உண்மை ஒன்று சொல்வேன் – 17

ரிசானா நபீக் என்பவர் இலங்கையின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இசுலாமியத் தமிழ்ப் பெண். அவர் சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் காலத்தில் ஒரு குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கொடூரமான முறையில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள் ளாக்கப்பட்டார்.

ரிசானா, 1988 பிப்ரவரி 4இல் கிழக்கிலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் மூதூர் கிராமத்தில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார். வறுமை காரணமாக தொடக்கப்பள்ளி அளவி லேயே இவரது ஆரம்பக் கல்வி நின்றுவிட்டது.

தனது 17 வது வயதில் 2005 மே 4இல் பணிப் பெண் வேலைக்காக சவூதி அரேபியா அனுப்பப்பட்டார். சிறுவர்கள் வெளிநாடுகளில் தொழில் புரிய இலங்கையில் தடை உள்ளது. இதனால் ரிசானாவை சவூதிக்கு அனுப்ப முயன்ற முகவர், அவரது பிறந்த தேதியை 02.02.1982 என்று மாற்றி கடவுச்சீட்டு பெற்றுத் தந்திருக்கிறார்.

தலைநகர் ரியாத்தில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள தவாதமீசா என்ற இடத்தில் தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் பணிப் பெண்ணாக ரிசானா தனது பணியைத் தொடங் கினார். சமைப்பது, பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள் ளுதல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைக் கவ னித்துக் கொண்டார்.

வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே (2005 மே 22) நான்கு மாதக் குழந்தையை ரிசானாவின் பராமரிப்பில் விட்டு விட்டு அதன் தாய் வெளியில் சென்றார். அப்போது ரிசானா குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டியிருக்கிறார். அதில் குழந்தைக்கு புறைக்கு ஏறி, மூச்சுத் திணறி இறந்து விட்டது. திரும்பி வந்த பெற்றோர், ரிசானாதான் திட்டமிட்டுக் குழந்தையைக் கொன்றுவிட்டதாக வீட்டிலேயேக் கடுமையாகத் தாக்கினர். காவல்துறையிலும் புகார் அளித்தனர். காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட ரிசானா, அக்குழந்தையை தான் கொலை செய்ய வில்லை என்றும், பாலூட்டும் போது மூச்சுத் திணறிதான் இறந்ததாகவும் தெரிவித்திருந்ததை யாரும் நம்பவில்லை.

காவல்துறையினர் ரிசானா விடம் இருந்து கடுமையாக மிரட்டி, வாக்குமூலம் பெற்றனர். ஏழைப் பெண்ணான ரிசானா தரப்பில் வாதாட யாருமற்ற சூழலில் சட்ட ஆலோசனையைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத அப லையாக சிறையில் வாடியி ருக்கிறார்.

இந்நிலையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பொது இடத்தில் நிற்க வைத்து ரிசானாவின் தலையைத் துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் சவூதி அரேபியாவின் இந்தக் கொடூர தண்டனையை கண்டித்து வரும் நிலையில், ரிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை சவூதி அரசின் சட்டத்திற்கு உட்பட்டே வழங்கப்பட்டது என்று சவூதி அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. அதைவிடக் கொடுமை என்னவென்றால், ரிசானாவின் கொலை இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு நடந்திருப்பதால் அதனைக் கண்டிக்கக் கூடாது என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இஸ்லாமிய மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

இந்த ஷரியா சட்டம் தனித்துவம் வாய்ந்தது அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்லாமிய சட்டங்கள் பின்பற்றப்படும் நாட்டுக்கு நாடு இந்தச் சட்டத்தின் தன்மைகள் மாறுகின்றன. உதாரணமாக லிபியாவில் ஷரியா சட்டம் இந்தளவுக்குக் கொடூரமானதாக இல்லை.

சவூதி அரேபியா மிகப் பழமைவாத அடிப்ப டைகளைக் கொண்டுள்ள போதிலும், அங்கே வேலை பார்க்கும் ஐரோப்பியர்களுக்கும், அமெ ரிக்கர்களுக்கும் இந்தச் சட்டத்தில் சலுகை காட்டப் படுகிறது என்கின்றனர்.

இலங்கையில் கூட இஸ்லாமிய அரசியல் தலைமைகள் ஏழை இஸ்லாமிய மக்கள் மத்தியில் அடிப்படைவாதக் கருத்துகளை பரப்பி வருகின் றன. இந்தப் பின்னணியில் தான், “எனது மகள் ரிசானாவை அல்லா தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதி யான நம்பிக்கை” என்று ரிசானா நபீக்கின் தாயார் ரஸீனா நபீக் தெரிவித்திருக்கிறார்.

ரிசானா விவகாரத்தில் ஆரம்பம் முதலே இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்தின் பங்களிப்பு போதுமானதாக இருக்கவில்லை என்று இலங் கையின் பெண்கள் செயற்பாட்டு வலையமைப் பைச் சேர்ந்த சித்தாரா ஷ்ரீன் அப்துல் சரூர் கூறுகிறார். மூதூர் மக்கள் சில முயற்சிகளை செய்தாலும் அவர்களால் உயர்மட்டம் வரை செல்ல முடியவில்லை என்றும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இலங்கை அரசாங்கமும் இந்த விவகாரத்தில் போதுமான நடவடிக் கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

எந்த அல்லாவின் பெயரால் ரிசானா தலை துண்டிக்கப்பட்டு கொலை செய் யப்பட்டாலோ அதே அல்லாவின் மீது ஆணையிட்டு அந்தக் கொலையை செய்யவில்லை என்று ரிசானா சாவததற்கு முன் கடிதம் எழுதியிருக்கிறாள். குழந் தையை கொலை செய்ததாக ஒப்புக் கொள் ளவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று காவல்துறையினர் அடித்து துன்புறுத் தியதால் அவர்கள் காட்டிய இடங்களில் எல் லாம் கையெழுத்துப் போட்டேன் என்று பரிதாபமாகச் சொல்லும் ரிசானாவின் நிலை யோடு, ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன், சாந்தன், முருகன் நிலையை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

எந்தக் காரணத்துக்காக மரண தண்டனையை ஆதரிக்கும் போதும் நாளைக்கு அந்த மரண தண்டனை என்கிற அந்த அடியாள் கையில் கத்தியுடன் நம் வீட்டு முன்பு ரத்தவெறியோடு காத்துக் கொண்டிருக்கும் வேளையும் வரலாம் 0என்பதை மறந்துவிடக் கூடாது.

Pin It