“கலை இலக்கியப் படைப்பாளிகள் உரிமைக்கு போராடும் மக்கள் பக்கம் இருக்க வேண்டும்” என இயக்குநர் மணிவண்ணன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசினார்.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் தமிழ்த் தேசியப் பற்றாளர் இயக்குநர் தோழர் மணிவண்ணன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 29.6.2013 அன்று மாலை சென்னை, வடபழனியிலுள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் வெ.சேகர், ஓவியர் கு.புகழேந்தி, இயக்குநர் வ.கெளதமன், இயக்குநர் ம.செந்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு இயக்குநர் மணிவண்ணன் அவர்களுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டு உரை நிகழ்த்தினர். தமிழ்த் தேசிய உணர்ச்சிப்பாவலர் கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் மணிவண்ணன் அவர்களது படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

முன்னதாக, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழக அமைப்பாளர் தோழர் உதயன் வரவேற்புரையாற்றிய பின், இயக்குநர் மணிவண்ணன் அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளை உள்ளடக்கி கவிஞர் கவிபாஸ்கர் எழுதிய குறுநூல் வெளியிடப்பட்டது. நூலை தோழர் பெ.மணியரசன் வெளியிட, இயக்குநர் மணிவண்ணன் அவர்களது மகன் திரு. இரகுவண்ணன், மகள் திருமதி ஜோதி ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர். கவிஞர் கவிபாஸ்கர் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில், தலைமையுரையாற்றிய தோழர் பெ.மணியரசன் பேசியதாவது:

“தமிழ்த் தேசியப் பற்றாளரும் இயக்குநருமான தோழர் மணிவண்ணன் அவர்களது இறப்பைப் பற்றி பேசும் துர்பாக்கிய நிலையில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது. அவரது வாழ்க்கைக் குறிப்புகளை ஒரு குறுநூலாக்கி இங்கு வெளியிட்டுள்ளார் கவிஞர் கவிபாஸ்கர். இயக்குநர் செந்தமிழன் நம் சமகால ஆளுமைகளை நாம் ஆவணப்படுத்த வேண்டும் என்று பேசினார். அப்பணியை இந்நிகழ்வை முன்னிட்டு கவிஞர் கவிபாஸ்கர் செய்துள்ளார்.

கலைத்துறை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட துறை என்று இங்கு சிலர் பேசி வருகின்றனர். அது உண்மையல்ல. பணம் சம்பாதித்துக் குவிப்பதே தமது இலட்சியம் என்று செயல்படுகின்ற சிலர், தான் சார்ந்துள்ள இனத்துக்கு, தேசத்துக்கு எதையும் செய்ய விரும்பாத நிலையில், அந்த போலித்தனத்தை மறைப்பதற்காக ‘கலைத்துறையில் அரசியல் கூடாது’ என்று பேசுகின்றனர். அந்த போலித்தனத்தைத் திரை கிழித்தவர் இயக்குநர் மணிவண்ணன் ஆவார்.

கலைப்படைப்பாளிகள் தான் ஒடுக்குமுறைக்கு எதிராக, கொடுமைகளுக்கு எதிராக கொதித்து எழக்கூடிய சமூகப்பணியை முன்னின்று செய்ய வேண்டியவர்கள். புகழ் பெற்ற கலைஞரான சார்லி சாப்ளின், ஹிட்லரின் பாசிசத்தை எதிர்த்து, அதை அம்பலப்படுத்தி ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்றொரு படத்தை தந்தார். முதலாளியத் தொழில் வளர்ச்சி மனிதர்களை இயந்திரமயமாக்குகின்றது என்பதை அம்பலப்படுத்தி ‘தி மார்டன் டைம்ஸ்’ என்றொரு கலைப் படைப்பைத் தந்தார். நடுநிலை என்று நாடகமாடாமல், பாசிச எதிர்ப்பின் பக்கம் உறுதியாக நின்றார் சார்லி சாப்ளின்.

பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து நாடு தனியாகப் பிரிய 2014ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. அந்த வாக்கெடுப்பு குறித்த செய்தி வரும்போதெல்லாம், புகழ்பெற்ற “ஜேம்ஸ் பாண்ட்” பட நடிகர் சீன் கானரி, அந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்க வருவாரா என்று தனியே செய்தி வெளியிடுவார்கள். ஸ்காட்லாந்து நாட்டுக்காரரான சீன் கானரி, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஸ்காட்லாந்து நாடு எப்போது விடுதலை பெற்றுத் தனிநாடாக மலர்கிறதோ அப்போது தான் நான் தாய்நாடு திரும்புவேன் என்று அறிவித்து அவர் அமெரிக்காவில் இருக்கிறார்.

இப்படி உலகெங்கும் கலைப் படைப்பாளிகள் சமூக உணர்வோடு, தான் சார்ந்துள்ள தேசத்தின், இனத்தின் நலனுக்காகக் குரல் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இது போன்ற நிலை இன்னும் பெரிய அளவில் வரவில்லை.

தமிழ்நாட்டில் கொள்கை, இலட்சியம் எதுவுமில்லாமல் திரைத்துறையில் பெற்ற பிரபலத்தை வைத்து யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தேர்தல்களில் பங்கெடுக்கலாம். ஆனால், அவர்கள் இலட்சிய அரசியல் மட்டும் செய்யக்கூடாதென்பர். இயக்குநர் மணிவண்ணன் அவர்கள், மக்களுக்கான இலட்சியத்தை முன் வைத்து நின்றவர். மனித சமத்துவம், ஒடுக்குமுறைக்கு எதிரான சமூக அமைப்பு ஆகிய இலட்சியங்களுக்காக நம்மோடு நின்றவர். இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக, தமிழ்நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறது என அவர் மனம் கொதித்தது. சிங்கள இனவெறியர்கள் தமிழீழத்தை ஆக்கிரமித்து, இனப்படுகொலை செய்ததை எதிர்த்து அவர் மனம் கொதித்தது.

இங்கு பேசிய எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள், ஒருவன் முற்போக்கானவன் என்றால் அவன் சார்ந்துள்ள இனம், தேசம் அடிமைப்பட்டுக் கிடப்பதை எதிர்த்து அவன் குரல் கொடுக்க வேண்டும் என்றார். அது உண்மையே! அவரவர் சார்ந்துள்ள இனத்தின் விடுதலையை, தேசத்தின் விடுதலையை எவர் ஆதரிக்கின்றாரோ, அதுவே அவரது சமூக உணர்வின் அடிப்படையாகும். முற்போக்கானவர் என்பதற்கான முதற்படியாகும்.

அதன்வழியாகத் தான் சமூக சமத்துவத்திற்கான மார்க்சியக் கருத்தை ஏற்க முடியும். மார்க்சியம், பெரியாரியம் எதுவானாலும் தமிழ்நாட்டின் இன்றையத் தேவைக்கு – அவற்றிலிருந்து எவற்றை எடுத்துக் கொள்ளலாமோ அவற்றை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களுக்காகத் தத்துவமே தவிர, தத்துவத்திற்காக மக்கள் அல்ல.

தமிழீழம் மட்டுமின்றி, இந்திய ஏகாதிபத்தியத்திடமிருந்து தமிழ்நாடு விடுதலையடை வதையும் இயக்குநர் மணிவண்ணன் ஆதரித்தார். அதற்காக நம்முடன் இணைந்தும் இயங்கினார். கடவுள் மறுப்புக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த ‘கடவுள்’ என்றொரு படத்தைப் பற்றி இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் அடிக்கடி என்னிடம் சிலோகித்துப் பேசியிருக்கிறார். மனம் ஒவ்வாத பாத்திரத்தை சில நேரங்களில் செய்ய வேண்டியிருக்கிறது என்று கூறிய அவர், கடவுள் படத்தில் நடித்ததை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அவரது இயக்கத்தில் வெளியான ‘இனி ஒரு சுதந்திரம்’ என்ற படம் என்னை மிகவும் கவர்ந்த படைப்பாகும். அவரது குடும்பத்திலும் அவர் சமூகம் சார்ந்த கருத்துகளைப் பேசினார்.

2008ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக இயக்குநர் சீமானும், தோழர் கொளத்தூர் மணியும், நானும் கைது செய்யப்பட்டோம். அப்போது, மாவட்ட நீதிமன்றம் பிணை மறுத்துவிட, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அடிக்கடி கோவை சிறைக்கு வந்து சந்தித்தார் மணிவண்ணன். எங்களைப் பிணையில் கொணரப் பெரும்பாடுபட்டார்.

அதன்பிறகு, இயக்குநர் சீமானை மட்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்த போது, அதனை எதிர்த்து நாங்கள் இயக்கம் நடத்தினோம். அதற்கு நிதியுதவி செய்து அதற்காக பாடுபட்டவர் இயக்குநர் மணிவண்ணன். எங்களது தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் வளர்ச்சியிலும் அக்கறையுடன் பங்கெடுத்து அவ்வப்போது நிதியுதவிகள் செய்தார்.

இயக்குநர் மணிவண்ணன் என்னிடம் அடிக்கடி, எப்படி கம்யூனிஸ்டாக இருந்து கொண்டு இங்கிருப்பவர்கள் இனவிடுதலையை எதிர்க்கின்றனர் எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். உண்மையான கம்யூனிஸ்ட்டுகள், தேச விடுதலையின் பக்கம், இன விடுதலையின் பக்கம் தான் நிற்க வேண்டும். ஆனால், இங்கிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவரது ஆதங்கம்.

1970களில் நானும் அவர்களோடு (சி.பி.எம்.) இயக்கத்தில் அங்கமாக இருந்த போது, இதே வீதிகளில் ‘வியத்நாம் யுத்தம் எங்கள் யுத்தம் வியத்நாம் இரத்தம் எங்கள் இரத்தம்’ என முழக்கம் எழுப்பினோம். அது தவறில்லை. வங்க தேசத்தை விடுவிக்க இந்திய இராணுவம் கொண்டு போரிட்ட போது, அதை அவர்கள் வரவேற்றனர். அது தவறில்லை. ஆனால், தமிழீழ விடுதலை என்று வரும்போது, இன்னொரு நாடான இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்சினைக்கு நாம் போராடலாமா என்று கேட்கின்றனர். ஈழ யுத்தம் எங்கள் யுத்தம் ஈழ இரத்தம் எங்கள் இரத்தம் என்று நாம் முழக்கமிட்டால் அந்த இடதுசாரிகளின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் அலறுகிறார்கள். இதற்குப் பெயர் கம்யூனிசமா அல்லது பார்ப்பனியமா? பார்ப்பனியம் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நீதி சொல்லும். அதை கம்யூனிசத்தின் பேரில் இவர்கள் செய்கிறார்கள்.

புரட்சியாளர் லெனின், ஒவ்வொரு கருத்துக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலன் இருக்கிறது என்றார். பின்னாளில், மாவோ ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் முத்திரை இருக்கிறது என்று சொன்னார். அதை நாம், இந்திய சூழலில், இங்கு ஒவ்வொரு கருத்துக்குப் பின்னாலும் வர்ணாசிர தர்ம முத்திரை இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அதற்கேற்பவே, கம்யூனிஸ்ட்டுகள் என சொல்லிக் கொண்டு இங்கு இனவிடுதலையை எதிர்த்து, இனத்துரோகம் புரிந்து கொண்டுள்ளனர். தேச விடுதலையை ஏற்காத அவர்கள், உண்மையில் கம்யூனிஸ்ட்டுகளே அல்ல.

கர்நாடகத்தில் ஒவ்வொரு முறையும் புதிய முதல்வர்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அங்குள்ள கலைப் படைப்பாளிகளை, கன்னட மொழி அறிஞர்களைச் சந்தித்து ஆசி பெறுகின்றனர். பொதுவான கலைப் படைப்பாளிகளாக அங்கு பலர் இன உணர்வுடன் இருக்கின்றனர். தமிழகத்தில் அவ்வாறான நிலைமை இல்லை. அப்படியொரு பொதுவான தமிழ் உணர்வுமிக்கப் படைப்பாளிகளை நாம் உருவாக்க வேண்டும். படைப்பாளிகள், சரியை சரி என்றும் தவறை தவறென்றும் எதற்கும் அஞ்சாமல் சுட்டிக்காட்ட வேண்டும்.

தமிழ்த் திரைத்துறையில் தமிழ் உணர்வுடன் செயல்படுபவர்கள் மிகவும் குறைவு. அதற்கு இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் அந்த முன்னோடிகளில் ஒருவர். இயக்குநர் வி.சேகர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, திரைத்துறையிலுள்ள உணர்வாளர்களுக்கும், தமிழ்த் தேசிய இன அமைப்புகளுக்கும் ஓர் உறுதியான தொடர்பை ஏற்படுத்த வேண்டும். அதுவே இன விடுதலைக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் பயன்படும்.

இயக்குநர் மணிவண்ணன் அவர்களது இழப்பு தமிழ்த் திரைத்துறைக்கு மட்டுமின்றி, தமிழ்த் தேசியத்திற்கும் பேரிழப்பாகும். அவருக்கு மீண்டும் எனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார். நிறைவில், கவிஞர் கவிபாஸ்கர் நன்றி கூறினார். இந்நிகழ்வில், திரளான தமிழ் உணர்வாளர்களும், திரைத்துறையினரும் கலந்து கொண்டனர்.

Pin It