புதுமைகளோடு அறிமுகமாகும் லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் மாதிரி அசத்தலாக வந்திருக்கிறது ஒரு சிறுகதைத் தொகுப்பு. கம்ப்யூட்டரை நாம் கிளிக்செய்வதற்கு பதிலாக அது நம்மைக் கிளிக்செய்வதுதான் அமிர்தத்தின் தனிப் பாணி.  கதையாகட்டும் கவிதையாகட்டும் அமிர்தத்தின் நவீனத்துவம் மற்றவை போலெல்லாம் வாசகனை ராகிங் செய்வதில்லை. கொஞ்சம் வாஞ்சையோடுதான் புழங்க முயல்கின்றன. என்ன, அவரது கற்பனை வீச்சுத்தான் கற்பனைக்கு எட்டாதது. மாமூலான ஜூவல்லரி மஞ்சள் பையோடு அமிர்தக் கதைகளுக்குள் போய்விடக் கூடாது. அவர் சரக்கை கப்பலில்தான் நிரப்பிக் கொண்டு வருகிறார். நமது பை நிரம்பினாலும்  விடுவதில்லை. கை, கழுத்து, இடுப்பு, இண்டு, இடுக்கு என்று நம் மீது எத்தனை முடியுமோ அத்தனை பாரத்தை ஏற்றி விடுகிறார். ஆனால் ஓர் ஆச்சரியம், அவரின் கற்பனைச் சுமை கூடக் கூட, நாம் நமது சொந்த எடையையும் இழந்து இறகு போல் பறக்கிறோம்..

‘அமிர்தம் சூர்யா(1966)’, ‘வெள்ளை அறிக்கை’, மற்றும் எண்களால் பொருளடக்கம் என்று தொகுப்பில் எடுத்த எடுப்பிலேயே வாசக மனதை ஆட்கொண்டு விடுகிறது சூர்யாவின் ஹிப்னாடிஸம்.. போதாக் குறைக்கு பல புள்ளிகளை ஒரே கோடாக்குவதென, தொகுப்பின் பதினான்கு கதைகளின் அத்தனை பாத்திரங்களையும் பொதுவாக  வரித்துக் கொண்டு அவர் நிகழ்த்தும் பொம்மலாட்டம் ‘அதிசயம் ஆனால் உண்மை’ ரகம். அநேக சந்தர்ப்பங்களில் தன்னிலை முன்னிலையில் படர்க்கை பேசி இலக்கிய சர்க்கஸ் காட்டுகிறார். ‘தாமரைக் காட்’டில் அப்படித்தான் எதிரில் நின்று பேசுகிறவர், திடீரென்று நம்மோடு வந்து உட்கார்ந்து கொண்டு வேறு ஆட்களைப் பற்றிப்  பேசுகிறார். அப்புறம்தான் தெரிகிறது அவர்களெல்லாம் சேர்ந்து கொண்டு நம்மைப் பற்றிப் பேசுகிறார்களென்று. ‘கிருஷ்ணன் பைத்தியமானத நம்பாம கறவை மாடுகள் அவன சுத்தி நின்னுக் கிட்டு இருந்துச்சு’ என்ற ஓர் ஒற்றை வரியை ஸ்கேனிங் செய்தாலே போதும் சூர்யா சொல்ல வந்ததை விட சொல்லாதவை பிரமிப்பானவை என்று. அப்படி பிரமித்தவர்களுக்குத்தான் ‘கடவுளைக் கண்டவர்கள’£க பிரமோஷன் தருகிறார் சூர்யா.

சாதாரணங்களை அசாதாரணங்களாக்கி அவற்றை மறுபடி சர்வ சாதாரணங்களாக்குவதுதான் அமிர்தப் பாணி. ஐந்து வயதுப் பையன் பஜாஜ் ஸ்கூட்டர் ஓட்டுகிறானென்றால் அது அசாதாரணம்தான். ஆனால் அது எத்தனை சாதாரணம் என்ற ஆச்சரியம் ‘வலியின் நக’லைப் படிக்கிறவர்களுக்கு சர்வ சாதாரண மாகப் புரியும். ஆயாவை சிறுகதையாக் கியிருக்கும் கதை உட்பட பல கதைகளில் படைப்பாளிக்கு ஒரே களியாட்டம்தான். கைகளில் அரூபமாக எதையோ மறைத்து வைத்துக் கொண்டு நம்மைக் கதை கேட்க அழைக்கிறார். நாமும் யதார்த்தமாக இசைகிறோம். மயிலிறகால் வருடியபடி ஆரம்பிக்கிறார். கதையில் மூழ்கி நாம் ஒரு மோன பதத்திற்கு வந்ததும், பொடேரென்று பின்னந் தலையில் ஒரு சம்மட்டி அடி விழுகிறது.

அய்யோவென்று உற்றுப் பார்த்தால் சம்மட்டி நம்மிடம்  இருக்கிறது. அடித்து விட்டு நம் கையில் திணித்து விட்டாரா, அல்லது நாமே சம்மட்டியைப் பிடுங்கி அடித்துக் கொண்டோமா என்று புரிவதில்லை. சரி வீக்கத்தை வருடி விடுவாரென்று அடிபட்ட மண்டையை அவரிடம் காட்டினால் பொடேரென்று அதே இடத்தில் இன்னொரு அடி. சம்மட்டி எப்போது அவரிடம் போனதென்றும் தெரியவில்லை. கதை முடிந்து நம்மை விட்டு சூர்யா கிளம்பும்போது பார்த்தால் அவரின் கைகளில் மயிலிறகு மட்டுமே இருக்கிறது.  ஓ.. அமிர்தப் பேனாவே இது போதாது.. வருசத்துக்கு நாலு தொகுப்பு வேண்டும்.. இன்னும் நீ வேகமெடு.. அதுதான்  விவேகம்.. இலக்கியச் சாலைவிதி அதுதான்.

தவிர, உலகப் பண்பாடோ விபத்துக்குள்ளாகி, இப்போது ஆம்புலன்ஸில் வந்து கொண்டிருக்கிறது. மருத்துவமனை சேர்ந்ததும் அதற்கு முதலில் பேனா இரத்தம் இறக்கி இலக்கிய ஆபரேசன்தான் நடத்த வேண்டும் செல்போன் வலைதளம் உள்ளிட்ட அறிவியல் நவீனங்களை சரியாகக் கையாளத் தெரியாமல்தான் இப்படியரு கோர விபத்து நேர்ந்தது.

இளமை இதயங்களுக்கு விழிப்புணர்ச்சி கொடுத்து விட்டுத்தான் உணர்ச்சியே தர வேண்டியுள்ளது. இக்கட்டான இந்த நேரத்தில், இலக்கிய மருத்துவர்கள் 20க்கும் 40க்குமான பாலியல் சாத்தியங்களையா பேசுவது? ஒரு வேளை சொல்லாமல் விட்டு, இவற்றைத்தான் அமிர்தம் சொல்ல நினைத்திருப்பாரோ.. அப்படியானால் நாம் கடவுளைக் கண்டுபிடித்து விட்டோமோ.. அட எப்படிப் பார்க்கினும் அமிர்தமே ஜெயிக்கிறாரே, நன்றாக ஜெயிக்கட்டும்.

எழுபதே ரூபாயில் கடவுளைக் கண்டுபிடிக்க ஒரு அழகிய வடிவத்தைக் கொடுத்த அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்திற்கும், கடவுளையும் பக்தனையும் ஒரே ஓவியத்தில் சிதறவிட்டிருக்கும் சந்ருவிற்கும், புகைப்படக் கலைஞர் மணிமேகலை நாகலிங்கத்திற்கும் நமது நவீன நன்றிகள்.

- தாண்டவக்கோன் 

Pin It