பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்ட குர்திஸ் போராளிகள்!

கடந்த நவம்பர் மாதம் மாவீரர் நாளுக்கு முன் னதாக, தமிழீழ விடுதலைக்கு ஆதரவு திரட்டிப் போராடி வரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கேணல் பரிதி, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்ட அதே பாரிசு நகரில், மீண்டுமொரு அரசியல் படுகொலை அரங்கேறியுள்ளது.

பாரிசு நகரின், குர்து தகவல் மையம் அருகில், கடந்த 09.01.2013 அன்று குர்திஸ் விடுதலை இயக்கப் பெண் போராளிகளான, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் மூத்த தோழர் சாகைன் கன்சிஸ்(Sakine Cansiz), பிடன் டோகன் (Fidan Dogan), லேலா சோலிமெஸ் (Leyla Soylemez) ஆகிய மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் ஒருவரான தோழர் சாகைன் கன்சிஸ், குர்திஸ் போராட்டத்தின் தொடக்க முதல் அதை வழி நடத்திய தலைவர்களில் ஒருவர் ஆவார். 1978ஆம் ஆண்டு குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி தொடங்கிய போது, அதன் நிறுவனர்களில் ஒருவராக விளங்கியவரும் ஆவார். 1980ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அவர் சிறையிலடைக்கப்பட்ட பின்னரும், சிறையிலிருந்தபடி போராட்டத்தை அவர் வழிநடத்தியதை இன்று பலரும் நினைவு கூருகின்றனர்.

இன்னொருவரான தோழர் பிடன் டோகன், பிரசல்சின், குர்து தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். மூன்றாமவரான தோழர் லேலா சோலிமெஸ் இளம்குர்து விடுதலை ஆதரவாளர் ஆவார்.

குர்திஸ்தான் விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப்புலிகளைப் போலவே நீண்ட தனிச்சிறப்பு கொண்ட விடுதலைப் போராட்ட இயக்கமாகும். கொலை செய்யப்பட்ட மூவரும், பிரான்சில் தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டங்களில் பல நேரங்களில் பங்கெடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரான்சில் 12.01.2013 அன்று குர்திஸ்தான் விடுதலை ஆதரவு இயக்கத்தினர் ஒருங்கிணைத்த வீரவணக்க நிகழ்வில், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, இளையோர் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர் என தமிழீழ மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

குர்திஸ்தான் பெண் போராளிகளுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கின்றது.
 
கச்சின் மக்கள் மீது வான்தாக்குதல் நடத்தும் பர்மா அரசு

மியான்மர் எனப்படும் பர்மாவின், வடக்குப் பகுதியில் விடுதலை கேட்டுப் போராடி வரும் கச்சின் விடுதலை இயக்கத்தின் (Kachin Independence Organisation - KIO), கட்டுப் பாட்டு பகுதியான லைய்சா (Laiza) மீது வான் வழித் தாக்குதல்களை வழிநடத்தி வருகிறது பர்மிய அரசு. இதில், இதுவரை 3 பேர் பலியாகியும், நூற்றுக்கணக்கனோர் காயப் பட்டும் உள்ளனர்.

கடந்த, 2012 திசம்பர் 30 அன்று, வான்தாக்குதல்களின் உதவியோடு, விடுதலை இயக்கத்தினரின் முக்கியப் பகுதியை பிடித்துவிட்டதாக பர்மிய அரசு அறிவித்தது. தாக்குதல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

1948இல் பர்மா, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையடைநத போது, பர்மாவில் வாழும் பல்வேறு பழங்குடியின மக்களின் தனித்தன்மைகளும், உரிமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என ஆங்கிலேயே அரசிடம் உறுதிமொழி அளித்திருந்தது. ஆனால், அது கடைபிடிக்கப் படவில்லை. பர்மாவில் வாழ்ந்த பல்வேறு பழங்குடியின மக்கள் இரண்டாம் தரக்குடி மக்களாக நடத்தப்பட்டனர். 1960இல், புத்த மதம் தேசிய மதமாக அறிவிக்கப் பட்டது. இந்நிலையில், 1962இல், பர்மாவில் நீ வின் தலைமையிலான இராணுவக்குழு ஆட்சியைப் பிடித்தது. கூட்டாட்சி முறை ஒழித்துக் கட்டப்பட்டு, ஒற்றையாட்சி அரசியலமைப்பு இயற்றப்பட்டது.
 
இவற்றின் காரணமாக, அரசின் மீது நம்பிக்கையிழந்த பல்வேறு பழங்குடியின மக்கள், தமக்கான விடுதலைக் கோரிக்கையை முன்னெடுத்துப் போராடி வருகின்றனர். அவ்வாறு, போராடி வரும் கச்சின் பகுதி மக்களின் விடுதலை அமைப்பின் மீது தான் பர்மா அரசு தற்போது தாக்குதலைத் தீவிரப் படுத்தி வருகின்றது.

ஆறு இனங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்கின்ற கச்சின் பகுதியின் பெரும்பாலான நிலப்பரப்பு பர்மாவில் இருந்தாலும், சீனாவின் யன்னன் மாகாணம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு எல்லையோரம் ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற பழங்குடியின மக்கள் அனைவரும், தங்களைக் கச்சின் (Kachin) பகுதியின் அங்கத் தவர்களாக அடையாளப்படுத்திக் கொள் கின்றனர்.

கச்சின் மக்கள், 1940ஆம் ஆண்டு ஆங்கிலே யர்களின் ஆட்சிக்காலத்திலிருந்து கச்சின் விடுதலை இயக்கத்தை நடத்தி வந்த போதிலும், விடுதலையடைந்த பர்மாவின் ஒற்றையாட்சியின் கீழ் நாங்கள் வாழ மாட்டோம் என்ற முழக்கத்துடன், கச்சின் விடுதலை இயக்கம் (கியோ) 1962இல் அமைக்கப்பட்டபின் தான், அவர்களது விடுதலைப் போர் புதிய வீச்சைப் பெற்றது. பர்மாவின் இராணுவ ஆட்சிக்குப் பின், இராணுவத்திலிருந்து விலகிய கச்சின் பழங்குடி யினத்தவர்கள் 1961இல், 'கியா' (கச்சின் விடுதலைப் படை) என்ற இராணுவ அமைப்பை ஏற்படுத்தி, பர்மிய அரசுடன் விடுதலைப் போர்புரிந்து வருகின்றனர்.

பர்மாவின் கச்சின் பகுதியில், வரி வசூலித்து, நிர்வாகக் கட்டமைவுகள் ஏற்படுத்தி அரசுக்கு இணையான இயக்கம் நடத்தி வந்த கியோ அமைப்பு, 1994ஆம் ஆண்டு முதல் முதலாக பர்மா அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. அமைதிக் காலத்தை பயன்படுத்திக் கொண்ட, பர்மா அரசு, கச்சின் பகுதியில் சீன அரசின் உதவியுடன் பல மின் உற்பத்தித் திட்டங்களை ஏற்படுத்தியது.

ஒன்றுபட்ட பர்மாவிற்குள் நமக்கு தீர்வில்லை என கியாவின் தலைவர் ஜெனரல் சும்லட் கன் மா அறிவித்தார். அரசின் படைகள், 09.6.2011 அன்று, டப்பிங் நதியின் கிழக்கில் உள்ள கியாவின் கட்டுப்பாட்டிருந்த பாமோ பகுதியின் மீது தாக்குதலைத் தொடுத்து, கியாவுக்கும் அரசுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்த்த்தை தானே முறித்துக் கொண்டது.

போர் நிறுத்தம் முறிந்த நிலையில், அப் பகுதியின் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் போர் சூழல் காரணமாக இடம் பெயர்ந்தனர். அதன்பின், கியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் கடந்த ஓராண்டாக பர்மா அரசுத் தாக்குதல்கள் தொடுத்து வந்தது. அதில், சற்றொப்ப 700 கிளர்ச்சியாளர்கள் சூன் 2011லிருந்து, செப்டம்பர் 2012 வரை கொல்லப் பட்டனர்.

இதன் உச்சமாக, இராணுவ ஹலிகாப்டர் மற்றும் விமானங்களைக் கொண்டு வான் தாக்குதல்களை தற்போது நடத்துவதாக பர்மா அரசே அறிவித்துள்ளது. அனைத்துலக சமூகம், போர் நிறுத்தம் கொண்டு வந்து, கச்சின் மக்களின் விடுதலைக் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும். கச்சின் மக்களின் விடுதலைப் போர் வெல்லட்டும்!

Pin It