போர்ப் பொருளியலால் சீரழிந்துள்ள சிங்கள இனவாத அரசு, தமது பொருளியலை நிலை நிறுத்த புதிய சந்தை வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டுள்ளது. புவிக்கோள ரீதியில் சிறீலங்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ள தமிழகத்தில், சிங்களப் பொருட்கள் புறக்கணிப்பு நடப்பதாலும், இந்திய அரசின் அனுமதியோடு தமிழகத்திற்குள் நுழையும் சிங்கள அமைச்சர்கள் தொடர்ந்து தமிழர்களால் விரட்டப்படுவதாலும் சிறீலங்கா புதிய பொருளியல் கூட்டாளிகளைத் தேடி அலைகிறது.

இதனிடையே, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணை நீரை முடக்கி, அடாவடித்தனங்கள் புரிந்துவரும் கேரளாவோடு இணக்கம் கண்டுள்ள சிறீலங்கா அதன் பொருளியல் கூட்டாளியாக மலையாளி களை இணைத்துக் கொண்டுள்ளது.

இந்தியாவுக்கான சிங்களத் தூதுவர் பிரசாத் காரியவசம், கடந்த வாரம் மூன்று நாள் பயணமாக கேரளா சென்று அங்குள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இது குறித்த பேச்சுக்களை நடத்தியுள்ளார். 12.06.2012 அன்று கேரள முதல்வர் உம்மன்சாண்டியை சந்தித்துப் பேசினார். அப்போது, முன்னாள் நடுவண் அமைச்சர் சசி தாரூர் உடனிருந்தார். சந்திப்பின் போது, இராசபக்சேவின் தனிப்பட்ட வாழ்த்து களை கேரள முதல்வருக்குத் பிரசாத் காரியவசம் தெரிவித்தாராம்.

சிங்களர்களின் பாசத்தில் மகிழ்ந்த கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி, கொச்சியில் வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள “கேரள எழுச்சி - 2012” என்று வர்த்தக, முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில் சிறிலங்காவும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

சிங்களத் தூதருக்கு கேரள உள்துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் இரவு விருந்தளித்து பெருமைப்படுத்தினார். இதில், கேரள அரசு உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கேரளாவின் திரைப்படத்துறை அமைச்சர் கணேஷ் குமாரையும் பிரசாத் காரியவசம் சந்தித்தார். கேரளாவுடன் இணைந்து சிறிலங்காவின் திரைப்படத் தொழிலை வளர்ப்பது குறித்து அப்போது பேசப்பட்டதாம்.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழ்ச் சொந்தங்களை கொத்துக் கொத்தாய் கொன்று குவித்த போரை, இந்திய அரசின் சார்பில் வழிநடத்திய அப்போதைய இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் மலையாளிகள் ஆவர். சிவசங்கர் மேனன் ஒருபடி மேலே போய், தமிழ் மக்களை ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ‘உலகின் சிறந்த இராணுவத் தளபதி’ என்று புகழ்ந்தார்.

ஆரியத்தின் இன்றைய அரச வடிவங்களான இந்தியாவும், சிங்களமும் எப்படி தமிழர்களுக்குப் பகை சக்திகளாக விளங்குகிறார்களோ, அதே போல் ஆரியத்துடன் முற்றிலும் சமரசமாகி விட்ட கேரளமும் விளங்குகிறது. கேரளம் தமிழர்களுக்கு நட்பு சக்தி எனில், அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்களும், மாண்பாளர்களும் சிங்கள அரசு உறவைக் கண்டித்துப் போராட வேண்டாமா?

மலையாளிகளையோ, மார்வாடிகளையோ ஒரு நாட்டில் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்த ஒரு நாட்டு அதிபருக்கு தமிழக அரசு விருந்தளித்து கவுரவித்தால், அதை மலையாளிகளும், இந்தியத் தேசியர்களும் ஏற்றுக் கொள்வார்களா?

உலகத் தமிழர்களின் இரட்டை எதிரிகளான இந்தியத்துடனும், சிங்களத்துடனும், எவர் சேர்ந்தாலும், சமரசமானாலும் அவர்கள் நமக்கும் எதிரியே!