இரசியாவில் “இடதுசாரி கம்யூனிஸ்டுகள்”என்ற பெயரில் இருந்த ஒரு குழுவினர் முதலாளிய நாடாளுமன்றங்களைப் பன்றித் தொழுவம் என்றனர். ஆனால் இந்திய நாடாளுமன்றம் கொள்ளைக்காரர்களின், குற்றவாளிகளின் கூடாரமாகவே இருக்கின்றது என்ற விவரத்தை ஆவணப்படி தன்னார்வ அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. சட்ட மன்றங்களும் அப்படியே இருக்கின்றன. இவற்றில் நல்லவர்களே இல்லையா என்றால், இருக்கிறார்கள்; மிக மிகச் சிறு எண்ணிக்கையில், செல்வாக்கற்ற நிலையில் இருக்கிறார்கள்.

இந்திய நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் புதிய கருத்துகள் முளைக்காத மலட்டு மன்றங்களாகவே இருக்கின்றன. அவற்றிற்கு வெளியேதான் முற்போக்கான புதிய சிந்தனைகளும் திட்டங்களும் துடிப்புமிக்க அறிவாளிகளால், களப்போராளிகளால், போராடும் மக்களால் முன் வைக்கப்படுகின்றன.

குற்றச்செயல்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்குண்டுள்ள ஏராளமானோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற உண்மையைப் பல்லாண்டு கால மாக பொது நலனில் அக்கறையுள்ள தன்னார்வ அமைப்புகள் பட்டியிலிட்டு வருகின்றன. ஆனால் அவர்களைப் பதவி நீக்கம் செய்யவோ அல்லது அடுத்த முறை அப்படிப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க முடியாது தடுக்கவோ உருப்படியான விவாதம் எதுவும் நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றங்களிலோ இது வரை நடந்ததில்லை. உச்சநீதி மன்றம் 10.7.2013 அன்று அதிரடியாக ஒரு தீர்ப்பளித்துள்ளது. மக்கள் பிரதி நிதித்துவச் சட்டத்தின் 8(4) பிரிவு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அதை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

8(4) பிரிவானது, நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றவியல் வழக்கு நடந்து விசாரணை நீதிமன்றம் இரண்டாண்டு அல்லது அதற்கு மேல் தண்டனை வழங்கினால், மூன்று மாதங்களுக்குள் அவர் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கப்படும். அக்காலத்தில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட மாட்டார். உரிய காலத்தில் மேல் முறையீடு செய்து, மேலமை நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டால் அது தீர்ப்பளிக்கும் வரை அவரது பதவி பறிக்கப்படமாட்டாது. என்று கூறுகிறது. இப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.பட்நாய்க் மற்றும் எஸ்.ஜே. முகோபாத்தியாயா ஆகியோர் அடங்கிய அமர்வு மக்கள் பிரிதிநிதிகள் சட்டத்திலுள்ள 8(4) பிரிவை செல்லாது என்று நீக்கியுள்ளது. மேலும் இந்நீதிபதிகள் பதவியில் இருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விசாரணை நீதி மன்றம் இரண்டாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு சிறைத் தண்டனை அளித்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோய் விடும் என்றும், அவர்கள் ஆறாண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கத் தடை என்றும் தீர்ப்பளித்துள்ளார்கள். இதற்கான வழக்கைத் தொடுத்தவர்கள் “லோக் பிரகாரி” என்ற அமைப்பின் செயலாளர் எஸ்.என். சுக்லாவும் பொதுநல ஆர்வலர் லில்லி தாமசும் ஆவர்.

இப்படிப்பட்ட தீர்ப்பு எந்தப் பின்னணியில் வந்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். பொருள் கடத்துவோர், பெண்களைக் கடத்துவோர், மோசடிப் பேர்வழிகள், திருடர்கள், அடியாள்படை வைத்திருக்கும் அரம்பர்கள், தேர்தலில் தில்லு முல்லு செய்வோர் எனப் பல வகைப்பட்ட சமூக விரோதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்கள். பாவலர் ஈரோடு தமிழன்பன் பாடல்தான் நினைவுக்கு வருகிறது:

“இப்பொழுதெல்லாம் பஞ்சதந்திரக் காட்டில்

நரிகளே கிடையாது- அவையெல்லாம்

சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும்

தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டன.”

தேர்தல் கட்சித் தலைமைகள் இப்படிபட்ட சமூக விரோதிகளைத்தான் தங்களின் தளபதிகளாக வைத்துள்ளன.

உச்சநீதிமன்றம், சமூகவிரோதிகள் நாடாள வருவதைத் தடுக்க துணிச்சலான ஒரு முன் மொழிவை வழங்கியுள்ளது. விவாதங்கள் நடக்கட்டும்; உண்மையை நிலை நாட்டும் நோக்கில் நேர்மையுடன் திருத்தங்களை முன்மொழியட்டும். ஆனால் சமூக விரோதிகள் மக்களின் பிரதிநிதிகளாக வீற்றிருக்கும் அநீதியைத் தடுக்க மக்களும் களத்தில் இறங்க வேண்டும்.

பதவியிலிருக்கும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினரை முதல் தீர்ப்பு வந்தவுடனேயே நீக்கினால் அது ஆளுங்கட்சியின் பெரும்பான்மையை சிறுபான்மையாக்கி ஆட்சி கவிழும் நிலையைக் கூட உண்டாக்கலாம்; அவையின் நிலைத்தன்மையைப் பாதிக்கும் என்று சிலர் கூறுகின்றனர். இதில் உண்மை இருக்கலாம். ஆனால் நீதி மன்றத்தில் தண்டிக்கப்படும் அளவிற்குக் குற்றச்செயல் புரிந்தவரை நம்பித்தான் ஓர் ஆட்சி இயங்குகிறது, ஓர் அவை நிலைத் தன்மைப் பெறுகிறது என்றால் அவற்றின் யோக்கியதைகள் எந்த அளவில் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சமூகத்தில் அறமும் ஒழுக்கமும் நிலைநாட்டப்படும்போது அதனால் கிடைக்கும் சமூக நிலைத்தன்மையானது எத்தனை ஆட்சிகள் கவிழ்ந்தாலும் பாதிக்கப்படாது.

நாம் சில திருத்தங்களை முன் வைக்கிறோம். குற்றச்செயல்கள் என்பதை இரண்டாகப் பிரிக்க வேண்டும். இப்பொழுது தனிநபர் ஆதாயத்திற்காக செய்யப்படும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்முறை, கலகம் செய்தல், தாக்குதலில் ஈடுபடுதல், தேர்தல் தில்லு முல்லு போன்றவையும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்செயல்கள். மக்களின் உரிமைகளுக்காக, பொதுநலன்களுக்காக மறியல், உள்ளிட்ட போராட்டம் நடத்து வோர் மீதும் சொற் பொழிவாற்றுவோர் மீதும் போடப்படும் வழக்குகளும் குற்றச்செயல் சார்ந்தவையே. எடுத்துக் காட்டாக குற்றப் பின்னணி வேட்பாளர் பட்டியலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது மூன்று வழக்குகள் உள்ளதாக குறிப்பிடுகிறார்கள். இம்மூன்று வழக்குகளும் சமூக விரோதக் காரியங்களுக்காக அவர் மீது போடப் பட்டவையல்ல. சமூக நலன்களுக்காக அவர் இயக்கம் நடத்திய போது போடப் பட்ட வழக்குகள்.

எனவே அரசியல் இயக்கங்கள், பொதுநல அமைப்புகள் மக்களுக்காகப் போராட்டங்கள் நடத்தும் போது, இயக்கங்கள் நடத்தும் போது போடப்படும் வழக்குகள் அரசியல் குற்றங்கள் என்ற தலைப்பில் அல்லது சமூக இயக்கக் குற்றங்கள் என்ற தலைப்பில் போடப் பட வேண்டும். அவற்றிற்கான சிறைத் தண்டனைகள், இருந்த போதிலும் இவ் வழக்குகளில் சிறைப்படுவோரை சட்டப்படியே தனிப்பிரித்துக் காட்ட, சிறையில் தனிப்பிரித்து வைக்க விதிகள் செய்யவேண்டும்.

அமைச்சராக இருந்தாலும், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் செய்த சமூக விரோதக் குற்றங்களுக்கு மற்ற கொலை, கொள்ளை, திருட்டு, கலகம் விளைவித்த தனிநபர்களுக்கு கடைபிடிக் கப்படும் குற்றவியல் நடைமுறைகளையே கடைபிடிக்க வேண்டும்.

எனவே உச்சநீதி மன்றம், மக்கள் பிரதிநிதிகள் சட்டப்பிரிவு 8(4) ஐ நீக்க வேண்டும் என்று சொன்னதை முன் மொழிவாக ஏற்றுக்கொண்டு இந்திய அரசு இந்தப் பிரிவை நீக்குவதற்குரிய சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும். அதே போல் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் பொதுநலனுக்காக சிறைப்பட்டோரை தனி நபர் ஆதாயங்களுக்காகக் குற்றச்செயலில் ஈடுபட்டவருடன் இணைத்துப் பார்க்கக் கூடாது. இரு தரப்பாரையும் தனித் தனிப் பிரிவினராகப் பார்க்க வேண்டும். சிறையிலும் தனியே வைக்க வேண்டும். பொதுநல நோக்கங்களுக் கான செயல்பாடுகள், போராட்டங்கள் ஆகியவற்றிற்காக இரண்டாண்டு அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றோரின் நாடாளுமன்ற சட்டமன்றப் பதவிகளைப் பறிக்கக் கூடாது. அவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கக் கூடாது.

அடுத்து மறுநாள் (11.7.2013) அதே உச்சநீதிமன்ற அமர்வு வேறொரு வழக்கில், சிறையில் அல்லது காவல் துறையின் காவலில் விசாரணைக் கைதியாக உள்ள ஒருவர் தேர்தலில் நிற்க முடியாது என்றும் தீர்ப்பு வழங்கி யுள்ளது. இத்தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டியது.

ஆட்சியில் உள்ளோர் தங்களின் நலன்களுக்காக சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவது நாடறிந்த உண்மை. முதலமைச்சர் ஏவினால் யார் மீதும் எந்த அபாண்டக் குற்றச்சாட்டும் சுமத்தி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கக் காவல்துறை எப்போதும் தயாராகவே இருக்கிறது. தமிழ்நாடே இதற்குத் தக்க சான்று. அரசியல் எதிரிகளைத் தேர்தலில் நிற்கவிடாமல் தடுப்பதற்கு, உடனடியாக அவர்களை சிறைக்காவலில் வைப் பார்கள். நீதிமன்றம் விசாரித்துத் தண்டனை வழங்கப்பட்டவரையும் விசாரணைச் சிறையாளியாக உள்ளவரையும் சமமாக நடத்துவது குற்றவியல் நீதி முறைமைக்கு எதிரானது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன் குற்றஞ்சாட்டப் பட்டவரை குற்ற மற்றவராகக் கருதுவதே இயற்கை நீதியாகும். எனவே விசாரணைச் சிறையாளிகள் தேர்தலில் போட்டியிடத் தடை கூடாது.

மேலே கூறப்பட்டுள்ள சட்டத்திருத்தங்கள் மூலம் நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் உடனடியாகப் புனிதப்பட்டு விடும் என்று நாம் நம்பவில்லை. இத்திருத்தத்திற்குப் பின்னாலும் சமூகவிரோதக் குற்றம் புரிந்தோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகிப்பதற்குப் புதிய வாயில்களை திறந்துகொள்வார்கள். ஆனாலும் மக்களும் சமூக நலனில் அக்கறையுள்ளோரும் தலையீடு செய்வது எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் ஒழுக்கம், நேர்மை, ஆகியவை குறித்த மதிப்பீடுகள் ஓரளவாவது காக்கப்படும். குற்றவாளிகளில் சிலராவது தண்டிக்கப்படுவர்.

Pin It