தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத - ஒரு சார் அவசர நிலை (Selective Emergency) இருப்பதற்குக் கூடங்குளம் நிலைமை ஒரு முக்கியச் சான்று. செயலலிதாவின் பேயாட்சி கூடங்குளம் பகுதியில் வாழும் எளிய மக்களை நிரந்தர அச்சுறுத்தலில் வைத்திருக்கிறது.

கடந்த 10.09.2012 அன்று அணு உலை முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்ற அம்மக்கள் மீது தமிழக காவல்துறையும், இந்திய அரசின் துணை இராணுவப்படையும் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை தொலைக்காட்சிகள்வழியாக உலகமே பார்த்தது.

அப்போராட்டம் நடந்த அடுத்தடுத்த நாள்களில் காவல்துறை தேடுதல் வேட்டை என்ற பெயரால் நடத்திய கொடுமை கொஞ்ச நஞ்சமன்று. போராட்டத் தலைவர் உதயகுமாரைத் தேடுவதாக சொல்லிக்கொண்டு இடிந்தகரை மாதா கோயிலுக்குள் நுழைந்த காக்கிச் சட்டைகள் அங்கிருந்த மாதா உருவச் சிலையின் சேலையை உருவியும் அங்கேயே சிறுநீர் கழித்தும் தங்கள் காட்டுமிராண்டித் தனத்தைக் காட்டினர்.

போராடும் மக்களுக்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த சோற்றுக் குண்டான்களில் மண்ணைக் கொட்டினர். சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை பிரித்து அதற்குள்ளும் மண்ணைப் போட்டனர். போராட்டப் பந்தலுக்குப் பயன்பட்டு வந்த மின்னாக்கிகளை (ஜெனரேட்டர்) திருடிச் சென்றனர்.

கொடுமை இன்னும் ஓயவில்லை. இத்தாக்குதலில் எலும்பு முறிவு உள்ளிட்ட கொடும் காயம் பட்டவர்கள் கூட மேல் சிகிச்சைக்காக இன்று வரை வெளியே செல்ல முடியவில்லை. இடிந்தகரை லூர்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த பலரை காவல்துறை கைது செய்ததால் கொடும் காயம் பட்ட பலர் கூட லூர்து மருத்துவமனைக்கும் செல்லாமல் வெளிநோயாளிகளாக கிடைத்த மருத்துவத்தை செய்து கொண்டு ஆபத்தான நிலையில் வாழ்கின்றனர்.

போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 7 பெண்கள் உள்ளிட்ட 65 பேர் திருச்சி, வேலூர், பாளையங்கோட்டை சிறைகளில் இன்னும் வாடுகின்றனர். அவர்களுக்குத் தொடர்ந்து பிணை மறுக்கப்படுவதோடு, புதிய புதிய வழக்குகளும் அவர்கள் மீது சேர்க்கப்பட்டு வருகிறது. பிணையில் எடுப்பதற்கான அடிப்படை ஆவணங்களில் கைது செய்யப்பட்டப் பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஒ) கையெழுத்து பெறுவது அவசியம். ஆனால் செயலலிதா ஆட்சி கூடங்குளம் பகுதியில் உள்ள நான்கு கிராம அலுவலர்களுக்கும், வட்டாட்சியருக்கும் பிணைக்கான ஆவணங்கள் தரக்கூடாதென வாய்மொழி ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சிறையில் இருப்பவர்களைப் பிணையில் எடுப்பது பெரும் சிக்கலாக உள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் திரு மணி என்ற கண்பார்வையற்ற 29 வயது இளைஞரும் ஒருவர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகே அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் பிணை வழங்கியது. இதுவரை ஏறத்தாழ 55,700 பேர் மீது பல்வேறு வழக்குகளைக் காவல்துறை பதிவு செய்துள்ளது. இதில் 6918 பேர் மீது தேசத் துரோக வழக்கு, அரசைக் கவிழ்க்க சதிசெய்ததாக வழக்கு, அரசுக்கெதிராகப் போர் புரிவதாக வழக்கு என விதம் விதமான கொடிய வழக்குகளும் புனையப்பட்டுள்ளன. இக்கொடிய வழக்குகளுக்கு சிறுவர்களும் தப்பவில்லை. தமிழகக் காவல்துறையின் வழக்குப்படி 14 வயதிலிருந்து 16 வயதுள்ள நான்கு சிறுவர்களும் அரசைக் கவிழ்க்க சதி செய்த சதிகாரர்கள் ஆவர்.

பால் உள்ளிட்ட இன்றியமையாப் பொருள்கள் மறுக்கப்பட்ட நிலையில், குடியிருப்புகளுக்கு குடிநீர், மின்சாரம் ஆகியவை துண்டிக்கப்பட்ட நிலையில், கழிவுநீர் குழாய்களும் நொறுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு முற்றுகையில் அம்மக்கள் வைக்கப்பட்டுள்ளனர். மருந்து வாங்க கடைக்குச் செல்லும் இளைஞர்களை காவல்துறை பொய் வழக்கில் கைது செய்துவிடுவதால் பக்கத்து நகரங்களுக்குக் கூட செல்லமுடியாமல் அம்மக்கள் முடங்கி யிருக்கின்றனர்.

எந்த நியாயமும் இன்றி 144 தடை ஆணை அப்பகுதியில் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால் குழந்தைகள் உள்ளூர் பள்ளிகளுக்குச் சென்று வருவது கூட இடர்ப்பாடாக இருக்கிறது.

ஆயினும் கூடங்குளம் - இடிந்தகரை பகுதி மக்கள் செயலலிதா அரசின் அடக்குமுறைகளுக்கு அடி பணிந்து விடவில்லை. “கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு” என்ற ஒற்றை முழக்கத்தின் கீழ் அவர்களது போராட்டம் ஓங்கி, விரிந்து கொண்டிருக்கிறது. கடற்கரையில் மனிதச் சங்கிலி, கடல்நீரில் நின்றபடி அறப்போராட்டம், கடற்கரை மணலுக்குள் உடம்பை புதைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் என அவர்களது அமைதி வழிப் போராட்டம் தொடர்கிறது.

கூடங்குளம் பகுதியைத் தாண்டி பல்வேறு பகுதிகளுக்கு இப்போராட்டம் விரிவடைந்து வருகிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 1000 படகுகளுக்கு மேல் அணிதிரண்டு வந்து தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிட்டு அதன் நீர் வழிப்பாதையை மறித்து நின்றது. வரலாறு காணாத போராட்டமாகும்.

கடந்த 08.10.2012 அன்று கொலைகாரக் கூடங்குளம் அணு உலையை முற்றுகையிட்டு பல்லாயிரக் கணக்கில் மீனவர்கள் கடற்பரப்பில் அணிதிரண்டது அவர்களது உள்ள உறுதிக்குச் சான்று கூறும்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், அந்தப் பகுதி மக்களின் மற்றும் மீனவர்களின் போராட்டம் மட்டுமன்று. அது தமிழ்த் தேசிய இனத்தின் தற்காப்புப் போராட்டமும் ஆகும். அதனால் தான் தமிழகம் தழுவி அப்போராட்டத்தை விரிவடையச் செய்வதில் தமிழின உணர்வாளர்கள் முதன்மைப் பாத்திரம் வகிக்கின்றனர்.

இதன் அடுத்தக்கட்டமாக வரும் அக்டோபர் 29 ஆம் நாள் சென்னையில் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்துவதென அணு உலைக்கெதிரான அனைத்து அமைப்புகளின் கூட்டம் முடிவு செய்துள்ளது.

“கூடங்குளம் அணு உலையை இழுத்துமூடு, கூடங்குளம் பகுதி மக்களின் சனநாயக உரிமைகளைப் பறிக்காதே, அம்மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்ப பெறு, கூடங்குளம் - இடிந்தகரை பகுதியிலிருந்து காவல்துறையைத் திரும்பப் பெறு” என்ற முழக்கங்களோடு நடைபெறவுள்ள இந்த சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் தமிழின உணர்வாளர்கள், சட்டத்தின் ஆட்சியின் மீது அக்கறை உள்ளவர்கள், சூழலியல் பாதுகாப்பில் நாட்டம் உள்ளவர்கள் முதலிய அனைவரும் பங்கேற்க வேண்டிய போராட்டமாகும்.

அனைவரும் அணிதிரண்டு சட்டமன்ற முற்றுகையில் பங்குபெறுவோம்.

கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டம் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் போராட்டமாக தமிழ்த் தேச மெங்கும் விரிவடையட்டும்!