவர்களுடைய இலக்கிய நோக்கங்களோ பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. ஒரு படைப்பைக் கூடுதலாகப் புரிந்துகொள்ள படைப்பாளனைப் பற்றிய வாழ்க்கைப் பின்னணியைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. வாசகர்களைப் போலவே பெருமளவு, எழுத்தாளர்களும் பெருகிவிட்ட ஒரு காலகட்டத்தில், உண்மையான படைப்பாளர்கள் யார்? உன்னதமான இலக்கியம் எது? ஒரு படைப்பாளன் தன்னுடைய படைப்பை வெளிக்கொணர எதிர்கொண்ட சிக்கல்கள் எவை? அவன் கடந்து வந்த பாதைகள், இன்னல்கள், எழுத்தாளனை உருவாக்கிய சூழல் முதலியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். எழுத்தாளர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்புகள் தமிழில் மிகவும் குறைவு. இத்தகையன சூழலில் எம்.வி. வெங்கட்ராம் தொடங்கி இமையம் வரை பத்தொன்பது எழுத்தாளர்களை நேர்கண்டு, அருமையான கேள்விகள் மூலம் சில குறிப்பிடத்தக்கப் பதிவுகளை ஆவணப்படுத்தியுள்ளார் சூரியசந்திரன்.

சூரியசந்திரன் நேர்காணல் காண்பதற்காகத் தேர்ந்தெடுத்த படைப்பாளர்களின் பட்டியலே, அவருடைய இலக்கிய நோக்கத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.

ச. தமிழ்ச்செல்வன், பா. செயப்பிரகாசம், திலீப்குமார், சு. சமுத்திரம், பூமணி, பாமா, இரா. நடராசன், ஆதவன் தீட்சண்யா, வேல. ராமமூர்த்தி, சோலை சுந்தரபெருமாள், தேவகாந்தன் போன்றவர்கள் தமிழில் ஆற்றல்மிக்க படைப்பாளர்கள். இவர்களுடைய சில படைப்புகள் மீது மாறுபட்ட கருத்துகளைக் கொண்டாடுபவர்களும்கூட, இவர்களுடைய இலக்கிய நோக்கத்தைச் சந்தேகப்பட மாட்டார்கள்.

சூரியசந்திரன் நேர்காணலுக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட படைப்பாளர்களுள் பெரும்பாலோர் முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். இலக்கியம் பற்றிய சரியான புரிதல்களுடனும், வரலாற்று நோக்குடனும், எழுத்தாளர்களின் வாழ்வியல் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிற ஆவலுடனும் கேள்விகளைத் தொடுத்துள்ளார் சூரியசந்திரன்.

இந்த நூல், சில குறிப்பிடத்தக்க விவாதங்களைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதிய ஒடுக்குமுறைகளை இடதுசாரி இயக்கங்கள் எந்த வகையில் எதிர்கொண்டிருக்கின்றன என்ற கேள்விக்கு ஆதவன் தீட்சண்யா அளித்துள்ள பதில் கூர்மையானது; விவாதத்தை மேலும் வளர்க்கக் கூடியது. “அயோத்திதாசர், இரட்டை மலை சீனிவாசன், எம்.சி. ராஜா போன்றவர்களெல்லாம் முன்னமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி இருக்காங்க. இல்லைன்னு சொல்லல. ஆனால், இவங்க எல்லோருமே நகரத்தில் குவிந்திருந்த ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியே அதிகமா அக்கறை கொண்டிருந்தார்களே தவிர, கிராமப்புறங்களிலே சாதி ஒடுக்குமுறையைக் கையிலெடுத்துப் போராடினவங்க-தலித் மக்களுக்குப் பாதுகாப்பா இருந்தவங்க கம்யூனிஸ்டுகள்தான்’’ (பக். 197) என்கிறார் ஆதவன் தீட்சண்யா.

1994_ஆம் ஆண்டு தொடங்கி 2006_ஆம் ஆண்டுவரை சாரதா, இன்தாம், (வானவில்), புதிய புத்தகம் பேசுது முதலிய இதழ்களில் வெளிவந்துள்ள நேர்காணல்கள் அருமையாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களின் கவனத்திற்குக்கூட வராத சில அரிய தகவல்களை அரும்பாடுபட்டு இந்நூலின் நேர்காணல் வழியே தந்துள்ளார் சூரியசந்திரன். 1952_53 தேர்தலில் ஒரு காங்கிரஸ்காரனாய்த் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற எம்.வி. வெங்கட்ராம், வெண்மணி தீயில் கருகிய 44 உடல்களை நேரில் பார்த்த சோலை சுந்தரபெருமாள், மிண்டர் என்வேர் எழுதிய பஞ்சாபிக் கவிதையை அழகாகச் சொல்லும் பா. செயப்பிரகாசம், லா.ச.ரா. உதிர்த்த ‘நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்’ என்ற வாக்கியத்தை வெளி உலகுக்குப் பிரசித்தப்படுத்திய கந்தர்வன், வாழ்க்கையின் நெருக்கடிகளைப் பெரும் போராட்டங்களுக் கிடையில் எதிர்கொண்ட பாமா என்று நூல் முழுவதும் எழுத்தாளர்களின் சுவையான தகவல்கள்.

சூரியசந்திரன் அத்தனை எழுத்தாளர்களின் கதைகளையும் ஆழமாக வாசித்திருப்பதால்தான் அவரால் அனைவருடனும் ஆழமாக விவாதிக்க முடிந்திருக்கிறது. அதனால்தான் திலீப்குமாரின் கதைகளில் அடிக்கடி நிகழும் மரணங்களைப் பற்றியும், பாட்டியின் அனுபவங்களைப் பற்றியும் கேட்க முடிந்திருக்கிறது.

தேவகாந்தனின் கனவுச்சிறை, இரா. நடராசனின் பாலித்தீன் பைகள், ஜோடி. குரூஸின் ‘ஆழி சூழ் உலகு’, சோலை சுந்தர பெருமாளின் ‘செந்நெல்’, ‘தப்பாட்டம்’ முதலிய நாவல்களெல்லாம் தமிழில் மேலும் விவாதிக்கப்பட வேண்டிய நாவல்கள். இத்தகைய கதைகள் வந்த காலகட்டத்திலேயே அதைக் கவனப்படுத்திய சூரியசந்திரன் தமிழ்ச் சமூகத்திற்கு, சத்தமில்லாமல் இலக்கிய சேவையைச் செய்திருக்கிறார்.

இந்நூலில் நான் பெரிதும் விரும்பிப் படித்தது ச. தமிழ்ச்செல்வன் மற்றும் பூமணியின் நேர்காணல்களை. நேர்காணல்களைக்கூட இலக்கிய நயத்தோடும், உணர்வுப்பூர்வமாகவும் அளித்திருக்கும் இவர்களிடமாவது திராவிட இலக்கியங்களைப் பற்றி சூரியசந்திரன் சில கேள்விகளை எழுப்பியிருக்கலாம்.

மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம் பற்றியெல்லாம் விரிவாக விவாதித்த ஆசிரியர், திராவிட இலக்கியங்களைப் பற்றி இத்தகைய எழுத்தாளர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை விவாதிக்கவில்லை. இந்த நேர்காணல்கள் எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் அவர்களுடைய வாழ்க்கையையும் மையமிட்டே அமைந்துவிட்டன.

அதிகம் பேசப்படாத கதைகளைப் பேசவைக்க வேண்டும்; தமிழ்ச் சமூகத்திற்குச் சிறந்த கதைகளே அறிமுகப்படுத்தி, முற்போக்கு எழுத்தாளர்களின் அறியப்படாத சில முகங்களை அடையாளப்படுத்த வேண்டும் என்பதில் சூரியசந்திரன் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

இலக்கியம் மீது தாகம் கொண்டவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். இந்நூலைப் பற்றி விவாதிக்க வேண்டும். சூரியசந்திரனின் கடுமையான உழைப்பிற்கு அதுவே வாசகர்கள் தருகின்ற மரியாதையாகவும் கௌரவமாகவும் இருக்கும்.

(‘முரண்களரி’யின் 52வது நூல்கள் விமர்சன அரங்கு சென்னை தேவநேய பாவாணர் கருத்தரங்க அறையில் அக். 3ந்தேதி மாலை நடைபெற்றது. எழுத்தாளர் வே. எழிலரசு தலைமை வகித்தார். சூரியசந்திரனின் ‘கதைகதையாம் காரணமாம்’ நேர்காணல் நூலினை பேராசிரியர் பா. இரவிக்குமார், கவிஞர் ஆசுவின் ‘நேசித்தவனின் வாழ்வுரை’ கவிதை நூலினை எழுத்தாளர் கமலாலயன் ஆகியோர் விமர்சித்தனர். முன்னதாக, கவிஞர் யாழினி முனுசாமி வரவேற்க, ஜெ. கங்காதரன் நன்றி கூறினார். அந்நிகழ்ச்சியில் பேரா. பா. இரவிக்குமார் நிகழ்த்திய விமர்சன உரை.)