தில்லியில் ஒரு பெரிய நாடகத்துக்குள் இன்னொரு சிறிய நாடகம் அரங்கேறியிருக்கிறது.
கடந்த 27-12-2012 அன்று தில்லியில் இந்திய அரசு தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டம் என்ற பெரிய நாடகத்தை நடத்தியது. அதில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் செயலலிதா அதன் குறுக்கே வெளி நடப்பு என்ற தனது சிறிய நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்.

57 ஆவது தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டம் என்ற பெயரில் தில்லி ஏகாதிபத்தியம் நடத்தியது ஒரு கொடூரமான நாடகம். 12 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைவு என்பது பல்வேறு விவரங்கள் அடங்கிய, அளவில் பெரிதான ஓர் ஆவணம். பல்வேறு தேசிய இன மாநிலங்களிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தவல்ல திட்டம் அது.

இதுகுறித்து ஓர் உயர்மட்டக் கூட்டத்தை ஒரே நாளில் ஐந்தாறு மணி நேரத்தில் நடத்தி முடிப்பது என்பதே ஒரு கொடிய சனநாயக நாடகம். 12 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைவு மாநிலங்களுக்கு முன்கூட்டியே அனுப்பப்பட்டிருந்தாலும் அதுபற்றிய உச்சநிலைக் கூட்டம் குறைந்தது மூன்று நாட்கள் நடத்தப்பட வேண்டும்.

அவ்வாறானதொரு கூட்டத்தைப் போகிறப் போக்கில் ஆளுக்கு பத்து நிமிடம் பேசுகிற கல்லூரிப் பட்டிமன்றம் போல் நடத்துவதே இந்திய அரசு, இத்துணைக்கண்டத்திலுள்ள தேசிய இனங்களை எப்படி நடத்துகிறது, சனநாயகத்தை எவ்வளவு மதிக்கிறது என்பதற்கு ஒரு சான்று.

வெள்ளை ஏகாதிபத்திய வைஸ்ராயும், கவர்னரும் தனக்குக் கீழ்ப்பட்டு ஆலோசனை கூறுவதற்காக வைத்துக் கொண்ட மதியுரை மன்றம் போல தேசிய வளர்ச்சி மன்றத்தை இந்திய ஏகாதிபத்தியம் நடத்துகின்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாகாண, சட்ட மன்றங்களும் நடுவண் சட்ட மன்றமும் ( நாடாளுமன்றம் ) வெள்ளை ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை கூறும், அவர்களிடம் மண்டியிட்டுக் கோரிக்கை வைக்கும் இடங்களாகவே வைக்கப்பட்டிருந்தன. அதே நிலையில்தான் தேசிய வளர்ச்சி மன்றமும் வைக்கப்பட்டுள்ளது. இதன் உறுப்பினர்களாக உள்ள பல்வேறு மாநில அரசுகளின் முதலமைச் சர்களும் இதற்கேற்பவே நடத்தப்படுகின்றனர்.

நாடுதழுவி செயல்படுத்தப்படும் ஐந்தாண்டுத் திட்டம் முதலமைச்சர்களின் ஒப்புதலோடே தீர்மானிக் கப்பட்டது போன்ற ஒரு சனநாயக பொய்த் தோற்றத்தை மோசடியாக இந்திய அரசு உருவாக்க முயல்கிறது.

இந்தக் கூட்டம் ஒரு நாள் கூட்டம் என்பதும், அதில் பேச தனக்கு 10 நிமிடம் தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதும் செயலலிதாவிற்கு புதிதாக சொல்லப்பட்ட செய்தி அல்ல. இக்கூட்டம் பல நாட்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட போதே தெரிந்த செய்திதான்.

இக்கூட்டத்தை ஒரே நாளில் நடத்திமுடிக்கக் கூடாது என்றும், தனக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அப்போதே செயலலிதா வலியுறுத்தி இருக்க வேண்டும்.
அவர் பேசிக்கொண்டிருந்த போது 10 நிமிடத்தில் மணி அடிக்கப்பட்டதை புகாராகச் சொல்லி வெளி நடப்பு செய்தது தில்லியின் பெரிய நாடகத்துக்குள் அவர் நடத்திய சிறிய ஓரங்க நாடகம்.

தமிழ்நாடு சட்டமன்றத்தை எவ்வளவு சனநாயகமாக செயலலிதா நடத்துகிறார் என்பதும், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேச எவ்வளவு வாய்ப்பளிக்கிறார் என்பதும் தமிழகம் அறிந்த
ஒன்றுதான்.

ஆயினும், இந்தத் தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் முதலமைச்சர் செயலலிதா தனது 28 பக்க அறிக்கையில் எடுத்துக் கூறியிருக்கும் பல செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை ஆகும்.

இந்தியா தமிழ்நாட்டை அடிமைப்படுத்தியிருக்கிறது, தமிழக நலன்களைத் திட்டமிட்டுப் புறக்கணிக் கிறது எனத் தொடர்ந்து கூறிவருகிறோம். சென்ற இதழ் ஆசிரிய உரையிலும் சுட்டிக் காட்டியிருந்தோம். தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் செயலலிதா முன்வைத்த அறிக்கை நாம் கூறிவந்த பல செய்திகள் சரி என்று மெய்ப்பிக்கும் ஆவணமாகும்.

செயலலிதா ஒன்றும் தமிழ்த் தேசியர் அல்லர். இந்துத்துவத்திலும், இந்தியத் தேசியத்திலும் ஊன்றி நிற்பவர். ஆயினும் அவரே எடுத்துக் கூற வேண்டிய அளவுக்கு தமிழகத்தின் மீதான தில்லி அரசின் தாக்குதல்கள் ஓர் உயர் அளவை எட்டிவிட்டன.

“ மாநிலத் திட்டங்களுக்கு நிதி ஆதாரம் அளிப்பதில் மத்திய அரசு நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறது. 11 ஆவது திட்டக் காலத்தில் மாநிலங்களுக்கு நடுவண் அரசு அளித்த மொத்த நிதி ஒதுக்கீட்டு விழுக்காடு 24.42 லிருந்து 12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 23.08 என குறைந்துள்ளது. 11 ஆவது திட்டத்திலேயே தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு மேலும் தொல்லைக்குள் ஆழ்த்தப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகையில் தமிழகத்தின் மக்கள் தொகை 6 விழுக்காடு இருக்கும் போது நிதிப் பரிமாற்றம் மட்டும் 4.3 விழுக்காடாக உள்ளது. மத்திய அரசு சில மாநிலங்களுக்கு ஆதரவாகவும் தமிழகத்துக்கு எதிராகவும் கெட்ட எண்ணத்துடன் சதித் திட்டத்தை அரங்கேற்றுகிறதோ என்னும் கடும் ஐயம் எழுகிறது.

இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதனை இந்திய இறையாண்மைக்கு எதிரான செயலாக நடுவண் அரசு பார்க்கவில்லை. அதனை ஏதோ தமிழ்நாடு பார்த்துக் கொள்ள வேண்டிய உள்ளூர்ச் சிக்கலாக புறக்கணிக்கிறது.

ஆற்று நீர் பங்கீட்டுப் பிரச்சினைகளான காவிரி, பெண்ணையாறு, முல்லைப் பெரியாறு அணை, அட்டப்பாடி அணை ஆகியவை குறித்து நீதி கேட்டு மத்திய அரசிடம் வைத்தக் கோரிக்கைகள் கேட்கப்படாமல் புறந்தள்ளப்பட்டன.

உச்ச நீதிமன்றம் ஆணையிட்டப் பிறகும் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படுவதான அறிகுறியே இல்லை.

மின்துறை முதலீடு, மின் வழிப் பாதையில் தடைகளை நீக்குதல் ஆகியவற்றில் தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு தர மறுக்கிறது. இப்போதாவது எந்த மின் வழிப்பாதைத் தடங்கலும் இல்லாத – தமிழ்நாட்டிலுள்ள மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் (நெய்வேலி, வள்ளூர், கல்பாக்கம்) மூலம் கிடைக்கும் 2830 மெகாவாட் மின்சாரத்தை பற்றாக்குறைக் காலத்திற்கு இடைக்கால ஏற்பாடாக வழங்க வேண்டும்.

மத்திய அரசு தனது பழிவாங்கும் போக்கைக் கைவிட்டு பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும்” என்று அடுக்கடுக்கான செய்திகளை செயலலிதா முன்வைக்கிறார்.

ஆயினும், எதிர்க்கட்சி மாநிலம் என்பதால் புறக்கணிக்கப்படுவதாகவும், நடுவண் கூட்டணியில் உறுப்பு வகிக்கும் தி.மு.க வின் சதிச் செயல் என்றும் மிகக் குறுகலான பார்வையில் இச்சிக்கலை செயலலிதா அணுகுகிறார். அவரது பதவி சதுரங்க அரசியலுக்கும், நாளைய நாற்காலிக் கூட்டணித் தேவைக்கும் அவரது இந்த அணுகுமுறை ஏற்றதாக இருக்கலாம்.

ஆனால், அடிப்படையில் இது கட்சி சிக்கல் அல்ல. முதன்மையாக இது ஒரு தேசிய இனச் சிக்கல். இந்திய அரசின் தொடர்ச்சியான தமிழினப் பகைப் போக்கின் செயல் திட்டம் இது.
இந்தியத் தேசியத்தில் ஊறிய ஒரு பதவி அரசியல் தலைவர்கூட கூக்குரல் எழுப்பும் அளவுக்கு தமிழகத்தின் நிலைமை மோசமாகிவிட்டது என்பது மட்டுமே இதிலிருந்து தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி ஆகும்.

இந்த வகையில் தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டம் இந்திய வல்லாட்சியின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுதலைப் பெறவேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை தமிழர்களுக்கு எடுத்துக் கூறுகிறது.

தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.