நல்லி - திசை எட்டும் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மொழி பெயர்ப்புகளுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது பெறுபவர்களையும், விருதை அளிக்கும் நல்லி நிறுவனத்தாரையும் திசை எட்டும் குழுவினர்களுக்கும் புதிய புத்தகம் பேசுது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்த ஆண்டு விருது பெற்ற மொழி பெயர்ப்பாளர்களின் பற்றி குறிப்புகள் இதோ:

திரு. ஏ. வி. சுப்ரமணியன் (1924) இதுவரை சுமார் நூறு நூல்கள் எழுதியிருக்கிறார். அவை இலக்கியம், விமரிசனம், அழகியல் சார்ந்தவை. தொல்காப்பியத்தை ஆராய்ந்து எழுதியிருக்கிறார். குறுந்தொகையை ஆங்கிலத்திலும் சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்த்த சிறப்புக்காக இந்த வருடம் சாஹித்ய அகடமியின் மொழிபெயர்ப்பாளர் விருதினையும் பெறுகிறார்.  தொலைபேசி: 044-24641743

திரு. ஏ. ஜி. எத்திராஜுலு (1935) தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளிலும் வல்லவர். இவர் இந்தியிலிருந்து 15 புத்தகங்களைத் தமிழ்ப்படுத்தியிருக்கிறார். பத்து புத்தகங்களைத் தெலுங்கிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இரண்டு நூல்களைத் தமிழிலிருந்து தெலுங்கு மொழிக்குக் கொண்டு சென்றிருக்கிறார். குடியாத்தத்தில் பிறந்து சித்தூரில் வசிக்கும் இவருக்குத் தாய்மொழி தெலுங்கு. ஒரு மொழிகளில் உள்ள முற்போக்கு, மனித நேய நூல்களைத் தமிழில் அறிமுகப்படுத்துவதே இவரது நோக்கம். தொலைபேசி: 094908-38165

பட்டு பூபதி என்று அறியப்படும் டாக்டர் எம். பூபதி (1935) பழந்தமிழ் இலக்கியப் படைப்பான முத்தொள்ளாயிரத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த சிறப்புக்காக இவர் விருதினைப் பெறுகிறார். ராஜம் கிருஷ்ணன் அவர்களின் ‘வேருக்கு நீர்’ என்ற நாவலை சாகித்ய அகடமிக்காக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். தொலைபேசி: 98405 98627

ஸ்ரீமதி கோமதி நாராயணன் அவர்கள் (1934) ஆதவனின் காகித மலர்கள் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள சிறப்புக்காக நல்லி-திசை எட்டும் விருதினைப் பெறுகிறார். வாஸந்தி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோரின் படைப்புகளை ஆங்கில மொழியில் தந்திருக்கிறார். தொலைபேசி: 044-24833813

திரு. ஸ்வாதி. ஹெச். பத்மனாபன் (1940) நீல. பத்மனாபனின் ‘கூண்டினுள் பக்ஷிகள்’ நாவலைத் தமிழிலிருந்து மலையாளத்திற்குக் கொண்டு சென்றதற்காக இவ்விருதினைப் பெறுகிறார். இதே தமிழ் நூலை இவர் இந்தியிலும் மொழிபெயர்த்திருக்கிறார். ஆதிசங்கரர் பிறந்த காலடியில் உள்ள ஸ்ரீ சங்கரா கல்லூரியில் இந்தித் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். தொலைபேசி: 093873 09798

டாக்டர் ஜெயலலிதா (1971) பழந்தமிழ் இலக்கண நூலான யாப்பருங்கலக் காரிகையைக் கன்னடத்தில் மொழிபெயர்த்ததற்காக இவ்வாண்டு விருதினைப் பெறுகிறார். இவர் குப்பம் நகரில் உள்ள திராவிடப் பல்கலைக் கழகத்தில் கன்னடத் துறை உதவிப் பேராசிரியராக இருக்கிறார். இவரது தாய்மொழி கன்னடம். தொலைபேசி: 099593 69473

திரு. கி. இலக்குவன் (1941) அரசியல் பொருளியல், தொழிற்சங்கம் போன்ற துறைகளில் நாட்டம் கொண்டவர். அந்தத் துறைகளில் பல நூல்கள் எழுதியிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்டவை மொழிபெயர்ப்பு நூல்கள். ஓய்வு பெற்ற ஐ. ஏ. எஸ். அதிகாரி திரு. வி. ராமமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள காந்திஜியின் 200 இறுதி நாட்கள் என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழியாக்கத்திற்காக விருதினைப் பெறுகிறார். தொலைபேசி: 90941 34219

நாகூர் ரூமி என்ற புனை பெயரில் எழுதும் ஏ. எஸ். முகமது ரஃபி (1958) கிரேக்கக் கவிஞர் ஹோமரின் இலியட் காவியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திறமைக்காக விருதினைப் பெறுகிறார். இவர் இதுவரை சுமார் 30 நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் சில அருமையான மொழிபெயர்ப்புப் படைப்புகள். தொலைபேசி: 99947 67681

ஜெயந்தி சங்கர் (1964) மதுரையில் பிறந்தவர். சிங்கப்பூரில் வசிப்பவர். கடந்த 15 வருடங்களாக படைப்பிலக்கியத்திலும் மொழியாக்கத்திலும் முத்திரை பதித்துவருகிறார். பல சீனக் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை ஆங்கிலத்தில் படித்துத் தமிழில் மொழியாக்கம் செய்தமைக்காக விருதினைப் பெறுகிறார். தொலைபேசி: 65-675645417

பெங்களூரில் வசிக்கும் திரு. பாவண்ணன் (1958) சாந்திநாத் தேசாய் எழுதிய ‘ஓம் நமோ’ என்ற கன்னட நூலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக விருதினைப் பெறுகிறார். சாஹித்ய அகடமியின் மொழியாக்க விருது உள்பட இதுவரை 13 இலக்கிய விருதுகள் பெற்றுள்ளார். தொலைபேசி: 080-25300661

டாக்டர். வை. கிருஷ்ணமூர்த்தி (1939) ‘ஆயுஸின்டே புஸ்தகம்’ என்ற திரு. சி. வி. பாலகிருஷ்ணனின் மலையாள நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்த சிறப்புக்காக விருதினைப் பெறுகிறார். தொலைபேசி: 0431-2430473

(1964) மதுமிதா சமஸ்கிருத மொழியில் உள்ள ‘பர்த்ருஹரி சுபாஷிதம்’ என்ற நீதியியல் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தமைக்காக விருது பெறுகிறார். ராஜபாளையத்தைச் சேர்ந்த இவரது இயற்பெயர் மஞ்சுளாதேவி. இவர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் குடும்பத்தில் பிறந்தவர். தொலைபேசி: 044-42045206