2011 ஆம் ஆண்டு குறித்த காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கூத்துகளுக்கு ஒப்பனை செய்வதில் அனைவரும் மும்முரம் காட்டுகின்றனர். விஜய்காந்த், ’யாருடனும் கூட்டணி வைக்கத் தயார். ஆர்வம் கொண்டோர் எங்களை அணுகலாம்’ என்று அறிவிப்பு கொடுத்துவிட்டார். ’தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை உடைக்கச் சதி நடக்கிறது’ என்கிறார் தங்கபாலு.

ஜெயலலிதாவைத் தேர்தல் ஆணைய விழாவிற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தொலைபேசியில் அழைக்கிறார். ஜெயலலிதாவும் தில்லி சென்று வருகிறார். ’அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதி’ என ஊடகங்கள் சில ஆரூடம் சொல்கின்றன. ஜெயலலிதாவும் சோனியாவும் பேசிக் கொண்டது பெரிய செய்தியாகிறது.

காங்கிரஸ் கட்சி 2011 தேர்தலில் தி.மு.கவைக் கழற்றிவிட வாய்ப்புள்ளது என்பதை முன்னுணர்ந்து, கலைஞர் கருணாநிதி, ’மாநில சுயாட்சி வேண்டும்; ஈழத்தில் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது நான் மௌனமாக அழுதேன்’ என்றெல்லாம் பேசியும் அறிக்கைகள் விட்டும், காங்கிரசுக்கு எதிரான காய்நகர்த்தல்களை மிக முன்பே தொடங்கிவிட்டார்.

சிறு மற்றும் குறு வணிகக் கட்சிகள், எங்கே அதிகமாகப் பீறாய்ந்துகொள்ள முடியுமோ அங்கே தாவுவதற்காகக் கால்களுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கின்றன. தேர்தல் என்றாலே, வெட்கம், மானம், சொரணை ஆகிய மனிதத் தன்மைகளுக்குப் புறம்பாக நடந்துகொள்வதுதான் என்ற ‘விதி’ கடந்த அறுபது ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலும், 2011ல் நடக்கபோகும் தேர்தலும் தமிழக அரசியலில் முக்கியமான நிகழ்வுகளாக வரலாற்றில் நிலைக்கப் போகின்றன.

1. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழச் சிக்கலே முதன்மைப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கச் செய்வது ஈழத் தமிழர் உயிர் காக்கும் பணியாகக் கருதப்பட்டது. தமிழின உணர்வாளர்கள் இந்த நோக்கிலேயே தேர்தலை அணுகினர். தமிழக அரசும், தேர்தல் கட்சிகளும் கூட 2009 தேர்தலின் மையச் சிக்கலாக, ஈழச் சிக்கலையே கொண்டிருந்தன.

2. 2011ஆம் ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலும் தமிழினத்தின் உரிமைகள் குறித்த மையச் சிக்கலைக்கொண்டே நடக்கவுள்ளது. முல்லைப் பெரியாறு, மீனவர் படுகொலை, பாலாறு, ஈழம், ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களும் தமிழினத்தின் உரிமைச் சிக்கல்களே.

தமிழகத்தில் இன உணர்வு வேகமாக வளர்ந்து வருகிறது. ஈழத்தில் இந்தியா செய்த இரண்டகத்தைத் தமிழர்கள் புரிந்துகொண்டனர். தமிழக வாக்குக் கட்சிகளால், ஈழம் பற்றிப் பேசாமல் அரசியல் நடத்த முடியவில்லை. இது தமிழர் இன அரசியலுக்கு ஏற்ற நிலைதான். ஆனாலும், இது மட்டுமே தமிழின விடுதலைக்குப் போதுமான அரசியல் சூழலா?

இந்தியா முழுதும் உணவுப் பஞ்சம் ஏற்படப் போகிறது என்ற எச்சரிக்கை மணி தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது.

‘வெளியில் தெரியாத உணவுப் பஞ்சம் உள்ளது. இது மிகப் பெரிய ஆபத்து. இதுவரை ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுதான் வலிய நாடாக உள்ளது. இனி உணவு வைத்திருக்கும் நாடுதான் உயர்ந்த நாடாக இருக்கப் போகிறது’ என்று எச்சரித்திருப்பவர் யார் தெரியுமா?

இந்த உணவுப் பஞ்சத்தை நாற்பதாண்டுகளுக்கு முன் விதைத்த எம்.எஸ்.சுவாமிநாதன்.

பிரதீபா பாட்டில் தமது குடியரசு நாள் உரையில் ’இரண்டாம் பசுமைப் புரட்சியில் உழவர்கள் ஈடுபட வேண்டும்’ என்கிறார். உணவுப் பொருள் விலையைக் கட்டுப்படுத்துவதைப் பற்றி தில்லி ஆட்சியாளர்கள் கூடிக் கூடிப் பேசுகிறார்கள். இவையெல்லாம் எதை உணர்த்துகின்றன?

நாடு மிக மோசமான பஞ்சத்தை எதிர்கொள்ளப் போகிறது!

தமிழகத்தைப் பொறுத்தவரை, தமிழர்களின் உழவுத் தொழில் அழிக்கப்பட்டதே இந்நிலைக்குக் காரணம். தமிழக நீர் வளங்கள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை; புதிய நீர் வளங்கள் உருவாக்கப்படவில்லை; ஆற்றுவளங்கள் பாதுகாக்கப்படவில்லை; தமிழக உழவர்களின் விளைபொருட்கள் ஆன்லைன் வணிகம் என்ற பெயரில் வட இந்தியச் சூதாடிகளால் கொள்ளை யடிக்கப்படுகின்றன; தமிழர்களின் கால்நடைச் செல்வங்களான நாட்டு மாடுகள் கேரளாவுக்குக் கறிக்காக லாரி லாரியாக அனுப்பப்படுகின்றன; தமிழக உழவர்களின் நிலங்கள் அரசியல்வாதிகள் - அடியாட்கள் - முதலாளிகள் ஆகியோரின் கூட்டுக் கொள்ளைக்குப் பலியாகின்றன; பன்னாட்டுப் பெருமுதலாளிய நிறுவனங்களுக்குத் தமிழக மண்ணைத் தாரை வார்த்துப் பெரும் கொள்ளை அடிப்பது தி.மு.க அரசின் தொடர் போக்காக உள்ளது.

நோக்கியா நிறுவனம் திருப்பெரும்புதூரில் இப்போக்கில்தான் அமைக்கப்பட்டது. நோக்கியா நிறுவனம் செய்த முதலீடு ரூ300 கோடி, தமிழக அரசு நோக்கியாவிற்குக் கொடுத்த வரிச் சலுகை ரூ650 கோடி! இந்தக் கொடுமை எங்காவது நடக்குமா?

இதே நிலை நீடித்தால், தமிழர்களின் உணவுத் தேவைக்காக தில்லியிடம் கையேந்த வேண்டி வரும். இப்போதே, ஒரு ரூபாய் அரிசியில்தான் பாதித் தமிழர்கள் பசியாறுகிறார்கள். தமிழக மீனவர்களோ அழிவின் விளிம்பில் உள்ளனர். சிங்களப் படையினரின் அச்சுறுத்தல், அட்டூழியங்கள் ஒருபுறம், மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் என்ற பெயரிலான துடைத்தழிப்பு நடவடிக்கை மறுபுறம் என மீனவர்கள் வாழ்வுரிமை கடும் நெருக்கடியில் இருக்கிறது.

மலைகளும் காடுகளும் அன்றாடம் அழிக்கப்படுகின்றன. மலைவாழ் தொல்தமிழர் அனைவரும் நகரங்களை நோக்கி விரட்டி அடிக்கப்படுகின்றனர். ஆகமொத்ததில், நம் முன்னோர் வகுத்து வைத்த மருதம், குறிஞ்சி, நெய்தல், முல்லை ஆகிய நால்வகை நிலங்களும் சீரழிந்த நிலையில் உள்ளன. ஆரிய தில்லி ஏகாதிபத்தியம் நம் மீது தொடுத்துக்கொண்டிருக்கும் போரின் விளைவுகள் இவை.

மருத்துவத்துறையில் தனியார் ஆதிக்கத்தை அதிகரிக்கச் செய்வதற்காகவே, ’கலைஞர் காப்பீடு’ திட்டம் வந்துள்ளது. அரசுப் பொது மருத்துவமனைகளை மேம்படுத்தி, விரிவுபடுத்துவதற்குப் பதில், காப்பீடு திட்டம் கொண்டு வருவது ஏமாற்றும் வேலை. அரசு நிதியை வெளிநாட்டுக் காப்பீட்டுக் கம்பெனிக்கும் உள்ளூர் தனியார் மருத்துவமனை முதலாளிகளுக்கும் திருப்பிவிடுகிற சூது இது. இன்னும் சில காலத்தில், ஏழை மக்கள் நோய்வாய்ப்பட்டால், அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை கிடைக்காது. காப்பீட்டுத் திட்ட அட்டையுடன் அவர்கள் தனியார் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கு, இலவசமான மருத்துவச் சிகிச்சை இப்போதே கிடைப்பதில்லை. இனிவரும் காலங்களில், ஒவ்வொரு உயிரும் தனியார் மருத்துவமனைகளின் கல்லாப் பெட்டிகளால்தான் தீர்மானிக்கப்படப் போகின்றன; கருணையால் அல்ல!

உணவுப் பஞ்சம், நிலம், கடல் உள்ளிட்ட வாழ்வுரிமைகள் பறிப்பு, மருத்துவ மறுப்பு...இன்னும் வேறென்ன வேண்டும்?

இத்துணைச் சிக்கல்களும் முற்றுகையிட்டிருக்கும் காலத்தில்தான் 2011 ஆம் ஆண்டு ’தேர்தல் ஆண்டாக’ நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது!

இந்தத் தேர்தலில் மேற்கண்ட சிக்கல்களை மறைத்துவிட்டு, போலி ’இன உணர்வு’ பேசியும் ‘பண உணர்வு’ காட்டியும் வாக்கு வாங்க தேர்தல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

’தமிழினத்தின் வாழ்வுரிமைகள் பறிபோகின்றன. இதைத் தடுப்போம்’ என்ற முழக்கமே தமிழ் உணர்வாளரின் முழக்கம். தேர்தல் காலங்களில் மட்டும் அல்ல; எக் காலத்தும் இதுவே நம் முழக்கம். தேர்தல் கட்சிகள் அனைத்தும் தமிழினத்தின் உரிமைகளை தில்லிக்கு ஏலம் விடும் கட்சிகள்தாம்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணி 2011 தேர்தலில் நீடிப்பது ஐயமே. தீவிர ஈழ ஆதரவு நிலை கொண்ட கட்சிகள் கூட அணி மாறி ஆட்டமாடும் நிலை ஏற்படும் சூழல் தெரிகிறது. ஆனால், அக் கட்சிகளுக்கு இது குறித்த வெட்கமோ கூச்சமோ இருக்கப் போவதில்லை. நாம் மானமுள்ளவர்கள். இந்த அரசியலிலிருந்து விலகி நிற்பதும் மாற்று அரசியலைக் கட்டியெழுப்புவதுமே நம் கடமைகள்.

தேர்தல் கட்சிகளின் பொய்யுரைகளை மக்களுக்கு இனங்காட்டி, மெய்யான இன விடுதலை என்பது என்ன என்று விளங்க செய்வது நாம் மேற்கொள்ள வேண்டிய அவசரப் பணியாகும். ‘ஈழத் தமிழர்களின் மறு வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்றால், இந்தக் கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ என்று சில கட்சிகள் பம்மாத்து பேசி வாக்குக் கேட்கலாம். ஈழச் சிக்கலைத் தமிழகச் சட்டமன்றத்தால் தீர்க்க முடியாது என்பது மெய்ப்பிக்கப்பட்ட உண்மை. ஒருவேளை, காங்கிரஸ் கட்சி, தி.மு.கவை கை கழுவினால், ’நான் ஈழத் தமிழரைக் காப்பதற்காகத் துடித்தேன். சோனியாவின் இரக்கமற்ற இதயம் என் துடிப்பை உணரவே இல்லை’ என்று கலைஞர் கருணாநிதி வசனம் எழுதக் கூடும்.

இவை அனைத்துமே, பொய்யுரைகள் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்வது தமிழ்த் தேசியரின் இன்றையப் பணி. தேர்தல் அறிவிப்பு வரும் வரை, காத்திருக்கத் தேவையில்லை; நாம் தேர்தல் வேலை பார்க்கவும் இல்லை. ஆனால், தேர்தல் அரசியல்வாதிகளை முறியடிக்க, தேர்தலுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலவச அறிவிப்புகள், வாக்குகளுக்குப் பணம் ஆகியவற்றால் ஏமாந்துகொண்டிருக்கும் நம் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டுமே தவிர, அவர்களை நொந்துகொண்டு ஒதுக்கிவிடக் கூடாது. இவை அனைத்தும் புரட்சிகர நடவடிக்கைகள்தாம்! தமிழ்த் தேசப் புரட்சி இலக்கை நோக்கிய இந்தப் பணிகளில் ஈடுபட, தமிழர்களே அணி திரள்வோம்! மாவீரன் முத்துக்குமார் நினைவைப் போற்றும் இவ்வேளையில், அவரது கொள்கைகளான, ’தேர்தல் அரசியலை ஒழித்தல், மாற்று அரசியலை அமைத்தல்’ ஆகியவற்றை நிறைவேற்றுவோம்!

- பெ.மணியரசன்