வட அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோபர் கடே, துகிலுரியப்பட்ட நிகழ்வுக்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. அதற்கு மறுமொழி அளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேரிஆர்ப் “எங்கள் நாட்டுக் குடிமக்கள் மீது குற்ற வழக்கிருந்தால் என்னென்ன செய்வோமோ அந்த நடைமுறைதான் தேவயானி நிகழ்விலும் கடைபிடிக்கப்பட்டது; அது தவறல்ல” என்றார்.

2013 டிசம்பர் 12 ஆம் நாள் காலையில் நியூயார்க் நகரில் தன் பெண் குழந்தையைப் பள்ளியில் கொண்டு போய் விடும் போது தேவயானியைக் அமெரிக்கக் காவல் துறையினர் தளைப்படுத்தினர். அவ்விடத்திலேயே, பள்ளிக்கு முன்பாகவே, தேவயானிக்குக் கை விலங்கிட்டனர். அதன் பிறகு அவரை, கடத்தல்காரர்கள், அரம்பத்தனம் செய்தோர் என சமூக விரோதக் குற்றங்களுக்காகத் தளைப்படுத்தப்பட்டோர்களுக்கிடையே கொண்டு போய் வைத்தனர். பின்னர் தேவயானியின் ஆடைகளை முழுமையாகக் களைந்து அந்தரங்க உறுப்புகள் உட்படத் தடவிச் சோதனை செய்தனர்.

நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம் 1லு கோடி ரூபாய் அளவுக்கு பிணைத் தொகை செலுத்தி அவரைப் பிணையில் எடுத்தது.

தேவயானி செய்த குற்றம் என்ன? நியூயார்க்கில் உள்ள தனது வீட்டு வேலைகளுக்காக இந்தியாவிலிருந்து சங்கீதா ரிச்சர்டு என்ற பெண்னை அழைத்து அமர்த்தியிருந்தார். அந்தப் பெண்ணுக்கு வட அமெரிக்க விதிமுறைப்படி குறைந்தது 1 மணி நேரச் சம்பளம் 12.75 டாலர் தர வேண்டும். அதைத் தருவதாக கடவுச் சீட்டு - விசா விண்ணப்பத்தில் உறுதியளித்து விட்டு, அதைவிடக் குறைவாகக் கொடுத்தார் தேவயானி என்பது தான் முதன்மையான குற்றச்சாட்டு. அதிக நேரம் வேலை வாங்கினார் என்பது அடுத்த குற்றச்சாட்டு.

தேவயானிக்கும் சங்கீதாவுக்கும் முரண்பாடு ஏற்பட்டு, சொல்லாமல் கொள்ளாமல் சங்கீதா தேவயானி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். வெளியேறியபின் காவல்துறையில் புகார் கொடுத்தார். இந்தக் குற்றப்பதிவில் தளைப்படுத்தப்பட்டபோது தேவயானியை நடத்திய முறைகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களிடமும் செயல்படுத்தப்படும் வழமையான செயல்கள் தான், இதில் ஒன்றும் பாகுபாடு காட்டவில்லை, மனித உரிமை மீறல் இல்லை என்கிறது அமெரிக்கா.

இந்தியத் தூதரக உயர் அதிகாரியாக இருக்கும் தேவயானிக்கு அமெரிக்க நாட்டின் குற்ற வழக்குகளில் இருந்தும் தளைப்படுத்தல், விசாரித்தல் போன்ற நடவடிக்கைகளில் இருந்தும் வியன்னா உடன்படிக்கை விதிகள் படி விலக்கு அளித்திருக்க வேண்டும். தேவயானியைத் தளைப்படுத்தியது தவறு; அவரை அவமதித்தது இந்தியாவை அவமதித்ததாகும் என்பது இந்திய அரசின் வாதம். இதுபற்றிப் பின்னர் பேசுவோம். முதலில் “எங்கள் நாட்டு மக்களையும் இப்படித்தான் நடத்துகிறோம்” என்று சொல்லும் அமெரிக்காவின் நனிநாகரிகம் - மனித உரிமை மாண்பு பேணும் சிறப்பு பற்றிப் பேசுவோம்.

உறுதி சொன்ன சம்பளம் தரவில்லை, அதிக நேரம் வேலை வாங்கினார், அமெரிக்க விசா விதிமுறையை ஏமாற்றியுள்ளார் என்பன போன்ற குற்றச் செயல்களுக்கு ஒருவரை விலங்கிட்டு தளைப்படுத்துவதும், துகிலுரிந்து சோதனை செய்வதும், என்ன தேவை கருதி? உள்நாட்டு மக்களுக்குக்கூட கட்டாய நடைமுறையாக எந்த வழக்காயிருந்தாலும் கைவிலங்கிடுவதும் கால் விலங்கிடுவதும், அம்மணச் சோதனை செய்வதும் அமெரிக்காவின் வழக்கம் என்றால் அந்த நாட்டில் மனித உரிமை எந்த அளவு பறிக்கப்பட்டுள்ளது, குற்றவியல் நீதிமுறைமை (Criminal Justice System) எந்த அளவு கீழ்த்தரமாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “மன நிலை” என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

மரபு வழியாக வாழ்ந்துவரும் மண்ணின் மக்களுக்குரியதே தாயகம் என்ற கோட்பாட்டை சுடு கருவிகளாலும் வெடிமருந்துகளாலும் தகர்த்து, அமெரிக்கக் கண்டம் முழுமைக்குமுரிய மண்ணின் மக்களாகிய செவ்விந்தி யர்களை இலட்சக்கணக்கில் கொன்று அவர்களின் எலும்புக் கூடுகளின் மேல் எழுப்பட்டது தான் வெள்ளை ஏகாதிபத்தியமான அமெரிக்கா. ”மரபு வழியில் வருவதல்ல தாயகம், சண்டையிட்டு வெல்வதன் வழி வருவதே தாயகம்” என்ற புதுக்கோட்பாட்டை செவ்விந்தியர்களின் குருதியினால் எழுதியவர்கள் ஐரோப்பாவிலிருந்து போய் அமெரிக்காவை ஆக்கிரமித்த வெள்ளையர்கள்!

இன்றும் அவர்கள் உலகம் முழுவதும் அந்தக் கோட்பாட்டைத்தான் செயல்படுத்துகிறார்கள். “எனக்குக் கீழ்ப்படிகிறாயா அல்லது எனக்கு எதிரியாக இருக்கிறாயா?” என்பது தான் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அடித்தளம். அயல் நாட்டை ஆக்கிரமிக்கிற ஓர் அரசு தனது நாட்டு மக்களுக்கும் உரிமை வழங்காது என்றார் காரல் மார்க்ஸ். பிரித்தானியத் தொழிலாளி வர்க்கம் காலனி நாடுகளின் விடுதலைக்குப் போராடவில்லை எனில், பிரித்தானியத் தொழிலாளி வர்க்கத்திற்கும் விடுதலை கிடைக்காது என்றார்.

வட அமெரிக்காவின் மக்கள் இன்றும் அந்நாட்டு அரசால், விலங்குகளைப் போல் நடத்தப்படுகிறார்கள். கொடுங்குற்றமில்லாத வழக்குகளில்கூட, கைவிலங்கு, கால் விலங்கு மாட்டித் தளைப்படுத்துவது, கட்டாய அம்மணச் சோதனை செய்வது போன்ற மனிதத்திற்கு எதிரான உரிமைப் பறிப்புகள் அங்கு மிக இயல்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அன்று செவ்விந்தியர்களுக்கு மாட்டப்பட்ட விலங்குகள், அன்று செவ்விந்தியர்கள் அம்மணப்படுத்தப்பட்ட கேவலங்கள் இன்று அமெரிக்க மக்களுக்குப் பரிசாகத் தரப்படுகின்றன.

அமெரிக்க மக்களுக்கு மட்டுமின்றி, அமெரிக்கா செல்லும் மற்ற நாட்டினருக்கும் அந்த அவமதிப்புப் பரிசைத் தருகிறார்கள்.

ஏற்கெனவே, நடுவண் அமைச்சராக இருந்த போதே ஜார்ஜ் பெர்ணாண்டஸ், அப்துல் கலாம், நடிகர் சாருக்கான் ஆகியோர் அங்கு சென்ற போது உடல் பரிசோதனை செய்து அவர்களை இழிவுபடுத்தியது அமெரிக்கா.

அமெரிக்காவின் செல்வச் செழிப்பை அறிவுக் கொழுப்பை மெச்சுகின்ற மேதைகளே, அங்கே மனித மாண்புகள் படுகுழியில் தள்ளப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அல்லது பள்ளத்தில் விழாமல் நாம் ஒதுங்கி, எதற்கும் உட்பட்டு வாழ்வை அனுபவிப்போம் என்ற அண்டிப் பிழைக்கும் சுகம் உங்கள் மனச்சான்றைக் கொன்று விட்டதா?

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின், அரசின் - “வெல்வதே வாழ்வு” என்ற நிரந்தரச் சண்டை மனநிலை அமெரிக்கக் குடிமக்களிடம் பரவி அங்கு பள்ளிக்கூடச் சிறுவர்கள் சக மாணவர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள்; கேளிக்கை விடுதிகளில் துப்பாக்கி ஓசை கேட்கிறது. கீழ்ப்படிய மறுக்கும் மனிதர்களை உடனடியாகச் சுட்டுக் கொல்கிறது காவல்துறை!

“இந்தத் துயரங்கள் தனக்கு வராது, நாம் தப்பித்துக் கொண்டு சுகம் அனுபவிப்போம்” என்று கருதும் நுகர்வுப் பிராணிகள் பெருத்துவிட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.

இந்தியாவில் எத்தனையோ ஒடுக்குமுறைகள் இருக்கின்றன. ஆனால் கைதிகளுக்கு கைவிலங்கு போடுவதை இயல்பாக்கிக் கொள்ளாதீர்கள்; தப்பி விடுவார் என்று ஐயப்பட ஆதாரம் இருந்தால் தவிர மற்றவர்களுக்கு விலங்கு போடக் கூடாது; அவர்களை அம்மணப்படுத்தக் கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் காவல் துறைக்குக் கட்டளைகள் பல இட்டிருக்கிறது. இந்திய அளவுக்குக் கூட, நீதித்துறையில் மனித உரிமை கடைபிடிக்கப்படாத அமெரிக்காவைப் புகழ்ந்து பேச நாகரிக மனிதர்கள் நாணப்பட வேண்டும்.

தேவயானி - சங்கீதா செய்திக்கு வருவோம். தேவயானி மேற்படிக் குற்றங்கள் இழைத்திருந்தால், அவருக்குக் குற்றவழக்கு விலக்கு (imminity) அளிக்கப்படாமல் இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? ஓர் அழைப்பாணை அனுப்பி விசாரித்து அவர் மீது வழக்கை நீதிமன்றத்தில் பதிவு செய்து விசாரனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அவர் உட்பட வேண்டும். அவ்வளவே!

சங்கீதாவை வணிக நோக்கில் தேவயானி கடத்தி வந்ததாக (trafficking) ஒரு பிரிவும் அவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. கெட்ட உள் நோக்கத்தோடு அமெரிக்கக் காவல்துறை, இப்பிரிவை சேர்த்துள்ளது என்பதற்கான சான்றை அமெரிக்க அரசே தந்துள்ளது. சங்கீதா ரிச்சர்டு குடும்பத்தார்க்கு ஜி.விசா கொடுத்து வேறு இடத்திற்கு அனுப்பியுள்ளது அமெரிக்க அரசு. கடத்திவரப்பட்ட பெண் என்றால் உடனடியாக அவரை அவரது தாய்நாட்டிற்குத் தானே அனுப்ப வேண்டும்? இப்பொழுது அமெரிக்க அரசு அப்பெண்ணை எங்கோ கடத்தி வைத்திருக்கிறது. சங்கீதா இருக்குமிடம் தெரியவில்லை.

இந்திய ஆட்சியாளர்கள் இந்திய நாட்டை அமெரிக்காவுக்கு அடமானம் வைத்து நீண்ட காலம் ஆகிவிட்டது. பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவின் கீழ்ப்படிதலுள்ள சேவகர். இத்தனை அடக்கவொடுக்கமும் அமெரிக்கச் சுரண்டலுக்குத் தாராளக் கதவு திறப்பும் இருந்தும் எசமானர்களுக்கு இந்திய ஆட்சியாளர்கள் மீது ஏதோ ஒரு சினம் இருக்கிறது. அதை வெளிப்படுத்திட தேவயானி சிக்கலைப் பயன்படுத்தியிருக்கிறது அமெரிக்கா.

“தேவயானியை மீட்காமல் நாடாளுமன்றத்திற்குள் நுழைய மாட்டேன்” என்று நாடாளுமன்றக் கூட்டம் முடிவடையும் கடைசி நாளில் வீரமுழக்கமிட்ட வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் அடுத்த இரண்டு நாளில் அடங்கி ஒடுங்கி பழையபடி அமெரிக்காவின் விசுவாச ஊழியராகி விட்டார்.

தேவயானியை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது; அப்பெண்ணைத் தளைப்படுத்தியதற்காகவோ அதற்குப்பின் நிகழ்ந்த வற்றுக்காகவோ இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்க முடியாது என்று உறுதிபடத் தெரிவித்து விட்டது அமெரிக்கா! கருங்காலியின் பிணக்கு எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று எசமானனுக்குத் தெரியாதா?

ஒரு நாட்டில் வெளிநாட்டுத் தூதர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டால் அந்நாட்டுச் சட்டப்படி அவர் மீது வழக்குப் போடக் கூடாது அவரை வெளியேற்றிவிடலாம் என்ற “அரசுறவு விதிவிலக்கு”( diplomatic immunity) பற்றி விவாதிக்க வேண்டிய காலம் இது.

பழங்காலத்தில் அரசரின் மறுவடிவமாக அவரின் தூதர் இன்னொரு அரசரைச் சந்திக்க வந்துள்ளார் என்று கருதப்பட்டது. தூதரை இழிவுபடுத்தினால் அவரின் மன்னரை இழிவுபடுத்தியாகப் பொருள் கொள்ளப்பட்டது. அரசரின் தூதர்களை இழிவுபடுத்தியதற்காக, தாக்கியதற்காக இரு நாடுகளுக்கிடையே போர் மூண்ட வரலாறுகள் பல இருக்கின்றன. தமிழக அரசர்கள் வரலாற்றிலும் அவ்வாறான நிகழ்வுகள் உண்டு. வெளி நாடுகளிலும் அவ்வாறு போர்கள் மூண்டுள்ளன.

ஆனால் இப்பொழுது சனநாயகக் காலத்தில் அரசர் காலம் போன்ற பார்வை தூதர்களுக்கு வழங்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. 1963 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வியன்னா உடன்படிக்கை (Vienna Convention) “கொடுங்குற்றம் (grave crime) தவிர்த்த இதரக் குற்றங்களுக்காகத் தூதர்கள் மீது வழக்குத் தொடுப்பதோ, விசாரிப்பதோ, சிறைத் தண்டனை விதிப்பதோ கூடாது” என்கிறது. இவ்வாறான விதி விலக்கு கொடுக்கலாமா, வேண்டாமா என்று விவாதிக்கலாம். ஆனால் தேவயானி செய்தது கொடுங்குற்றமல்ல. அமெரிக்காவின் நடத்தை வியன்னா விதிகளுக்கு முரணானது.

வியன்னா நடத்தை விதிகளை இப்போது சட்டை செய்யாத அமெரிக்கா, தன்நாட்டுத் தூதர்கள் வெளி நாடுகளில் கொடும் குற்றங்கள் புரிந்து மாட்டிக் கொள்ளும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அதிரடி வேலைகள் செய்திருக்கிறது.

1979 இல் ஈரான் நாட்டில், ஷா மன்னனின் ஆட்சி ஒழிந்து, மதச்சார்புள்ள மக்களாட்சி உருவாகியிருந்தது. ஷா மன்னனோடு சேர்ந்து பல்வேறு கொடுங்குற்றங்கள் புரிந்த அமெரிக்கத் தூதர் மற்றும் அதிகாரிகளைக் கைது செய்தது புதிய ஆட்சி. பன்னாட்டு நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்குப் போட்டு வியன்னா விதிகளின் படி வாதாடி, அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை மீட்டது. தேவயானி நிகழ்வில் மட்டும் வியன்னா விதி அமெரிக்காவுக்குப் பொருந்தாது.

நிகரகுவாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டு கண்ணி வெடி வைத்தல் உட்பட பல்வேறு கொடுங் குற்றங்களைச் செய்ததாக அமெரிக்கத் தூதர் - தூதரக அதிகாரிகள் மீது பன்னாட்டு நீதிமன்றத்தில் அந்நாடு வழக்குத் தொடுத்தது. அமெரிக்கா வியன்னா விதிகளைக் காட்டி வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரியது. அதற்குப் பன்னாட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஐ.நா. வின் பாதுகாப்பு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அவ்வழக்கு நடைபெறாமல் தடுத்து, தனது அதிகாரிகளைத் காப்பாற்றியது.

2011 இல் பாகிஸ்தான் லாகூரில் அமெரிக்க சி.ஐ.ஏ. ஒப்பந்தக்காரர் ஒருவர், உள்ளூர் மக்கள் இருவரை சுட்டுக் கொன்று விட்டார். அவர் தூதரக அதிகாரி என்று கூறி அவர் மீது பாகிஸ்தான் அரசு வழக்குத் தொடுக்காமல் தடுத்து, அவரைத் தன் நாட்டுக்கு அழைத்துக் கொண்டது அமெரிக்கா.

அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்போதுமே நீதி, நேர்மையற்ற ஆக்கிரமிப்பு அரசு என்பதைத் தமிழ் மக்கள் உணர வேண்டும். தமிழர்கள் கூறும் அறம் என்பது துளியும் இல்லாத ஓர் அரசக் கட்டமைப்பு அது. கருப்பினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் ஒபாமாதான் - பாகிஸ்தானில் கொலை புரிந்த அமெரிக்கரை, அரசுறவு விதிவிலக்கு என்று கூறி வழக்கில்லாமல் மீட்டு வந்தார். அதே ஒபாமா அரசுதான் இந்தியாவின் தேவயானிக்கு வியன்னா விதி பொருந்தாது; எங்கள் நாட்டு மக்களை நடத்துவது போல்தான் அவரையும் நடத்தினோம் என்கிறது. கருப்பா, வெள்ளையா என்பதல்ல, எந்த அரசுக் கட்டமைப்பில் ஒருவர் இருக்கிறார் என்பதுதான் தீர்மானகரமானது.

இந்த மனித உரிமைப் பறிப்புகளை அமெரிக்க மக்கள் எப்படிச் சகித்துக் கொள்கிறார்கள்? உலகில் கொள்ளையடிப்பதில் ஒரு பங்கை அமெரிக்க மக்களுக்கும் தருகிறார்கள். அவர்கள் அதுபோதும் என்று இருக்கிறார்கள்.

அமெரிக்கா, நுகர்வுப் பிராணிகளின் நாடு; ஆக்கிரமிப்பாளர்களின் அரசு!

மனித உரிமையின் முதன்மைப் பகையாளி ஏகாதிபத்தியம்! அதிலும் முதன்மைப் பகையாளி அமெரிக்க ஏகாதிபத்தியம்! இந்திய ஏகாதிபத்தியம் அதன் குட்டிக் கூட்டாளி!

இருவரும் சேர்ந்திருந்தாலும் மனித உரிமைகளைப் பறிப்பார்கள்; இருவரும் செல்லமாக மோதிக் கொண்டாலும் மனித உரிமைகளைப் பறிப்பார்கள்.

Pin It