அரவிந்தனின் கவிதைகள் தனி வழியில் உருவாகியிருப்பவை. தனித்துவமான இயல்புகள் கொண்ட கவிதைகள்தாம் கவனத்துக்குள்ளாகும் என்ற இலக்கிய நியதியை அறிந்துகொண்டேதான் இதைக் குறிப்பிடுகிறேன். பல தனித்துவங்கள் கவிதையுலகில் நிலவும்போது அதுவே ஒரு பொதுமொழியையும் உருவாக்கி விடுகின்றன. கவிதை எப்போதும் புதுமையை எதிர்நோக்கி நிற்கிறது என்பதும் புதிதாக வரும் கவிஞன் இந்தப் பொதுமொழியைக் கடந்து தன்னுடையதான கவிதை மொழியை நிறுவ வேண்டியது கட்டாயமாகிறது என்பதும் கவிதையாக்கத்தின் சவால்கள்.

இந்தச் சவால்களைத் தன்னுடையதான மாற்று வழியில் அரவிந்தன் எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சான்றளிக்கின்றன. நடைமுறையிலிருக்கும் கவிதைக் கண்ணோட்டத்தை உள்ளும் புறமுமாகத் திருப்பிப் போடுவது, காட்சிப் படிமங்களை இடம் மாற்றி வைப்பது, துள்ளலும் விட்டேற்றியான மனநிலையும் கொண்ட மொழியில் வரிகளை உருவாக்குவது என்று தன்னுடைய கவிதை உருவாக்க முறையைக் கையாளுகிறார் அரவிந்தன்.

ஒரு குழந்தையின் விளையாட்டு அல்லது ஒரு பித்தனின் கைவரிசை போலத் தென்படும் கவிதையாக்க முறையை வசப்படுத்தியிருக்கிறார். குழந்தைத்தனம் மிளிரும் அணுகலும் பைத்தியம் துடிக்கும் வெறுமையும் வெவ்வேறு பார்வைகளாகவும் இடம் பெறவும் செய்கின்றன.

அரவிந்தனின் பார்வைக் கோணத்தில் எதார்த்த உலகம் இன்னொரு உலகமாகப் புரண்டு விடுகிறது. இந்த உலகின் சிறு செயல்கள் அந்த உலகில் அரிய நடவடிக்கைகளாகின்றன. குழிவண்டின் அற்பக் குழி சிறுமியின் அற்புத அரண்மனையாகிறது. அவளை மேலே கொண்டு வர இன்னொரு சிறுமி ஒழுகும் எச்சில் வெள்ளப்பெருக்காக மாறுகிறது. கவிதை விநோதத்தன்மை கொண்டதாகவும் களங்கமற்றதாகவும் உருப்பெறுகிறது. இதே விநோதத் தன்மை பைத்திய நோக்கிலும் செயல்படுகிறது. ‘நிழல் மின்சாரம்’ கவிதையில் ‘நிழல் கம்பிகளின் மின்சாரம் தாக்கி ஒரு சிறுவன் சாலைக்குத் தூக்கியடிக்கப்படுவதை’ பித்தம் ததும்பும் பார்வையில் காண முடிகிறது. இந்த இரட்டைப் பார்வை அரவிந்தனுக்கு மொழிதலில் ஒரு பிரத்யேகச் சலுகையையும் அளிக்கிறது. பாசாங்கான தயக்கங்களோ கட்டுப்பாடுகளோ இல்லாமல் கவிதையை உருவாக்கிக் கொள்ளும் சலுகை. இந்த நோக்கில்தான் அவர் இன்றைய கவிஞராகிறார்.

குழந்தைமையும், பித்துநிலையும், வேடிக்கையும், விநோதமும், அதீதக் கற்பனையும் சருமமாகக் கொண்டிருந்தபோதும் அரவிந்தனின் கவிதையாக்கத்தில் அடிப்படையாக இயங்குவது ஒரு துன்பியல்நிலை என்று தோன்றுகிறது. நடைமுறை எதார்த்தங்களையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக்கங்களையும் ஒப்புக் கொள்ள முடியாத கையறு நிலையிலிருந்து உருவாகும் துன்பியல். அதை ஒரு விசித்திர விளையாட்டாக மாற்றுகிறது கவிதை. ‘என்னுடனே பிறக்கும் என் பிள்ளைகள்’, ‘தந்தைப்பால்’, ‘பூசணித்தாதி’ போன்ற கவிதைகள் இந்த விளையாட்டின் விளைவுகள். இதுவரை சொல்லப்பட்ட கருத்தாக்கங்களை இந்தக் கவிதைகள் தலைகீழாக்குகின்றன. தாய்மையின் நேர் இணை பெண் என்ற கருத்தை இந்தக் கவிதைகள் கேலி செய்கின்றன.

முன்னர் குறிப்பிட்ட இரட்டைப் பார்வை களை மீறிய கவிதைகளும் அரவிந்தனிடம் உள்ளன. அவற்றிலும் இடத்தையும் இருப்பையும் குலைக்கும் எத்தனிப்பு தென்படுகிறது. மெல்லிய சீண்டலுடனும் முரணுடனும் அவை எழுதப்பட்டிருக்கின்றன. ‘பூனையின் உலக இலக்கியம்’ கவிதையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இந்த வகைக் கவிதைகள் எளிமையான தோற்றம் புனைந்து வாசிப்பில் ஏய்த்து விடுகின்றன. ‘13 ஸ்தனங்கள்’ ஓர் உதாரணம். எளிமையாகச் சீண்டிக் கொண்டே நகரும் கவிதை இறுதியில் சீண்டலுக்கு நேர் எதிரான அதிர்ச்சியுடன் முடிகிறது.

இன்றைய கவிதை சிக்கல்கள் நிரம்பியது. வாழ்க்கையை வியாக்கியானம் செய்யும் கோட்பாடுகளின் மறைவு; மனித இருப்புக்குப் பொருள் சேர்க்கும் கருத்தாடல்களின் மீதான நம்பிக்கையின்மை; முன்பு செப்பனிட்டு வைத்திருந்த பாதைகளில் நடக்க விதிக்கப்படும் தடைகள்; மேலோட்டமான படைப்பாக்க மல்யுத்தங்கள் எல்லாம் வாழ்க்கையையும் அதன் உடன் நிகழ்வாகக் கவிதையையும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கின்றன. அந்தச் சிக்கலின் மையத்தைப் பேசுகிற ஒன்றாக இன்று கவிதை ஆகியிருக்கிறது. எல்லாக் காலத்திலும் கவிதை கோரி நின்றது அதைத்தான். இப்போது வேண்டி நிற்பதும் அதைத்தான். முன்னர் எதைச் சொல்வது என்பது கவிதையின் சிக்கலாக இருந்தது. இன்றைய கவிதையில் எதையும் சொல்லலாம். ஆனால், சிக்கல் எப்படிச் சொல்வது என்பதில்தான். அரவிந்தன் அதை எதிர்கொண்டிருக்கிறார். இந்தத் தொகுதியில் வெளியாகியிருக்கும் கவிதைகளில் அதற்குரிய சுதந்திரமும் மாற்றுப் பார்வையும் தென்படுகின்றன என்பது வாசிப்பில் துலங்கும்.

(குழிவண்டுகளின் அரண்மனை, த.அரவிந்தன், வெளியீடு: அருந்தகை, பக்கம்: 80, ரூ.40)

- சுகுமாரன்

Pin It