இன்றைக்கு ‘சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்ச்சி’ என்கிற வார்த்தை மிகவும் முக்கியமான ஒன்றாக மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. பி.டி செயற்கை மரபணு கத்திரிக்காய் பற்றிய சர்ச்சை இப்போது இந்தியாவில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து பல இயக்கங்களும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. உலகம் வெப்பமயமாதல், காற்று மாசு படுதல், காடுகள் அழிப்பு, ரசாயன உரங்களின் கெடுதி, பூச்சிக் கொல்லி மருந்து உர அபாயம் பற்றியெல்லாம் சாதாரண மக்கள் கூட அறிந்து வைத்திருக்கிறார்கள் என்கிற விழிப்புணர்ச்சி மகிழ்ச்சிக்குரியது. இந்தச் சுற்றுச் சூழல் அபாயம் என்கிற விழிப்புணர்வை உலக மக்களிடையே முதன் முதலாகப் பெருமளவில் ஏற்படுத்தியவர் ரேச்சேல் கார்ஸன் என்கிற சிறப்புமிக்கப் பெண்மணி. அதற்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் அவர். அவர் எழுதிய ஒரு புத்தகம் புதிய சிந்தனையையே கொண்டு வந்தது.

ரேச்சேல் லூயி கார்சன் 1907ஆம் வருடம் அமெரிக்காவின் பெனிசில்வேன்யாவில் உள்ள ஸ்பிரிங்டேல் என்னும் சிறிய ஊரில், மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் இளம் வயதிலேயே அபாரமான எழுத்துத் திறமை கொண்டிருந்தார் ரச்சேல். தன்னுடைய ஏழாவது வயதிலேயே ஒரு சிறுவர் பத்திரிகைகளில் சிறுவர்களுக்கான கதைகளை எழுத ஆரம்பித்து விட்டார். அவருடைய கதைகளில் எல்லாம் கடல் ஒரு முக்கியமான விஷயமாக அமைந்திருந்தது. அவருடைய சிறு வயதுக் கற்பனைக் கதைகள் பலவும் கடலில் நடப்பதாகவே இருந்தன. அதனால் கடலின் மேல் இயல்பான ஆர்வம் கொண்டிருந்த அவர் பள்ளிப் படிப்பு முடித்ததும் “மரைன் பயாலஜி” எனப்படும் கடல்வாழ் உயிர்ச்சூழல் பற்றிய பட்டப்படிப்பைப் படித்து முடித்தார். மீன் வளம் பற்றிய படிப்பிலும் அவர் கவனம் கொண்டிருந்தார். அடுத்து மரைன் பயாலஜியில் ஆராய்ச்சிப் பட்டம் படிக்கலாம் என்று அவர் எண்ணியிருந்தார். ஆனால் அப்போது அவர் தந்தை திடீரென்று இறந்து போனார். அதனால் குடும்பச் சுமை அவர் தோள்களில் விழுந்தது. வயதான அம்மாவையும் இரண்டு உறவுக்காரச் சிறுமிகளையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்ற ரேச்சல் கார்சன் அதற்காக ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

ஆசிரியர் பணியில் இருந்தாலும், கடல்வாழ் உயிரினச் சூழலில் அவருக்கு இருந்த ஆர்வமும், அதனால் தேடித்தேடிப் படித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும் அவரை இயற்கை விஞ்ஞானம் பற்றியும் கடல் பயாலஜி பற்றியும் பல கட்டுரைகளைப் பத்திரிகைகளில் எழுத வைத்தன. உள்ளூர் தினசரிகளில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்து புகழ்பெற்றன. வெறுமனே ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை போல் இல்லாமல் அருமையான நடையுடன் கூடிய அற்புதமான எழுத்தில் அந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டன.

பத்திரிகைகளில் எழுதுவது மட்டுமில்லாமல், ரேடியோவிலும் அவர் கடல்வாழ்வியல் பற்றி கட்டுரைகளை வாசித்தார். அவையும் மக்களால் விரும்பிக் கேட்கப்பட்டன. 1937ல் “அட்லாண்டிக் மந்த்லி” என்கிற பத்திரிகையில் அவர் எழுதிய “கடலுக்கடியில்” என்கிற கட்டுரைத் தொடர் பெரும் புகழ் பெற்றது. பிரபல பதிப்பக நிறுவனம் ஒன்று அந்தக் கட்டுரைகளை எல்லாம் மேலும் விரிவு செய்து ஒரு புத்தகமாக எழுதும்படி கேட்டுக் கொண்டது. அப்படி அவர் எழுதியதுதான் “அண்டர் தி சீ விண்ட்” என்கிற புத்தகம். அந்தப் புத்தகத்தின் சிறப்பைக் கண்ட “நேச்சர்” உள்பட பல்வேறு புகழ்பெற்ற விஞ்ஞானப் பத்திரிகைகள் அவரைத் தங்கள் பத்திரிகையில் எழுதுமாறு கேட்டுக் கொண்டன.

ரேச்சல் கார்சன் அச்சமயத்தில் எழுதியதுதான் பரபரப்பாக விற்பனையான “நம்மைச் சுற்றியுள்ள கடல்” என்கிற புத்தகம். “தி நியூயார்க்கர்” பத்திரிகையில் பெஸ்ட் செல்லர் புத்தக வரிசையில் 86 வாரங்கள் அது முதல் இடத்தில் இருந்தது. “நம்மைச் சுற்றியுள்ள கடல்” டாக்குமெண்டரி திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டு சிறந்த டாக்குமெண்டரி படத்துக்கான ஆஸ்கார் விருதையும் பெற்றது. அப்புத்தகத்தின் மூலம் ஏகப்பட்ட விருதுகளும், செல்வமும் அவரைத் தேடி வந்தன.

குடும்பத்தைக் காக்க இனிமேல் வேலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற சூழல் வந்ததும் ரேச்சல் கார்சன் வேலையை உதறினார். முழுநேர இயற்கை ஆராய்ச்சி விஞ்ஞான எழுத்தாளராக மாறினார். அடுத்தடுத்த “தி எட்ஜ் ஆப் தி ஸீ , “சம்திங் அபவுட் தி ஸ்கை” போன்ற இவருடைய விஞ்ஞானத் தொடர்கள், அதனுடைய கவிதைத்துவமான நடையினால் கவரப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. பல்கலைக்கழகங்களிடமிருந்தும், அறிவியல் அரங்கங்களிடமிருந்தும் பேசச் சொல்லி ஏகப்பட்ட அழைப்புகள். அப்போதுதான் ரேச்சலுக்கு சுற்றுச் சூழல் பற்றி விரிவாக ஆராய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.

கடல் வாழ் உயிர்களைப் பற்றியும்,மீப்ன்துவாகக் கடல் பற்றிய அறிவியல் உண்மைகளையே எழுதி வந்த ரேச்சல் கார்சனின் பார்வை பயிர்களுக்குத் தெளிக்கப்பட்ட டிடிடி (ஞிஞிஜி) என்கிற பூச்சிக் கொல்லி மருந்தின் மேல் திரும்பியது. மண்புழுக்களும், ராபின்ஸ் போன்ற குருவியினப் பறவைகளும் திடீரென்று ஏன் மறைந்து போயின என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அவருக்கு அதற்கு முக்கிய காரணமே “டிடிடி” போன்ற பூச்சிக் கொல்லி மருந்துதான் என்று நிஜம் வெளிப்பட்டது. அச்சமயத்தில் சிறிய விமானங்களின் மூலம் “சிவப்பு எறும்புகளை ஒழிக்கும் திட்டம்” என்கிற பெயரில் பயிர்களின் மேல் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வந்தன.

அந்தப் பூச்சிக் கொல்லி மருந்துகள் மண்ணிலும், பயிரிலும், அதை உண்ணும் உயிரினங்களிலும் ( மனிதன் உள்பட ) ஏற்படுத்தும் கொடிய விளைவுகளைப் பற்றி அவர் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் ஆராய்ந்தார். அதில் அவர் அந்தப் பூச்சிக் கொல்லி மருந்துகள் சுற்றுச் சூழலையும் மனித வாழ்வையும் எப்படி கெடுத்துச் சீரழிக்கின்றன என்கிற பயங்கர உண்மைகளைக் கண்டறிந்தார். அப்போதுதான் அவருடைய மார்பில் புற்று நோய் தாக்கியது. அது மிக விரைவிலேயே அபாயகரமான கட்டத்தையும் எட்டியது. எனினும் அந்த வலிகளைப் பொறுத்துக் கொண்டு தொடர்ந்து அந்த உண்மைகளை எழுத ஆரம்பித்தார் ரேச்சல்.

டிடிடி பூச்சி கொல்லி மருந்தை உலகெங்கும், குறிப்பாக அமெரிக்காவில் பெருமளவு விற்று கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருந்த மருந்து கம்பெனிகள் ரேச்சலின் ஆராய்ச்சியை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தன. அதையெல்லாம் தாண்டி தன்னுடைய “மாஸ்டர் பீஸ்” புத்தகமான “ சைலண்ட் ஸ்பிரிங் “ ( மவுன வசந்தம் ) கை நியூயார்க்கர் தினசரியில் தொடராக எழுத ஆரம்பித்தார் ரேச்சல் கார்சன்.

கட்டுரைத் தொடருக்கு பயங்கர வரவேற்பு. மருந்து கம்பெனிகள் பத்திரிகை மீதும் ரேச்சலின் மீதும் வழக்குகளைப் போட்டன. எல்லா வழக்குகளிலும் ஜெயித்தார் ரேச்சல். நாடெங்கும் எதிர்ப்பு தோன்றி ஒரு போராட்ட இயக்கமாக அது மாறியதைத் தொடர்ந்து, டிடிடி மருந்தை அரசாங்கம் விரைவிலேயே தடை செய்தது. சுற்றுச் சூழல் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி என்றே அதைச் சொல்லலாம். ரேச்சலின் “மவுன வசந்தம்” புத்தகம் இன்றைக்கும் அகில உலக சுற்றுச்சூழல் போராட்டத்தின் லட்சியப் புத்தகமாக இருந்து வருகிறது. செயற்கை சிந்தடிக் உரம் நம் வாழ்க்கையை விஷமாக்கி எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை நிரூபித்த ரேச்சல் ஒரு வீராங்கனை போல் கடைசி வரை வாழ்ந்தார்.

தன்னுடைய 57ஆம் வயதில் புற்றுநோய் முற்றியதின் காரணமாக உயிர்நீத்தார் ரேச்சல். ஆனால் தன் புத்தகங்களின் மூலம் இன்றும் உயிர் வாழ்கிறார். 

Pin It