ஏப்ரல்-23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புத்தகதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஏப்.22 அன்று தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறையும், ‘புத்தகம் பேசுது’ பத்திரிகையும் இணைந்து காப்புரிமை சிறப்புக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தின. இதில் பதிப்புக் காப்புரிமையும் நூலகமும் என்ற தலைப்பில் நூலக முன்னோடி ந. ஆவுடையப்பன் உரையாற்றினார்.

கருத்தரங்கிற்கு பொது நூலகத்துறை இயக்குநர் க. அறிவொளி தலைமை தாங்கினார். புத்தக வாசிப்பு பண்பாட்டை வளர்க்க நூலகத்துறை அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்றார் அவர்.  எழுத்தாளர் ஞாநி பேசுகையில், புத்தகங்கள் யாரிடமிருந்து வருகின்றனவோ அந்த எழுத்தாளர்களுக்கு பதிப்பகங்கள் 10 விழுக்காடு மட்டுமே சன்மானம் (ராயல்டி) வழங்குவது அநியாயமானது என்றார். தமிழகத்தின் சில பெரிய பத்திரிகை நிறுவனங்கள் 6.5 விழுக்காடு ராயல்டிதான் வழங்குகின்றன. அத்துடன், அந்த நிறுவனங்களில் பணியாற்றுவோர் எழுதி வெளியாகும் புத்தகங்களுக்கு ராயல்டி வழங்குவதும் இல்லை, அந்தப் புத்தகங்களின் காப்புரிமையையும் அந்த நிர்வாகங்களே எடுத்துக்கொள்கின்றன என்றார் அவர். ஒரு எழுத்தாளர் தாம் எழுதிய புத்தகத்துக்கு பெறுகிற ராயல்டி தொகையைவிட, அதே புத்தகங்களை அவரே வாங்கி விற்றால் அவருக்கு அதே பதிப்பகம் 30 விழுக்காடு கமிஷன் வழங்குகிற முரண்பாட்டையும் அவர் சுட்டிக் காட்டினார்.

world_bookdayபெரியார் புத்தகங்கள் காப்புரிமையை எதிர்த்து வழக்கு நடத்திய வழக்கறிஞர் எஸ். துரைசாமி, “சட்டப்படி ஒரு எழுத்தாளரின் புத்தகங்களுக்கு அவர் இறக்கும் வரையில் அவருக்கே காப்புரிமை உண்டு. அவர் இறந்தபின் 60 ஆண்டுகளுக்கு அவரது குடும்பத்தினருக்கு காப்புரிமை உண்டு. அதன் பின் இயல்பாகவே அந்தப் புத்தகங்கள் நாட்டுடைமயாகி விடும்,” என்று தெரிவித்தார். “ஆனால், பெரியார் போன்றோரின் எழுத்துக்களை அவர்களது சிந்தனைகள் என்றே கருத வேண்டும். அந்தப் புத்தகங்களுக்கு காப்புரிமை கோரக்கூடாது. வருமானம் எதிர்பார்ப்போருக்குத்தான் காப்புரிமை தேவை. கருத்து பரவ வேண்டும் என்று நினைப்போருக்கு காப்புரிமை தேவையில்லை,” என்றார் அவர்.

‘ஆயிஷா’ படைப்பாளி இரா. நடராசன், ‘காட்’ வர்த்தக உடன்பாட்டில் இந்தியா இணைந்திருப்பதால், இந்திய மொழிகளில் வெளிவரும் படைப்புகளின் மீது இந்திய படைப்பாளிகளை விட மேற்கத்திய நாடுகளின் பதிப்பாளர்கள் பதிப்புரிமை கோர முடியும் என்ற நிலைமையை விளக்கினார். இதனால் மொழிபெயர்ப்பில் ஈடுபடுவோர் புத்தகத் திருடர்கள் போல் பார்க்கப்படும் பரிதாபத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். மக்களிடம் கருத்துக்கள் செல்லத்தடையாக இருக்கும் காப்புரிமைத் தடை உடைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

பதிப்பாளர் காந்தி கண்ணதாசன் பேசுகையில், வருங்காலத்தில் காடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் காகிதப் பயன்பாடு வெகுவாகச் சுருங்கிவிடும் என்றார். இதனை எதிர்கொள்ள ‘இ-புக்’ போன்ற நவீனங்களை நம் படைப்பாளிகளும் பதிப்பாளர்களும் கற்றாக வேண்டும் என்றார். நவீன இ-புக் நுட்பத்தில் எப்போதெல்லாம் ஒரு புத்தகம் கணினி வழியாகப் படிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதற்கான சன்மானத் தொகை வந்துகொண்டே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமுஎகச துணைத் தலைவர் ‘சிகரம்’ ச. செந்தில் நாதன், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் இடையே முறையான ஒப்பந்தம் அவசியம் என்றார். காப்புரிமை, பதிப்புரிமை சட்டங்களில் நுட்பமான சிக்கல்கள் இருப்பதைக் குறிப்பிட்ட அவர், “இன்றைய உலகமயமாக்கல் சூழலில் பல படைப்பாளிகளின் உரிமைகளும் பதிப்பாளர்களுக்கான பாதுகாப்புகளும் பறிபோகும் நிலைமை இருப்பதால் இந்தச் சட்டங்கள் திருத்தப்பட்டு நவீனமாக்கப்பட வேண்டும்,” என்றார். தொன்மையான ஏடுகள் மக்களுக்கே சொந்தம், அத்தகைய ஏடுகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்று விசாரித்து புத்தகமாகப் பதிப்பிக்கும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தலைவர் சேது. சொக்கலிங்கம் வரவேற்றார். ‘புத்தகம் பேசுது’ சார்பில் க. நாகராஜன் நன்றி கூறினார்.