மகாத்மா காந்தி அவர்களின் 75-வது பிறந்த நாளின் போது பத்திரிகையாளர்கள் “உங்களின் பிறந்தநாள் செய்தியாக சொல்ல விரும்புவது என்ன?’’ என கேட்ட பொழுது “என் வாழ்வே என் செய்தி’’ என்றார் காந்தி. பாலு மகேந்திரா எனும் தமிழ் படைப்பாளி தன் வாழ்நாள் செய்தியாக சொல்ல விரும்பியதே "தலைமுறைகள்" எனும் திரைப்படம்.

இயக்குனராக, ஒளிப்பதிவு கலைஞனாக, என பன்முகப் படைப்பாளியாக பாலு மகேந்திராவின் ஆற்றல் நாம் அறிந்ததே. இவற்றிற்கெல்லாம் சிகரமாக தன் சமூகத்தின், தான் பிறந்த இனத்தின் வாழ்விற்காய், தன் மொழியின் தற்காப்பிற்காய் அறச்சீற்றத்தோடு எழும் படைப்பே, படைப்பாளியே காலம் கடந்தும் வாழும். வாழ்வான். பாலுமகேந்திரா “தலைமுறைகள்’’ கடந்தும் வாழ்வார்.

thalimurakal thamilarkannotam14சுப்புவாத்தியார் தன் பேரனிடம் “ஆதி ! தமிழை மறந்துடாதே, தாத்தாவை மறந்துடாதே’’ என்பதே தமிழினத்திற்கான செய்தி.நுணிகிப்பார்க்கையில் இறுதிக்கும் இறுதியாக ஒருவனின் அடையாளமாக மொழி இருக்கிறது. பற்றுக் கோடாக தாய்நிலமும், பெருமிதமாக பண்பாட்டு உயர் நெறிகளும் உள்ளன.

இவைகளிலிருந்து விலகி சந்தை வாழ்க்கையில் மந்தை மனிதராக வாழ்வதை வரமென எண்ணும் தமிழ் சூழலில் படைப்பாளியின் உறுத்த லோடு இழந்து வருபவற்றை இலக்கியமாக்கி மீட்பதற் கானமொழிவே இப்படம். மண்ணிலிருந்தும், மக்களிடமிருந்தும், மொழியிலிருந்தும் அன்னியப்பட்டு நிற்கும் தமிழர்களை தன்னுணர்வு பெறச்செய்யும் படைப்பே "தலைமுறைகள்".

பாத்திரத்தேர்வு, நிகழ்வுக்களம், காட்சிப்பதிவு, வாய்மொழி, மௌனம் என பளீரிடு கிறார்பாலு மகேந்திரா பழமையின் மிடுக்கு மாறாமல். ஆறு என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்து வரும் ஆயிரமாயிரம் ஆதித்யாக்களுக்கு இழந்து வரும் நம் நீருரிமைகளைப் பற்றி எப்படி சொல்லப் போகிறோம்?. எனும் பதைப்பு படக் காட்சியினூடாக தோன்றுகிறது.

புகைனர்க் கல்லில் (ஒகேனக்கல்) கொப்பளித்து ஓடும் காவிரியின் அழகு காண, காணதிகட்டாத இன்பம். பெரும்பாலான காலங்களில் அண்டை கன்னடர்களின் அணைச் சிறையில் அடைபட்டுக்கிடக்கும் காவிரியால் நீரின்றி எலும்பு துருத்திக் கிடக்கும் நோயாளிபோல் பாறையாய் காட்சியளிக்கும் புகைனர்க்கல்லை நீரோடு காண்கையில் நெஞ்சம் விம்முகிறது.

“வீட்டு வேலைக்காரி கூட ஆங்கிலத்தில் பேச வேண்டும்’’ என்று முழங்கப்பட்ட தமிழக அரசியல் பின்னணியில் அதன் எதிர் விளைவு எத்தகையக் கேட்டினை இவ் வினத்திற்கு உண்டாக்கி இருக்கிறது என்றால் சென்னையில் பிறந்து வாழும் தன் பேரனிடம் காவேரிக் கரையில் வாழும் தாத்தன் அன்பு பாரட்டக்கூட இயலாத சீரழிவைத் தான்.

தமிழினத்தின் அடையாள இழப்பை அழகாக பதிவு செய்துள்ளார் இயக்குனர். “grandpha’’ என்று அழைக்கும் பேரன் ஆதித்யாவிடம் உரையாட முடியாமல் “என் பேரன்டா’’ என்று சுப்புவாத்தியார் தலையில் அடித்து அழும் போது தமிழக அரசியலின் தவறான மொழிக் கொள்கையும், தமிழர்களின் ஆங்கில மோகத்தின் கோரமும் ஒரு சேர உரைக்கிறது .பெற்றோர்களின் விருப்பம் என்று சொல்லி தமிழக அரசு ஆங்கிலவழிக் கல்வியை திணிப்பதை எண்ணி நாமும் தலையில் அடித்து அழும் காலம் இது.

படத்தில் வரும் சுப்புவின் மருமகளாய் தமிழ்வழிக் கல்வியை ஒவ்வொரு குடும்பமும் ஆதரிக்க வேண்டும். அதே வேளையில் ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்கலாம் என்பதை பேரனின் வழியாக சொல்லியிருக்கிறார்.படம் நெடுக தமிழின் அறஇலக்கிய குரல் ஒலித்துக்கொண்டே வருகிறது. கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் வயது வேற்றுமை கிடையாது என்பதையும் அழுத்தமாக சொல் கிறது ”தலைமுறைகள்” திரைப்படம்.

சாதிப் பற்று தமிழர்களின் மனங்களில் வேரூன்றி கிடப்பதை இயல்பாக படம்பிடித் திருக்கும் அதே நேரத்தில் அதனினும் இயல்பாக அப்பற்றை புறம்தள்ளவும் முடியும் என்பதையும் நேர்த்தியாக சொல்லிருக்கிறார்.

ஏன்டா சுப்பு நீ சாதிப் பெருமையெல்லாம் விட்டுட்டியாமே ?என நண்பன் லட்சுமணன் வினவுகையில், (தன் பேரனிடம் பெயரை ஆதித்யா-ன்னு சொல்லாத ஆதித்யப்பிள்ளை -ன்னு சொல்லு என்ற சுப்பு வாத்தியார்) ஆமாண்டா !அது தப்புன்னு இப்பதான் இந்த மரமண்டைக்கு உரைக்கிது! என்று இயல்பாக திருத்திக் கொள்வது தமிழினம் இன்றைக்கு செய்யவேண்டிய முதல் பணியாகும்.

இயக்குபவரே திரையில் இயங்குபவராகவும் இருப்பதால் எளிதில் சொல்லிவிடமுடிகிறது சொல்ல நினைத்ததை. வாதநோயில் வதையுற்ற போதும் கலப்புத் திருமணம் செய்து கொண்டதனால் வெறுக்கப்பட்ட தன் மகனிடம் கூட சொல்லாத வைராக்கியம் ,அவன் வருகையை நிராகரிக்கும் முதுமையின் வீரியம் , பேரனோடு மருமகளைப் பார்க்கையில் ”நல்லாயிரு தாயே’’ என வாழ்த்தும் மன மாற்றம், கூண்டை திறந்து பறவையை பறக்கவிட முயலும் நேயம், தன் ஊருக்காய் நகர வாழ்வை விட்டு கிராமத்தில் தங்கும் மருமகளின் பெருந்தன்மை போற்றி ஆச்சாரமான தன் பூஜை அறையில் இயேசுவின் படத்தை மாட்டும் நெக்குறுகல் என நம் மனதில் ஆழமாய் பதிகிறார் பாலுமகேந்திரா.

அதே சமயம் மகன் காதல் திருமணம் செய்த காரணத்தினாலே நன்றாக படிக்கும் மகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் அவலத்தை “உன் மேல உள்ள கோபத்தில என் படிப்பை அப்பா நிறுத்திட்டார் .இவ்ளோ காலம் உனக்கு ஒரு தங்கச்சி இருக்கறதையே மறந்துட்டல்ல’’ என வெடிக்கும் மகளின் கண்ணீர் பெண்கல்வி எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களை தெளிவாக்குகிறது.

தமிழினம்களைய வேண்டிய வீண்சாதிப் பெருமிதம் ,தடுக்க வேண்டிய நகர்மயமாதல், தவிர்க்க வேண்டிய ஆங்கில மோகம், பெண் கல்விக்கு எதிரான பேதைமை, வாழவேண்டிய இயற்கையோடு இயைந்த வாழ்வு, பாதுகாத்து பின்பற்ற வேண்டிய தமிழர் அறம், கற்றுக் கொள்ளவேண்டிய செம்மொழி இலக்கியங்கள் என எல்லா வற்றையும் அடுத்த தலைமுறைக்கு மடைமாற்றம் செய்திருக்கிறார் பாலுமகேந்திரா.

இளையராசாவின் இசை கதையோடு இழைகிறது. சிறுவன் ஆதித்யா மிளிர்கிறான். கதை மாந்தர் அனைவரும் நடிக்க வில்லை, மாறாக வாழ்ந்திருக்கின்றனர். கூர்தீட்டப்பட்ட படைக் கருவியாக வசனங்கள். “தலை முறைகள்’’ திரைப்படத்தில் ஏதேனும் ஒரு காட்சியை நீக்கமுடியுமாயின் அது ஒரு சிற்பத்தை உடைப்பதாகவே இருந்திருக்கும். நல்லவேளை ஓங்கி உயர்ந்த அய்ய னாரின் சிற்பமாய் கம்பீரம் காட்டி ஒளிர்கிறது “தலைமுறைகள்’’.

தமிழன் ஒவ்வொருவரும் இத் “தலைமுறைகள்’’ படைப்பை உச்சி முகரட்டும். இது பாலுமகேந்திரா-வின் திரைப் படம் அல்ல. அவர் கதைப் பாத்திரமாய் உரைத்த அவரின் வாழ்நாள் செய்தி.

Pin It