இரண்டுபடுதலும் எதிர்மறையின் வேர்

இரண்டு என்னும் எண் குறித்த dva, dvi, di, duo ஆகிய இந்தோ - ஐரோப்பிய மொழிச் சொற்கள் எவ்வாறு dis,des, de என்ற எதிர்மறை முன்னொட்டாகப் பொருள் மாற்றம் பெற்றன என்பதை இந்தோ-ஐரோப்பிய மொழியாய் வறிஞர்கள் யாரும் எங்கும் விளக்கியதாகத் தெரியவில்லை என்று சொல்லியிருந்தேன்.உள்ளதாம் தன்மைக்கு மறு தலையான இல்லதாம் தன்மையாகிய எதிர்மறைத் தன்மை உருவாவ தற்குச் சில பல காரணிகள் உலகில் உள்ளன. அவற்றுள் இரண்டுபடும் தன்மையும் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

உலகில் முழுமையான பெரிய பொருள் என்று ஒன்றும் இல்லை. அது போலவே சிதைந்து போன சிறிய பொருள் என்றும் ஒன்று இல்லை.இவ்வாறு கூறப்படுவன எல் லாம் அவ்வக்கால நிகழ்நிலை அளவினவே.முழுமையான பெரிய பொருள் அதன் மேலும் உள்ளதொரு மிகு முழுமைப் பெரும் பொருளோடு ஒப்பு நோக்கச் சிறிய பொருளாகிவிடும். சிறிய பொருள் எனப் பட்டதும் அதனின் சிறிய பொருளோடு ஒப்பு நோக்கப் பெரிய பொரு ளாகிவிடும். இவ்வுண்மையை

“முதலும் சினையும் பொருள்வேறு படா

அநுவலுங் காலைச் சொற்குறிப் பினவே”

                 (தொல்.சொல்.86)

என்னும் தொல்காப்பிய நூற்பா நமக்குத் தெரிவிக்கின்றது.

பெரிய பொருள்கள் உடைந்து சிறிய பொருள்களாவதும் சிறிய பொருள்கள் சேர்ந்து பெரிய பொருள்களாவதும் உலகில் ஒவ்வொரு நொடியிலும் நடந்து கொண்டே உள்ளன. ஒன்று பலவா வதும் பல ஒன்றாவதும் உலகியல்நிகழ்வுகளே. இவ்வகையிலேயே ஒரு பொருள் உடையும் பொழுது அது முன்னிருந்த தன்மையிலும் பார்க்க வலிமை இழக்கிறது. மேலும் உடைவு தொடர் கையில் இறுதியில் இல்லாமலே போகிறது.

நூறுதல்- அழிதல்

‘நூறுதல்‘ என்னும் வினை அழிதற் பொருளது.

“அம்புடைக் கையர் அரண்பல நூறி”

                       (அக: 69 : 16)

“எழுதெழில் மாடத்து இடனெல்லாம் நூறி”

                     (பு. வெ. மா : 120)

என்ற இடங்களின் நூறுதல் அழிதல் பொருள் பெறும்.ஆவின் சாணத்தை வறட்டியாக்கிப் பின் எரித்துச் சாம்பலாக்கியதை ‘நூறு‘ என்கின்றோம். தெய் வத்தன்மை குறிக்கும் ‘திரு‘ அடை சேர்ந்து இதுவே ‘திருநூறு‘ ஆனது. பிறகு திருநீறு என்றும் துண்ணூறு என்றும் இச்சொல் மருவியது. ஒரு பொருள் பல பகுதியானதும் நூறு ஆனதுதான். ஒரு பொருள் இல்லாமல் அழிந்து போனதும் நூறு ஆனதுதான்.ஒரு பொருள் பல பகுதியானது என்ற பொருளில் உருவான நூறுதான் பிறகு நூறு (100)என்னும் எண்ணினையும் குறித்தது. இவற்றைப் பாவாணர் விளக்கியுள்ளார்.

‘ஈர்தல்‘, பிளத்தல் என்னும் பொருள் தரும். ஈர்தல் என்ற இதே வினையில் இருந்துதான் ஈர்- “இர்’’ “இரு’’ என்ற இரண்டு எண்ணினைக் குறிக்கும் சொல்லும் தோன்றிற்று. துமித்தல் என்னும் வெட்டுதல்-பிளத்தல் வினை இவ்வாறுதான் முதலில் பிரிவு என்ற பொருளில் தோன்றிப் பிறகு துமி-துவி என்று எண்ணினைக் குறிக்கவும் அதாவது இரண்டினைக் குறிக்கவும் ஆன நிலை எய்தியது.

‘ஒன்று‘ என்னும் எண், ஒன்றுதலாகிய வினையுடன் உறவுடையது. ‘ஒல்‘ என்னும் பொருந்துதல் பொருள் தரும் வேர் “ஒல்’’-- “ஒன்’’--”ஒன்னு’’-- ஒன்னுதல்; “ஒல்’’-”ஒற்’’--”-ஒர்’’-”-ஒரு’’-”-ஓர்’’; “ஒல்’’-”-ஒற்-’’ “ஒறு’’--”ஒன்று’’ என்றெல்லாம் பலப்பல சேர்ந்த ஒன்றிய ஒரு பொருளை முதற்கண் குறித்தது.

தனித்தனியாக இருந்த ஆடு மாடுகள் சேர்ந்து சேர்ந்து ஒன்றாதலும்.தனித்தனியராக இருந்த மக்கள் சேர்ந்து ஒன்றாதலும் நிகழ்தல் காண்கின்றோம்.துளித்துளியான மழைத்துளிகள் வெள் ளம் ஆவதும் சிறுவெள்ளம் பெரு வெள்ளம் ஆவதும் இவ் ஒன்றாதல் வழியே நிகழ்கிறது.ஒன்றுதல் ஆகிய இவ்வினைக்கு மறுதலை அவ்வொன்றிய பொருளை பிரித்தலேயாம்.அதாவது ஒன்றுதலைப் பிரிக்கும் போது மட்டுமே அதற்குரிய எதிர்நிலை தோன்று கின்றது. இந்த வகையில் ஒன்று என்பது மட்டும் தனித்த எண்ணாகவும் அதனைப் பிரிக்கப் பிரிக்க உருவாகுகின்றவையெல்லாம் பிரிவுப் பொருள் தரும் எண்ணாகவும் கருதப்படுகின்றது.

ஈர்தலாகிய பிளத்தல் வினையால் இரண்டு மட்டும் அல்லாமல் மூன்று நான்கு வினையாகிய மற்ற மற்ற எண்களும் கிடைக்கின்றன. திராவிட மொழியியல் அறிஞர்களில் ஒருவராகிய கிட்டல் (Kittel) இரண்டு என்னும் எண் பற்றிக் கருதிப் பார்த்ததை கால்டுவெல் குறிக்கின்றார்.

find that Kittel, also in the Indian Antiquary for January 1873, derives the Dravidian word for two from ir (ߘ) to split, especially to split off a branch; whilst or (ஒர்), one, he considers to mean a unit without a branch.                                                                                                                                              (கால்டுவெல் ப.-333)

நூறு(தல்)என்ற வினை முதலில் அழிதல் பிரிதல் என்ற பொருள்களில் புழங்கப்பட்டுப் பிறகு எவ்வாறு ‘நூறு‘ என்ற எண்ணினை மட்டும் குறித்தற் குரியதாகியதோ அவ்வாறே ‘ஈர்தல்‘ என்ற பிரிதல் வினை முதலில் பிரிவுப் பொருளில் மட்டுமே வழக்கில் இருந்து பின் ஈர்-இர் என்று வளர்ந்து பிறகு இரண்டு என்ற எண்ணிற்கு மட்டுமே உரியதாகி இருக்க வேண்டும்.

ஈர்(தல்), இரண்டு என்ற எண்ணிற்கு மட்டும் உரியதாகத் தமிழில் நிகழ்ந் தது போலவே துமி(தல்) ஆகிய தமிழ்வினை இந்தோ-ஐரோப் பியத்துள் நாள டைவில் dvi, duo, di என இரண்டினைக் குறித்தற்கு உரியதாக வளர்ந் திருக்க வேண்டும்.

ஒன்றாகியிருக்கும் பொருள் அது சிதையும் போதும் உடையும்போதும் நொறுங்கும்போதும் அழிதலுக்கு- இன்மைக்கு உரியதாக ஆகிவிடு கிறது. ஒரு நாடு உடையும் போதும் கட்சி உடையும் போதும் நிகழ்வது அதன் முந்தைய வலிமை இல்லாத் தன்மையேயாகும். மரம் உடைதல், வீடு உடைதல், சட்டி உடைதல், கண்ணாடி உடைதல் இப்படி ஒவ்வொரு பொருள்களிலும் உடைதல் நிகழும்போது அந்த அந்தப் பொருள் படிப்படியாக இல்லாத தன்மை யை எய்திவிடுவதை அன்றாடம் உலகில் காண்கின்றோம். ஒன்றாதல் தன்மைக்கு எதிர்நிலையான உடைதலாகிய ஈர்தல் தன்மையில் அதாவது இரண்டாதல் தன்மை நிகழ்கின்றபோது அந்தப் பொருள் மெல்ல மெல்ல இல்லாதல் தன்மையை அடைந்துவிடுகிறது. இந்த வகையி லேயே இரண்டு என்ற எண் குறித்த சொல்லிலிருந்து இன்மைத் தன்மையாகிய எதிர்மறைத் தன்மை தோன்றிவிடுகிறது. பிரிதல் அழிதலுக்கும், ஒன்று படுதல் வாழ்தலுக்கும் அடிப்படையாகக் கருதப் படுகிறது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற் றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு” என்ற பாரதியார் பாடல் நினைக்கத் தக்கது. அடம்பங் கொடியும் திரண்டால் மிடுக்கு என்னும் பழ மொழியும் ஒன்று படுதலின் வலிமையைத் தெரிவிக்கும்.

தமிழில் ‘பாதிப்பு‘ என்ற சொல் இப் பிரிதல் பொருளில் பிறந்ததாகவே தெரிகிறது. “பகு’’- “பகுதி’’-”பகுதிப்பு’’- “பாதிப்பு’’ எனவே இச்சொல் வளர்ந் திருக்க வேண்டும். அழிதல் பொருள்தரும் இப் பாதிப்புச் சொல் பிரிதல் பொருள் வழியாகவே அப்பொருளை எட்டியிருக்க வேண்டும்.

பாறுதல் - அழிதல்

பகு-பகல்-பால்-பாலு-பாறு என்பதாகவே தமிழின் அழிதற் பொருள் தரும் பாறு சொல் பிறந் திருக்க வேண்டும்.

“காழியாம் பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே’’ (சம்: 2 : 11 : 5)

“நூலறு முத்தின் காலொடு பாறி’’

 (குறுந். 51 : 2)

என்ற பாடலடிகளின் ‘பாறுதல்’ அழிதற் பொருளதே.

“முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல் வேனைச் பத்திநெறி அறிவித் துப் பழ வினை கள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட னெனக் கருளிய வா றார்பெறுவார் அச்சோவே’’

என்னும் மணிவாசகர் பெருமானின் பாறுதலும் அழிதற் பொருளதே.

புறநானூற்று வீரத்தாய் போருக்குத் தன் மகனை அனுப்பிய காட்சியைக் கூறும் பாடலில் அவனின் பிளவு பட்ட குலைந்திருக்கும் தலை மயிரினைப் “பாறுமயிர்க் குடுமி’’’ (புறம்.279;9) என்று குறித்தது இங்கு மூல வழக்காக எண்ணத்தக்கதாகும்.

பால் - பாள் - பாழ்

     துலக்கம் - துளக்கம்; செதில் - செதிள்;

     கால் (கருமை) - காள் (கருமை) - காழ் (கருமை)

போன்ற தமிழ்வேர்வளர் நெறிமுறை களின் படித்தான் பகுவழித் தோன்றிய பகு - பகல்- பால் என்னும் சொல், அடுத்த வளர்ச்சியாகப் பாள்-பாளம்; பாள் - பாழ் எனச் சொற்களைத் தோற்றின. ஒரு பொருள் பாழாவது அதன் பிரிநிலைத் தன்மை யாலும் என்பதை இப் பாழில் பொருத்திக் காண்க.

ஈர்தல் - இரிதல்

‘இரிதல்‘ சொல், அழிதல் கெடுதல் பொருள் தரும் தமிழ்ச்சொல். இச் சொல் ஈர்தல் வினைவழியாகவே “ஈர்’’ “-இரு-’’ “இரி’’ எனப் பிறந்திருக்க வேண்டும்.

“மன்ற மரைஆ இரிய”  (குறு : 321: 5)

“கம்புள் சேவல் இன்துயில் இரிய” (மது : 254)

“புனல்ஒழுகப் புள்இரியும் பூங்குன்ற நாட”

                 (நால் : 22 : 2)

“கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி           துதைமென் தூவித் துணைப்புறவு இரிக்கும்”

              (குறுந் : 174 : 2-4)

போன்ற பாடல்களின் இரி-இரிதல் ஆட்சிகள், அழிதல் - நீங்குதல் பொருள் பெற்றவையாகும். “மன இருள் இரிய மாண்பொருளைப்’’ பவணந்தி எழுதியதாக நன்னூல் பாயிரம் கூறும். குற்றங் களாகிய ஆசினை இரிப்பவனே (அழிப் பவனே) ஆசு + இரியன் = ஆசிரியன் எனப் பட்டான்.

படையும் உடைபடையும்

போரினை எதிர்கொள்ளும் படையின் வெற்றி அதன் ஒன்றுபட்ட தன்மையிலும் படையின் தோல்வி அதன் உடைந்து சிதறும் தன்மையிலும் அடங்கியுள்ளது.வெல்லும் படையின் மாட்சியை அதன் கூடிநிற்கும் வினை மேல் ஏற்றியுரைப்பார் திருவள்ளுவர்.

“கூற்றுடன்று மேல்வரினும் கூடிஎதிர் நிற்கும்     ஆற்ற லதுவே படை’’

என்பது அவரின் பொய்யாமொழி.

தொல்காப்பியர்,புறத்திணையியலில் தும்பைத் திணை பற்றிக் கூறிய இடத்துக் கூழைதாங்கிய பெருமை, நூழில் என்று இருதுறைகளைக் கூறு வார்.

“ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக்           கூழை தாங்கிய பெருமை’’                                                                                                                                                    (நூற் 72 : 7 - 8)

எனவும்

“பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்  ஒள்வாள் வீசிய நூழிலும்’’           (நூற் 72 : 16 - 17)

எனவும் வருவன தொல்காப்பிய நூற்பாத் தொடர்கள்

எருமை மறம்,நூழிலாட்டு என்னும் இரு துறைகளே இங்குப் பேசப் பெறுபவை. படைத் தோல்வி என்பது இங்குப் படை உடைவதில் நேர்வதாகக் கூறப்பட்டுள்ளது.உடையும் படைக் குள்தான் ஒருவன் புகுந்து ஒருவனைக் காக்கின்றான். அவ்வாறே பகைப் படையை நூறி அழித்தலே நூறில் -நூழில் எனப்பட்டது.இந்த நூழில் நிகழப் படைவீரன் ஒருவனுக்குப் படை உடைபட வேண்டும். இதனைத்தான் “பலபடை ஒருவற்கு உடைதலின் அவன் ஒள் வாழ் வீசிய நூழில்’’ என்று தொல்காப்பியர் கூறினார். படை உடைவில்தான், இல்லாத தன்மை அதாவது தோற்றோடும் தன்மை நேர்கிறது.

ஒன்றாக இருந்த பொருளைச் சிறிது சிறிதாகச் சிதைத்தும் அழிக்கலாம்.அல்லது நடுப்பகுதியில் சமமாகப் பிளந்தும் அழிக்கலாம்.விறகு உடைப் பவர் அவ்விறகுக் கட்டையை அதன் சமமான நடுப் பகுதியில் பிளப்பதை நோக்க மாகக் கொள் வர். எந்தவொரு பொருளையும் இரண்டிரண்டாக உடைத்தே அதனைச் சிதைப்பவர் பணி செய்வர்.

இந்த வகையில்தான் ‘துமி‘யாகிய பிளத்தல் வினை dvi, dvis - dis, des, de என்றெல்லாம் இந்தோ-ஐரோப் பியத்துள் சென்று இரண்டு என்ற பொருள் குறித் ததற்கு அப்பால் அப்பொருள் இல்லாது போகும் நிலையையும் குறித்து அதன்வழி எதிர்மறை முன் னொட்டுப் பொரு ளைப் பெற்றுக் கொண்டது.

இக் கட்டுரையில் எதிர்மறை முன்னொட் டாகிய ’dis’இன் வரலாறு சரியாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. தமிழின் ‘துமி‘யே இந்த ’dis’ ன் மூல மாகும். பிறர் அறியாமல் உலகில் பல கமுக்கங்களும் உண்மைகளும் திரையிட்டு மூடியுள்ளன. இம் மூடிகளை இல்லாமல் நீக்கி அனைவரும் அறியச் செய்வது தான் கண்டு பிடிப்புகள். ’discover’  என்னும் சொல்லின் வரலாறும் இதைத்தான் தெரிவிக் கின்றது.மீணீமீ என்பது இயல்பாக இருப்பது.உடல் வருத்தம் ஏற்படு கின்ற போது நம்மால் இயல்பாக இருக்க முடிவதில்லை. இதனைத்தான் ஆங்கிலத்தில் dis+ ease- disease என்று குறிக்கின்றனர். தமிழின் படகு மேலை உலகில் barque என்று ஆனது. இது இன்றைய குடகு coork என்று ஆனது அனையது. எபிரேயத்தின் barque ஆங்கிலத்தில் bark என்று ஆனது. படகில் சரக்கினை ஏற்றினால் அது embark என்றும் படகில் இருந்து சரக்கினை இறக்கினால் அது disembarkஎன்றும் ஆங்கிலத்தில் கூறப்பட்டது. இவ்வாறு மேலும் பலப்பல ஆங்கில வழக்குகளில் எதிர்மறை முன்னொட்டாகிய dis இனைக் காணலாம்.

தமிழ் இந்தோ - ஐரோப்பியத்திற்கு மூலமான மொழி என்னும் உண்மை இக்கட்டுரையிலும் நிறுவப்படுகிறது.