அன்புக்குரிய மணியரசன் அவர்கட்கு,

வணக்கம். தமிழர் கண்ணோட்டம் தொடர்ந்து படித்து வருகிறேன். அண்மையில் சுவரொட்டிக்காகத் தங்களைத் தளைப்படுத்த முனைந்த செய்தியையும் படித்தேன். தமிழ்நாட்டைத் தமிழன் ஆளவில்லை. தமிழ் மக்களும் தமிழ் மக்களாக இல்லை. இதனாலேயே தமிழினம் சொல்ல முடியாப் பேரிழப்புகளிலும் அவலங்களிலும் அழுந்திக் கிடக்கிறது.

இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டுதான் ஐந்து பக்கங்களிலிருந்தும் தமிழர்க்கு எதிரான செயல்களே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளத்தான், ஆந்திரன், கருநாடகத்தான், சிங்களன், தில்லிக்காரன் (இந்தி வெறியன்) - அவனவன் பங்குக்கு அவனவன் நம் உரிமைகளை நசுக்குவதே குறியாயிருக்கிறான். கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாகப் போலிகளை நம்பி நம் மக்கள் ஏமாறி, இன்னும் ஏமாறிக் கொண்டிருப்பது தான் காரணம்.

பிற மாநிலத்தவர்கள் எல்லாம் வடமொழியையும் இந்தியையும் ஏற்றுக் கொண்டு தில்லிக்காரனுக்கு நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்கிறார்கள். அதே பொழுது தங்கள் மொழிவழித் தேசியத்தையும் காப் பாற்றிக் கொள்கிறார்கள். அவர்களின் மொழிக்கு வடமொழி யாலோ இந்தியாலோ ஏதும் நேர்வதில்லை என்பது காரணமாக இருக்கலாம். தமிழ் ஒன்றே தனித்து நிற்கின்றது.

தன் தனித்தன்மையைக் காப் பாற்றிக் கொள்ள விரும்புகின்றது. வடநாட்டானுக்கு இது பிடிக்க வில்லை. அதனால் அவன் தமிழ்த் தேசிய உணர்வை வெறுப்புடனும் எதிர்ப்புணர்வுடனும் பார்க் கின்றான். நம் போலும் தமிழ்த் தேசிய உணர்வாளர் கட்கு இது நன்றாகவே புரிகின்றது. நாம் நம் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகின்றோம்.

நம் ஏமாறுந்தன்மையாலும், போலி அரசியல் வாணர்களின் அருவருக்கத்தக்க பதவி ஆசையால் விளைந்த - நடுவணரசுக்கு வால்குழைக்கும் - அடிமைத் தனத்தாலும் கச்சத்தீவை இழந்தோம். சிங்களன் சூழ்ச்சி வலைக்கும், நேரு- இந்திரா போன்றோரின் தமிழர் மீது அக்கறையின்மைக்கும் உட்பட்டு இலங்கை மலையகத் தமிழரின் வாழ்வை நடுத்தெருவுக்கும் கொண்டு வந்தோம். மொழிவழிப் பிரிவினையின் பொழுதும் இன விழிப்பும் அரசியல் விரகாண்மையும் கடுகளவுமற்ற தமிழகத் தலைவர்களின் போலி ஒருமைப்பாட்டுணர் வால் வடவேங்கடம் இழந்தோம்.

காவிரி தோன்றுமிடமான குடகுப் பகுதியையும் கைவிட்டோம். தேவிகுளம் பீர்மேட்டை இழந்தோம். எல்லாவற்றிலும் பிறமொழிக்காரர்களின் சூழ்ச்சிக்கும் வஞ்சக விரகாண்மைக்கும் பலியானோம். பார்ப் பனியத்தின் விரகாண்மையால் தமிழ்வழிக் கல்வியை இழந்தோம். ஆங்கிலவழிக் கல்வி எனும் கொடிய மலைப் பாம்பு இன்று நம் மக்களை விழுங்கிக் கொண்டு வருகிறது.

தமிழ் தமிழ்நாட்டின் அலுவல் மொழியாக இல்லை. வழக்கு மொழியாக இல்லை. வாணிக மொழி யாக இல்லை; ஏன். கலையுலகிலும் தமிழ் புறக்கணிக்கப் படுகின்றது. திரைப்படம் உட்பட எல்லாத்துறை களிலும், வேற்று மாநிலத்தார் உட்கார்ந்து கொண்டு தமிழனைச் சுரண்டிக் கொழுக்கின்றனர். எல்லா உயர் பதவிகளிலும் வேற்று மொழிக்காரனே இருக்கின்றான்.

இம் மண்ணின் மக்களைப் பற்றியும் அவர்கட்கு வழங்க வேண்டிய உண்மைக் கல்வி பற்றியும் எவருக் கும் அக்கறையில்லை. எந்த ஆக்கவழியிலும் தமிழை வளர்ப்பதற்கான எந்த முயற்சியும் இல்லை. தமிழரின் வாழிடங்கள் பறிபோகின்றன. கூடங்குளம் அணு உலைகள் எவ்வளவு பெருங்கொடுமை!

எல்லாச் செய்திகளிலும் தமிழன் இளக்காரமாகவே நடத்தப்படுகின்றான்; மீத்தேன், எரிவளி, சிறுதொழில் பறிப்பு, நிலங்கையகப்படுத்துதல், சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், -பழங்குடி மக்கள் அவர்களின் இயற்கை வாழிடங்களிலிருந்து விரட்டப்படுதல் யாவும் தமிழ னுக்கெதிரானவை.

தமிழக மீனவர்படும் அல்லல் கொஞ்சமா? தில்லி சிங்களனோடு கைகோத்துக் கொண்டு தமிழ் மீனவர் களை அழிப்பதில் முன்னிற்கின்றது.

இப்பொழுது கூலித்தொழிலாளர்கள் வடக்கிலி ருந்து ஆயிரக்கணக்கில் இறக்கப்படுகின்றனர். இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். அவர வர் மாநிலத்தில் அப்பாவித் தமிழரை அழிக்க ஆயிரம் சூழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால், தமிழகத் திலோ வேற்று மொழிக்காரன் வந்திருந்து விருந்துண் கிறான். தமிழரையே மேலாண்மை செய்கின்றான்.

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர், பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை.

என்கின்றார் வள்ளுவர். பேதைத் தமிழினத்தின் பெருஞ்செல்வத்தையெல்லாம் வேற்று மாநிலத்தான் கொள்ளை கொண்டு போகின்றானே, இந்தத் தமி ழினம் இருக்கின்றதா செத்துவிட்டதா? விசை முறிந்த மணிப்பொறியாய், வெந்து தணிந்த சாம்பலாய்ப் போய்விட்டானே தமிழன். அவனை எப்படி எழுப்பு வது? எப்படி விழிப்புணர்வூட்டுவது? இதுவரை நம் போராட்டங்கள் ஒரு சிறிய மாறுதலையாவது கொண்டு வந்திருக்கின்றனவா?

மிகமிகச் சிறிய செய்தி - தமிழ்வழிக் கல்விக்கூட நம்மால் கொண்டுவர முடியவில்லையே.

பகைவரும் உட்பகைவரும் தமிழ்நாட்டில் தமிழ் முதன்மை அடைந்துவிடாமலிருக்க என்ன என்ன தந்தி ரங்களைச் சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர்! பெரும் பெருஞ்செய்தித்தாள்கள் எவையும் தமிழன் பக்கம் இல்லையே. தமிழுக்கு மாறான எண்ணங்களே நடுநி லைப் பூச்சுப்பூசி இந்த இதழ்களால் எங்கும் பரப்பப் படுகின்றன. தமிழைக் கலப்பட மாக்குவதே இவற்றின் வேலையாயிருக்கின்றது.

இனித்தமிழனால் நடத்தப்படும் நாளிதழ்கள் கிழமை, மாத இதழ்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் மேலுக்குத் தமிழ் பேசிக் கொண்டு, தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் வேலையைத் தானே செய்து கொண்டுள்ளன.

பார்ப்பனிய இதழ்கள் தங்கள் வாணிக நலன்கட் காகவும், தமிழ் மக்களிடையே காலூன்றிக் கொள்வ தற்காகவும் தமிழர் நலன்பற்றிப் பேசினாலும், தமிழில் முற்போக்கு முன்னோடிகள் போல் காட்டிக் கொண்டாலும் பார்ப்பன இன நலன்கட்கெதிராக ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போட்டு நாம் பார்த்ததில்லை. ஆனால், நம் தமிழ் இதழ்கள் எப்படியிருக்கின்றன? கடுகளவேனும் தமிழ் நலம் கருதியதுண்டா? இவற்றின் எந்தச் செயலும் தமிழுக்குச் சார்பாக இருப்பதில் லையே! பார்ப்பானையும் விஞ்சிற் தமிழன் தன் மொழி யில் கலப்படம் செய்கின்றானே! பண்பாட்டைச் சீரழிக் கின்றானே.

காவிரி நீரில் தமிழ்நாட்டுக்குரிய முறையான பங்கி னைக் கேட்டால் கருநாடகத் தமிழர் தாக்கப் படுகின்ற னர். தமிழ்ப் பெண்கள் பாலியல், வன்முறைக்கு ஆளா கின்றனர். என்ன கொடுமை! ஒரு மக்களாட்சி நாட்டில் இது நடக்கலாமா? ஆனால், நடுவணரசு இதைப் பார்த் துக் கொண்டு சும்மா இருக்கின்றது. இந்தக் கொடுமை களைக் கூடத் தட்டிக் கேட்கத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வருவதில்லை.

தமிழ்த் தேசிய உணர்வு மக்களிடம் பரவி அவர் கட்குப் புத்தெழுச்சியூட்டித் தங்கள் மொழிக்கும் இனத் துக்கும் பொங்கி எழுத்து போராடும்படி அவர் களைத் தூண்ட வேண்டும்.

ஆட்சியை அதிகாரத்தைக் கைப்பற்றாமல் நாம் தமிழுக்கும் தமிழர்க்கும் எந்த நலமும் செய்து விட முடியாது. தேர்தலில் உண்மைத் தமிழுணர்வாளர் களுக்கு மட்டுமே ஒப்போலையிட்டு அவர்களைச் சட்ட மன்றத்தில் ஏற்றுமளவுக்கு நாம் மக்களை உருவாக்குதல் வேண்டும். மக்கள் உள்ளத்தில் மொழி, இன உணர்வை - அதாவது தமிழ்த் தேசிய உணர்வை எழுப்பினாலொழிய இதைச் செய்தல் இயலாது!

மக்கள் நடுவில் கருத்துப் பரப்பல் போர்க்கால அடிப்படையில் முழுமூச்சாக மேற்கொள்ளப் பட் டாலன்றி நம்மால் எள்ளளவும் அசைக்க இயலாது.

நீங்களும் நெடுமாறன் அவர்களும் இன்று மக்கள் உள்ளத்தில் தமிழ்த் தேசிய உணர்வை எழுப்பும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றீர்கள். உங்களிரு வரையும் நான் உள்ளத்துள் வழிபட்டு வரு கின்றேன் என்றே சொல்லலாம். எனினும் அமைப் பளவில் முன் னின்று ஈடுபடவியலாதவனாக நான் இருந்து வருகி றேன். வேறு இன்றியமையாப் (மொழி பெயர்ப்பு) பணி யினை நான் மேற்கொண்டுள்ளேன். எனினும் நாம் ஒன்று திரண்டு ஒருபுறம் போராடவும் மறுபுறம் மக்கள் நடுவில் செல்லவும் வேண்டியவர் களாக இருக்கின் றோம்.

அன்புடன்,

தங்கப்பா