பிரேசில் நாட்டுப்பாதிரியார் ஃபிரேபெட்டோ தோழர் ஃபிடேல் காஸ்ட்ரோவுடன் நடத்திய மிக அருமையான ஒரு நேர்காணல் நூலாகியிருக் கிறது. நேர்காணல் என்னும் வடிவத்தில் ஃபிடேல் காஸ்ட்ரோவின் வரலாறாக, கியூபாவின் வரலாறாக, கியூபா புரட்சிப் படிப்பினைகளின் வரலாறாக, பல கோணங்களில் நாம் இதை வாசிக்க முடியும். கியூபாவின் கல்வி, காஸ்ட்ரோவின் தனித்தன்மைகள், ரசனைகள் என்று இன்னும் பல அம்சங்களையும் நூலில் தெரிந்து கொள்ள முடியும்.  

 

காஸ்ட்ரோ, தன் கால சமூகத்தின் உள்ளார்ந்த பண்பாட்டை, அதன் அடிநாதமாக அமைந்த சமயத்தை ஒரு கையில் வாளோடும், மறு கையில் சிலுவையோடும் லத்தீன் அமெரிக்காவில் நுழைந்தது. பல முகங்கள் கொண்ட அந்தச் சமயத்தின் உள்ளார்ந்த விடுதலை ஆற்றலைக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியவர்கள் மனித நேய மனம் கொண்ட லத்தீன் அமெரிக்கப் பாதிரியார்கள். இந்த ஆற்றலைப் புரட்சிக்கும், மனித குல வளர்ச்சிக்கும் பயன்படுத்திய சாதனையாளர் காஸ்ட்ரோ.

 

இம்மாதிரியான மாமனிதர்கள் தென் இந்திய இடது சாரி இயக்கத்திலும் பலர் இருந்திருக்கிறார்கள். கேரளத்தில் சகாவு பி. கிருஷ்ணபிள்ளை, எ.கே. கோபாலன், தமிழகத்தில் ஜீவா, பி.சீனிவாசராவ் இவர்கள் அனைவரும் சமயத்தின் உள்ளாற்றலை உணர்ந்தவர்கள். அதன் ஆக்கக் கூறுகளை வெளிப்படுத்தி, சமூகவளர்ச்சியைத் தூண்டியவர்கள். அதன் மனித விரோதக் கூறுகளை எதிர்த்துப் போராடியவர்கள். இந்தத் தொடர்ச்சியை நாம் பேணவேண்டும் என்று இந்த நூல் நம்மை அறிவுறுத்துகிறது.

 

சரியான நேரத்தில் இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இதை ஓர் அடையாளமாக வைத்து, இந்திய வகைப்பட்ட சமய மரபுகளைப் புரட்சிகர இயக்கங்கள் எப்படிப் பயன்படுத்துவது என்கிற விவாதம் நாடெங்கும் விரிவாகத் தொடங்கப்படவேண்டும்.

 

1948-ல், தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று மூச்சு முட்டி, காந்தியடிகளையே கொன்ற கோட்சேயினர், 50- ஆண்டுகளில் இந்திய ஆட்சிக் கட்டிலையே கைப்பற்றிவிட்டனர். ஐந்தாண்டுகாலம் ஆட்சி புரிந்து விட்டனர். சமயத்தின் வலிமையே, சமயப் போர்வையில் அதிகாரத்துக்கு வரும் வகுப்புவாத சக்கதிகளின் வலிமையைப் புறக்கணிக்க முடியாது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாயிற்று. இந்திய வகையிலான புரட்சியை முன்னெடுத்துச் செல்லத் தெளிவான வழி காட்டுதல் இன்று தேவைப்படுகிறது.

 

இப்போது ஒரு சிக்கல் எழுகிறது. மத நம்பிக்கை பற்றி நம்முடைய மதிப்பீடு என்ன? மதம் பற்றிய நம்முடைய மதிப்பீடு என்ன? செக்குலாரிசம்- அதாவது சமயச் சார்பின்மை என்பதன் உள்ளார்ந்த பொருள் என்ன? எல்லாச் சமயங்களிலிருந்தும் விலகி இருப்பதாக அது ஆகுமா? அல்லது, சமயங்களிலிருந்தும் நாம் விலகி, சமயப் பற்றாளர்களை நம்மோடு இணைத்து கொள்ளும் போர்தந்திரம் தான் சமயச் சார்பின்மையா? உண்மை என்ன? சமயச் சார்பின்மைக்கு அகராதியில் “இவ்வுலகம் சார்ந்த” என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது. அது மேலுலகத்துக்கு எதிரானது என்பது பெறப்படும் பொருள் இந்த விளக்கத்தை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோமா? அல்லது போர்தந்திரமாகச் சார்பு நிலை கொள்ளுகிறோமா? இந்த நூலை படிக்கும்போது இப்படிப்பல்வேறு கேள்விகள் மனதில் எழுகின்றன.

 

மனிதர்களை இறை நம்பிக்கையாளர்கள், இறைமறுப்பாளர் என வகுக்கிறோம். இவர்களுக்கு நடுவே மார்க்சியர்களின் இடம் எது? இறை நம்பிக்கையா? இறை மறுப்பா? மார்க்சியம் இரண்டும் அல்ல, சமயத்தை உள் நுழைந்து ஆய்வு செய்யும் கோட்பாடு அது என நான் நினைக்கிறேன். இந்த நூல் எனக்கு அப்படித்தான் வழிகாட்டுகிறது.

 

காஸ்ட்ரோ சொல்லுகிறார். “ ஆன்மிகம் என்பது நமது ஆன்ம வாழ்க்கை பற்றியது மட்டுமல்ல, ஆன்ம, உடல் இரண்டும் இணைந்த முழுமனிதனைப் பற்றியது அது.” அன்பு மயமானவர்கள் கடவுள் என்கிறார் காஸ்ட்ரோ. நியாயத்துக்காக வாதிடுகிறவர், ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாக்கிறவர் கடவுள் ஏசுவின் ஆன்மிகம் பற்றிப்பேசுவது எளிதாகிவிடும் என்கிறார்.

 

திருச்சபைகளோடு புரட்சியாளர்களுக்கு என்ன சிக்கல்? காஸ்ட்ரோ மேலும் சொல்லுகிறார்: “ அதிகச்சலுகைகளையும், வசதிகளையும் பயன்படுத்து பவர்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையில் உள்ள சிக்கல்தான் இது.” சமூகம் முப்பரிமாணம் உடையது. பொருளாதரம் முதல் பரிமாணம், அரசியல் சமூகம் இரண்டாம் பரிமாணம், பண்பாடு மூன்றாம் பரிமாணம். பொருளா தாரத்தில் சோசலிசம், சமூக-அரசியலில் ஜனநாயகம், பண்பாட்டில் மனித நேயம்; இவையே வாழ்வின் முப்பரிமாண லட்சியங்கள். அப்படியென்றால் பண்பாட்டுத் தளத்தின் உள்ளடக்கமான மதத்தை எவ்வாறு அணுகச் சொல்லுகிறது மார்க்சியம்?

 

சமயத்தை ஆத்தீகம் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறது. நாத்தீகம் மொட்டையாக நிராகரிக்கிறது. மார்க்சியத்தின் அணுகுமுறை என்ன? ஒரு கருத்து மக்களைப்பற்றி பிடிக்கும் போது, அது பௌதீக ஆற்றலாகி விடுகிறது என்கிறதே மார்க்சியம்.

 

சமயக்கருத்துக்கும் இது பொருந்தும்தானே. அப்படியென்றால் சமயத்தைப் புறக்கணிக்க முடியுமா? மார்க்சியம் சமயத்தை ஆய்வு செய்யச் சொல்லுகிறது எனக்கருதுகிறேன். அதன் உள்ளிருக்கும் சமூக ஆக்கக் கூறுகளையும், அழிவுக்கூறுகளையும் பிரித்து அடையாளப் படுத்தி, ஆக்கக் கூறுகளைச் சமூக எழுச்சிக்கு ஆதரவான திசையில் எப்படிப் பயன்படுத்துவது என ஆய்வு செய்ய வழிகாட்டுகிறது மார்க்சியம். சமய ஆற்றல் சமூகத்துக்கு விரோதமாக, மக்கள்திரளுக்கு விரோதமாகப் போகும் நிலையில், அதை எதிர்த்துப் போராடச் சொல்லுகிறது அது. குருட்டுத்தனமான நிலை எதுவும் அது எடுக்கச் சொல்ல வில்லை. இதையே இந்த உரையாடலில் ஆழ்ந்திருக்கும் உட்பொருளாக நான் உணர்கிறேன்.

 

வைகுண்ட சாமியும், நாராயண குருவும், விவேகானந்தரும், வள்ளலாரும், சென்ற நூற்றாண்டின் பின் பாதியில் குன்றக்குடி அடிகளாரும் சமயத்திலுள்ளிருந்து இந்தப் பணியைத் திறம்படச் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய பணியை ஏ.கே.ஜி. ஜீவா முதலியோர் மார்க்சியத்தின் உள்ளிருந்து தங்கள் தாங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். புரட்சிகர வழிகாட்டுதல்களோடு இந்தப் பணிகள் தொடரப்படவேண்டும் என்று தெளிவுப்படுத்துகிறது நூல்.

 

மக்களை மையமாக வைத்து, அவர்களின் வாழ்வு, வளர்ச்சி என்கிற உரைகற்களில் உரசி, நமக்குரிய கோட்பாடுகளை நாம் காலந்தோறும் வளர்த்துச் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

இந்த நூலில், மார்க்சிய நூல்களின் மொழி பெயர்ப்பு சம்மந்தமாகத் தோழர் அ. குமரேசன் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை. மார்க்சியம் புரியாதவர்கள் காசுக்காகச் செய்த விபரீதமான மொழி பெயர்ப்புகளால் மார்க்சிய நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள் மக்களின் வெறுப்புக்கும், புறக்கணிப்புக்கும் உள்ளாயின. நல்ல சரளமான தமிழில், சுவைகுன்றாமல் மொழி பெயர்த்திருக்கிறார். அ. குமரேசன்.

மிகச் சிறப்பான நூல். மிக அருமையான மொழிபெயர்ப்பு. காஸ்ட்ரோவையும், கியூபாவையும், சமயத்தின் புரட்சிகர ஆற்றலையும் புரிந்து கொள்ளுவதற்காக மட்டுமல்ல, இந்தியாவையும், அதன் சாதிகளையும், சமயங்களையும் புரிந்து கொண்டு, இவற்றை இந்திப்புரட்சிக்குப் பயன்படுத்துவதற்கும் இது வழிகாட்டும்.

E-159, ANNAI VELANKANNI CHURCH ROAD
7th AVENUE, BESANT NAGAR,
CHENNAI – 6000090

-பொன்னீலன்