இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான குறியீடுகளில் இரண்டு மையமான இடம் பெறுபவை. ஒன்று: ஒரு குறிப்பிட்ட இடம், தருணம். 1945 ஆகஸ்டு மாதம் 6-ஆம் தேதி ஜப்பானில் ஹிரோசிமா நகரின் மீது அமெரிக்கா வெடித்த அணுகுண்டு உண்டாக்கிய காளான் மேகம்’. இரண்டாவது: குறிப்பிட்ட இடமோ, தருணமோ இல்லாது, கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகளுக்கு உலகெங்கும் பலரையும் ஆட்டுவித்தது. 1999 முடிந்து 2000 வரும்போது உலகின் கணினிகள் யாவும் செயலற்றுப் போய் (அணு ஆயுதப் போர் உட்பட) பலவிதமான கலக்கங்களும் ஏற்படலாம் என்று பலரின் (தவறான) எதிர்பார்ப்பு.

முதலாவது, ‘அணுவினைப் பிளந்து அரிய ஆற்றல் பெறலாம்என்ற அதிசயமான இயற்பியல் கண்டுபிடிப்பு தந்த அழிவுத் தொழில்நுட்பம். இரண்டாவது, கணினி என்ற முற்றிலும் புதியதொரு இயந்திரம் அமைத்ததோடு மட்டுமல்லாது அதன் மூலம் உலகம் முழுவதையும் பின்னலாய் பிணைக்க முடியும் என்று காட்டிய கணித, மின்னணுவியல் வெற்றி. இரண்டுமே பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த சிந்தனைகளால்கூட கனவிலும் கண்டிருக்க இயலாத, இருபதாம் நூற்றாண்டிற்கே உரித்த புதிய அறிவியலின் விளைவுகள்.

இரண்டிற்கும் மற்றோர் ஒற்றுமையும் உண்டு. இரண்டுமே பிந்தைய நூற்றாண்டின் அழுத்தமான நிச்சயத்தன்மைக்கும் திருப்திக்கும் சாவுமணி அடித்து எரித்த பின் கிடைத்த சாம்பலிலிருந்து உருவானவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கணிதம் வீறுநடை போட்டு முன்னேறிய நிலையில், நூற்றாண்டின் இறுதியில் அடிப்படையே ஆட்டம் காணும் விதமான பிரச்சினைகள் கிளம்பின. அவற்றிற்கு விடை காணும் முயற்சியில் கணிதம் தந்த கட்டுமானம்தான் கணினி. கணிதத்தின் குழந்தையை மின்னணுவியல் வளர்த்தது. அதுபோலவே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயற்பியல் உலகின், ஏன் பிரபஞ்சத்தின் இயக்கத்தை துல்லியமாகக் கணக்கிட்டு விடலாம் என்று இறுமாந்து நின்றபோது, நூற்றாண்டின் இறுதியில் கோட்டைச் சுவரில் விரிசல்கள் காணப்பட்டன. இவற்றை சரி செய்யும் முயற்சியில், மாமேதையான ஐன்ஸ்டீன் கற்பித்த அருமையான தத்துவங்களின் அடிப்படையில் உருவான புதிய இயற்பியல்தான் குவாண்டம்கொள்கை. புதிய நூற்றாண்டின் மகத்துவத்தோடு வரலாறு காணாத அழிவிற்கும் அதுவே வித்திட்டது.

இந்த இயற்பியல் எழுச்சியின் கதையையே 112 பக்கங்களில் மிக சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன். தமிழில் இக்கதை சொல்ல வேண்டிய ஒன்று, தமிழ் வாசகர்கள் படிக்க வேண்டிய ஒன்று. இதை எழுத த.வி. வெ.யை விட மிகச் சரியான ஒருவர் கிடைத்திருக்க முடியாது. அதுவும் பாரதி புத்தகாலயத்தின் ‘Books for Children’ வரிசையில் இப்புத்தகம் வெளிவந்திருப்பது நாம் கைதட்டி வரவேற்க வேண்டிய ஒன்று.

பள்ளி மாணவ மாணவியருக்கு அறிவியல் கற்றுத் தருவது கடினம். பள்ளிக்கு வெளியே குழந்தை மனதைச் சென்றடையும் இசைவோடு எழுத்து வடிவத்தில் அறிவியலைத் தருவது இன்னும் கடினம். தமிழில் அப்பணியை மேற்கொள்வோர் மிகச் சிலரே. அப்படி எழுதுபவர்களிலும், அறிவியல் கருத்துகளை மட்டும் எடுத்துக் கூறாது, அக்கருத்துகளின் அடிப்படையான கண்டுபிடிப்புகள் அவற்றின் சமூகப் பின்னணி, வரலாறு என்று கதையாய் வடிவமைத்துத் தருபவர்கள் மிக அரிதே. அத்தகைய முயற்சியை மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கும் த.வி. வெ. நமது பாராட்டுக்குரியவர்.

எடுத்துக் கொண்ட கதையும் சாதாரணமான ஒன்றல்ல. நாம் பள்ளியில் கற்கும் இயற்பியல் நியூட்டனின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அணுவே இயற்கையின் மிகச் சிறிய பொருள்என்று பல நூற்றாண்டுகளாய் நிலவிய சிந்தனை பள்ளிப் பாடங்களுக்குப் போதுமானது. அத்தகைய இயற்பியலும் அது தந்த தொழில்நுட்பமும் நமக்கு எளிதில் விளங்குவது, இந்நிலையில் அப்புரிதலே ஏன் தவறானது என்ற கேள்வியை நம்முன் எழுப்ப முனைகிறார் த.வி. வெ. ராண்ட்ஜென் கண்ட எக்ஸ் கதிர்கள், மில்லிகனின் எண்ணெய்த் துளி பரிசோதனை போன்றவை எவ்வாறு பழைய அறிவியலின் அடிப்படையை இடித்தன என்று சுவையாக விளக்குகிறார்.

பிளக்க முடியாததுஎன்று எண்ணிய அணுவைப் பிளக்க முடியும்என்ற புரிதல் எவ்வாறு ஏற்பட்டது? இது ஒரு நாளில் நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல; கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பல அறிஞர்களின் தூக்கத்தையும் நிம்மதியையும் குலைத்த ஒன்றாகும். எக்ஸ்கதிர் என்பது என்ன? கதிரியக்கம் எவ்வாறு ஏற்படுகிறது? ஓர் அணு தானே உருமாறி வேறோர் அணுவாக மாறுவது சாத்தியமா? எலக்ட்ரான் என்பது அணுவின் மையக்கருவை எவ்வாறு சுற்றுகிறது? இவ்வாறு பல கேள்விகளுக்கும் திருப்திகரமான விடையைத் தந்ததே குவாண்டம் கொள்கை’. இவ்வரலாறு மிகச் சுவையானது, புத்தகத்தில் சுவை குறையாது வளர்க்கப்பட்டுள்ளது.

இவ்விடைகள் இன்றும் பல கேள்விகளை எழுப்புகின்றன. ஒளி, துகளா? அல்லது அலையா? ஒரு நோக்கில் கண்டால் அது அலை போல் தெரிகிறது, மற்றொரு கோணத்தில் துகளாய்க் காண்கிறது. எலக்ட்ரான் மையக்கருவை ஏன் சுற்றுகிறது? நேர் மின்னிறை கொண்ட மையக்கருவும் எதிர் மின்னிறை கொண்ட எலக்ட்ரானும் மோதி ஏன் அழிந்து போகவில்லை? மையக்கருவிற்குள் புரோட்டான்கள் சண்டை போட்டுக் கொண்டு வெடித்து விலகவில்லை? கதையின் அத்தியாயங்கள் வளர வளர ஒவ்வொரு கேள்விக்கும் ஆசிரியர் விடை தருகிறார்.

ராண்ட்ஜெனில் துவங்கி ஐன்ஸ்டீனின் தத்துவம் வரை அழகான ஓர் அறிவியல் வரலாற்றைத் தந்த த.வி. வெ. இறுதியில் இத்தகைய இயற்பியல் நியூட்டனின் அறிவியலை மறுக்கவில்லை, விரிவுபடுத்துகிறது என்று விளக்குகிறார்.இது மிகவும் தேவையான விளக்கம். அறிவியல் நாளன்றுக்கும் புதிதாக நேற்று கற்றது தவறு, இன்றே சரிஎன்று வாதிடுவதாகப் பலர் கருதுகின்றனர். இதை விளக்க த.வி. வெ. பயன்படுத்தும் உவமை அழகானது. தூரத்திலிருந்து காணும் கோபுரம் அருகே வர வர மாடி அடுக்குகள் கொண்டதாகவும், சிற்பங்களாகவும், மிக அருகே பதுமையாகவும் காட்சி தரும். பதுமை தெரியும்போது கோபுரம் தெரியாவிட்டாலும் அது எங்கும் போய்விடவில்லை. அதேபோல் குவாண்டம் அறிவியலில் மூழ்கும்போது, நியூட்டனின் அன்றாட உலக அறிவியல் நமக்குப் புலப்படாவிட்டாலும் அது பின்னணியிலேயே உள்ளது.

இந்தக் கேள்விகளை இங்கு படிக்கும்போதே இதெல்லாம் நமக்குப் புரியுமா?’ என்று யாரும் அரண்டு விட வேண்டாம். விடைகளை எளிமையாக விளக்கும் த.வி. வெ.யின் பாணிக்கு உதாரணம் இதோ:

ஆரஞ்சு பழத்தின் தோல் போல எலக்ட்ரான் பழச்சுளை போல மையக்கரு எனக் கருத வேண்டாம். கால் பந்து மைதானத்தின் மையத்தில் கால்பந்து போல அணுக்கரு எனில், மைதானத்தைச் சுற்றி எல்லைக் கோட்டில் சிறு சிறு எலுமிச்சைப் பழம் போல எலக்ட்ரான், இடையே வெற்றிடம். ஆம், அணுவின் ஒப்பீட்டளவில் வெற்றிடம்தான் அதிகம்” (பக்கம் 76)

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பதுபோல மெய்யாகவே ஒரு சமயம் துகளாகவும் ஒரு சமயம் அலையாகவும் காட்சி தந்தது ஒளி”. (பக்கம் 67)

பாணி மட்டுமல்ல. விரிவுரையிலும் அறிவியல் மற்றும் கதையான வரலாறு மட்டுமல்லாது நாஜி ஜெர்மனி, அணு ஆயுதம் தயாரித்த அமெரிக்க அரசு, பெண்ணறிஞர்களின் நிலை, யூதர்களின் நிலை என்று பலவிதமான சமுக அரசியல் பின்னணியும் ஆங்காங்கு சுட்டிக் காட்டுவதால், புத்தகம் பலதரப்பினரையும் ஈர்க்கிறது.

சில வகைகளில் ஏமாற்றம் இல்லாமலில்லை. எப்பொருளையும் இடம், வேகம் என்று துல்லியமாக நிர்ணயிக்க முடியாது, சாத்தியக்கூறு மட்டுமே கூறமுடியும் என்ற ஹைசன்பர்க் கொள்கை மிக மேலோட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீல்ஸ் போருக்கும் ஐன்ஸ்டீனுக்கும் விவாதம் நிகழ்ந்தது என்றாலும் ஏன் என்று இறுதி வரையிலும் தெளிவில்லை. ஆனால் இதற்கெல்லாம் விளக்கம் தந்தால் புத்தகம் நீண்டு கொண்டே போகும். மேலும் வேண்டும்என்று நாம் ஏங்குமாறு முடித்திருப்பது த.வெ. வி.யின் வெற்றிதான்.

(சிறு திருத்தம்: பக்கம் 63-ல், 1909-ல் ஐன்ஸ்டீன் வெளியிட்ட கட்டுரை என்று கூறப்பட்டுள்ளது. அது வெளிவந்தது 1905-ல்.)

Pin It