வீரர்கள், தியாகிகள், தலைவர்கள் போன்றோரைக் கொண்டாடும் வகையில் நினைவுச் சின்னங்கள் உருவாக்குவது மனித சமூகத்தில் மரபாக இருந்து வருகிறது. தமிழ்ச் சமூகத்தில் நடுகல் தொடங்கி இம்மரபு செயல்பட்டு வருகிறது. இம்மரபின் இருபதாம் நூற்றாண்டுத் தொடர்ச்சிதான் நூல்களை நாட்டுடைமையாக்குவது. தங்களால் போற்றப்படும் பெரியவர்கள் எழுதிய ஆக்கங்களை நாட்டுடைமையாக்கி, தொடர்புடைய குடும்பங்களுக்குச் சன்மானமாகப் பரிவுத்தொகை வழங்குவது என்பது நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழில் இச்செயல் 1950களின் தொட‌க்கத்தில் பாரதியின் புத்தகங்களை நாட்டுடைமையாக்குவதில் தொடங்கியது. பிரித்தானியர்கள் ஆட்சியதிகாரத்தை இழந்தபின், அவர்களுக்கு எதிராகப் போராடியவர்களைக் கௌரவிக்கும் வகையில், பாரதியின் புத்தகங்கள் அன்றைய காங்கிரஸ் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன. பாரதி நாட்டுடைமையாவதில் முனைப்புடன் செயல்பட்டவர் தோழர் ப. ஜீவானந்தம். 1950களில், இச்செயல் நடைபெற்ற அதே காலகட்டத்தில் புலவர் குழந்தை அவர்களின் ‘இராவணகாவியம்’ நூல் தடைசெய்யப்பட்டதையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம்.

சி.என்.அண்ணாதுரையின் ‘ஆரிய மாயை’, தொ.மு.சி. ரகுநாதனின் ‘முதலிரவு’ (நாவல்) ஆகிய நூல்களும் காங்கிரஸ் அரசால் தடைசெய்யப்பட்டன. காந்தியார் குறித்த விமரிசனங்களுக்காக தொ.மு.சி. நூல் தடைசெய்யப்பட்டது. எனவே, ஆளும் அரசு நாட்டுடைமையாக்குவது, தடை செய்வது ஆகிய செயல்பாடுகளைப் புலமைத் தளத்தில் நடைமுறைப்படுத்தி வந்தது. 1920-1930 காலச்சூழலில் பிரித்தானியர்கள், இந்தியர்கள் பலரின் நூல்களுக்குத் தடை விதித்தார்கள். இதில் பாரதியின் நூலும் அடங்கும். பிரித்தானியர்கள் தடைவிதித்ததைப் பின்னர் நாம் கொண்டாடும் வகையில் நாட்டுடைமையாக்கி மகிழ்ந்தோம். 1950களில் பாரதி ஆக்கங்களை நாட்டுடைமையாக்கியதோடு, இந்தச் செயல் நின்றுவிட்டது. பின்னர் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவுறும் காலத்தில், அவரது ஆக்கங்களை நாட்டுடைமையாக்குவதில் இச்செயல் தொடர்ந்தது. (1984இல் ம.பொ.சி. எம்.ஜி.ஆர். அவர்களிடம் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூலுக்காக ரூபாய் ஒரு லட்சம் வாங்கியதை நாட்டுடைமை என்று சொல்வதா என்பதை வேறொரு தளத்தில் புரிந்துகொள்ளவேண்டும். பின்னர் அவரது முழுநூல்களும் நாட்டுடைமையாக்கப் பட்டன.) எனவே, பாரதி, பாரதிதாசன் எனும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் வகையில் காங்கிரஸ், தி.மு.க. அரசுகள் முன்னெடுத்த இத்திட்டம் மூலம் இன்று சுமார் 120 பேர்களின் ஆக்கங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வும் சிலரது ஆக்கங்களை நாட்டுடைமையாக்கியது.

புலமைத்தளத்தில் நடைபெறும் இச்செயலை நாம் எவ்விதம் புரிந்துகொள்வது? இதுவரை நாட்டுடைமையாக்கப் பட்ட ஆக்கங்களை எவ்வாறு மதிப்பீடு செய்வது? நாட்டுடைமையாக்கப்படுவதன் மூலம் ஏற்படும் விளைவுகள் எவை? ஆகிய பிற உரையாடல்களை நிகழ்த்துவதற்கு வாய்ப்புண்டு.

பாரதி, பாரதிதாசனைத் தொடர்ந்து கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை ஆகியோர் ஆக்கங்களும் நாட்டுடைமையாக்கப்பட்டன. அழ.வள்ளியப்பா, கா.மு.ஷெரீப், பெருஞ்சித்திரனார், செய்குத்தம்பிப்பாவலர், புலவர் குலாம் காதிறு நாவலர், ச.து.சு.யோகி, ந.பிச்சமூர்த்தி, எஸ்.டி.சுந்தரம் ஆகிய கவிஞர்கள் ஆக்கங்களும் நாட்டுடைமையாக்கப்பட்டன. திரைப்பாடல்களை அதிகமாக எழுதிய கலைஞர்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி, உடுமலை நாராயணகவி ஆகியோர் ஆக்கங்களும் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன. புதுக்கவிஞர்களில் இப்பட்டியலில் இடம் பெற்றவர் கவிஞர் மீரா மட்டுமே. மிக அதிகமாக நாட்டுடைமையாக்கப்பட்ட கவிஞர்கள் திராவிட இயக்கச் சார்பாளர்கள். முடியரசன், வாணிதாசன், கருணானந்தம், முருகு சுந்தரம், நாரா. நாச்சியப்பன் ஆகியோர் இப்பட்டியலில் அடங்குவர். புலவர் குழந்தை, அண்ணல் தங்கோ, புதுவைச் சிவம், சுரதா ஆகிய கவிஞர்களும் திராவிட இயக்கச் சார்புக் கவிஞர்களே. இப்பட்டியலில் எஸ்.டி.சுந்தரம், கருணானந்தம், முருகு சுந்தரம், நாரா. நாச்சியப்பன் ஆகியோர் கட்சி சார்ந்தவர்கள் என்பதற்காகக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம். தமிழ்க் கவிதை வரலாறு, இவர்களைக் கவிஞர்களாக அங்கீகரிக்குமா? என்பது சந்தேகம். இவ்வகையான அங்கீகாரங்களை வழங்கும்போது சமயம், சாதி, கட்சி ஆகிய பிற உள்நுழைந்து, அங்கீகரிக்கப்பட வேண்டாதவற்றையும் அங்கீகரிக்கும் ‘ஜனநாயகம்’ உருவாகிவிடும். ஜனநாயகத்தின் பேரால் இதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?

தமிழ்க் கவிஞர்களை நாட்டுடைமையாக்குவதில் சில கட்சி சார்பாளர்களைச் சேர்த்ததைத் தவிர, மற்ற வகையில் அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள் அங்கீகரிக்கப்பட்டிருக் கிறார்கள். இந்த வரிசையில் கவிஞர் தமிழ்ஒளி போன்றவர்கள் வரமுடியவில்லையே! தமிழ்ஒளி ஆக்கங்களை அங்கீகரிப்பதன் மூலம் பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி என்ற தமிழ்க்கவிதைப் பராம்பரியத்தைப் புரிந்துகொள்ள முடியும். அண்மையில் மறைந்த புதுக்கவிஞர் சி.மணி அவர்களது ஆக்கங்களையும், தமிழ்ஒளி ஆக்கங்களையும் வரும் ஆண்டில் தமிழக அரசு நாட்டுடைமையாக்கும் என்று எதிர்பார்ப்போம். மேடைப்பாடகர்களான வெ.நா. திருமூர்த்தி மற்றும் பாவலர் வரதராஜன் ஆக்கங்களையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்க வேண்டும்.

கவிஞர்கள் வெகுசனத்தளத்தில் அறிந்து கொள்ளப்படும் அளவிற்கு ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்கள் அறியப்படுவதில்லை. தமிழில் பல அறிஞர்களின் ஆக்கங்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. மறைமலையடிகள், திரு.வி.க., கா. அப்பாத்துரையார், தேவநேயப்பாவாணர், சோமசுந்தர பாரதியார், சாமி. சிதம்பரனார், சி. இலக்குவனார், கி.ஆ.பெ. விசுவநாதம், வ.சுப. மாணிக்கம் ஆகிய திராவிட இயக்கக் கருத்துநிலைச் சார்பு அறிஞர்கள் ஆக்கங்கள் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன. கா.சு.பிள்ளை, பரிதிமாற்கலைஞர், இராசமாணிக்கனார், ரா.பி.சேதுப்பிள்ளை, அவ்வை துரைசாI, பேரா.ச.வையாபுரிப்பிள்ளை, ரா.ராகவையங்கார், மு. இராகவையங்கார், பூரணலிங்கம் பிள்ளை, வெள்ளைவாரணனார், சதாசிவப்பண்டாரத்தார், ந.மு. வேங்கடசாமி நாட்டார், அ.ச. ஞானசம்பந்தன், ந.சஞ்சீவி ஆகியோர் ஆக்கங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. அறிஞர்கள் சாமிநாதசர்மா, மயிலை சீனி. வேங்கடசாI, சாத்தன்குளம் அ. இராகவன் ஆகியோர் படைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

பேரா. நா.வானமாமலை, தொ.மு.சி. ரகுநாதன் ஆக்கங்களும் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன. இவ்வறிஞர்களின் ஆக்கங்கள், காலவெள்ளத்தை எதிர்த்து நிற்கும் தன்மைபெற்றவை. ஆனால், இப்பட்டியலில் கீழ்க்கண்டோரும் சேர்க்கப்பட்டிருப்பது தமிழப்புலமைத் தளத்திற்கு நியாயம் வழங்கியதாகக் கருதமுடியாது. சா.கணேசன், புலவர் கோவிந்தன், கி.வா.ஜகந்நாதன், பெ.தூரன், மு. கதிரேசன் செட்டியார், தண்டபாணி தேசிகர், அ. சிதம்பரநாதன் செட்டியார், கோவிந்தன் ஆகியோர். இவர்களது ஆக்கங்களை ஆராய்ச்சிகளாகக் கருதமுடியுமா என்பது கேள்வி. அண்மையில் ந.சுப்புரெட்டியார், ரா. சீனிவாசன், சி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் பெயர்கள் மேற்குறித்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இம்மூவரும் தமிழாசிரியர்களே தவிர, தமிழ் ஆராய்ச்சிக்கு எவ்வகையிலும் பங்களிப்பு செய்தவர்கள் இல்லை. நூல்களை அச்சிட்டு வெளியிடுதல், அறிஞர்களுக்கான தகுதி ஆகிவிடமுடியாது. இறுதியில் கூறிய மூன்று பேரையும் நேரடியாக அறிந்தவன் என்ற வகையில் இவர்கள் ஆக்கங்களை நாட்டுடைமையாக்குவதன் மூலம் நாட்டுடைமையாக்கப் பட்டவர்களைக் கொச்சைப்படுத்துவதாகவே அமையும் என்று கருதுகிறேன்.

அரசியல் தளத்தில் செயல்பட்ட சிங்காரவேலனார், வ.உ.சி., ஜீவா, ம.பொ.சி., அண்ணாதுரை, ஏ.எஸ்.கே. அய்யங்கார் ஆகியோர் ஆக்கங்கள் நாட்டுடைமையாக்கப் பட்டதை அவர்களுக்குச் செய்த சிறந்த மரியாதையாகக் கருதலாம். ஆப்ரகாம் பண்டிதர், அயோத்திதாசர் படைப்புகள் மக்களுக்கு உரிமையாக்கப்பட்டமைக்கு, இவ்வரசை நாம் வெகுவாகப் பாராட்டவேண்டும். இதன்மூலம் இவர்களது ஆக்கங்கள் பரவலாக பலதளத்திற்கும் சென்றடையும் என்று நம்பலாம். வ.உ.சி., ஜீவா ஆக்கங்களைத் தொகுக்கும் வாய்ப்பு, அவை நாட்டுடைமையாக்கப்பட்டதால்தான் சாத்தியமானது என்பதை இங்கு பதிவு செய்யவேண்டும். அரசியல் தலைவராக மட்டுமே அறியப்பட்டிருந்த வ.உ.சி.யை, தமிழ் அறிஞராக அறியும் வாய்ப்பு, தொகுப்பின் மூலம் பெறப்பட்டது. தமிழ்ப் பதிப்பாசிரியர்கள் வரிசையில், உரையாசிரியர்கள் வரிசையில், மொழிபெயர்ப் பாளர்கள் வரிசையில், வ.உ.சி.யைப் புரிந்துகொள்ள முடிந்தது. வ.உ.சி. போன்றவர்களை நாட்டுடைமையாக்கு வதின் மூலம், அவர்களது ஆக்கங்களை, ஒவ்வொரு காலப் பின்னணியிலும் புதிது புதிதாக வாசிக்கும் வாய்ப்பை உருவாக்கும் என்று கருதமுடியும்.

தமிழ்ப் பதிப்பாளர்கள்; பரலி.சு. நெல்லையப்பர், சக்திகோவிந்தன், சின்ன. அண்ணாமலை, முல்லை.முத்தையா ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில் அவர்களது ஆக்கங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் பதிப்பாளர்களையும் எழுத்தாளர்களாகக் கட்டமைக்கும் விபத்து இதற்குள் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்காலத்தில் இத்தகையவர்களின் பதிப்புப் பணிக்காகக் கௌரவிக்கலாம். படைப்பாளர்களாகக் கருதுவதைத் தவிர்ப்பது நல்லது.

மாயூரம் வேதநாயகம்பிள்ளை, வ.வே.சு. அய்யர், க்ஷ்வ. ரா., புதுமைப்பித்தன், க.நா.சு., தி.ஜ.ர., நாரண துரைக்கண்ணன், த.நா.குமாரசாI, விந்தன், லா.ச.ரா., வல்லிக்கண்ணன் ஆகிய இலக்கியப் படைப்பாளிகள் ஆக்கங்கள் நாட்டுடை மையாக்கப்பட்டுள்ளன. இதற்காக அரசைப் பாராட்ட வேண்டும். ஆனால், இதழியல் தேவை சார்ந்து, வெகுசன வாசிப்பிற்கான எழுத்துகளை உருவாக்கியவர்களும் இப்பட்டியலில் சேர்ந்து விட்டனர். கல்கி, வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை.மு. கோதைநாயகி, பூவை எஸ். ஆறுமுகம் ஆகியோர் இவ்வகையில் அடங்குவர். இவர்களது எழுத்துகள் நாட்டுடைமையாக்கும் தகுதியை எவ்வாறு பெற்றன? வெகுசன வாசிப்பையும் ஆக்க இலக்கிய புலமைத்தளத்தையும் வேறுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டாமா அரசு அங்கீகாரம் என்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா முதலான பல கேள்விகளை இங்கு நாம் எழுப்பிக் கொள்வது நல்லது.

சக்திதாசன் சுப்பிரமணியன், திருக்குறள் முனுசாI, பாலூர் கண்ணப்ப முதலியார், புலியூர் கேசிகன் ஆகிய பலரும் நாட்டுடைமையாக்கப்பட்ட பட்டியலில் உள்ளனர். இவர்களது எழுத்துகள் நாட்டுடைமையாக்கப்படு வதற்கான எந்த அடிப்படைத் தகுதிகளும் இருப்பதாகக் கருதமுடியவில்லை. வெகுசன அறிதலை மட்டுமே தகுதியாகக் கருத முடியுமா?

நாட்டுடைமையாக்கப்பட்ட ஆக்கங்களில் தொண்ணூறு விழுக்காடு சரியாகவே செயல்பட்டிருப்பதை நாம் வியந்து பாராட்ட வேண்டும். இதில் அரசு கொடுக்கும் பரிவுத் தொகை எவ்வகை மதிப்பைச் சார்ந்தது என்பது புதிராகவே உள்ளது. ம.பொ.சி.க்கு இருபது லட்சம் கொடுக்கும் அரசு, பேரா. ச. வையாபுரிப்பிள்ளைக்கு மூன்று இலட்சம் கொடுக்கிறது. இது எந்தத் தகுதியின் கீழ் மதிப்பிடப்படுகிறது? இவை எல்லாவற்றையும் கடந்து தமிழக அரசின், குறிப்பாக தி.மு.க. அரசின் இச்செயல் வரலாற்றில் நிலையான இடத்தைப்பெறும். தற்போதைய தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருக்கும் முனைவர் ம.இராசேந்திரன், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராக இருந்த காலத்தில், தகுதியான பலர் ஆக்கங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பதைப் பதிவு செய்யவேண்டும். நாட்டுடைமையாக் கப்படும் இச்செயலை நடைமுறைப்படுத்த கீழ்க்காணும் திட்டத்தை அரசு கவனத்தில் கொள்ளலாம்.

-எந்த ஆக்கத்தை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்ற முடிவை எடுக்க அறிஞர் குழு ஒன்றை நியமிக்கலாம். பலதரப்பு அறிஞர்களின் பங்கேற்பாகச் செயல்படும் அக்குழுவின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தலாம். நாட்டுடைமையாக்குவது இப்போது எவ்வகையில் செய்யப்படுகிறது என்பது தெரியவில்லை. ஆளும் அரசின் முடிவாக இல்லாமல், புலமையாளர் குழுவின் தெரிவாக இருக்கலாம்.

-நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகளைத் தேர்வுசெய்து அரசு வெளியிட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். நாட்டுடைமையாக்கப்பட்ட ஆக்கங்கள், தவறான முறையில் வெளியிடப்படுகின்றன. மயிலை சீனி. வேங்கடசாமி கட்டுரை ஒன்று வெளிவந்த இதழில் உள்ள விளம்பரத்தோடு சேர்த்து நூலில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டுடமை ஆக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட அறிஞர்களின் வாரிசுகள் பரிவுத்தொகையை உரிய காலத்திற்குள் பெறவில்லையெனில் அவையும் நாட்டுடமையாக்கப்பட்டதாக கருதும் அரசானையை கொண்டு வரலாம். இவ்வகையான அபத்தங்களைத் தவிர்க்க, நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் வெளியிடுவதற்கான சில நடைமுறைவிதிகளையும் அரசு அறிவிக்கலாம்.

நாட்டுடைமையாக்கப்பட்டதின் மூலம் தமிழ்ப் புத்தகச் சந்தை வளம் பெற்றிருப்பதை நாம் நன்றியோடு பதிவு செய்ய வேண்டும். ‘உயிரோடு வாழ்பவர்களின் ஆக்கங்களை நாட்டுடைமையாக்குவதில்லை’ என்ற விதியைத் தளர்த்தி இராஜம்கிருஷ்ணன், மணவை முஸ்தபா ஆகியோர் படைப்புகளை நாட்டுடைமையாக்கி, பரிவுத்தொகை வழங்கியதை நாம் பாராட்டவேண்டும்.

- வீ.அரசு

Pin It