இரண்டு ஆண்டுகள்தான் இருக்கும் கவிஞர் பாலா மணிவிழா நிகழ்ந்தது. அப்போது, ‘அறுபது ஒரு வயதில்லை பாலா இன்னும் இருபது ஆண்டுகள் இருக்கின்றன. எழுதி எழுதிக் குவியுங்கள் பாலா......’ என்று ஆசையோடு வாழ்த்தினேன். இதோ இன்று காலப்பறவை அந்தக் கனியைக் கொத்திக் கொண்டு போய்விட்டது.Poet bala

ஆங்கிலப் பேராசிரியர், தேர்ந்த திறனாய்வாளர், வானம்பாடி வட்டக் கவிஞர். மொழிப் பெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி பாலா என்கிற இரா. பாலச்சந்திரன். அறிவியல் பட்டதாரியாக இருந்து இலக்கிய முதுகலைக்குத் தடம் மாறினார். அதனால் அவர் பேச்சிலும் எழுத்திலும் கவிதையிலும் ஒரு தனித்தன்மை குடியிருந்தது. ஒரு புதுமொழி அவருக்கு வாய்த்திருந்தது.

கவிஞர்கள் வியக்கும் கவிஞராகவும், திறனாய்வு உலகம் கை குலுக்கும் விமர்சகராகவும், ஒப்பியல் ஆய்வில் முத்திரைப் பதித்த ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்த பாலா அன்பும் மென்மையும் அறிவின் ஆழமும் கலந்த ஆச்சரியமான கலவை.

1946 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்த பாலா அரசர் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற பின் மன்னர் கல்லூரியின் கவிஞர் மீராவின் மாணவராகத் திகழ்ந்தார். இவருக்குள் கவிதை மின்சாரம் ஏற்றப்பட்டது அப்போழுது தான். வேதியியல் பயின்றது காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் அண்ணமலைப் பல்கலைக் கழகத்தில் பணி தொடக்கம். பின்னர் ராசிபுரம் அரசு கலைக்கல்லூரியில் பணித் தொடர்ச்சி. கவிஞர் மு.மேத்தாவுடன் உயிருக்குயிரான நட்பு உருவான காலம் அது. 1975 இல் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம். 1991 இல் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் க. செல்லப்பனிடம் முனைவர் பட்ட ஆய்வை நிகழ்த்திப் பட்டம் பெற்றார். 1993 இல் நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும் 2001 இல் துறைத் தலைவராகவும் திகழ்ந்தார்.

இராசிபுரம் பணிக் காலத்திலேயே வானம்பாடி கவிதை இயக்கத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். கடைசிவரை ஒரு வானம்பாடிக் கவிஞராகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள அவர் தவறியதே இல்லை. புதிய பரிசோதனைக் களங்களைத் தொடங்கிய அக்கால கட்டத்தில் மற்றொரு நெருங்கிய சகாவும் கவிஞருமான தமிழ் நாடனுடன் இணைந்து ‘நீ’ என்ற கையடக்கக் கவிதைத் தொகுப்பைப் பதிப்பித்தார் (1971).

மனித நேயக் கவிஞர் மீரா நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய அன்னம் பாலாவுக்கும் ஒரு பணிக்களமாயிற்று. ‘இசங்’களின் நெரிசலில் இலக்கிய உலகம் அல்லோல கல்லோலம் பட்டுக்கொண்டிருந்த அந்தத் தலை நாட்களில் ‘சர்ரியலிசம்’ என்ற அறிமுக நூலைப் புத்துலக வாசனையோடும் தமிழ் வண்ணங்களோடும் தந்தார் பாலா. புதிய இலக்கியக் கோட்பாடுகளை அறிமுகம் செய்வதில் தமிழ் நாடன் கூறியது போல அது ‘முன்ஏர்’.

வானம்பாடி இதழ் கவிதைகளுக்கு முன்னுரிமை தந்த நிலையில் பரபரப்புமிக்க இலக்கியக் சூழலில் பிற படைப்பிலக்கியங்களுக்கும் திறனாய்வுக்கும் எனப் புதுக்கோட்டையிலிருந்து ‘சுவடு’ சிற்றிதழை முன் வைத்தார் பாலா. குறுகிய காலமே வெளிவந்த போதிலும் பிற சிற்றிதழ்கள் சுவடு வைக்க அது முன்னோடியாயிற்று (1978). வெகு விரைவிலேயே முற்போக்கு இலக்கியப் படைப்புகளின் தரிசனத்தை ஆவணப்படுத்தும் வகையிலும், புதுக்கவிதையின் பன்முகப் போக்கை நியாயப்படுத்தும் வகையிலும் பாலாவின் ‘புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை’ (1981) வெளிவந்தது. தர்க்கரீதியாகவும் அழகியல் ரீதியாகவும் தன் வாதங்களை அழுத்தமாக முன்வைத்த பாலாவின் நூல் பக்கச்சார்பைத் தாண்டிக் கவிஞர்களையும் கவிதைகளையும் முன்வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. வாசிப்பதற்கு இலக்கியமாகவும் வார்ப்பு பாங்கில் திறனாய்வு உலகுக்கு ஒரு திறவு கோலாகவும் இந்நூல் திகழ்ந்தது.

‘தாய்’ இதழில் தொடராக வந்த பாலாவின் ‘கவிதைப் பக்க’மும், ஆனந்த விகடன் இதழில் 16 பக்க இணைப்பாக வெளிவந்த பாலாவும் மீராவும் நிகழ்த்திய புதுக்கவிதை உரையாடலும் வாசக நெஞ்சங்களில் கவிதைக் கிளர்ச்சிக்குக் காரணமாயின. பாலாவின் கவிதை நூல்களாக ‘இன்னொரு மனிதர்கள்’, ‘திண்ணைகளும் வரவேற்பறைகளும்‘ வெளிவந்திருக்கின்றன.

இனம் காண முடியாத ஒரு சோகமும், ஆச்சரியப்பட வைக்கும் உத்திகளும், அசைபோடவைக்கும் ஆழமும், மெல்லிய புன்னகையை மலர வைக்கும் நகைச்சுவையும் பாலாவின் கவிதை நயங்கள்.

இரண்டு கவிதைத் தொகுப்புகளின் சமர்ப்பணமும் உள்ளார்ந்த வாழ்வின் சோகத்தை உணர்த்துவதை விமர்சகர் பஞ்சு சுட்டிக் காட்டியிருக்கிறார்.

“உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஒன்று /ஒரு நெடுஞ்சாலை நெளிவில் / தன் உயிர் பறித்துப் போன நேரம் வரைக்கும்/ வாழ்வின் கனிந்த இருட்டை /தன் புன்னகையாலும் மன உறுதியாலும்/ஏன் என்றுகேட்டு நிறை/அம்மாவிற்கு தான்/இதுவும்’’

என்ற சமர்ப்பணத்தில் குடியிருக்கும் வேதனையும், முரணும் என்ற ஒட்டுமொத்தமாக அவர் கவிதைகளிலும் குடியிருக்கின்றன. மனித வாழ்வின் பொய்மைகளைக் கூடக் கடிந்து பேசாமல் மென்மையாய்ச் சாடுவார்.

“வணக்கம் என்பார் / வணங்க மாட்டார் /நலம் பார்த்தறியார் / நலம் என்றெழுதுவார் / பொதுவான பொய்களில் / பொலிகிறது வாழ்க்கை’’

அவருடைய சொற்கூர்மைக்கு ‘இன்னொரு மனிதர்கள்’ என்ற தலைப்பே அடையாளம் காட்டப்போதுமானது.

திறனாய்வில் கூரிய நகங்களை நீட்டாமல் வளர்ச்சிக்கான உரங்களைப் பெய்த கரங்கள் பாலாவினுடையவை. இலக்கிய விமர்சகர்கள், புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை, பாரதியும் கீட்சும், முன்னுரையும் பின்னுரையும் ஆகிய நூல்களில் இவர் பார்வை வீச்சுக்கள் பளிச்சிடக் காணலாம். நடையும் பார்வையும் கைகோக்கும் அழகு இதோ:

‘‘கண்ணாடி பார்த்து நிற்கும் ஒற்றை நம்பியோ, நங்கையோ பிம்பம் யார் நான் யார் என்று அளந்து நிற்கும் நாட்களாகத் தமிழ்க் கவிதை நிற்கிறது. கவிதையில் தன்னந்தனி முகம், தன் முகம் பார்த்து நிற்கின்றனர் சிலர். தன் முகம் வரைந்து வரைந்து தள்ளி, உங்கள் முகம் இதில் தெரிகிறதா? என்றும், ‘என் அகம் இதில் இருக்கிறதா?’ என்றும் கேட்கின்றனர் சிலர்.

மனிதத் திரளின் பொதுமுகம் கிழிந்து பெண் முகங்கள் / ஆண் அகங்கள், விளிம்பு நிலை வரைவு முகங்கள் / முக மூடிகள், உடல்கள் / உறுப்புகள், ஒப்பனைகள் / கேலிகள், ரத்தம் வடியும் அகங்கள் / ரத்தம் வடிக்கக் கை நீட்டும் குரூரங்கள், தன்னையே வெட்டிச் சாய்க்கும் விளையாட்டுச் சடங்குகள் / மௌனம் விரித்து வைத்து வாய் திறந்து நிற்கும் விநோதங்கள் இப்படிப் பலப்பல எழுத்துச் சீட்டுக்கள் அடுக்கி வைத்த புதுக் கோபுரமாகத் தோற்றம் காட்டும் நிகழ்நாள் தவிழ்க் கவிதை முயற்சிகள்.....’’ (சிற்பி கவிதைப் பயணங்கள் முன்னுரை) மொழி

பெயர்ப்புக் கலையிலும் முத்திரை பதித்தார் பாலா, வித்யாபதியின் காதல் கவிதைகள், ஒரு கிராமத்து நதி ஆங்கில மொழிபெயர்ப்பு என ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கமாகப் பல முயற்சிகளை மேற்கொண்டார்.

பொன்னீலனின் புதிய தரிசனங்கள், தொல்காப்பியம், பாரதியார் பாடல்களை ஆங்கிலப்படுத்தும் முயற்சிகள் உடல்நலக் குறைவால் முழுமை பெற்றிருக்காது என்று கருதுகிறேன். அது நமக்குப் பேரிழப்பு.

நண்பர் மீராவுக்கு ஒரு புகைப்பட எழுத்தோவியமாக ‘Meera his life and Art’ என்று அழகிய பாலாதந்திருக்கிறார். சாகித்ய அகாதமியின் தமிழ் மொழி ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் (2003 2007) விளங்கிய பாலா ஒரு புதிய சகாப்தம் படைத்தார். அவர் காலத்தில் தமிழகத்தின் சிறு நகரங்களையும்கூட அகாதமியின் நிகழ்ச்சிகள் தொட்டன என்பது ஒரு சாதனை வரலாறு.

அக்காலத்தில்தான் நியூயார்க்கில் இந்திய எழுத்தாளர் மாநாட்டுக்கும், சீனாவில் எழுத்தாளர் சந்திப்புக்கும் சென்ற குழுக்களில் இடம் பெற்றார் பாலா. நியூயார்க்கில் இவர் நிகழ்த்திய உரை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அவர்களின் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்க செய்தி.

பாலாவின் எழுத்து மொழி வசீகரமானது என்றால் அவருடைய ஆங்கில தமிழ்ப் பேச்சு மொழி வனப்பில் தோய்ந்தது. சுருக்கிப் பேசினாலும் வைர மணிகளின் இறுக்கம் நிரம்பியவை பாலாவின் அழகிய உரைகள்.

ஒரு பேராசிரியராக மாணவர்களின் நெஞ்சில் நிரந்தர இடத்தைப் பெற்றவர் பாலா. ஒப்பிலக்கியக் களங்களில் புதிய புதிய ஆய்வுகளை மேற்கொள்ளத் தூண்டிய உந்து சக்தி பாலா. அவருடைய முனைவர் பட்ட ஆய்வே, ‘தமிழ் ஆங்கிலப் புதுக்கவிதைகளில் படிமங்களும் குறியீடுகளும்‘ என்பதாகும். அந்த ஆய்வு நூல் வடிவம் பெறுவது அவசியம்.

பண்பாடுமிக்க பச்சைத் தமிழராக களங்கமில்லாத நட்புக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர் பாலா. முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகளோடு பொன்னீலன், தோப்பில் மீரான், தி.க.சி, தமிழ்ச்செல்வன், கந்தர்வன், முத்து நிலவன் என அனைவருடனும் நேசமும் நெருக்கமும் காட்டிய அன்புப் பெட்டகம்.

இன்று அவர் இல்லை என்ற உண்மை நெஞ்சில் ஒரு முள்ளாக நண்பர்களுக்கெல்லாம் வாசகர்களுக்கெல்லாம் வேதனை தருகிறது என்றால் அவருடைய அன்புக் குடும்பத்தின் சோகத்தை எப்படி அளப்பது. துணைவியார் மஞ்சுளா, அன்பு மகள் பிரியா, சரத் சந்திரர் பெயரைத் தாங்கிய மகன் சரத் கார்த்திக், பேத்தி சகானா ஆகிய உறவும் நட்பும் எதிர்பாராத அவருடைய மறைவால் தேம்பி நிற்கின்றனர். வானம்பாடிகளின் வருத்தம் வார்த்தைகளில் அடங்காது.

இழப்பின் வலியை நாம் அனைவரும் உணரும் தருணத்தில் தன்னம்பிக்கையோடு அவர் எழுதிய ஒரு கவிதை நமக்கு ஆறுதல் தரக்கூடும்.

“என் வாழ்க்கை ஒரு மண்பாத்திரமானால் / தொலைந்து போகாது / ஒரு சிரம நாளில் வேண்டுமானால் உடைந்து போகலாம் அது/ என்றாலும் அப்போது நான்/மண்ணோடு மண்ணாய்/மூலத்தோடு மூலமாய் முதலுக்கு முதலாவேன்...’’ இதுதான் பாலா.

முடிவிலிருந்து முதன்மைக்குப் பயணிக்கிறார் கவிஞர் பாலா.

Pin It