பேராசிரியர் ந.ரவீந்திரன் அவர்களது நேர்காணல் (புதிய புத்தகம் பேசுது மே 2010) பல்வேறு விவரங்களை விரிவாக வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியம் உள்ளிட்ட கடந்த அறுபது ஆண்டுகளின் வளர்ச்சிப் போக்குகள் பலவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்றே கூறலாம். இவற்றுள், பக்தி இயக்கம், வணிக மேனிலை கொண்ட அரசு போன்றவை குறித்த இவரது கருத்துகள் மீள்ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியவையாக உள்ளன.

பக்தி இயக்கம் என்பது அன்றைய மக்கள் பகுதியினர் அனைவரும் கலந்துகொண்ட பேரியக்கமாகவே கருதப்பட்டுவருகிறது. மரபுவழிப்பட்ட ஆய்வாளர்களுடன், மார்க்சிய அறிஞர்களும் இத்தகைய எண்ணவோட்டங்களையே கொண்டுள்ளனர்.

பக்தி இயக்கத்தின் தாக்கம் பற்றி, உண்மைகளுக்கும் கிடைக்கின்ற தரவுகளுக்கும் புறம்பான உயர்வான பெருமைப்படுத்தப்படும் கருத்துகள்தாம் கூறப்படுகின்றன. அடிநிலையில் இருந்த உழைக்கும் மக்கள் பகுதியினர் பக்தி இயக்கத்தினால் மிகுதியும் ஈர்க்கப்பட்டனர், அதனால் அத்தகைய பகுதியினரை எளிதில் ஆளுமைப்படுத்த முடிந்தது, பல்வேறு பிரிவினராகக் கிடந்த மக்களைப் பக்தி இயக்கம் இணைத்து ஒன்றுபடுத்தியது, யாவரும் இணை என்ற மயக்கத்தை ஏற்படுத்தும் பணியில் பக்தி இயக்கம் வெற்றி கண்டது என்றெல்லாம் கூறும் அளவுக்கு இது சென்றுவிட்டது.

பக்தி இயக்கத்தின் தாக்கம் அடிநிலையில் இருந்த உழைக்கும் மக்களையும் எட்டியிருந்தது என்ற இத்தகைய உண்மைக்கு மாறான கருத்துகள், அன்றைய சமூக அசைவியக்கங்கள் பலவற்றை வரையறுப்பதிலும் மதிப்பிடுவதிலும் தவறான வழிகளைக் காட்டிவிட்டன.

சைவ நாயன்மார்களிலும் வைணவ ஆழ்வார்களிலும் அடிநிலையிலிருந்த உழைக்கும் பகுதியினரைச் சார்ந்த சில இனத்தினர் - சாதியினர் இருந்தார்கள் என்பது உண்மைதான். இதனால் மட்டுமே பக்தி இயக்கத்தின் ஈர்ப்பு எல்லாப் பிரிவினரையும் எட்டியிருந்தது என்று கூறிவிடமுடியாது. ஏனெனில், இத்தகைய, உழைக்கும் பகுதியைச் சார்ந்த சைவ வைணவ அடியார்கள், தனிப்பட்ட அளவில் பக்தி இயக்கத்தில் கலந்துகொண்டார்களேயன்றி, அவர்கள் சார்ந்த சாதியினர் அனைவரும் பக்தி இயக்கத்துக்குள் வந்துவிட்டதாகச் சான்றுகள் இல்லை. அடிநிலை மக்கள் சைவ-வைணவ வழிபாட்டு முறைகளை ஏற்றுக்கொள்ளவும் இல்லை; அத்தகைய நம்பிக்கைகளைப் பெறவுமில்லை. அவர்கள் தங்களது வழமையில் நாட்டார் கடவுளர்களை மட்டுமே தொடர்ந்து வழிபட்டு வந்தார்கள். சைவமும் வைணவமும் இவர்களை ஈர்க்கவில்லை என்பதனை இதனாலும் அறியலாம்.

பக்தி இயக்கம் குறித்த ஆய்வுகள் கீழ்க்கண்ட வரையறைகளை முன்வைக்கின்றன (மே.து.ராசுகுமார், சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல், மக்கள் வெளியீடு, 2004 பக் 218-219):

1. உழைக்கும் மக்கள் நாட்டார் கடவுளர்களையே தொடர்ந்து வழிபட்டு வந்தனர் . வைச, வைணவக்கோயில்களில் அவர்கள் ஏற்கப்படவுமில்லை, வழிபடவுமில்லை. இந்த நிலையில் அவர்கள் சைவ, வைணவத்தின் பக்தி இயக்கத்தில் பங்கு கெண்டார்கள் என்பது பொருந்துவதாக இல்லை.

2. எளிய மக்களை வழிபாட்டுக்குக் கூட ஈர்க்க முடியாத பக்தி இயக்கம், அதில் நம்பிக்கையே கொண்டிராதவர்களை ஆளுமைப்படுத்த முடிந்தது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

3. சமூக-பொருளிய முரண்கள் தொடர்ந்திருந்தபோது, அதுவும் இறைவன் பெயராலேயே நிலங்கள் பறிக்கப்படுவதும் உழுகுடிகள் நெருக்கப்படுவதும் நடந்து கொண்டிருந்தபோது, நிலங்களை இழந்தவர்களையும் அடைந்தவர்களையும் பக்தி இயக்கம் ஒருமைப்படுத்தியது என்பது நடந்திருக்க முடியாது.

4. நடைமுறை வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சமூகத்தில், இறைவனை வழிபடுவதில் கூட வேறுபாடுகள் காட்டிய அமைப்பில், ஆதிக்கப்போக்குகள் செல்வாக்குச் செலுத்திய பக்தி இயக்கம் முன்வைத்த ‘இறைவன் முன் அனைவரும் இணை’ என்ற மாயையில் - மயக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களே விழுந்திருக்கமாட்டார்கள்.

5. நாயன்மார் மற்றும் ஆழ்வார்களில் கீழ்த்தட்டுப் பிரிவினர் சிலர் இருந்தாலும், அவர்கள் தனியராக வந்தவர்களேயன்றித் தங்களுடன் தங்கள் சாதியினரையும் அழைத்து வந்தவரல்லர்.

6. எனவே, பக்தி இயக்கம் நிலவுடைமையைக் கொண்டவர்களின் இயக்கமாக இருந்ததேயன்றி பிற மக்களின் பங்கேற்பைப் பெறவில்லை.

உழைக்கும் மக்களைப் பக்தி இயக்கம் ஈர்க்கவில்லை

சைவ-வைணவக் கோயில்கள் அனைத்தும் உடைமைப் பிரிவினரின் கட்டுக்குள் இருந்தன. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமெனில், அக்கோயில்கள் யாவும் அவர்களுக்காக உருவாக்கப்பட்டு அவர்களுடையதாகவே விளங்கின. அத்தகைய கோயில்களில் அடிநிலை உழைக்கும் மக்கள் நுழையவும் உரிமைகள் இருக்கவில்லை. இந்த நிலையில், சைவ-வைணவக் கோயில்களுக்குள் செல்லவும் வழிபடவும் ஈடுபாடு கொண்டிராத உழைக்கும் மக்களை, சைவ-வைணவ வழிபாட்டை முன்னிறுத்திய பக்தி இயக்கத்தைக் கொண்டு கட்டுப்படுத்த முடிந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கோயில்களுக்குள் கட்டப்பட்டிருந்த ஆயிரங்கால் மண்டபம் போன்ற அரங்குகளில் நடைபெற்ற இசை, நடனக்கலை நிகழ்வுகளிலோ, இலக்கிய அரங்கேற்றங்களிலோ, கோயில்களுக்குள் செல்ல இயலாத பிரிவினர் பார்வையாளராகக் கலந்துகொள்ளவும் வாய்ப்புகள் தரப்படவில்லை. வழிபாட்டு முறைகளில் நாட்டார் கடவுளர் வழிபாடு போலவே, அடிநிலை உழைப்புப் பிரிவினர் தங்களுக்கு எனத் தனியாக நாட்டார் கலைகளைப் பேணிவந்தனர். மன்னரைப் புகழும் ராசராச நாடகம் என்னும் நாடகம்கூட, கோயில்களுக்குள் நடத்தப்படவில்லை. கோயிலுக்கு வெளியேதான் கண்டுகளிக்கப்பட்டது. இதனால், அப்போது பண்பாட்டு இணக்கங்கள் அல்லது உறவுகள் உண்டாக வழியே இருக்கவில்லை. உடைமை சார்ந்த பொருளிய இணைவு இல்லாதபோது, பண்பாட்டுக் கலப்பு இயலாதென்பதுடன், அன்றாட வாழ்வில் முரண்கள் நீடித்துக்கொண்டிருந்தன என்பதையும் மனங்கொளவேண்டும்.

சமூக-பொருளிய முரண்கள் ஒருபுறமும் பண்பாட்டு இணக்கமற்ற நிலை மறுபுறமும் தொடர்ந்தபோது, வேறாக வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் பிரிவினர் அனைவரையும் பக்தி இயக்கம் இணைத்திருக்கும் சூழல் இருக்கவில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பக்தி இயக்கத்தின் முரண்கள்

ஏதோவொருவகையில் அடிநிலை மக்களிடையே நம்பிக்கையையும் கட்டுப்படுத்தலையும் உருவாக்க முனைந்த உடைமைப்பிரிவினர், நாட்டார் கடவுளரை மேனிலைப்படுத்தி, ஆரியமயமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும், மேனிலைப்பட்ட சைவ- வைணவக் கடவுளருக்கான கோயில்களில் வழிபடும் வாய்ப்பு, பெரும்பான்மையோரான அடிநிலை மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆரியக் கடவுளரையும் நாட்டர் கடவுளரையும் ஒருங்கிணைத்து ஒப்புமை செய்து, இரு கடவுளரும் ஒருவரே என்று காட்டினாலும், இத்தகைய இரு வகைப்பட்ட கடவுளரை வழிபடும் மக்களும் ஒருவரே என்பதை நடைமுறை வாழ்க்கை காட்டவில்லை. இவர்கள் அனைவருமே இணையானோர் என்பதை உடைமைப் பிரிவினர் ஏற்க முன்வராதபோது, கடவுளர் இணைப்பிலும் பயன் கிடைக்கவில்லை.

மக்கள் பிரிவினரிடையே நிலவிவந்த கடவுள் நம்பிக்கையைக் கொண்டும் மூடநம்பிக்கைகளை வைத்தும் முரண்பட்டிருந்தோரை எதிர்கொள்ளும் முயற்சிகளாக இவையெல்லாம் இருந்திருக்கலாம்.

எப்படியிருப்பினும், இணையற்ற வாழ்வமைப்பில், வழிபாட்டுக்கும் கூட இறைவன் முன் இணைந்து நிற்க முடியாத சூழலில், அத்தகைய இணையற்ற மக்களிடையே யாவரும் இணை என்ற மாயை தோன்றுதற்கான வாய்ப்புகளே இருந்திருக்காது.

உடைமையாளரை வலுப்படுத்திய பக்தி இயக்கம்

நடைமுறை வாழ்வில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை மாற்றாமல், கீழ்நிலை மக்களுக்கான அடிப்படை உரிமைகளை அளிக்காமல், கற்பனை வாழ்வில் அனைவரும் ஒன்றுதான் என்பதை வலியுறுத்திய சைவமும் வைணவமும் பக்தி இயக்கத்தினால் வெற்றிப் பெற முடியவில்லை. ஆயினும், பக்தி இயக்கம், நில உடைமைப் பிரிவனரை அமைப்பாக ஒன்றுபடுத்துவதற்குப் பெருமளவில் பயன்பட்டது எனலாம்.

காடுகளாகக் கிடந்த நிலங்களைத் தங்கள் உழைப்பில் உற்பத்திக்கு ஏற்றவாறு பண்படுத்திப் பல தலைமுறைகளாகப் பயிரிட்டுவந்த குடிகளை அகற்றிவிட்டு, அந்த நிலங்களை அரச அலுவலர்களும் படைத் தலைவர்களும் நிலஉடைமையாளர்களும் பார்ப்பனர்களும் கைப்பற்றியிருந்தனர். கோயில்கள் எடுத்துக்கொண்ட நிலங்களும் இவர்களுக்கே மறைமுகமாகப் பயன்பட்டன. இதில் நிலமிழந்தோரைச் சில நாள்கள் மயக்கத்தில் வைத்திருக்கப் பக்தி இயக்கம் முயன்றிருக்கலாம்; பயன்பட்டிருக்கலாம்.

இங்கு மற்றொன்றையும் மறந்துவிடக்கூடாது. அன்றைய நிலையில், அடிநிலை மக்கள் அப்போதைய சமூக- பொருளிய-அரசியல்-பண்பாட்டுக் கட்டமைப்புக்கு உட்பட்டோராகவே வாழ்ந்துகொண்டிருந்தனர். அன்றைய கட்டமைப்பின் சுரண்டல் போக்குகளையும் அடிப்படுத்தும் செயல்களையும் அடக்குமுறை வழிகளையும் தடுத்துநிறுத்தும் திறன் அவர்களிடம் இருக்கவில்லை. விருப்பமின்றி, இவற்றுக்கெல்லாம் அடங்கிக்கிடக்கவேண்டியோராகவே அவர்கள் வாழ்ந்தனர். இதனை, சைவ-வைணவத்தின் பக்தி மாயைகளில் அடிநிலை மக்கள் மயங்கினார்கள் என்று எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை.

சைவ-வைணவக் கோயில் என்ற நிறுவன அமைப்புக்குள், உடைமையற்ற பிரிவினரையும் இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்டாதது வேறொன்றையும் வெளிப்படுத்துகிறது. நில உடைமையாளர்கள் கடவுள் நம்பிக்கை, கோயில் என்பன போன்ற மாயைகளைப் பயன்கொள்ள முனைந்திருக்கலாம். ஆனால், இவற்றை மட்டுமே தங்கள் ஆதிக்கச் செயல்களுக்கு அடிப்படையாக வைத்துக்கொள்ளவில்லை. பக்தி போன்ற மயக்கங்களும் மாயைகளும் தங்களது ஆதிக்க மேலாண்மைக்குப் பயன்படா என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால், அடக்குமுறை என்ற கருவியையே உடைமை அமைப்பு அப்போது பெரிதும் நம்பியிருந்தது என்பதைப் புறக்கணித்துவிட முடியாது. சமணருடனான முரணில் ஆயிரக்கணக்கானோர் கழுவேற்றப்பட்டதை மறந்துவிடமுடியாது.

கோயில் வருவாய் போன்ற பயன்களை முற்றிலுமாக நுகரவேண்டும் என்பதுடன், கோயிலை மையமாக வைத்தே சுரண்டல் முறைமைகள் பல உருவாக்கப்பட்டிருந்ததால் அந்த நிறுவன அமைப்பில் பிறர் பங்குகொள்ளும் வாய்ப்பு ஏற்படவில்லை. அதனாலேயே, இந்தக் கோயில்களில் இருந்த எல்லாம் வல்ல கடவுளரை வழிபடக்கூடப் பிறருக்கு உடைமையாளர்கள் இடம் தர விரும்பவில்லை. இதனால், பக்தி இயக்கமானது பண்பாட்டு இயக்கமாக மலர்வதற்கான சூழலும் அடிபட்டுப்போனது.

வணிகர் யார்?

அரசருக்கு அடுத்து இருப்போராகவே வணிகர் பெரிதும் காட்டப்படுகின்றனர். இருப்பினும், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றில் வணிகர் பற்றிய பல குறிப்புகள் இருந்தாலும், அவர்களை நில உற்பத்தியாளரை விஞ்சியோராகக் காட்டவில்லை. செல்வமும் செல்வாக்கும் கொண்ட வேளாண் தலைவர் பலர் பாடுப்பட்டுள்ளனர். ஆனால், சிலப்பதிகாரம் வணிகரின் ஏற்றத்தை அரசர் பின்னோராகவே பதிவு செய்கிறது. ஆனாலும், சிலப்பதிகாரம் புகார் நகரத்துககு வெளியே வளம் பெற்றிருந்த வயல்களையும் விவரிக்கிறது. கடற்கரை நகரங்களில் ஏற்றுமதியினால் வணிகர் பலர் சிறப்புப்பெற்றிருந்தனர் என்பதும் உண்மைதான். ஆயினும், வணிகரது மேலாண்மையுடன் அரசு இயங்கியதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

சிலப்பதிகாரம் காட்டும் புகார் நகரில் வணிகர் சிறப்புப் பெற்றிருந்தாலும், அவர்களைச் சார்ந்து மட்டுமே அரசு இயங்கியிருக்க வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் புகாருக்கு வெளியே இருந்த வளமான நிலங்களையும் அவற்றில் கிடைக்கும் பெரும் வருவாயையும் அரசன் ஒதுக்கிவிட முடியாது. அப்படி ஒதுக்கினால், நகர மக்களின் உணவு வேண்டல்களை நிறைவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டிருக்கும். நில உற்பத்தி சார்ந்த ஏற்றுமதியும் தடைபட்டிருக்கும். வெளிநாட்டு வணிகம் யாவும் செய்தொழில் தொடர்பான பொருள்களாகவே இருந்தன என்ற முடிவுக்கும் வரமுடியாது. அப்படிக் கொண்டாலும், செய்தொழிலுக்கான அடிப்படைப் பொருள்கள் யாவும் உள்நாட்டிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆகவே, எந்த அரசும் அன்றைய தமிழகச் சூழலில் வணிக மேலாண்மை கொண்டதாக மட்டுமே இருந்திருக்க முடியாது. சங்க காலத்தில் வேந்தர் தங்களுக்கு ‘இணையற்றோர்’ எனக் கருதிப் பெண் கொடுக்க மறுத்தோர் வேளாண் தலைவர்கள். இவர்களின் வளமையையும் வலிமையையும் வல்லாண்மையையும் புறக்கணித்து அரசர் எவரும் ஆட்சியில் தொடர்ந்திருக்க இயலாது.

சங்க காலத்தில் இனக் குழு-குடிகள் உணவு திரட்டிய நிலையிலிருந்து, உணவு உற்பத்தி நிலைக்கு மாறியதை அடுத்து ஏற்பட்ட வளர்ச்சிகள் குறிக்கத்தக்கன. வேளாண் நுட்ப வளர்ச்சி, வேளாண் கருவிகளில் மேம்பாடு, நீரியல் நுட்ப அறிமுகம் ஆகியன உற்பத்தி நில விரிவாக்கத்துக்கு வழியேற்படுத்தின. இதனால், மக்கள் தொகையில் மிகுந்த எண்ணிக்கை கொண்டோர் உணவு உற்பத்தியைச் சார்ந்து இருப்போராக மாறியிருந்தனர். இந்த வளர்ச்சியும் முன்னேற்றமும் விரிவாக்கமும் கிபி பன்னிரண்டாம் ஆண்டு வரை ஏதோவொரு வகையில் தொடர்ந்துகொண்டிருந்தன. வேளாண் உற்பத்திக் கருவிகளான ஏர், மண்வெட்டி போன்றவற்றின் வளர்ச்சி இல்லாமல், இந்த வேளாண் விரிவாக்கமே நடைபெற்றிருக்காது.

ஆகையால், வேளாண் உற்பத்திக்கருவிகளின் உருவாக்கத்திலோ, முன்னேற்றத்திலோ அப்போது முடக்கம் ஏதும் ஏற்பட்டிருக்க முடியாது, மேலும், வேளாண் வளர்சசியின் தொடக்கக் கட்டங்களில், வேளாண் நுட்ப அறிவும் மேம்பாடும் அரசரைச் சார்ந்ததாக மட்டும் இருந்துவிடவில்லை. தங்களது வேண்டல்களை யட்டி மக்களே இவற்றை வளர்த்தெடுத்தனர்.

இந்தக் காலக்கட்டத்தில் வேளாண்மையும் வணிகமும் தனித் தொழில்களாகப் பிரியவில்லை என்பதையும் பார்க்கலாம். ‘இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்’ (தொல்.பொருள். புற 74) என்றவிடத்து, வணிகருக்கு உழவையும் வேளாளருக்கு வணிகத்தையும் செயல்பாடுகளாக உரையாசிரியர்கள் கூறுவதையும் இங்கு நோக்கவேண்டும்.

வணிகர்களின் நிலவுடைமை

சமணர் - சைவர் பகையை வணிகருக்கும் வேளாளருக்குமான பூசலாகக் காட்டப்படும் பக்தி இயக்க காலத்தில் வணிகர் பலர் நில உடைமையாளராகவே இருத்ந்ததைக் காணலாம். இக்காலத்திய கல்வெட்டுக்கள் இவற்றைத் தெளிவாகவே தெரிவிக்கின்றன. வணிகர்கள் தனித்தோ தங்களது நகரம் என்ற அமைப்பு வழியாகவோ கோயிலுக்குக் கொடுத்தக் கொடைகள் பெரும்பாலும் நிலங்களாகவே இருந்தன.

மூன்றாம் குலோத்துங்கனின் இருபத்து நான்காம் ஆட்சியாண்டு உய்யக்கொண்டான் திருமலைக் கல்வெட்டு, கொங்கு கொண்ட சோழபுரம் என்ற பெயரில் ஊர் உருவாக்கப்பட்டு வணிகர்களுக்குக் கொடுத்ததையும் அவ்வாறு கொடுக்கப்பட்ட விளைநிலங்களிலிருந்து 23000 கலம் நெல்லும் நன்செய் நிலங்களுக்காக 1000 காசும் அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டியதைக் குறிப்பிடுகின்றது (கஆஅ 1939 : 388 ; ப.242) ‘உழவுக்காசு’ என்ற வரியையும் வணிகர் செலுத்தியுள்ளனர். ஏரியைக்காத்தல், பழுது பார்த்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டிருந்தனர். நகரம் என்ற அமைப்பு, நில மேலாண்மை குறித்த பணிகளை மேற்கொண்டிருந்ததையே பல கல்வெட்டுக்கள் பதிந்திருக்கின்றன. அதாவது வணிகர்கள் பலரும் வேளாளராகவே வாழ்ந்திருந்தனர். இந்தப் பின்புலத்தில் வணிகருக்கும் வேளாளருக்கும் பகை அல்லது முரண் இருந்தது என்ற முடிவை மீளாய்வு செய்யவேண்டியுள்ளது.

மேலும், விற்பனையில் ஈடுபட்டிருந்த வணிகப் பகுதியினர், வேளாளரோடு முரண்படவேண்டிய நிலையும் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை. பக்தி இயக்கக் காலத்தில் வெளிநாட்டு வணிகம் முழுமையாகத் தடைபட்டு விட்டதாகவே தெரிகிறது. உள்நாட்டு வணிகம் நில உற்பத்திப் பொருள்களையே சார்ந்திருந்தது. நில உடைமையாளரின் உற்பத்திப் பொருள்களை வாங்கி விற்பதும் அவர்களுக்கு வேண்டிய பொருள்களைப் பிற இடங்களிலிருந்து வாங்கித் தருவதும்தான் வணிகரின் அன்றைய பெரும் பணியாகும். அப்போது பரந்து கிடந்த நில உற்பத்திப் பகுதிகளில் மட்டுமே இத்தகைய வணிகச் செயல்பாடுகள் பெருமளவு இருந்திருக்கமுடியும். நில உடைமையாளரின் கட்டுக்குள் அடங்கிக் கிடந்த பகுதிகளில் தாம் வணிகர் தங்கள் பயணங்களையும் மேற்கொள்ளவேண்டியிருந்தது. இவற்றுடன், அன்றையக் கட்டத்தில் ஏற்பட்டிருந்த வேளாண் வளர்ச்சியினாலும் வளத்தினாலும்தான் வாங்குகின்ற ஆற்றல் மிகுந்து வணிகப் பெருக்கமே இயலுவதாயிற்று.

இந்த நிலையில் தங்கள் வணிக நலன்களுக்காக நில உடைமையாளரையே முழுமையாகவும் முற்றிலுமாகவும் சார்ந்திருந்த வணிகர்கள், அவர்களை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கினார்கள் என்பது பொருந்துவதாக இல்லை (மேலும் விவரங்களுக்குப் பார்க்க : ‘இடைக்காலத் தமிழகத்தில் சைவ-சமண முரண்கள்’ - சமூக விஞ்ஞானம், செப் 2003, பக். 3-12).

வேளாண் வளர்ச்சி ஏற்பட்டுவந்த அன்றையக் கட்டத்தில் பசி பட்டினி போன்றவை ஏன் ஏற்பட்டன என்பதும் ஆழமான ஆய்வுக்குரியதாகும். ஒரு புறம் வேளாண் நிலங்கள் பெருகின என்பது உண்மைதான். ஆயினும், வன்புல நிலங்களில் புன்செய்ப்பயிர் செய்துவந்த குழு-குடியினர் வெளியேற்றப்பட்டு அவை மென்புலங்களாக மாற்றப்பட்டன. புதிய உற்பத்தி முறைகளோடு இணக்கம் காண முடியாத குழு - குடியினர் சிலர் விலங்குகளை வேட்டையாடும் வாய்ப்புகளையும் இழந்து, புன்செய் உற்பத்தியிலும் ஈடுபட இயலாமல் பசி பட்டினியினை எதிர்நோக்கினர். இவர்கள் ஊதியத்துக்கு உழைக்கும் வாழ்வுக்குப் பழகும் வரை அல்லது மாறும் வரை பல தடைகளைக் காணவேண்டியிருந்தது. பின்னர், இயல்பான வாழவோட்டத்தில் இவர்களும் கலந்துவிட்டார்கள். செய்தொழிலுக்கும் சிலர் சென்றிருக்கலாம்.

அரசர்கள், சமண பவுத்தத்திலிருந்து சைவ வைணவத்துக்கு மாறியதையும் வேனாண் வளர்ச்சியினூடாகப் பார்ப்பது பொருத்தமாக அமையும். நில உற்பத்தியிலிருந்து ஒரு பங்கினைத் திறையாகப் பெற்றே அரசர்கள் - வேந்தர்கள் வளம் பெற்றார்கள். இவ்வாறு திறை பெற்றதனால், உழு குடிகளைப் பகைவரிடமிருந்து காக்கும் கடமையை மேற்கொண்டனர். அந்தக் கட்டத்தில் சைவமோ வைணவமோ உருப்பெற்றிருக்கவில்லை.

சமணமும் பவுத்தமும் மக்களிடையே பரவவில்லை என்றாலும் அரசருடன் தொடர்புகொண்டிருந்தன. வேளாண் வளர்ச்சி ஏற்பட்டு, பெரும் நிலத் தலைவர்கள் மேலெழுந்த போது, உழு குடிகளுக்கும் வேளாண் தலைவர்களுக்கும் முரண்கள் தோன்றின. வளத்திலும் வலிமையிலும் வல்லாண்மையிலும் மேம்பட்டிருந்த வேளாளரோடு நிற்பதா அல்லது திறை என்ற பெயரில் உற்பத்தியில் ஒரு பங்கினைத் தந்துகொண்டிருந்த உழு குடிகளுடன் இருப்பதா என்ற குழப்பத்தில் அரசர் பலர் தயங்கிக் கிடந்தனர். இருப்பினும், இங்கு வேளாளரே வெற்றிப் பெற்றனர் என்பது வியப்பன்று. வேளாளரின் உற்பத்தி நலன்களைப் பேணும் அரசமைப்பின் உருவாக்கம் அப்போது தோன்றிவிட்டது. உழு குடிகளின் நிலங்களைப் பல்வேறு வகையில் வேளாளர் பறிக்கத் தொடங்கியதும், வேளாளர் - உழு குடிகளுக்கிடையே முரண்கள் முற்றத் தொடங்கின. இவற்றைப் பல கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இதுவே, சமண - சைவப் பகைக்கு அடிப்படையாக அமைந்தது.

இவையெல்லாம் விரிவான ஆய்வுக்கு உரியன என்றாலும், முடிந்தவரை புரிதலுக்கேற்ற அளவு சுருக்கமாகவே விளக்கப்பட்டுள்ளன.

மார்க்சியப் பார்வையுடன் தமிழ்நாட்டின் வரலாற்றை ஆய்ந்தோரில் எழுத்தாளர் ரகுநாதன், பேரா, நா.வானமாமலை, பேரா.க.கைலாசபதி, பேரா,கா.சிவத்தம்பி ஆகிய மூலமுதல் நால்வர் குறிக்கத்தக்கவராக உள்ளனர். இவர்கள் முன்மொழிந்த கருத்துகளை அடிப்படையாக அமைத்துக்கொண்டுதான் இன்றைய ஆய்வுகள் பலவும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்பதும் உண்மை.

இவர்கள் நால்வரும் தமிழ் இலக்கியங்களில் ஆழமான அறிவும் பயிற்சியும் பெற்றவர்கள். ஆயினும் கல்வெட்டுக்களை அறிமுகம் செய்துகொள்ளும் வாய்ப்பினை இவர்கள் பெறவில்லை. இன்று இருப்பது போன்றே அன்றும் இந்தக் கல்வெட்டுத் தொகுப்புகள் ஆய்வாளர்களுக்கு எளிதில் கிடைக்கவில்லை. இதனால், நீலகண்ட சாஸ்திரி, டி.வி, மகாலிங்கம், மீனாட்சி போன்றோரது நூல்களைச் சார்ந்தே அவர்கள் பார்க்கவேண்டியதாகிவிட்டது. அவர்களோ, ஒருபுறச் சார்பாகக் கல்வெட்டுக் கூற்றுகளைத் திரித்தும் வரலாற்றை மாற்றியும் எழுதியோராக இருந்தனர். மேலும், மார்க்சிய ஆய்வாளர்கள் எதிர்பார்த்த விவரங்களும் பார்வையும் அவர்களிடம் இருந்திருக்க இயலாது.

இந்த நிலையில் தங்களுக்குக் கிடைத்த தரவுகளைக் கொண்ட, சங்க இலக்கியத்தின் இனக்குழு வாழ்முறைகள், பக்தி இயக்கத்தின் எழுச்சி, வணிகரின் மேனிலை, சமண- சைவ முரண்களை வணிக-வேளாளப் பூசலாகப் பார்த்தமை போன்ற பல முடிவுகளை இவர்கள் வெளிப்படுத்தினர். இவற்றுள், பேரா. கைலாசபதி அவர்களின் கருத்துகளை அடியொற்றியே பேரா. ரவீந்திரன் தனது எண்ணங்களைக் கூறியிருக்கிறார்.

ஆனால் இவை குறித்த ஆய்வுகள் இன்று மேலும் வளர்ச்சியும் செழுமையும் பெற்று வேறு புதிய விளக்கங்களை வெளிப்படுத்தியுள்ளன என்பதையும் மறந்துவிடக்கூடாது. ஆய்வு அளவில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுவரும் இத்தகைய மாறுதல்கள், பேரா.ந. ரவீந்திரன் பார்வைக்குக் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

தமிழியல் ஆய்வுகள் மூல முதல் நால்வரான ரகுநாதன், வானமாமலை, கைலாசபதி, சிவத்தமபி ஆகியயோரோடு நின்றுவிடவில்லை அல்லது முடிந்துவிடவில்லை என்பதும் அவர்களை அடுத்தும் தொடர்கின்றன, வளர்கின்றன, மாற்றம் பெறுகின்றன என்பதும் அவர்கள் போட்ட அடித்தளத்தின் உறுதியையே காட்டுகின்றன. மார்க்சியப் பார்வையின் செயல்திறமும் உறுதிப்படுகிறது.

இவர்கள் அனைவருடனும் இத்தகைய ஆய்வுகள் குறித்துக் கலந்துரையாடும் வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன். புதிய தரவுகளை ஏற்றுத் தங்கள் கருத்துகளைச் செழுமைப்படுத்திக்கொள்ளும் உணர்வினையே அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தற்போதைய இந்த மாறுதல்களை நேரிடையாகப் பார்க்கும் பேறு பெற்றிருக்கும் பேரா. சிவத்தம்பி அவர்கள், இது குறித்துப் பலரிடமும் கலந்துரையாடி வருகிறார்.

வணிகர் பலர் வேளாளராகவே இருந்த விவரங்களை ‘பிற்காலச் சோழர் கால வாழ்வியல்’ என்ற எனது பிஎச்டி பட்ட ஆய்வேட்டில் 1 9 7 8ஆம் ஆண்டிலேயே விளக்கியுள்ளேன் (வெளியிடப்படாதது, சென்னைப் பல்கலைக்கழகம் 1978, பக்.71-73)

அடுத்து, பல கருத்தரங்குகளிலும் இக்கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுகளாக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1984 செப்டம்பர் 18- 19இல் நடத்திய ‘சோழர்காலத் தமிழ்நாட்டு வரலாறும் தொல்லியலும்’ என்ற கருத்தரங்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1993 சனவரி 27, 28, 29இல் நடத்திய ‘தமிழர் பொருளாதார மரபுச் செல்வம்’ என்ற இக்கருத்தரங்கு ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இவை, ‘சோழர் கால நில உற்பத்தி வளர்ச்சியினால் ஏற்பட்ட சில போக்குகள்’ (தமிழ்க் கலை, தமிழ்ப் பல்கலைக்கழக இதழ், தமிழ் 2 கலை 2, 3, 1984), ‘இடைக் காலத் தமிழகத்தில் வேளாண் வளர்ச்சியினால் ஏற்பட்ட சமுக-பொருளாதார மாற்றங்கள்’ (நாவாவின் ஆராய்ச்சி எண் 47, சனவரி 1999) என்ற தலைப்புகளில் இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.

இக்கருத்துக்கள் வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், வணிகர் பெரிதும் நிலவுடைமையாளராக இருந்ததை சப்பானிய வரலாற்று ஆய்வாளர் நொபுரு கராசிமா அவர்களும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார் (இந்து நாளிதழ 26-07-2007)

எனது ஆய்வேட்டினைப் படித்த பேரா.கைலாசபதி அவர்கள், 01-02-1979 அன்று எனக்கு எழுதிய மடலில், வணிகருக்கும் வேளாளருக்கு மிருந்த உறவின் தன்மையை மேலும் விளக்கினால் பலருக்கும் பயனுடையதாயிருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆய்வு முடிவுகள் மேலும் செழுமைப்படவேண்டிய இன்றியமையாமையை வலியுறுத்துவதாகவே இது அமைந்துள்ளது.

- மே.து.ராசுகுமார்

Pin It