அந்த இளைஞர் வெளியில் வாழ்ந்ததைப் போல் இன்னொரு மடங்கு காலத்தைச் சிறையில் கழித்து விட்டார். ஆம், 19 அகவையில் சிறைக்குப் போன பேரறிவாளனுக்கு இப்பொழுது அகவை 38.

 “சிவராசனுக்கு வெடிகுண்டு தயாரிக்கப் பேட்டரி வாங்கிக் கொடுத்தார். எனவே, இராசீவ் காந்தியைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பேரறி வாளனுக்கு முன்பே தெரிந்திருந்தது. கொலைச் சதி குற்றச் சாட்டு 120 ஏ -யின் படி அவர் குற்றவாளி” இவைதாம் உச்ச நீதி மன்ற நீதிபதி வாத்வா படித்த தீர்ப்பில் தோழர் பேரறிவாளன் மீது சுமத்தப் பட்ட குற்றச் சாட்டுகள். இதற்குத்தான் மரண தண்டனை.

 உச்ச நீதி மன்றம், இராசீவ் கொலைக்குத் தடாச் சட்டம் பொருந்தாது என்று தீர்ப்பளித்தது. பேரறிவாளன் சிவராசனுக்குப் பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக ஒப்புக் கொண்டதாகக் காவல் துறை அதிகாரி கொடுத்த அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டது உச்சநீதி மன்றம். தடாச் சட்டம் போடப்படாத மற்ற கொலை வழக்குகளில் காவல்துறை அதிகாரி பெற்றதாகக் கூறும் ஒப்புதல் வாக்கு மூலத்தை நீதி மன்றம் ஏற்க வேண்டிய கட்டாயமில்லை. ஆனால் தடாச் சட்டம் பொருந்தாது என்று கூறிய உச்சநீதி மன்றம், தடாச் சட்டத்தின் சனநாயக விரோதப் பிரிவின் படி காவல் துறை அதிகாரி கொடுத்த “ஒப்புதல் வாக்கு மூலத்தை” ஏற்று மரண தண்டனை வழங்கியது. இது உச்ச நீதி மன்றத்தின் தன் முரண்பாடு. குறுக்கு விசாரணையின் போது அந்தக் காவல் அதிகாரி, ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கிய தேதியை மூன்று முறை மாற்றி மாற்றிச் சொன்னார். இது ஒன்றே போதும் அந்த வாக்கு மூலத்தைத் தள்ளுபடி செய்வதற்கு.

 சட்ட முறைப்படி ஆய்வு ஒரு பக்கம்; அரசியல் செல்வாக்கிற்கேற்ப தீர்ப்பு மறுபக்கம். இதற்கு ஓர் அப்பாவி இளைஞன் பலிகடாவா?

 இராசீவ் காந்தியைக் கொல் வதற்கான சதித்திட்டம் முன்கூட்டியே பேரறிவாளனுக்குத் தெரிந்திருக்கிறது என்கிறது உச்சநீதி மன்றம். பேரறிவாளன் கொலைச் சதியில் பங்கெடுத்துக் கொண்டதற்கு வேறு எந்த ஆதாரமும் மெய்ப் பிக்கப்படவில்லை. பேட்டரி வாங்கித் தந்ததாகக் கூறப்படுவதைத் தவிர.

 என்ன நோக்கத்திற்காக பேட்டரி தேவை என்பதைச் சொல்லாமலே சிவராசன் பேரறிவாளனிடம் பேட்டரி வாங்கி வரச் சொல்லியிருக்கலாம். ஈழ விடுதலையை ஆதரித்தவர், அதனால் விடுதலைப் புலிகளை ஆதரித்தவர் அறிவு. வெறும் 19 அகவைச் சிறுவன். சிவராசன் சொன்ன வேலையைக் கேட்கக் கூடிய பருவம். அவரிடம் போய் சிவராசன் மிகப் பெரிய மிகக் கமுக்கமான கொலைத் திட்டத்தைக் கூறுவாரா என்று வழக்குரைஞர் எடுத்துச் சொன்ன வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

 கொல்லப்பட்டவர் இராசீவ் காந்தி என்பதால் உச்சநீதி மன்றம் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து விட்டது. பற்றற்ற நிலையில் சட்ட ஆய்வு செய்யவில்லை. இந்தியாவில் சாதாரண மனிதர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?

 தன்ஞாயத்தை சட்ட வாதங்களோடும் உருக வைக்கும் உணர்ச்சியோடும் தோழர் பேரறிவாளன் வெளிப்படுத்தியுள்ளார். அவர் எழுதிய “தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் விரிவடைந்த ஐந்தாம் பதிப்பாக வந்துள்ளது. ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும். பேரறிவாளனை விடுதலை செய்க என்று முழங்க வேண்டும்.

பக். 156
விலை ரூ60.00

கிடைக்குமிடம்
திருவள்ளுவர் பெரியார்
மானுட ஒன்றியம்
11 கே.கே. தங்கவேல் தெரு , பெரியார் நகர்.
சோலையார் பேட்டை
வேலூர் மாவட்டம்