வரி ஏய்ப்பும், வாராக் கடனும், ஊழல் மயமும், உலகமயத்தோடு உடன் பிறந்தவை என்பதை அண்மையில் வெளியான அரசுப் புள்ளி விவரங்களே மீண்டும் ஒரு முறை தெளிவுப்படுத்துகின்றன.

கணக்கில் காட்டாத கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கென்றே மோசடி நிறுவனங்கள்  திட்டமிட்ட முறையில் உருவாக்கப்படுவதை பனாமா ஆவணங்கள் வெளிப்படுத்தின. மக்களிடையே இது ஒரு விவாதப் புயலை எழுப்பியது.

பனாமா கசிவு மொரிசியஸ் மீது கவனத்தைத் திருப்பியது. மொரிசியஸ் என்ற சின்னஞ்சிறு நாடு தான் இந்தியாவில் நடைபெறும் அயல் முதலீட்டுக்கான முதல் வரிசை நாடாக இருந்தது. அந்நாடு அவ்வளவு பெரிய பணக்கார நாடு அன்று.  

வெறும் முகவரியாக அந்நாட்டைப் பயன்படுத்திக் கொண்டு அயல் நாட்டு முதலீடுகள் என்ற பெயரில் பெரும் முதலாளிகள் கறுப்பை வெள்ளையாக்கும் வித்தையை நடத்தி வந்தனர். அதற்கு ஏற்ப இந்திய அரசும், மொரிசியஸ் அரசும் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன.

பெயருக்கு ஒரு சிறு தொகையை மொரிசியஸ் அரசுக்கு ஒரு நிறுவனம் வரி செலுத்தி விட்டால் இந்தியாவில் அந்த நிறுவனம் வரி கட்டத் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டது. இந்தியப் பெருமுதலாளிகள் பலரும், வெளிநாட்டு முதலாளிகளும் மொரிசியசில் நிறுவனங்களைப் பதிவு செய்து கொண்டு இந்தியாவில் நேரடி அயல் முதலீட்டில் ஈடுபட இந்த ஏற்பாடு உதவியது.

இதுபற்றி நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும், ஊடகங்களிலும் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டாலும் ஒன்றும் அசையவில்லை. இறுதியில் இப்போது பனாமா கசிவுக்குப்பிறகு இந்த இரட்டை வரித் தவிர்ப்பு ஒப்பந்தம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2017 ஏப்ரல் 1-க்குப் பிறகு மொரிசியஸ் நாட்டிலிருந்து வரும் அயல் முதலீடுகளுக்கு இந்தியாவில் வரி உண்டு.

ஆனால் அண்மையில் இந்திய அரசு வெளியிட்ட வருமான வரி விவரங்கள் இந்தியாவில் நடப்பது மொரிசியஸ் மோசடியைவிட மிகப்பெரிய வரி ஏய்ப்பு என்பதை தெளிவுபடுத்துகிறது. வெளியான விவரங்களின்படி 2012-2013 நிதியாண்டில் 18,358 பேர்தான் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களாம்! ஆனால் அதே ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த 46 கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு மொத்தம் 11 இலட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

ஆண்டு வருமானம் 10 இலட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள் ஏறத்தாழ 10 இலட்சம் பேர் மட்டும் தானாம். ஆனால் அதே ஆண்டில் முன்னணி மகிழுந்து (கார்) நிறுவனங்களில் 4 முன்னணி நிறுவனங்கள் 25,645 மகிழுந்துகளை விற்றுள்ளன. இவை ஒவ்வொன்றின் மதிப்பு ரூபாய் 40 இலட்சத்திற்கும் மேல்.

இந்த வரி ஏய்ப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. பணக்காரர்கள் மீது வரி விதித்து அதனைத் தவறாமல் திரட்ட வேண்டிய இந்திய அரசு, வரி ஏய்ப்பையே காரணமாகக் காட்டி ஆண்டுதோறும் நேரடி வரி விதிப்பை குறைத்துக்கொண்டே வருகிறது.

பொதுவாக அதிக வருமானம் உள்ளவர்கள் அதிகம் வரி கட்டுவார்கள் என்ற கருத்து பொது மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இது உண்மையல்ல. உண்மை இதற்கு நேர்  மாறாக உள்ளது.

வசதி படைத்தோர் மீது விதிக்கப்படும் நேரடிவரி வழியாகக் கிடைத்த வருமானம் 2009-2010இல் மொத்த வரி வருவாயில் 60.8 விழுக்காடாக இருந்தது. இது 2012-2013இல் 54.2 விழுக்காடாகக் குறைந்து, 2015-2016இல் 51 விழுக்காடாக விழுந்துள்ளது.

மறுபுறம் மக்கள் வாங்கும் பொருள்களின் மீது விதிக்கப்படும் மறைமுக வரி 2015-2016 இல் மட்டும் 31 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதிக வருமானம் உள்ள நிறுவனங்கள் அதிக விழுக்காட்டில் வரி கட்டுவார்கள் என்று நினைத்தால் அதுவும் தவறு. 1 கோடி ரூபாய் வருமானம் காட்டிய நிறுவனங்கள் 20.37 விழுக்காடு வரி கட்டியபோது 500 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள நிறுவனங்கள் 22.8 விழுக்காடு மட்டுமே வரி கட்டின.

இதைவிட இன்னொரு கொடிய விவரமும் வெளிப்பட்டுள்ளது. கடந்த 2014-2015இல் 52,911 நிறுவனங்கள் நிறுவன வரி (கார்ப்பரேட் வரி) 1 ரூபாய் கூட கட்டவில்லை என்பது மட்டுமல்ல, பலகோடி ரூபாய் மானியமாகப் பெற்றுக் கொண்டன.

கடந்த 3 நிதியாண்டுகளில் இந்திய அரசு பெரிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட நேரடி வரி விதிப்பை 1,28,639 கோடி ரூபாய் அளவுக்கு குறைத்துள்ளது. இவ்வளவு வரி குறைப்புக்குப் பிறகு தான் மேற்சொன்ன வரி ஏய்ப்பும் நடக்கிறது.

இது போதாதென்று அரசு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி அதை கட்டாமல் ஏய்க்கும் கோடீசுவரர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது.

அரசு வங்கிகளின் வாராக் கடன் 3 இலட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ஏய்ப்பு செய்த விஜய் மல்லையாவைவிட பல நூறு பெரிய திருடர்கள் தொழிலதிபர்கள் என்ற போர்வையில் உலாவருகிறார்கள்.

மேற்சொன்ன வாராக் கடனில் வசூலிக்கவே முடியாது என முடிவு செய்து தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை மட்டும் 1 இலட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இவ்வாறு வசூலிக்க முடியாது என தள்ளுபடி செய்யப்பட்ட கடனாளியில் ஒருவர் கூட உழவர் கிடையாது. சிறுதொழில் முனைவோரும் மிகச் சிலரே.

விஜய் மல்லையா வழக்கை எடுத்துக்காட்டாகக் கூறி வாராக்கடன் பற்றி விளக்கிய இந்திய சேம வங்கி (ரிசர்வு வங்கி) ஆளுநர் இரகுராம் ராஜன், “இந்த கடனாளிகள் நீண்ட நாள் ஓடாத கார், ஒன்றிரண்டு கணிப்பொறி, ஒரு சில மேசை நாற்காலி ஆகியவற்றைத் தவிர தங்கள் பெயரில் எதையும் வாங்குவதில்லை. விஜய் மல்லையா கடனுக்கு அவர் சொத்தை ஏலம் விடச் சென்றபோது, அவர் பெயரால் இருந்த பொருள்களின் ஆக அதிக மதிப்பே 40 இலட்சம் ரூபாயைத் தாண்டவில்லை. ஏய்ப்பது என்று முடிவு செய்துவிட்டே பல நிறுவனங்கள் கடன் வாங்குகின்றன” என்று கூறினார்.

இயல்பாக ஒருவர் ஒரு வங்கியில் கடன் பெற்றுவிட்டு அது நிலுவையில் இருக்கும் போதே இன்னொரு வங்கியில் கடன் வாங்குவதென்றால் அதற்கு ஆயிரம் தடைகளைத் தாண்ட வேண்டும். ஆனால் இந்தத் தடை விதிகள் பெருமுதலாளிகளைப் பொருத்த வரையில் செயல்படுவதே இல்லை.

கடன் ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே ஒரு வங்கியில் கடன் வாங்கி அதற்கு வட்டி செலுத்துவதற்கே இன்னொரு வங்கியில் கடன் வாங்குவதும், அந்த கடன் நிலுவையில் இருக்கும் போதே விரிவாக்கம் என்ற பெயரால் மேலும் கடன் வாங்குவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அதிக பணம் படைத்தவர்களே அதிகம் ஏய்ப்பவர்களாக இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக பஞ்சாப் நேசனல் வங்கி கடந்த 3 ஆண்டில் வசூலிக்க முடியாது என்று தள்ளுபடி செய்த 34,388 கோடி ரூபாய் கடனில் 10,869 கோடி ரூபாய் 10 பேர் மட்டுமே வாங்கியது ஆகும்.  

முழு அளவில் அரசு வங்கிகள் தனியார் மயமாகாத இப்போதே பல அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகக் குழுவில் பெரிய முதலாளிகளின் பேராளர்கள் இடம் பெற்று வருகின்றனர். இவர்கள் தங்களது நிறுவனங்களுக்கு தாராளமான கடன் வழங்க வலியுறுத்துவதற்கு இந்தப் பதவிகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் ஏய்ப்பு செய்த உஷா இஸ்பாத் மற்றும் மாளவிக்கா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வினய் ராய் கடன் பெறுவதற்கு ஐ.டி.பி.ஐ. வங்கியின் நிர்வாகக் குழுவில் இருந்த அவரது தந்தை குல்வந் ராய் தான் பரிந்துரை செய்தார்.

அதைவிட அரசு நிறுவனமான குசராத் மாநில பெட்ரோலியக் கழகம் திட்டமிட்ட முறையில் கடன் ஏய்ப்பு செய்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அன்றைய குசராத் முதலமைச்சர் மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்திற்கும், மோசடி செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட பெயர்ப் பலகை நிறுவனங்களுக்கும் கிருஷ்ணா கோதாவரி படுகையில் பெட்ரோல் எடுப்பதற்கான துணை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான விவரங்களை தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையை முன்வைத்து முன்னாள் அமைச்சர் ஜெயராம் ரமேஷ்  அம்பலப்படுத்தி வருகிறார். (காண்க: தி இந்து ஆங்கிலம், 2016-ஏப்ரல்-18, ஏப்ரல் 29, மே 13 இதழ்கள்)

ஒரு லிட்டர் பெட்ரோல் கூட கிடைக்காது என்று தெளிவாக அறிக்கை வெளியிட்ட பின்பும் மோசடி செய்வதற்கென்றே அரசு வங்கிகளில் ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளதை ஜெயராம் ரமேஷ் எடுத்துக் காட்டுகிறார். நரேந்திர மோடி போன்ற ஆட்சியாளர்களும், அரசியல் தலைவர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் கையூட்டு பெறுவதற்கென்றே அரசு நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டு அரசு வங்கிகள் திவாலாக்கப்படுவதை இது எடுத்துக் காட்டுகிறது.

இவ்வாறு அரசு வங்கிகளை இழப்பில் சிக்கவைத்த இதே ஆட்சியாளர்கள் இந்த இழப்பையே காரணம் காட்டி அவ்வங்கிகளை தனியார் மயமாக்க முயற்சி செய்கிறார்கள்.

இந்த இழப்பையேக் காரணம் காட்டி வேளாண்மை, சிறுதொழில், கல்விக் கடன் வழங்குவதை பெருமளவு குறைக்கிறார்கள். வரி வருமானம் குறைவதைக் காரணம் காட்டி மாநிலங்களுக்கு வழங்கும் நிதிப்பங்கையும் மானியத்தையும் வெட்டுகிறார்கள்.

வேளாண் மானியம், உணவு மானியம், நலத்திட்ட மானியம் ஆகியவற்றை கடுமையாகக் குறைக்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதை அண்மையில் நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த சின்கா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

உழவர்கள் இடுபொருள் செலவைக் கூடுவது, அரசு கொள்முதல் நிறுத்தப்படுவது, ரேசன் கடைகள் படிப்படையாக மூடப்படுவது, அரசு மருத்துவமனைகள் படிப்படியாக மூடப்படுவது ஆகியவை அவற்றின் எதிர்கால நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றன. இந்த ஆபத்தை மக்கள் விரைவாக உணர வேண்டும்.

தொழில் வளர்ச்சி - சனநாயக மலர்ச்சி என்ற பெயரால் மக்களைக் கொள்ளையடிக்கும் இந்த ஒட்டுண்ணி அரசியல் வலைப்பின்னலை அறுத்தெறியாமல் முன்னேற்றம் காணுவது முயற்கொம்பே!