thamilar jan 14மடைசமூகத்தில் சிறை என்பது மனிதர்களைத் திருத்தும் பள்ளிக்கூடமாக இருக்க வேண்டும்.ஆனால், தமிழ்நாட்டிலோ சிறை என்பது மனநோயாளிகளையும், புதிய குற்றவாளிகளையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகவே பன்னெடுங்காலமாக இயங்கி வருகிறது.

10 ஆண்டு - 20 ஆண்டு என தண்டனை பெற்றோ, பெறாமலோ தமிழகச் சிறைகளில் வாடும் மனிதர் களைக் காணும் எவரும், சட்டத்தின் ஆட்சிதான் இங்கு நடக்கிறது என்பதை வாதிட முடியாது. அண்மையில் இதற்கு சான்று பகர்வதைப் போல் ஒரு நிகழ்வு நடை பெற்றது.

திருப்பூரைச் சேர்ந்த கவுண்டர் சமூகத்து இளைஞர் சுப்பிரமணி, வீதிகளில் நடனமாடிப் பணிபுரிந்து வந்த, பக்கா என்ற இசுலாமியப் பெண்ணிடம் காதல் வயப் பட்டார். கலைக்குழு வினருடன் இணைந்து கிராமக் கோவில் திருவிழாக்களில் நடனமாடும் பக்காவிற்கு, விஜயா என்று இன்னொரு பெயரும் இருந்தது. சாதி - மத மறுப்புத் திருமணம் என்பதால், வழக்கம் போல், இருவீட்டிலும் காதலுக்குக்கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சுற்றத்தார் எதிர்ப்பை மீறி, இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

சுப்பிரமணிக்கு சரியான வேலை அமையவில்லை என்ற போதும், அவரைக் கடிந்து கொள்ளாமல் அன்புடன் குடும்பம் நடத்திய விஜயா, அவருக்கு ஆதரவாகவே இருந்துள்ளார்.

பின்னர், விஜயாவும் சுப்பிரமணியும் ஊர்தோறும் கோயில் திருவிழாக்களில் நடன மாடும் பணியை இருவரும் கூட்டாக செய்து வந்தனர்.இந்நிலையில், கோவில் திருவிழா ஒன்றில் நடன மாடிவிட்டு வந்த இணையர்கள், தமது ஊருக்குச் செல்லும் கடைசிப் பேருந்தை விட்டுவிட்டனர்.அதனால், அங்கேயே படுத்துறங்க நேரிட்டது. இரவு உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அன்றைய நாள் நடனத்தின் போது, விஜயாவிற்கு தொல்லை கொடுத்த இளைஞர் ஒருவர் குடிபோதையில் வந்து சேர்ந்தார். விஜயாவிடம் தவறாக நடக்க முனைந்தார். எனவே, தம்மை தற்காத்துக் கொள்ளும் பொருட்டு தம்பதியர் இருவரும், அக்காமுகனை கல்லால் அடித்துவிட்டு வந்து விட்டனர். குடிபோதையில் இருந்த அவன் அங்கேயே மரணத்தைத் தழுவினான்.

காவல்துறையினர் நேர்மையாக இவ்வழக்கை விசாரித்திருந்தால், தம்மை தற்காத்துக் கொள்வதற்காகவே தம்பதியினர் இருவரும் அக்காமுகனைத் தாக்கினர் என்பதும், அது உள் நோக்கம் கொண்ட திட்டமிட்ட கொலை அல்ல என்பதும் தெரியவந்திருக்கும். இதை வைத்து, தம்பதியினர் இருவர் மீதும் இந்தியத் தண்டனைச் சட்ட விதி 100-இன்படி, தற்காப்புக் கொலை வழக்குப் பதிவு செய்து தம்பதியினரை அவ்வழக்கிலிருந்து காவல்துறையினர் விடுவித்திருக்கலாம். இது அவ்வப்போது பின்பற்றப் படும் நடைமுறை.

கடந்த, 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மதுரையில் மது அருந்திய போதையில், பெற்ற மகளையே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற ஜோதிபாசு என்ற கணவனை, உஷாராணி என்கிற அவரது மனைவி மட்டைப் பந்து மட்டையால் அடித்துக் கொலை செய்ததும், அதை இ.த.ச. பிரிவு 100 இன் கீழ் பதிவு செய்து, உசாராணியை மாவட்ட காவல் துறை விடுவித்ததும் நினைவிருக்கலாம்.

ஆனால், பக்கா விஜயா வழக்கில் காவல்துறை அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. முதலில், பக்கா விஜயா மற்றும் சுப்பிரமணி ஆகியோரைக் கைது செய்த கோவை காவல்துறையினர், கொலை செய்யப்பட்டவனிடம் இருந்த 500 ரூபாய் திருடுபோயிருந்ததை சாக்கிட்டு, அதைத் திருடுவதற்காகவே அக்கொலை நடந்ததாக வழக்குப்புனைந்து, காதல் தம்பதியினர் இருவரையும் வேலூர் நடுவண் சிறையில் அடைத்தனர்.

தற்காப்புக்காகத் தான் நாங்கள் தாக்கினோம் என்று அத்தம்பதியினர் கூறிய வார்த்தைகள், சட்டத்தின் காதில் விழவேயில்லை. விளைவு, இருவருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றமும் அதை உறுதி செய்தது.

வாழ்வேஇருண்டதாக உணர்ந்த விஜயா, கணவனைப் பிரிந்து பெண்கள் சிறையில் வாடினார். 24 ஆண்டுகளில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட, விஜயாவைப் பார்க்க வரவில்லை. காலப் போக்கில் விஜயா பேசும் திறனை இழந்தார். மனநலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

வேலூர் பெண்கள் சிறையிலிருந்த பெண் சிறைவாசிகள், விஜயாவின் நிலையறிந்து அவரை அன்புடன் பார்த்துக் கொண்டனர். விஜயா அவரது கணவருடன் 15 நாட்களுக்கு ஒரு முறை சைகையாலும், அவரது கணவர் வாயாலும் பேசுவதை வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் கண்ணீர் வரும்.

2011ஆம் ஆண்டு, இராசீவ் கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்று வேலூர் சிறையிலிருந்த நளினி, 24 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுள்ள விஜயா பற்றி கேட்டறிந்தார். நளினியின் வழக்கறிஞர் பா.புகழேந்தி சிறைக்கு வந்த போது, அவ்விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதன் விளைவாக, வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயாவுக்காக ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்து, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் அவரது நிலையை விளக்கி வாதாடினார். அவ் வழக்கு பரவலாக ஊட கங்களில் கவனம் பெற்றது. வெறும் 500 ரூபாய்காக கொலையா? என பலரும் அவ்வழக்கு குறித்து கேள்வி எழுப்பினர்.

அவ்வழக்கில், கடந்த திசம்பர் மாதம், தீர்ப்பளித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன் மற்றும் பிரகாஷ் ஆகியோர், முதுமை மற்றும் சிறை நன்னடத்தை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, திசம்பர் 20-ஆம் நாளுக்குள் விஜயாவை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுமென உத்தரவிட்டனர். 60 அகவை எட்டியுள்ள விஜயாவை, தற்போது வேலூர் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று பராமரிக்க முன் வந்துள்ளது.

ஒரு விஜயாவிற்கு நேர்ந்த கதியையே நாம் மேலே கண்டோம். இது போல், எத்தனையோ வாழ்நாள் சிறையாளிகள் தமிழகச் சிறைகளில் தொடர்ந்து வாடிவருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தைச் சேர்ந்த தென் தமிழன், தோழர் தமிழரசன் வழியில் தமிழக விடுதலைக்காக “தமிழ் நாடு விடுதலைப்படை’’ அமைப்பில் செயல்பட்டவர் ஆவார். 1988ஆம் ஆண்டு மறதியாற்றுப் பாலத்தில் குண்டு வைக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்டு, திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு நடைபெற்று, 1988இல் தூக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது. பின்னர், 1989இல் அது வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

தற்போது, 65 அகவைக் கடந்துள்ள அவருக்கு, மனநலம் முழுமையாக பாதிக்கப்பட்டு, கால்கள் இயங்க முடியாமல் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடம் நகர முடியாத அளவிற்கு உடல் நலம் குன்றியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையிலும், தஞ்சை அரசு மருத்துவமனையிலும் அவர் அவ்வப்போது அனுமதிக்கப்படும் போதெல்லாம், இரவு நேரங்களில் அவரது கால்களில் விலங்கிட்டு அலைக் கழிக்கிறது, தமிழகக் காவல் துறை.

இது போலவே, கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 166 இசுலாமிய சிறைவாசிகளில், 10 ஆண்டுகளைக் கடந்தும் விசாரணை சிறைவாசிகளாக அடைபட்டவர்களே அதிகம். சற்றொப்ப 9 ஆண்டுகள் வரை விசாரணை சிறையாளிகளாக இருந்தவர்களில் 71 பேர், எவ்விதக் குற்றமும் இழைக்காதவர்கள் என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அந்த 9 ஆண்டு கால வாழ்க்கை இழப்பை அரசும், நீதிமன்றமும் எப்படி ஈட்டித் தரும்?

இவ்வாறான விசாரணைச் சிறைவாசியாக இருந்த போதே, 60 அகவையான தஸ்தகீர் என்ற முதியவர் நோய்வாய்ப்பட்டு உரிய சிகிச்சையின்றி சிறையிலேயே மரணமடைந்தார்.

தற்போது, வாழ்நாள் தண்டனை பெற்று 15 ஆண்டுகளைக் கடந்து சிறையிலுள்ள அபுதாஹிர் என்ற இசுலாமிய இளைஞருக்கு, SYSTEMIC LUPUS ERYTHEMATOUS என்ற கொடிய நோயால், இரண்டு சிறுநீரகமும் கண்களும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் சிறைவைக்கப் பட்டுள்ளார். இவ்விளைஞர், மதுரையில் ஒரு குண்டு வெடிப்புடன் தொடர்பு படுத்தப் பட்டு, 18 அகவையில் சிறையில் அடைக்கப் பட்டவர் ஆவார். சிறையிலிருந்தே B.B.A மற்றும் முதுகலை வரலாறு (M.A.) படிப்புகளைப் படித்து முடித்த அபு தாஹீரின், தற்போதைய உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே வைக்க வேண்டு மென இவர்களது உறவினர்களும், பல் வேறு அமைப்புகளும் கோரிய போதும் அதற்கு தமிழக அரசு இணங்கவில்லை.

தமிழக சிறைத்துறை விதி 632இன் படி, நோய்வாய்ப் பட்டுள்ள சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான விதிமுறைகள் இருந்தும் கூட, அரசியல் காரணம் இருப்பதை கணக்கில் கொண்டு இவர் களையெல்லாம் தமிழக அரசு விடுதலை செய்வதில்லை. ஆனால், தமிழக அரசு அரசியல் காரணங்களுக்காக மட்டும் தான் இவ்வாறு செய்கிறது என்பதாகச் சொல்ல முடியாது.

ஏனெனில், மதுரையில் சி.பி.எம். மாமன்ற உறுப்பினர் லீலாவதியை அரசியல் காரணங்களுக்காகப் படு கொலை செய்த தி.மு.க. கூலிப் படையினர் 7 ஆண்டுகள் கடந்த நிலையிலேயே, விடுவிக்கப்பட்டனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களும் கூட இவ்வாறு முன்கூட்டியே விடுவிக்கப் பட்டனர். இவர்கள் யாரும் நோய் வாய்பட்டவர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, அரசியல் காரணங்களைக் கணக்கில் கொண்டு இவர்களை விடுதலை செய்யவில்லை என தமிழக அரசு சொல்லும் வாதம் நம்பக் கூடியதாக இல்லை.

இந்தியத் தண்டனைச் சட்டம் 57ஆவது பிரிவின்படி, 20 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்தவர்களை முன்விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்கலாம் எனத் தெரிவிக்கிறது. மேலும், 20 ஆண்டுகளுக்கு முன்பே கூட நன்னடத்தைக் கருதி மாநில அரசு சிறைவாசியை விடுதலை செய்யலாம் என்கிறது அச்சட்டம்.

ஒவ்வொரு ஆண்டும் இச்சட்டத்தின்படியே, அண்ணாப் பிறந்த நாளான செப்டம்பர் 15 - அன்று, பல்லாண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்த சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்யும் பழக்கம் இருந்தது. கருணாநிதி ஆட்சிக் காலத்தில், இது அவ்வப் போது நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தாலும், இசுலாமிய சிறைவாசிகளோ, அரசியல் சிறைவாசிகளோ இதன் கீழ் விடுதலை செய்யப்படுவதில்லை. செயலலிதா ஆட்சிக் காலத்தில் இது முற்றிலும் செயல் படுத்தப்படுவதே இல்லை.

விடுப்பில் செல்லும் சிறைவாசிகள் தவிர்க்க இயலாத காரணங்களால் காலதாமதமாக வந்தாலோ, மறுநாள் வந்தாலோ அதற்கு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 224இன் கீழ் தனி வழக்குப் பதிவு செய்து, அதைக் காரணம் காட்டியே இந்த முன் விடுதலையை இரத்து செய்கின்றப் பணியை தமிழக சிறைத்துறை நெடுங்காலமாகச் செய்து வருகின்றது.

பக்கா விஜயா விடுதலை செய்யப்பட்டதைப் போல், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில்வாடும் தென்தமிழன் உள்ளிட்ட அரசியல் சிறையாளிகளும், அபுதாஹீர் உள்ளிட்ட இசுலாமிய சிறையாளிகளும் விடுவிக்கப்பட வேண்டும். சிறைத்துறை விதிகளும், சட்டங்களும் இவ்விடுதலைக்கு தடை போடவில்லை. அதை செயல்படுத்த மறுக்கும் அதிகார வர்க்கமே இதற்குத் தடையாக உள்ளது. அதை செய்ய வைக்கும் பணியை நாம் மேற் கொள்ள வேண்டும். 

Pin It