(ந. செல்வனின் ஒரு சிற்பத்தின் கதை வழியாக...)

இன்றையக் காலக்கட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி, இந்தியத் துணைக்கண்டம் முழுமையுமே சிலைகள் வைப்பதில் பெரும் போட்டியே, அரசியலில் நிலவி வருகிறது. சிலைகள் வடிக்கப்படுவது வெறும் கல்லோ, உலோகமோ மட்டுமே கொண்டதல்ல. அதன் உள்ளீடாக சுய விளம்பரம், சுயநலம், போலிமைகள், அதிகாரச்சின்னம் என எல்லாம் கலந்தே இருக்கின்றன. சிலைகள் தங்கள் கருத்தியலை ஒதுக்கி வைத்து விட்டு, வெறும் கற்களாக மட்டுமே நின்று கொண்டிருக்கும் தேசம் இது. சாமன்யர்களின் மாற்று மதிப்பீடுகளோ, இடர்ப்பாடுகளோ, வலிகளோ நமது வெளியில் சிலைகளாக ஒருபோதும் அமைக்கப்படுவதில்லை சென்னையிலுள்ள ‘‘ராய் சௌத்ரியின் உழைப்பாளர் சிலை’’ போன்ற ஒரு சிலவே இதில் விதிவிலக்கு. ந.செல்வனின் ‘ஒரு சிற்பத்தின் கதை’ எனும் ஆவணப்படம், இத்தகைய மாற்று முயற்சியை நோக்கிய ஒரு பதிவு.

16-சூலை 2004. கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா எனும் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை தமிழகம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க நியாயம் இல்லை. அன்றைய தினத்தில் இந்தியா ஒரு நிமிடம் ஆடிப்போன மாபெரும் துயரச் சம்பவம் அது. ஒரு குற்றமும் செய்யாத, ஏதுமறியாத 94 பள்ளிக் குழந்தைகளின் உயிரை அக்கினிக்குத் தாரை வார்த்து விட்டு, நெஞ்சம் பதறித் துடித்துப்போன பெற்றோர்களின் வேதனையில் நாமும் பங்கு பெற்றோம். ஆனால் அந்த நேரத்துக் குற்றச்சாட்டுகள், புலம்பல்கள், பள்ளிகளின் சீர்திருத்தம் எனக் கிளம்பிய பல குரல்களும் ‘மறதி’ எனும் மௌனக் கிடங்கிற்குள் விழுந்து விட்டன. நமது சமூகத்தின் மிகப் பெரும் சாபமே இந்த ‘அதீத மறதி நிலை’ தான். சமூக அவலங்களின் போது கூப்பாடு போடுவதும், பின்னர் ஊடகங்கள் வழங்கும் பிம்ப சுகத்தில் மூழ்கி விடுவதுமே நமக்கு வழமையாகிப் போய் விட்டது. எனவே இந்த மறதிக்கு எதிரான செயல்பாடாக ஏதேனும் ஒன்று செய்தாக வேண்டி இருக்கிறது. இதற்கு தொடர் சிந்தனை அல்லது அதனைக் கிளரும் குறியீட்டு அடையாளங்கள் தேவையாகின்றன.

கும்பகோணம் தீ விபத்தின் நினைவாக 2008-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வெண்கலச் சிற்பமும், அதன் உருவாக்கம் மற்றும் பின்னணி பற்றிய ந. செல்வனின் ஆவணப்படமும் மேற்குறித்த செயல்பாடுகளின் நீட்சி எனலாம். இந்த கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் நினைவுச் சிற்பத்தை உருவாக்கியிருப்பவர்கள் க்ஷி.ஷி.ஞி அருளரசன், ஙி.ஸி. ரவி, றி. சிவராம கிருஷ்ணன் ஆகியோர். இவர்களும் படத்தின் பங்கேற்பாளர்களாக மாறியுள்ளனர். ‘ஒரு சிற்பத்தின் கதை’ எனும் இந்த ஆவணப்படம் சென்ற ஆண்டே எடுக்கப்பட்ட படமாயிருந்தாலும், கும்பகோணம் பள்ளி விபத்தின் ஆறாம் ஆண்டு நினைவுதினம் வருகின்ற இவ்வேளையில், இது பற்றிய உரையாடல் சற்று அவசியமானது.

ஆவணப்படத்தின் துவக்கமே நம் குற்ற உணர்வைத் தூண்டுகிற வகையில் உள்ளது. இந்தச் சிற்பம் தொடக்கத்தில் களிமண் சிற்பமாக இருப்பது, அதன்மேல் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கலவை பூசப்படுவது, ஃபைர் இழைகளால் ஒட்டப்படுவது, பினனர் துண்டு துண்டாக அறுக்கப்பட்டு, உருக வைக்கப்பட்ட அலுமினியக் குழம்பு ஊற்றப்பட்டு வெண்கலச் சிலையாக மாற்றப்படுவது என சிலை உருவாக்கத்தின் சகல நுட்பங்களும் நமக்குக் காட்டப்படுகின்றன. பல தரப்பட்ட வினைஞர்களின் கூட்டு முயற்சியையும், உழைப்பையும் சேர்த்தே படத்தில் பதிவு செய்திருப்பது பாராட்டிற்குரியது. சிற்பம் படிப்படியாக உருவாகும் தருணங்கள் நம்மை காட்சிகளாகக் கடந்து செல்கின்றன. சிற்பம் முழுமைபெறும் காட்சியின் பின்பாக, சிற்ப உருவாக்கத்தின் பின்னணிக் காட்சித் துμக்குகளாக ஒடிக்கடக் கின்றன. மனதைக் கனக்கச் செய்யும் கும்ப கோணம் பள்ளி விபத்தின் புகைப்படங்களும், இத்துயர சம்பவம் நடைபெற்றதைக் காட்டப்படுகின்றன. சிறிது நேரமே இடம்பெறும் இந்தத் துμக்குகள்தான் மேற்கண்ட சிற்பத்தின் உருவாக்கத்திற்கான நியாயத்தைச் சொல்கின்றன. ஆவணப்படத்தின் காட்சி மொழி இந்த இடத்தில் பின்னோக்கு உத்தியைக் கொண்டிருக்கிறது.

படத்தில் எங்கேயும் உரையாடல்கள் இல்லை. முழுவதும் காட்சிகளாகவே நகர்கின்றன இதற்கு அர. பிரசன்னாவின் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் உதவியிருக் கின்றன. நெய்வேலி - என்.டி.சந்தோஷின் பின்னணி இசை இயல்புடன் இருந்து காட்சிகளை நிறைத்திருக்கின்றது. படத்தின் காட்சி ஓட்டத்தில் சிறு தொய்வு தெரிந்தாலும், ந. செல்வனின் நெறியாள்கை அதனைச் சீரமைத்திருக்கின்றது.

ந. செல்வனின் தேடல் பல கருப்பொருட் களையும் அளாவுகின்றது என்பதற்கு இந்தப்படம் ஓர் எடுத்துக்காட்டு. ஒரு நினைவுச் சிற்பம் உருவாகத் தொடங்கும் முன்னரே உடனிருந்து, இடைப்பட்ட காலம் வரையிலும் காத்திருந்து, மிகப் பொறுமையுடன் இவ்ஆவணப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இரண்டு விதமான அனுபவங்களை இந்த ஆவணப் படத்தின் வழி வழங்குகிறார். ந. செல்வன். ஒன்று அனுபவங்கள்; மற்றொன்று, இதற்குப் பின்னணியாகும் சமூகக் கொடுமை குறித்த பதிவு. சிற்பங்களில் உள்ள மக்களின் துயர் கவியும் வெளிப்பாடாக வெண்கலச்சிலை கருப்பு வர்ணம் பூசப்பட்டும், நடுவில் எழும்பும் நெருப்பின் கரங்கள் பொன்னிற மாகவும் வேறுபடுத்திக் காட்டியிருப்பது அவர்களின் கலைத்திறனுக்குச் சான்று.

நம் இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகள் என்பது கிள்ளுக்கீரைக்குச் சமானம். உரிமைகள் மறுக்கப்படும் சூழலில் வளரவேண்டிய நிர்பந்தமே பெரும்பான்மை இந்தியக் குழந்தைகளின் சாபக்கேடு எனில் இது மிகையல்ல. அடிப்படையில் அவர்கள் மழலைப் பருவம் முதல் புத்தக மூட்டையையும், பெற்றோரின் ‘டாக்டர், என்ஜினியர் கனவுகளை நனவாக்கும் கடமையையும் சுமப்பவர்கள். சிந்தனைச் சுதந்திரமும், எளிய உரிமைகளும் அற்று கடும் ஓடுக்குமுறை களுடனே அவர்கள் வளர்கின்றனர். ஆபத்தான பள்ளிக் கட்டமைப்புடன், ஆட்டோ, வேன்களில் திணிக்கப்பட்டு தினமும் மரண வாசலை மிதித்துத்தான், எளிய நடுத்தர, அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் தினங்களைக் கடத்துகின்றனர். பெற்றோரின் பேராசை, கல்வித்துறையின் கையாலாகாத்தனமான ஏற்றத்தாழ்வை உருவாக்கும் அரசின் மதிப்பீடுகள் இவற்றுக்கெல்லாம் நமது மழலைகளே பலியாடுகள். இப்படியாக உள்ள இவ்விஷச் சூழலில் கடந்த காலத் துயரத்தை ஞாபகமூட்டும் வண்ணம் ஒரு சிற்பத்தின் கதை வந்திருப்பது பொருத்தமானதுதான்.

நமது உணர்வுகள் மரத்துப்போகாமல் இருக்கவும், குழந்தைகளின் எதிர்காலம் மீண்டும் இத்தகையதொரு ஆபத்தை நேர் கொள்ளாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஆயினும் ஒன்று, மீண்டும் இவ்வாறான சிற்பங்களைத் தோற்றுவிக்கும் அவலச் சூழலோ, தேவைகளோ மீண்டும் நமக்கு ஏற்படக்கூடாது என்பதாகவே இப்படத்தின் செய்தியை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய சமூக உணர்வுடன் உருவாக்கப்பட்ட இந்தச் சிற்பமும், இது பற்றிய ந.செல்வனின் ‘ஒரு சிற்பத்தின் கதை’யும் கலை வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பன எனலாம்.